அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் 

அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் 

                  — கருணாகரன் — 

ராஜபக்ஸக்களின் அரசாங்கத்துக்கு எதிராக தெற்கிலும் மேற்கிலும் நடக்கும் “மக்கள் போராட்டங்கள்” பற்றிய தமிழ்த்தரப்பினரின் அபிப்பிராயம் என்ன? பங்கேற்பு என்ன? 

இந்தக் கேள்வியின் ஆழம் வரலாற்று ரீதியாகப் பெரியது. ஏனென்றால், என்னதான் வெவ்வேறு அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் இந்தப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. அதுவும் பெருந்திரள் தமிழ்ச்சமூகத்தின் நோக்கு நிலையில். 

ஏனென்றால், பெருந்திரள் தமிழ்ச்சமூகம் ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. போர்க்குற்றம் உட்பட அவர்களுடைய ஆட்சித் தவறுகள் வரையானவற்றுக்குத் தண்டனையை வழங்க விரும்புகிறது. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வைக் காணவும் வேண்டியிருக்கிறது. 

இதற்கெல்லாம் ஏற்றதோர் தருணம் இது. இதில் முக்கியமானது, பொருளாதாரப் பிரச்சினையோடு,அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டுமென்றால், அதற்குப் பெருந்திரள் சிங்களத் தரப்பின் ஆதரவு வேண்டும். எனவே இவற்றையெல்லாம் எட்டுவதற்கு இன்று உருவாகியுள்ள வரலாற்றுத் தருணம் – வரலாற்றுச் சூழல் –மிக வாய்ப்பாகக் காணப்படுகிறது. 

இதை மேலும் விரிவாகப் புரிந்து கொள்ள – நோக்க – வேண்டுமானால் பின்வரும் காரணங்களையும் இணைத்துப் பார்க்கலாம். 

1.      ராஜபக்ஸக்களின் குடும்ப ஆட்சி, ஊழல், தவறான அரசியற் நடத்தைகள் போன்றவற்றுக்கு எதிராக ராஜபக்ஸக்களை ஆதரித்த அரசியற் கட்சிகளும் (தலைவர்களும்) மக்களும் இப்பொழுது அவர்களுக்கு எதிராகவே மாறி நிற்பது. 

2.      மக்களினதும் ராஜபக்ஸவினருக்கான ஆதரவு அரசியற் கட்சிகள்– தலைவர்களதும் நெருக்குவாரங்களினால் ராஜபக்ஸக்கள் ஆட்டம் கண்டிருக்கும் சூழல். (அமைச்சரவையிலிருந்து நான்கு ராஜபக்ஸக்கள் நீக்கப்பட்டுள்ளனர்). 

3.      தமிழ் மக்களில் பெருந்திரளானோரும் ராஜபக்ஸக்களை அரசியற் களத்திலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் விலக்க முற்படுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கும் சூழலில் அதற்கு வாய்ப்பாக நடக்கின்ற மேற்படி போராட்டம். 

4.      நடக்கின்ற போராட்டத்துக்கு ஆதரவளிப்பதன் வழியாக சிங்கள மக்களுடைய நெருக்கத்தை உருவாக்குதல். அதன் வழியாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிய பரஸ்பர உரையாடலை நிகழ்த்துவத்துவதற்கான சூழலை உருவாக்குதல். 

5.      இலங்கைத் தீவு எதிர்கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, அந்நிய ஆதிக்க நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான ஒருமித்த திரட்சியான பலத்தைத் திரட்டுதல். 

6.      ஆட்டம் கண்டிருக்கும் ஆட்சியை ஒன்றிணைந்து நின்று வீழ்த்துதல். கூடவே மாற்று அரசியல் (Ststem change) ஒன்றுக்கான தளத்தை நிர்மாணித்தல். 

மேலும் பல இவ்வாறான வலுவுடைய அடிப்படிக் காரணங்கள் இருக்கும்போது அதை உணர்ந்து இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பெருந்திரள் தமிழ்ச்சமூகம் முன்வர வேண்டும். –வந்திருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அது தன்னுள்ளத்தில் கொண்டிருக்கும் இலட்சியக் கனலுக்கும் கனவுக்கும் பொருளிருக்கும். – உண்மையிருக்கும். 

ஆனால், அப்படியான எந்த அடிப்படையையும் காணவில்லை. அப்படியென்றால் ராஜபக்ஸக்களுக்கும் அவர்களுடைய ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் எதிராக எழுப்பிய – எழுப்பிக் கொண்டிருக்கும் இதுவரையுமான குரல்களின் பொருளென்ன? எல்லாமே பொய்தானா? 

