— அழகு குணசீலன் —
இலங்கைத்தீவு பொருளாதார, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் நிலையில், காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரசாங்கம் மீதான அதிருப்தியாளர்களது அமைதிச் செயற்பாடு வன்முறையினால் மலினப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசபயங்கரவாத்தின் ஒரு வெளிப்பாடு. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அரசியல் கோழைத்தனம்.
காலிமுகத்திடல் அரசாங்க எதிர்ப்புச் செயற்பாடுகள் குறித்தும், பின்னணிகள் குறித்தும், இனப்பிரச்சினைக்கான தீர்வு உத்தரவாதம் குறித்தும் காலக்கண்ணாடி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது, விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இது ஜனநாயக ரீதியான கருத்துச்சுதந்திர, ஊடக உரிமை சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான மாற்று அரசியல் கண்ணோட்டம். காலிமுகத்திடலின் மறுபக்கம்.
ஆனால் அதே கருத்துச்சுதந்திர,ஒன்றுகூடும் உரிமையும்,அதிருப்தியை அமைதியாக வெளிக்காட்டும் ஜனநாயக உரிமையும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்களுக்கு இருப்பதை மறுப்பது ஜனநாயகமறுப்பு. அதிகார அத்துமீறல். அங்கு நடந்து முடிந்திருக்கின்ற வெண்கலக் கடைக்குள் யானை நுழைந்தது போன்ற, மாற்றுக்கருத்துக்களை மறுதலிக்கின்ற இந்த வன்முறைப்போக்கு ஜனநாயகத்தின் பெயரில் செய்யப்படுகின்ற அதர்ம அரசியல். சண்டித்தனம் கொண்ட காடையர் அரசியல். இதை வளர்த்து விட்டதும், அதை எதிர்த்து நிற்பதும் அதே அரசியல்தான்.
இந்த வன்முறை அரசியல் பாரம்பரியம் இலங்கையின் ஜனநாயக(?) அரசியலில் பலபக்க வரலாறுகளை பதிவுசெய்திருக்கிறது. பண்டாரநாயக்க கொலைமுதல் அமிர்தலிங்கம் கொலைவரை அரசியல் தலைமைத்துவங்களை அழித்திருக்கிறது. இது ஜனநாயக அரசியல் பாதை அல்ல. வன்முறை அரசியல் பாதை. தொடர்ந்து வந்த அரசியல் தலைமைத்துவ இடைவெளி இன்னும் நிரப்பப்பட முடியாமல் இருப்பதை இன்றைய நெருக்கடிகளில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
மறுபக்கத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக பல இன, மத வன்முறைகளை பேரினவாதத்தினால் சந்தித்து இருக்கின்றன. தமிழ் குறுந்தேசிய வாதமும் இதற்கு ஒன்றும் விட்டுக்கொடுத்ததல்ல. காலிமுகத்திடலில் மண்டை உடைக்கப்பட்டது முதல் முள்ளிவாய்க்கால் அவலங்கள் வரையும், புத்தளம் பள்ளிவாசல் உள்ளிட்ட படுகொலைகள் முதல் எல்லைக் கிராமங்கள் மீதான வன்முறைகள் வரையும், தனித் தமிழ்நாடு கோராதபோதும் தமிழர்கள் என்பதற்காக ஒவ்வொரு இனக்கலவரங்களிலும் வன்முறைக்குள்ளான மலையக மக்கள் வரையும் இந்த அரசியல், வன்முறையையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது.
இவை அனைத்தும் வன்முறை அரசியலை பூஜித்த, ஜனநாயக தலைமைகள் என்று பெயர்சூட்டிக் கொண்டவர்களின் அதிகாரப்பசிக்காக பலிகொடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள். இதன் தொடர்ச்சியாக நீண்டிருப்பதே காலிமுகத்திடல் தாக்குதல்களும் அதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் பரவிய வன்முறைகளுமாகும்.
வன்முறையை வன்முறையாலேயே வெல்லமுடியும் என்று வன்முறை மீது காதல் கொண்ட,அதிகாரம்மீது ஆசைகொண்ட, ஏகபோக உரிமையாளர்களும், புரட்சியாளர்களும் நம்புகிறார்கள். புரட்சியாளர்கள் கூட ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கப்பால் வன்முறையை அரச இயந்திரத்திற்கு எதிராக மட்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்து தவறி மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைச் சாக்கடைக்குள் மூழ்கி விடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் வரலாறு இருதரப்பையும் பயங்கரவாதிகளாக பிரகடனம் செய்துவிடுகிறது.
வன்முறையற்ற சாத்வீக போராட்ட வடிவங்கள் பல உண்டு. அரசியல் ஆய்வாளர்கள் 198 சாத்வீகப் போராட்ட வடிவங்களை பட்டியல்படுத்தியுள்ளனர். இந்த பட்டியல் முடிந்தும், முடிவானதும், நிறைவானதும் அல்ல. அந்தப்பட்டியலில் துண்டுப்பிரசுரம் வெளியிடுதல் முதல் எமக்கு பழகிப்போன பேரணி, பகிஸ்கரிப்பு, வேலைநிறுத்தம், ஒத்துழையாமை, கவன ஈர்ப்பு மற்றும் கவன ஈர்ப்பு வீதி நாடகங்கள் வரை உள்ளன.
