— அழகு குணசீலன் —
பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. இதற்கு அரசியலும் விலக்கல்ல. அரசியல் வியாபாரமாகிப் போனதினாலோ என்னவோ மரபு ரீதியான அரசியல் கோட்பாடுகளை விடவும் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்கு அதிகம் பொருந்திப்போகின்றன.
பொருளாதாரக் கோட்பாடுகளில் தனியார் நிறுவனங்களில் இலாப -நட்டக்கணக்கை மதிப்பிட பயன்படுத்தப்படும் கோட்பாடுகளில் ஒன்று விளையாட்டுத்தத்துவம். போட்டி நிறுவனங்கள் ஆகக்கூடிய இலாபத்தை எதிர்பார்ப்பது வழக்கம். அது போன்று கட்சிகளின் அரசியல் இலாப எதிர்பார்ப்பும் அமைந்துவிடுகிறது.
அந்த ஆகக்கூடிய இலாபத்தில் குறைந்தது எவ்வளவு இலாபம் கிடைக்கவேண்டும் என்று குறைந்தபட்ச இலாபத்தை அவை இலக்கு வைக்கின்றன. இது கூடியதில் குறைந்தது. இதை “MAXIMINI” என்று அழைப்பது வழக்கம். அதாவது மக்ஸிமத்தில் மினிமம். மற்றைய எதிர்பார்ப்பு இதற்கு மாறாக குறைந்த இலாபத்தில் எது கூடியதோ அது. இதை “MINIMAXI” என்பர். குறைந்ததில் கூடியது. ஆக, மினிமத்தில் மக்ஸிமம்.
இங்கு ஒரு நிறுவனம் அரசாங்கம், எதிர் நிறுவனம் எதிர்க்கட்சிகள். அரசாங்கத்தின் ஆகக்கூடிய எதிர்பார்ப்பு என்ன? பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அதே இடத்தில் பதவியில் இருப்பது. ஆனால் அதற்கும் ஒரு குறைந்தபட்ச விட்டுக் கொடுப்பு-எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுதான் இருப்புக்கு / இலாபத்திற்கு பாதிப்பில்லாமல் / நட்டம் அடையாமல் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது. இது அரசாங்கத்தின் மக்ஸிமினி.
மறுபக்கத்தில் எதிரணியின் அதிஉச்ச எதிர்பார்ப்பு ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்புவது. அதேவேளை எதிரணியின் குறைந்த விட்டுக்கொடுப்பு- எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?அதுதான் எதிரணியின் மக்ஸிமினி, இடைக்கால அரசாங்கம். இதற்காக இப்போது சஜீத் அணியைத் தவிர்த்து ஓடவும் சிலர் தயாராக உள்ளனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததனால் குறைந்த இலாபத்திற்கு விற்கவேண்டிய நிலை.
இங்கு இரு “வியாபாரத்தரப்பும்” ஒரு மினி மக்ஸியில் சந்திக்கின்ற புள்ளியாக இடைக்கால அரசாங்கம் அமைகிறது. அரசாங்கத்தரப்புக்கு பாரிய பதவி இழப்புக்களும் இல்லை, மறுபக்கத்தில் எதிரணிக்கும் பாராளுமன்ற பாதிப்புக்களும் இல்லை. நடந்து முடிந்த சபாநாயகர் தேர்வு எதிரணிக்கு இந்த மக்ஸிமினியை உணர்த்தியிருக்கிறது. எனவே இருதரப்பு வியாபாரிகளும் சந்திக்கக்கூடிய குறைந்ததில் கூடிய மினிமக்ஸி இடைக்கால அரசாங்கம்.
அரசியலமைப்பு ரீதியாகவும், பாராளுமன்ற நடைமுறை ஒழுங்குகள் ரீதியாகவும் அரசாங்கத்திற்கு பாதுகாப்பு இருப்பதனால் ராஜபக்சாக்கள் தங்கள் சதுரங்க ஆட்டக் காய்களை மிகக் கவனமாகவும் கட்டம் கட்டமாகவும் நகர்த்தி வந்தனர். இது ஒருவகையில் ஆறப்போட்டு தீர்வுகாணும் அணுகுமுறை. இதுவே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவிவிலகும் வரை தொடர்ந்தது.
அரசியல் நெருக்கடியின் ஆரம்பத்தில் “விரைவில் நல்லது நடக்கப்போகிறது” என்று முதன்முதலில் கிளிச்சாத்திரம் சொன்னவர் விமல் வீரவன்ச. ‘கோத்தா கோ கோம்’ என்று குரல் எழுப்பிய வீரவன்ச, தான் ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்ததாகவும் நல்லது நடக்க இருக்கிறது என்றும் ஊடகச்சந்திப்பு நடாத்தினார்.
