‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்கு மூலம்-14 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்கு மூலம்-14 

 தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 ‘நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி இடைக்கால அரசை அமைப்பதற்கு, தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்’  (காலைக்கதிர் 27.04.2022 மாலைப் பதிப்பு) 

இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறும் அதற்கு வழிவிடும் வகையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையை முழுமையாகப் பதவி நீக்குமாறும் 04.04.2022 அன்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கூட்டாக அறிவித்தமை மற்றும் இக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மகாநாயக்க தேரர்கள் 20.04.2022 அன்று மீண்டும் ஜனாதிபதியிடம் கூட்டாக வலியுறுத்தியமையின் பின்னணியில்தான் ஜனாதிபதியின் மேற்படி இணக்க அறிவிப்பு வெளியானது. 

 இறுதியாகப், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்திக் கொழும்பில் மகா சங்கத்தினர் ஓரணியில் 30.04.2022 அன்று ஒன்று திரண்டு தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளனர். 

 இக் கோரிக்கையிலுள்ள நியாயங்கள்/அநியாயங்கள் ஒருபுறமிருக்க, இலங்கையின் அரசியலமைப்பில் ‘இடைக்கால அரசு’ என்ற விடயம் இல்லாதபோதும், இப்போது நிலவும் அரசியல் நெருக்கடியில் ‘இடைக்கால அரசு’ என்பது எதனைக் குறிக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.        

 05.08.2020 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய 20.08.2020 அன்று பதவியேற்ற தற்போதைய பாராளுமன்றம் அரசியலமைப்பு விதிகளுக்கமையக் கலையும் வரை அல்லது கலைக்கப்படும் வரை தற்போது ஆட்சித் தரப்பாகவுள்ள பொது ஜன பெரமுனவும் அதன் கூட்டுக்கட்சிகளும் இணைந்த அரசாங்கத்திற்கும் பிரதமர் உள்ளிட்ட அதன் அமைச்சரவைக்கும் மாற்றீடாகப் பாராளுமன்றத்தில் உள்ள சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தையும் மற்றும் புதிய பிரதமர் உட்படப் புதிய அமைச்சரவையையுமே இவ் ‘இடைக்கால அரசு’ குறித்து நிற்கிறது. 

 அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தின் மொத்தப் பதவிக் காலமான ஐந்து வருடங்களில் இதுவரை ஒரு வருடம் எட்டு மாதங்களே முடிவடைந்துள்ளன. தற்போதைய பாராளுமன்றம் தானாகக் கலைவதாயின் அது 2025 ஆகஸ்டில்தான் சாத்தியம். நடைமுறையில் உள்ள 20ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி பாராளுமன்றம் முதன்முதல் கூடிய 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதியிலிருந்து இரண்டரை வருடங்கள் கழிந்த பின்னர்தான்- 2023 பெப்ரவரியில்தான் – ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதற்கிடையில் பாராளுமன்றம் கலைய வேண்டுமானால் பாராளுமன்றமே தாமாக அத்தகையதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில் உத்தேச இடைக்கால அரசின் ஆயுட்காலம் எதுவரைக்கும் என்பதை இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது. 

 எது எப்படியிருப்பினும் இவ்வாறான சர்வ கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசை ஜனாதிபதி தன்னிச்சையாக அமைக்க முடியாது. அதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பு விதிகளில் இல்லை. மகாசங்கத்தினர் வலியுறுத்தினாலும் கூட அரசியலமைப்பின்படி தானே ஜனாதிபதி செயற்பட முடியும். 

 பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் குறைந்தபட்சம் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்தொருமைப்பட்டு- ஒரே ‘அணி’யாக அல்லது ‘குழு’வாகத் தமது பெரும்பான்மையை நிரூபிக்கும்போது மட்டுமே தற்போதுள்ள பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கிவிட்டு இவ்வாறானதொரு புதிய இடைக்கால அரசு அமைய வாய்ப்புண்டு. அப்போதும்கூட புதிய பிரதமரையும் ஏனைய புதிய அமைச்சரவை உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும். வேண்டுமானால் சர்வ கட்சிகளும் கருத்தொருமித்து முன்மொழியும் பெயர் வழிகளைப் புரிந்துணர்வின் அடிப்படையில் தற்போதுள்ள அரசியல் நெருக்கடியைத் தணிக்கும் வகையில் புதிய பிரதமராகவும் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களாகவும் நியமிப்பதற்கு ஜனாதிபதி இணங்கக்கூடும். 

