— என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் —
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்று நாயகர்களாக அறியப்பெற்ற பல கதாபாத்திரங்களைப் பற்றி அன்றாடம் பேசியும் கேட்டும் வருகின்றோம். ஆனால் இந்த வரலாற்று நாயகர்கள் சமூகத்தில் உருவாகுவதற்கான தளமிட்டு, உரமிட்டு, நீரூற்றி வளர்த்த தமிழ்ப் பெருமக்களை நாம் கண்டுகொள்ளாமல் இலகுவில் மறந்துவிடுகின்றோம். இதற்கான காரணம் ஒன்றுண்டு. நிழலாகவே வாழ்ந்த இப்பெருமக்கள் ஆற்றிவந்த கடினமான பணிகளை, வெளி உலகிற்குத் தெரியப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அவையடக்கம் கருதி அவர்கள் ஈடுபடுவதில்லை. வேராக வாழ்ந்து விருட்சங்களை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள். இத்தகையவர்களுள் ஒருவரே அமரர் ஐ.தி.சம்பந்தன் (26.06.1935- 03.04.2022) அவர்களாவார்.
ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல்,தொழிற்சங்க வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் ஒரு ஆய்வாளனின் பார்வையில் ஐ.தி.சம்பந்தன் என்ற பெயர் இடைக்கிடையே சிக்கிக்கொள்ளும். தமிழரசுக் கட்சியின் அரசியல் களமாகட்டும், இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன்மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு ஆணைக் குழுக்களின் அறிக்கைகளாகட்டும், எரிந்துபோன யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்கப்பட்ட கொடிதினப் பணிகளாகட்டும், ஆறுமுக நாவலர் நினைவெழுச்சிப் பணிகளாகட்டும், ஆங்காங்கே திரு ஐ.தி.சம்பந்தனின் பெயர் எங்கோ ஒரு கட்டத்தில் எட்டிப்பார்க்கவே செய்யும்.
தன்னை முன்னிலைப்படுத்தியே சமூகவாழ்வைச் சிந்திக்கும் எமது தலைமைத்துவக் கலாச்சாரத்தில் இருந்து வழுவி, தமிழ் மக்களின் மத்தியில் வேராக மறைந்து நின்று பெருவிருட்சங்களையெல்லாம் வளர்த்துவிட்ட பெருமைமிக்கவர் ஐ.தி.சம்பந்தன் அவர்கள். தன்னைத் தானே இனங்கண்டு முன்னிலைப்படுத்தத் தவறியவரென்பதால் தமிழறிஞர்களில் பலரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை என்பதென்னவோ கசப்பானதொரு உண்மையாகும்.
இவர் சுயநலம் கருதாது,பொதுநலத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால் எழும் இவரது ஆதங்கங்களையும் பலர் ஆழமாகப் புரிந்துகொள்வதில்லை. இவரது உடல் உழைப்பைப் பெற்று தமது செயற்திட்டங்களை ஒப்பேற்றி தமது பெயரைப் பொறித்துக்கொண்ட பலர் அதில் திரு சம்பந்தனுக்குச் சிறு வரியொதுக்கி நன்றிதெரிவிப்பதை வைத்தே இவரது விரிந்த தொடர்பினையும் பங்களிப்பினையும் நாங்கள் வரிகளுக்கிடையேயான செய்திகளாக மாத்திரம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அமரர் சம்பந்தனின் வெளியீட்டுப் பின்புலம் பற்றி இங்கு சற்றே எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
‘தமிழ் தந்த தாதாக்கள்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களது நூலொன்றை திரு சம்பந்தர் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தபோது, தனது சுடரொளி வெளியீட்டுக்கழக வெளியீடாக 1987இல் வெளியிட்டிருந்தார். ஈழநாடு வாரமலரில் வெளிவந்த க.சி.குலரத்தினம் அவர்களின் கட்டுரைகள் இவை. எவ்வெப் புலவர்கள் எந்தெந்தத் துறைகளில் எத்தகைய காலங்களில் எவ்வாறெல்லாம் தமிழ்த்தாயை அணி செய்தார்கள் என்பதை இலகு நடையில் இலக்கியச் சுவையுடன் அன்று க.சி.கு. அவர்கள் இக்கட்ரைகளின் வழியாகத் தந்திருந்தார். இலைமறைகாயாக வாழ்ந்திருந்த அப்பெரியாரை தமிழ் உலகில் நீண்டகாலம் வாழவைக்க திரு சம்பந்தன் அவர்கள் மேற்கொண்ட கன்னி முயற்சி இது.