இது விமலுக்கும் ராஜபக்சாக்களுக்குமான ஒரு டீல். எதிரணித் தலைமைகள் யாரும் அதிகாரத்திற்கு வருவதை வீரவன்ச விரும்பவில்லை. அதைத்தான் அவர் சபாநாயகர் தேர்விலும் செய்தார். இதற்கு வீரவன்சவின் இனவாதமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதே டீல்தான் ரணிலிடமும் இருந்தது. இயன்றவரை சஜீத் பதவிக்கு வராமல் தடுப்பது.
சிலவேளை இம்தியாஷ் பாக்கீர் மார்க்காரைத் தவிர்த்து சிங்கள தேசியவாதி ஒருவரை எதிரணி சபாநாயகர் வேட்பாளராகப் பிரேரித்து இருந்தால் வெற்றி பெறாவிட்டாலும் இம்தியாஷை விடவும் சற்று அதிகமான வாக்குகளை சிங்கள தேசியவாதி பெற்றிருக்கமுடியும். அரச தரப்பினர் இந்த அணுகுமுறையையே பின்பற்றினர். பாராளுமன்றம் பழையவரை புதிப்பித்ததற்கு இதுவே காரணம்.
அடுத்த கட்டமாக அமைச்சரவையை கூண்டோடு இராஜினாமாச் செய்யக்கோரிக்கை விடுவதால் ஏற்படும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க பூனைக்கு மணி கட்டுகிறார் நாமல். அவரே முதலில் இராஜினாமாச் செய்த அமைச்சர். இது மற்றவர்களிடம் இராஜினாமா கடிதம் கோர ராஜபக்சாக்களுக்கு இலகுவாக அமைந்தது. மக்களை தற்காலிமாக தணிக்கவும் உதவியது.
இது ராஜபக்சாக்களின் அடுத்த காய்நகர்வு.
அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரை எதிரணிக்கு அனுப்பியதும் சதுரங்கத்தின் மற்றொரு காய்தான். இவர்கள் எதிர்த்தரப்பில் அமர்ந்தாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்திற்தில் வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டால் அதை தோற்கடிப்பதற்கான தந்திரோபாய நகர்வு. இது நடந்திருந்தால் அன்று அரசாங்கம் வெற்றிபெற்றிருக்கும். இன்று சபாநாயகர் தேர்வு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற நடைமுறைகளைக் தொடர்வதற்கு என்றும், சர்வதேச நாணயநிதியுடன் பேசுவதற்கு என்றும், காய்களை மெல்ல மெல்ல நகர்த்தி எதிர்த்தரப்பு எதிர்ப்பை மழுங்கடித்து, காலத்தை இழுத்து சரியான சந்தர்ப்பத்தில் புதிய அமைச்சரவை புதியவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. அரசாங்க எதிர்ப்பு ஒரு மாதத்தையும் தாண்டி இடம்பெற்ற போதும் அரசாங்கம் முழுமையாக இயங்குகின்ற நிலை இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டது.
20ஐ நீக்குதல், 19ஐ மீளக்கொண்டுவரல் அல்லது 21ஐ கொண்டுவரல் போன்ற அனைத்துக்கும் அரசாங்கம் சாதகமான பதில்களையே அளித்ததுடன், அதனூடாக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நம்பிக்கையைப்பெற முயற்சித்தது. இவை அனைத்தும் குறைந்தபட்சம் கோரிக்கைகளை நிறைவேற்றக் தயார் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
எதிரணியினர் அரசாங்கத்தின் இன்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். மக்கள் பக்கம் பலமாக இருந்தாலும் எதிரணி அரசியல் பலமாக இல்லை. இவர்கள் உதைபந்தாட்டம் நடாத்துகிறார்கள். ஒருதரப்பு பந்தை மறுதரப்புக்கு அடித்து வேடிக்கை பார்க்கிறார்கள். உண்மையில் இது எதிரணிக்குள் இடம்பெறும் (SAME SIDE ) விளையாட்டு. பாராளுமன்றத்தில் அடிக்கப்படும் கோல்கள் அரசாங்கப்பக்கமே போய் விழுந்தன.
தமிழ்த்தேசிய கட்சிகள் மட்டும் அன்றி முஸ்லீம், மலையக, சிங்கள கட்சிகளும் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு முன்னர் இருந்ததையும் விடவும் பிளவுபட்டும், பலவீனமாகவும், ஒருமித்த முடிவுக்கு வரமுடியாத நிலையிலும் உள்ளனர். இவர்கள் காலிமுகத்திடலை நம்பியுள்ளார்களே அன்றி அரசியல் தலைமைத்துவமாக இராஜதந்திர ரீதியாகப் செயற்படும் திறன் அற்று நிற்கிறார்கள்.
தலைமைத்துவம், வழிகாட்டல், தீர்வுக்கான பயணம், பொறுப்பேற்றல் என்பனவற்றை இவர்களால் மக்களுக்கு வழங்க முடியாதுள்ளது. பல நிகழ்வுகள் சமாந்தரமாக இடம்பெறுகின்றன. ஆனால் ஒரு கூட்டிணைப்பு, நெறிப்படுத்தல் இல்லை. இதனால் காலிமுகத்திடல் அரசாங்க அதிருப்தியாளர்கள் நாளுக்கு நாள் பொறுமை இழக்கின்றனர். எதிரணி ஒரு முட்டையிட்ட கோழி என்றால், அரசாங்கம் ஆயிரம் முட்டையிட்ட ஆமையாக காய்களை நகர்த்துகிறது.