 இது சாத்தியமா என்பதே அடுத்த கேள்வி. ஜனாதிபதி கோட்டபாயவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட்டாகப் பதவி விலகினால்தான் இவ்வாறான சர்வகட்சி இடைக்கால அரசில் பங்கேற்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அரசில் தான் எந்தப் பதவியையும் ஏற்பதில்லை என்றுள்ளார். ஜே.வி.பி. யும் அவ்வாறான நிலைப்பாட்டைத்தான் இதுவரை அறிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பிலிருந்து விலகிவந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகப் பதவி விலகவேண்டுமென்ற கருத்துநிலையுடையோராகவே காணப்படுகின்றனர். பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசாங்கத் தரப்பிலிருந்து விலகி வந்து சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறும் ஏனைய அதிருப்தியாளர்களும் இரண்டும் கெட்டான் நிலையில் மதில்மேல் பூனையாக உள்ளனர். முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகள் அவ்வாறான இடைக்கால அரசில் பங்கேற்பது குறித்துத்தெளிவில்லாமல் இருக்கின்றன. தமிழ்த் தேசியக்கட்சிகளைப் (?) பொறுத்தவரை பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (அதன் பேச்சாளர் சுமந்திரன்) இடைக்கால அரசில் தாம் எந்த அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென ஏற்கெனவே அறிவித்துள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே பெரும்பாலும் எடுக்குமென எதிர்பார்க்கலாம். இடைக்கால அரசு விடயத்தில் மலையகத் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் (ரி.எம்.வி.பி.) டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈபிடிபி) அன்றிலிருந்து இன்றுவரை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச + பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன்தான் பயணிக்கின்றன. இவ்வாறான இடைக்கால அரசு அமையுமானால் அதிலும் இவ்விரு கட்சிகளும் பங்கேற்க விரும்பும் என்பது சாதாரணமான அரசியல் மாணவனுக்கும் புரியும் விடயமாகும். 

 நிலைமை இவ்வாறிருக்க, பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 பங்காளிக் கட்சிகளையும் சேர்ந்த சுயாதீன அணியினர் இறுதியாக ஜனாதிபதி கோட்டாபாய தலைமையில் சர்வ கட்சி அரசாங்கத்தை (இடைக்கால அரசாங்கத்தை) உருவாக்குவதே சிறந்த தீர்வு என அறிவித்துள்ளனர். இது இவர்களின் கோட்டபாய பதவிவிலக வேண்டுமென்றஆரம்பகால நிலைப்பாட்டுக்கு முரணானது. சர்வ கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த ஏதுவாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகவேண்டுமெனத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர். இது மகாசங்கத்தினரின் கோரிக்கையோடு ஒத்துப்போகிறது. 

 சர்வ கட்சிகளையும் கூட்டுவதற்குப் பதிலாக மேற்குறிப்பிட்ட பதினொரு பங்காளிக் கட்சிகளை மட்டுமே ஜனாதிபதி 29.04.2022 அன்று அழைத்துப் பேசியுள்ளார்.  

 அப்படியாயின், மீண்டும் இந்தப் பதினொரு கட்சிகளும் பொதுஜன பெரமுனவும் இணைந்த அரசாங்கம்தான் சர்வகட்சி அரசாங்கமாக (இடைக்கால அரசாக) அமையப் போகிறதா? அப்படியாயின் நிலைமை மீண்டும் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதையாக அல்லவா இருக்கப்போகிறது. அதாவது புதிய ‘பிளா’வில் பழைய ‘கள்ளு’. 

 இடைக்கால அரசை ஏற்படுத்துவது சம்பந்தமாக மகா சங்கத்தினர் 01.05.2022 அன்று மாலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளனர். இக்கூட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்எவரும் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாதென்பதால் இடைக்கால அரசு தொடர்பான இப்பேச்சுவார்த்தையில் தமது கட்சி கலந்துகொள்ளவில்லையெனப் பொது ஜன பெரமுனக் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் காரணம் கூறியுள்ளார். 

 சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே. வி. பி. யும் இடைக்கால அரசில் பங்கேற்பதில்லையென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் மேதினக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். 

 மகாசங்கத்தினர் 01.05.2022 அன்று கூட்டிய அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்குச் சிறுபான்மையினங்களான இலங்கைத் தமிழர் (வடகிழக்குத் தமிழர்), மலையகத் தமிழர் மற்றும் முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவரும் அழைக்கப்படவில்லை பங்குபற்றவுமில்லை. 

 02.05.2022 அன்று இடைக்கால அரசு அமைப்பது சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகிச் சுயாதீனமாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து இடைக்கால அரசு என்ற பதம் மாறித் ‘தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம்’ ஒன்றையே அமைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

 மொத்தத்தில் ( புதிய) இடைக்கால அரசை அமைக்கும் படி மகா சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனையே கேட்கிறது. பொது ஜனபெர முனவுடன் இணைந்து அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய – பின் அரசாங்கத்திலிருந்து விலகிச் சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் அதிருப்தியாளர்கள் இணைந்த அணியும் அதனையே இப்போது இறுதியாகக் கேட்கிறது. ஜனாதிபதி கோட்டாபய இந்த மூன்று அணிகளையும் திருப்திப்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை-தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தினை அமைப்பதற்குத் தான் எதிர்ப்பு இல்லை என்று காட்டும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபாயவின் மேற்படி இடைக்கால அரசிற்கான இணக்க அறிவிப்பின் மூலம் மிகவும் தந்திரமாகத் தன் பக்கமிருந்த பந்தை எதிரணிக் கட்சிகளின் எல்லைக்குள் அடித்து விட்டிருக்கிறார். 

 அதேவேளை, 28.04.2022 அன்று மொட்டுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் ராஜபக்சவைப் பதவி விலகுமாறு தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லையென ஜனாதிபதி கோட்டபாய அறிவித்தும் உள்ளார். இதே கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனக்கு இப்போதும் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலம் (குறைந்தபட்சம் 113) இருப்பதாகக் கூறியுமுள்ளார். 

 இத்தகைய அரசியல் களப் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய இணக்கம் தெரிவித்துள்ள சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு என்பது எவ்வாறு அமையப்போகின்றது? அதன் புதிய பிரதமர் யார்? என்பதெல்லாம் பொது மக்களைப் பொறுத்தவரை புரியாத புதிர்களாகவே உள்ளன. 

 இவ்வாறு இலங்கையின் அரசியல் கோலங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு வடிவமும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இவ் அரசியல் சித்து விளையாட்டுக்குள் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது என இப் பத்தி இடித்துரைக்கிறது. இதனையே தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்கள் தனதுகாலைக்கதிர் 01.04.2022 காலைப்பதிப்புக் கட்டுரையில் (பக்கம் 18) சுட்டிக்காட்டியுள்ளார். 

 எது எப்படி இருப்பினும், நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுத் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பக்கவிளைவாகப் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சர்வ கட்சிகளும்அடங்கிய இடைக்கால அரச -தேசிய இணக்கப்பாட்டு அரச அற்புதமொன்று நிகழுமாயின், தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தமக்கிடையேயான கடந்தகாலக் கசப்புகளைச் சீரணித்துக்கொண்டு- கட்சி, சின்னம், கொடி, கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒற்றைக் கோரிக்கையாக 13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் நடத்தும் விடயத்தை முன்நிபந்தனையாக விதித்து அதற்குக் காலக்கெடுவும்விடுத்து இவ்வாறான சர்வ கட்சி அரசாங்கத்தில் (இடைக்கால அரசில் – தேசிய இணக்கப்பாட்டு அரசில்) பங்காளர்களாக- ஒரே அணியாக -இடம் பெற வேண்டுமென்பதே இப்பத்தி எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். இந்த அற்புதம் சாத்தியப்படாதாயின் (நிகழவில்லையாயின்) ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் குறைக்கும் உத்தேச 21 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்- அரசின்  மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை- நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு- இடைக்கால அரசு விவகாரம்- ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை என எது வந்தாலும் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒரே அணியில் நின்று (இதுவுமொரு அற்புதமே) நடுவுநிலைமை வகிப்பதே (பக்கச்சார்பற்று இருப்பதே) உசிதமானது.