அந்த வகையில் இவற்றைவிடவும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் வேறு என்னத்தைச் செய்து விட்டார்கள். எதற்காக அவர்கள் மீது வன்முறை கடிவாளமற்று கட்டவிழ்த்து விடப்பட்டது? சிம்மாசனத்தில் இருந்து வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைக் காட்டுவதற்காகவா….?
பதில் தாக்குதல்கள்
மறுபக்கத்தில் கொழும்புக்கு வெளியே திட்டமிட்டு நடாத்தப்பட்ட மறுதரப்பு தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. ஒரு வங்குரோத்து நாட்டில் தனியார் உடமைகளும், சொத்துக்களும் கொளுத்தப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக இடம்பெற்ற வன்முறையற்ற செயற்பாடுகளை அவமதிப்பதாக அமைந்துள்ளன இந்த நிகழ்வுகள். பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன.
ஒருவர் தவறான அரசியல்வாதியாக இருப்பினும் அதற்காக அவரைக்கொல்வதற்கான உரிமை எவருக்கும் உண்டா?
இலங்கையில் நீதி, நிர்வாகம் சரியாக இல்லை என்று அரசாங்கத்தை குற்றம்சாட்டுகின்ற தரப்பே இதைச் செய்திருப்பது இப்போராட்டத்தின் ஒரு பலவீனமா? இந்த வன்முறைகள் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வை வழங்கமுடியும்?
சில ஊடகங்கள் இந்த அழிப்புக்கள் குறித்தும், உயிர் இழப்புக்கள் குறித்தும் புளகாங்கிதம் கொள்கின்றன. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் மற்றையவர்களையும் தேடிக் கொலை செய்யவேண்டும், அவர்களின் உடமைகளையும் அழிக்கவேண்டும் என்று மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கருத்திடுகின்றனர். இவர்களில் காலிமுகத்திடல் வன்முறைகளைக் கண்டிக்கின்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். அப்படியெனில் வன்முறை குறித்த இவர்களின் உண்மை முகம் என்ன?
இந்த கூவல் ஏற்படுத்தப்போகின்ற விளைவுகள் என்ன? சட்டம், ஒழுங்கை தனிநபர்கள் / குழுக்கள் கையில் எடுப்பதற்கு பெயர் வன்முறையற்ற ஜனநாயகப் போராட்டமா..? தமக்கு சார்பான வன்முறைகளை நியாயப்படுத்துவதும், சார்பற்றவற்றை எதிர்த்து வன்முறை எதிர்ப்பாளர்களாகக் காட்டுவதும் சிங்கள தேசிய அரசியலில் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலிலும் நன்கு பழகிப்போன ஒன்று. இதன்விளைவே எம்மத்தியில் எஞ்சி இருக்கின்ற புனிதமும், துரோகமும் பட்டங்கள்.
உண்மையில் வன்முறையற்ற அரசியல் என்பது நீதியற்ற சமூகக்கட்டமைப்பு, மக்கள் மீதான அழுத்த – திணிப்பு அரசியல், மக்கள் மீதான சுரண்டல் போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடு. வன்முறையற்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிரியை பௌதிக ரீதியாக அதாவது உடல், உடைமை சார்ந்து அழிப்பவர்கள் அல்ல. மாறாக தமது செயற்பாடுகள் மூலம் அவர்களை தம்வசப்படுத்தி, தலைகுனியவைத்து, வெட்கம் கொள்ளச்செய்து தமது கோரிக்கையை வெற்றி கொள்பவர்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக மகிந்த ராஜபக்சவுக்கு இந்த தலைகுனிவும், வெட்கமும் நிதானம் இழக்கச்செய்து வன்முறைக்கு அடிகோலிவிட்டது.
அவர்தான் அப்படி என்றால் அவருக்கு எதிரானவர்களும் அதேபாணியைக் கைக்கொண்டால் இருதரப்புக்கும் இடையிலான வேறுபாடுதான் என்ன?
“வன்முறைக்கு வன்முறையை கண்ணுக்குகண் பழிவாங்கல்” என்கிறார் அகிம்சையை உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தி. அவரின் ஒத்துழையாமை இயக்கம், வெளிநாட்டு உற்பத்திகளை பகிஷ்கரித்தல், உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற கறைபடியாத செயற்பாடுகள் உலக சமூக, பொருளாதார, அரசியலில் இன்றும் பேசப்படுபவை. உதாரணமாகக / முன்மாதிரியாகக் கொள்ளப்படுபவை.
காந்தியின் வழியிலேயே மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் பயணித்தார்கள் வெற்றிகண்டார்கள். நமது அரசியல்வாதிகள் அவர்களின் நினைவு தினங்களில் ஏணிவைத்து ஏறி மலர்மாலைகளை அணிவித்து, மணிக்கணக்காக பேசி இறுதியில் தமது இருப்புக்காக வன்முறையையே கையில் எடுக்கிறார்கள், தூண்டுகிறார்கள்.
இது அவர்களின் அகராதியில் ஜனநாயகம்..!
மக்களே மக்களால் மக்களுக்காக ஆளுகின்ற ஆட்சி …!!
வன்முறையற்ற சர்வமத தர்மம்…!!!
ஆக,
அடிக்கு அடி, வெட்டுக்கு வெட்டு, வேட்டுக்கு வேட்டு, கொலைக்கு கொலை…… கண்ணுக்கு கண் !
நமோ நமோ மாதா நம் சிறிலங்கா…..!!!