அதனைத் தொடர்ந்து தனது பதிப்பகத்தின் வாயிலாக க.சி.குலரத்தினம் அவர்களின் மற்றொரு நூலான ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்’ என்ற நூலின் முதலாம் பாகத்தை 1989இல் வெளியிட்டுவைத்தார். தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலமாகத் திகழ்கின்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழநாட்டுப் புலவர்களின் ஆக்கங்களில் காணப்படும் சிறப்புகளைத் தமக்கேயுரிய முறையில் க.சி.குலரத்தினம் அவர்கள் இந்நூலில் தந்திருந்தார்.
சம்பந்தன் ஐயா அவர்கள் லண்டனில் வாழத் தொடங்கிய பின்னர் இந்நூலின் மீள்பதிப்பை 2005இல் செம்மைப்படுத்தி வெளியிட்டிருந்தார். புலமையாழம் பொருந்திய ஈழத்துத் தமிழ்ப்புலவர்கள் தமிழ் மொழிக்கும்,தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியன. இத்தகைய சிறப்புமிக்க ஈழத்தவர்கள் பதினெண்மரின் பணிகள்பற்றி,எம்மவரால் மறக்கப்பட்ட அவர்களின் வாழ்வுபற்றி தேடித்தொகுத்த தகவல்கள் இந்நூலில் கோர்க்கப்பட்டிருந்தன. லண்டன் வாழ் தமிழர்கள் இப்பெரியார்களை அறிந்து வைத்திருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கமே திரு சம்பந்தன் அவர்களை மீள்பதிப்பாக இந்நூலைத் தன் சொந்தச் செலவில் லண்டனில் வெளியிட வைத்திருக்கின்றது.
‘தமிழ் அகதிகளின் சோக வரலாறு’ என்ற நூலை ஐ.தி.சம்பந்தன் அவர்கள் லண்டனிலுள்ள தனது சுடரொளி வெளியீட்டுக் கழகத்தினூடாக ஜுன் 1996இல் வெளியிட்டிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற 1983 யூலை இனக்கலவரச் சம்பவங்களின் போது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாக்கு மூலங்களின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டிருந்தது. தனது ஆவணச் சேர்க்கையில் தூசுதட்டியிருந்ததொரு வரலாற்றுப் பொக்கிஷத்தை இவர் 1996இல் உலகிற்கு வழங்கிப் பெருமைபெற்றார்.
ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் புதிய பாதையைக் காட்டி வழிநடத்தி மறைந்த தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய பல்வேறு அரசியல் ஆர்வலர்களின் மலரும் நினைவுகளைத் தொகுத்து ‘ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா’ என்ற தலைப்பில் ஒரு நூலை,ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் வெ.செ.குணரத்தினம் அவர்களின் உதவியுடன் 2004இல் வெளியிட்டிருந்தார். இத்தொகுப்பினை பல்வேறு அரிய ஆவணப் படங்களுடனும், இலங்கைப் பாராளுமன்றத்திலும், அரசியல் கூட்டங்களிலும் தந்தை செல்வா ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளுடனும் திரு. சம்பந்தன் அவர்கள் அன்று வெளியிட்டிருந்தார்.
‘புதுயுகத் தமிழர்’ என்ற தலைப்பில் உலகத்தமிழர்களிடையே கவிதைப் போட்டி ஒன்றை மில்லெனியம் ஆண்டையொட்டி நடத்தியதுடன், அதற்காகப் பெறப்பட்ட கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக ‘புதுயுகத் தமிழர்’ என்ற நூலை திரு. பொன் பாலசுந்தரம் அவர்களின் துணையுடன் 2005இல் வெளியிட்டு மகிழ்ந்தார்.
தமிழ் அரசியல்வாதி தி.மகேஸ்வரன் அவர்களின் அரசியல் சமூக வாழ்வை வரலாற்றுப்பதிவாக்கும் முயற்சியில், தான் முன்னர் பிரத்தியேக செயலாளராகச் சிலகாலம் அவருடன் பணியாற்றிய நினைவுகளை அடியொற்றி ஒரு ஆவண நூலாக ‘மகேஸ்வரன்- அரசியல் வாழ்வும் தமிழர் பிரச்சிரனயும்’ என்ற பெயரில் வெளியிட்டு அமரர் மகேஸ்வரனின் அறியப்படாத சில பக்கங்களை 2008இல் ஆவணமாக்கித் தன் செஞ்சோற்றுக்கடனைத் தீர்த்துக்கொண்டார். பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் அமரர் மகேஸ்வரனின் நிழலாகவிருந்து தனத பிறந்த மண்ணான காரைநகருக்கு சம்பந்தன் ஆற்றிய பல சேவைகள் பற்றி எவருமே கதைப்பதில்லை. எதிர்காலத்தில் இவரது பணிகள் தனியொரு ஆவணமாக்காதவரை அது பரந்து விரிந்த ஈழத்தமிழ் உலகைச் சென்றடைவதற்கு வாய்ப்பேயில்லை.