ஏனிந்தக் கேள்வியென்றால், தெற்கிலும் மேற்கிலும் (கொழும்பிலும்) நடக்கும் போராட்டங்களில் அடையாளம் தெரியக் கூடிய அளவுக்குத் தமிழ்த்தரப்பின் பங்கேற்போ, வெளிப்படையான ஆதரவோ இதுவரையிலும் ஏற்படவில்லை. அங்கங்கே சில தமிழ்த்தலைகள் தென்பட்டாலும் ஒரு சமூக அடையாளமாக எவையும் இல்லை. 

தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளும் தலைவர்களும் கூட இந்தப் போராட்டங்களைக் குறித்து எந்தவிதமான உறுதியான – தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, ராஜபக்கஸக்களின் அரசாங்கத்தை வீழ்த்துவது தொடர்பாகக் கூட கூட்டுச் செயற்பாடு எதையும் முன்னெடுக்கவும் இல்லை. பதிலாகச் சிதறலான –தெளிவற்ற வார்த்தைகளில் இவற்றைக் குறித்துப் பசப்புகிறார்கள். 

இது தமிழ்த்தரப்பின் அரசியற் பலவீனத்தின் வெளிபாடாகவும் அதன் தவறாகவும் அமைகிறது. அதோடு தமிழ் – சிங்கள உறவு நிலையில் மேலும் இடைவெளியையும் அதிகரிக்கிறது.  

இந்த இடைவெளி அதிகரிப்புக்கு இன்னொரு காரணத்தையும் இங்கே நாம் சுட்டலாம். 

“அப்பொழுது (தமிழர்களுடைய போராட்ட  காலத்தில்) ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடிகளுக்குச் சமாந்தரமான நெருக்கடிகளை இப்பொழுது சிங்கள மக்களாகிய நீங்கள் சந்திக்கிறீர்கள். இப்பொழுதுதான் நாங்கள் பட்ட கஸ்டங்களையும் பாடுகளையும் பற்றி உங்களுக்குப் புரியும். நன்றாகப் பட்டுக் கொள்ளுங்கள்” என்ற விதமாக இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர் சூழலிலும் இருந்து எழுகின்ற தமிழ் அபிப்பிராயம் இதைக் காட்டுகிறது. 

இத்தகைய அணுகுமுறையும் ஒதுங்கியிருக்கும் செயற்பாடும் நிச்சயமாக தமிழ் மக்களுடைய நிகழ்கால, எதிர்கால அரசியலுக்கும் சமூக வாழ்க்கைக்கும் நல்லதல்ல. 

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. “இந்தப் போராட்டங்களில் தமிழர்கள் பங்குபற்றினால் அதைச் சாட்டாக வைத்து ஒட்டுமொத்தப் போராட்டத்தையே அரசாங்கம் இனவாத நோக்கில் திசை திருப்பக் கூடும் என்பது. இன வன்முறையைக் கூட அது தூண்டலாம் என. 

இது எந்தளவுக்கு நியாயமானது என்பது கேள்வியே. ஏனென்றால், சரியான முறையில் தெளிவான வெளிப்படுத்தல்களோடு தமிழர்கள் போராட்டத்தில் பங்கு பற்றினால் அரசாங்கத்தினால் (ராஜபக்ஸவினரால்) எதுவும் செய்ய முடியாது. 

இதேவேளை இந்தப் போராட்டத்தின் உறுதித்தன்மை மற்றும் பின்னணி பற்றிக் கேள்வி எழுப்பும் தமிழ்த்தரப்பும் உண்டு. இயல்பாக எழுந்திருக்கும் மக்கள் எழுச்சி அல்ல என்று கூறுகின்ற இவர்கள், இந்திய மற்றும் மேற்குலக (அமெரிக்க) பின்னணியில்தான் இதெல்லாம் நடக்கின்றன என்கிறார்கள். ஆனாலும் ராஜபக்ஸவினர் களத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை இவர்கள் வலியுறுத்துகின்றனர். 

ஒரு வாதத்துக்கு இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் இந்த வெளிச் சக்திகளின் ஆதரவோடு வேண்டாதவர்களை அகற்றிக் கொள்ளலாமே! இதிலென்ன பிரச்சினை? என்று கேட்டால் அதற்குத் தெளிவான பதிலில்லை. 