மகிந்தவின் பதவிதுறப்பு தீர்மானம் எதிரணியினரின் அழுத்தத்தில் ஏற்பட்டதல்ல. மாறாக காலிமுகத்திடல் அழுத்தமும், கோத்தபாயவின் அழுத்தமும் இணைந்ததன் விளைவு. இந்த சதுரங்க காய்நகர்வின் மூலம் கோத்தபாய தனது இருப்பை தற்காலிகமாவேனும் பாதுகாத்துக் கொள்கிறார். மறுபக்கத்தில் காலிமுகத்திடல் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாக காட்டிக் கொள்கிறார். தற்போது மஹிந்தவை அம்பலப்படுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பதவி விலகவிரும்பவில்லை. இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே ஒரு மாதமாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. முன்னொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த தனது ஆதரவாளர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டி தனது ஆதரவை காட்டியிருந்தார்.
இம்முறை அவரின் அறிவிப்பு ஆதரவாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அதனால் ஆத்திரமுற்ற வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் காலிமுகத்திடலில் வன்முறையில் ஈடுபட்டனர். சிலவேளை மஹிந்த இதை எதிர்பார்க்காமலும் இருந்திருக்கலாம் அல்லது தனது செல்வாக்கை ஜனாதிபதிக்கும், எதிரணிக்கும் காட்டவும் இந்த வன்முறைத் தீயை மூட்டியிருக்க வாய்ப்புண்டு.
கோத்தபாய இராஜினாச் செய்தால் பசீல் வந்துவிடுவார் அவர் இராஜினாமாச் செய்யக்கூடாது என்று குண்டு போட்டவர் விமல்வீரவன்ச. இதுவும் கோத்தபாய பதவியில் இருக்க அரசாங்கப்பக்கம் வீரவன்ச அடித்த “கோல்”தான்.
காலிமுகத்திடல் வன்முறைகளின் போது முதலில் களத்தில் தோன்றியவர் அநுரகுமார திசாநாயக்க. அங்கு ஆரம்பம் முதல் ஜே.வி.பி. இளைஞர்களின் பிரசன்னம் இருந்தது. அவர்களே காலிமுகத்திடல் நகர்வு திசையை நிர்ணயிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
இதையடுத்து சஜீத் பிரேமதாசாவும் பிரசன்னமாகிறார். இதை ஜே.வி.பி. விரும்பவில்லை. இதனால் சஜீத் தடுக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. மொத்தத்தில் ஜே.வி.பி. சமகால அரசியல் நகர்வுகளின் வெற்றிக்கு உரிமைகோர விரும்புகிறது. இந்த நிலைப்பாடு எதிர்காலத்தில் சஜீத் அணிக்கும், அநுரகுமார அணிக்கும் இடையிலான அரசியல் மோதலாகவே அமையப்போகிறது.
வன்முறைகள் மஹிந்தவின் பெயரில் ஆரம்பித்துள்ளன. அதற்கு எதிராகவே வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்க அரசாங்க அதிருப்தியாளர்கள் தள்ளப்பட்டார்கள். வன்முறைத் தீயை திட்டமிட்டு அல்லது தற்செயலாக மூட்டியவர் என்ற வகையில் முற்று முழுதான பொறுப்பை மஹிந்தவே ஏற்க வேண்டும். கொழும்புக்கு அழைத்து வந்தவர் அழைக்கப்பட்டவர்களை அசம்பாவிதம் எதுவும் இடம்பெறாமல் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைச் செய்யவும் மஹிந்த தவறிவிட்டார்.
சுமந்திரன், ஹக்கீம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று காலிமுகத்திடலுக்கு செல்லாத தமிழ், முஸ்லீம் மக்கள் தப்பிக்கொண்டார்கள்.
மிகவும் மலினத்தனமாக கொட்டியா, ஐ.எஸ். என்று எந்த ஒரு தரப்பும் எழுந்தமானமாக தாக்குதலை ஆரம்பித்து பேரினவாத திசையில் வன்முறையை திசை திருப்புவதற்கான வாய்ப்பை வடக்கு, கிழக்கு மக்கள் இனவாதிகளுக்கும், அவர்களுக்கு துணைநின்று இனவாதத்தில் குளிர்காய நினைத்தவர்களுக்கும் வழங்காது வகுப்பு எடுத்திருக்கிறார்கள்.
மஹிந்தவின் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வு இரத்தகறைபடிந்த கரங்களின் கையசைப்புடன் முடிவுற்றுள்ளது.
இதை ராஜபக்ச குடும்பம் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் .
கோத்தயாயா தப்பிவிட்டார்..! (தற்காலிகமாவேனும்) மஹிந்த மாட்டிவிட்டார்…!! இனி…!!!