ஆகவேதான் இந்தச் சந்தர்ப்பத்தில் தவறாகச் சிந்திக்காமல், நழுவாமல் சரியான முடிவுகளை தமிழ்த்தரப்பு எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த்தரப்பு சரியான நிலைப்பாடு எதனையும் எடுக்கவில்லை. யார் யாரோ ஆட்டுகின்ற நூற்பொம்மைகளாக இருக்கின்றன. இந்தப் பலவீனத்தின் நீட்சியே இன்றைய தளம்பல்களுமாகும். 

ஆனால், தமிழ் ஊடகங்களிற் பலவும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முழுமையாக ஆதரிக்கின்றன. 

தமிழ்ச் சமூகத்தின் சமூக வலைத்தள வெளியும் அநேகமாக கொழும்பில் நடக்கும் போராட்டத்தை உள்ளுர ரசிக்கின்றன  –வரவேற்கின்றன.   

இருந்தாலும் இவை தமிழ்த்தரப்புக்கு (தமிழ்த்தலைமைகளுக்கு) எந்த வகையான அழுத்தத்தையும் கொடுக்கக் காணோம்! 

இந்த அமுங்கல் தன்மை அல்லது ஒதுக்கம் தமிழ்த்தரப்பை மட்டும் பலவீனப்படுத்தவில்லை. தமிழ்ப்பெருந்திரளுடைய நோக்கத்தையும் நடக்கின்ற போராட்டங்களையும் பலவீனப்படுத்துகின்றது. 

இவ்வளவும் இருக்கும்போது, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற –  ஆதரிக்கின்ற சிங்களத்தரப்பின் பொது நோக்கங்களைக் குறித்துச் சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர். 

1.      ராஜபக்ஸவினரை வீட்டுக்கு அனுப்பி விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? அதற்குப் பின்னர் வருகின்றவர்கள் எவ்வாறான தலைமைத்துவத்தை ஏற்று, எத்தகைய தீர்வுகளைத் தருவர்? 

2.      இலங்கையில் தனியே பொருளாதாரப் பிரச்சினை, நிறைவேற்று அதிகாரப் பிரச்சினை மட்டும்தான் உண்டா?அதற்கு மட்டும் தீர்வு கண்டு விட்டால் எல்லாமே சரியாகி விடுமா? 

3.      தமிழ், முஸ்லிம்,மலையக மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்த இவர்களுடைய அக்கறைகள், நிலைப்பாடு என்ன? 

4.      தமிழ் மக்களுடைய இழப்பு, துயரம், இறந்தோருக்கான நினைவு கூருதல் போன்றவற்றிற்கு இவர்கள் (போராட்டக்காரர்களும் எதிரணி அரசியல் தரப்புகளும்) ஆதரவா? இவற்றில் இவர்கள் பங்கேற்பரா? 

இப்படி தமது நோக்கு நிலையில் நின்று சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகளில் நியாயமுண்டு. ஆனால்,அவற்றைக் குறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் இணைந்து வேலை செய்யும்போதே பேச முடியும். இதைக் குறித்த கோருதல்களையும் முன்வைக்கலாம். 

இல்லையென்றால் எரிச்சலும் இடைவெளியுமே அதிகரிக்கும். 

இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தமும் சமூக உண்மையும் என்னவென்றால், எல்லாவற்றையும் தமது நிலை நின்று நோக்குவதாகவே உள்ளதாகும். பொது நிலை நின்று நோக்கும் இயல்பு குறைவு. அப்படிப் பொது நிலை நின்று நோக்குவோர் பரிகசிக்கப்படுகிறார்கள். அந்த நோக்கு நிலை புறக்கணிக்கப்படுகிறது. இந்த வரலாற்றுத் துயர் துரதிருஷ்டமாக இப்போதும் தொடர்கிறது. இதுவே அதிகாரத் தரப்புக்கு எப்போதும் வாய்ப்பாக அமைகிறது. 

அரசாங்கமும் ராஜபக்ஸக்களும் இன்னும் பலமாக இருப்பது ஒட்டு மொத்த எதிர்ப்பு தமக்கு இன்னும் ஏற்படவில்லை என்ற திராணியில்தான். அரசியல் இடைவெளிகளும் சமூக இடைவெளிகளும் உள்ளவரை ராஜபக்ஸக்கள் பலமாகவே இருப்பர். ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல, எந்த அதிகாரத் தரப்பும்தான்.