‘கறுப்பு யூலை ’83: குற்றச்சாட்டு: கறுப்பு யூலை 83 நினைவுகள் வரலாற்றுப் பதிவுகள்’ என்ற தலைப்பில் ஐ.தி.சம்பந்தன் 2009இல் ஒரு பாரிய தொகுப்பினை பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் உதவியுடன் உருவாக்கி வழங்கியிருந்தார். இலங்கையில்1983 யூலை மாதத்தில் நாடளாவிய முறையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் பற்றி, முன்னெப்போதும் தமிழ் நூல் வரலாற்றில் வெளிவந்திராத விரிவான பதிவாக இது அமைந்தது. பத்திரிகைச் செய்திகளாகவும், அறிக்கைகளாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும் உலகெங்கணுமிருந்து இனக்கலவரம் பற்றி எழுதப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைகளும், சர்வதேச அறிக்கைகளும், பிரபல பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. 2009 வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே இவரால் பொருத்தமாக இணைக்கப்பட்டிருந்தன. 45 ஆங்கில ஆவணங்களினதும், 18 தமிழ் ஆவணங்களினதும் தொகுப்பாக புகைப்பட ஆதாரங்களுடன் இந்நூல் வெளிவந்து திரு சம்பந்தன் அவர்களது பெயரை ஓரளவு தமிழ் உலகிற்கு எடுத்துச்சென்றது.
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி அவரை வாழ்த்தி மகிழும் வகையில் ஒரு சேவை நயப்பு மலரை திருவாளர்கள் என்.சச்சிதானந்தன், பொன் பாலசுந்தரம் ஆகியோருடன் இணைந்து 2009இல் வெளியிட்டு வைத்தார்.
இலங்கையில் வாழ்ந்த வேளை, திரு. சம்பந்தன் அவர்கள் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியினது அணுக்கத் தொண்டராகவும் அபிமானியாகவும் இருந்தவர். அதன் பின்னணியில் லண்டன், சைவ முன்னேற்றச் சங்கம் அம்மையாரை நினைந்து ஒரு மலரைப் பதிப்பிக்க முனைந்த வேளையில் தானே முன்வந்து, 2011இல் ஐ.தி.சம்பந்தன் அவர்கள் தொகுத்தளித்த நூல் ‘சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வாழ்வியற் பணிகள்’ என்ற நூலாகும்.
சிவத்தமிழ்ச் செல்வியின் வாழ்வியல் பணிகளை பல்வேறு தளங்களிலும் பார்வைக்கோணங்களிலும் நின்று வாழ்த்தியும், மதிப்பீடு செய்தும் வெளிவந்துள்ள 19கட்டுரைகளையும் அம்மையாரின் பேருரைகளினதும் ஆக்கங்களினதும் தேர்ந்த ஒன்பது கட்டுரைகளையும் தனது கடின உழைப்பின் பயனாகத் தேடித்தொகுத்து சம்பந்தன் ஐயா அவர்கள் இந்நூலில் பதிவுசெய்திருந்தார்.
‘சுடரொளி’ என்ற பெயரில் திரு ஐ.தி.சம்பந்தன் அவர்கள் நீண்டகாலமாக ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். சிலகாலம் ஒழுங்காக வெளிவந்த போதிலும், பலகாலம் அவ்வப்போது தலைகாட்டித் தன் இருப்பை தெரியப்படுத்திவந்த நீண்டதொரு வரலாற்றுப் பாதையினையும், பாரம்பரியத்தையும் சம்பந்தரின் ‘சுடரொளி சஞ்சிகை’ கொண்டிருந்தது. சுடரொளி சஞ்சிகையை மக்கள் மத்தியில் வாடாமலராக்கி வைத்திருப்பவை அச்சஞ்சிகை அவ்வப்போது வெளியிட்ட சில சிறப்பிதழ்களாகும்.
சுடரொளியின் ‘தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர்’ 1999 இல் வெளிவந்திருந்தது. ஐ.தி.சம்பந்தன் அவர்கள் பதிப்பித்திருந்த இம்மலரில் தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவாக அவரது தமிழ்ப்பணிகளையும் தமிழ்த் தேசியப் பணிகளையும் நினைவுகூரும் வகையிலும், ஆறுமுகநாவலர், தந்தை செல்வா,மறைமலை அடிகள் போன்றோரை நினைவுகூரும் வகையிலும் தொகுக்கப்பெற்ற கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த மலரின் வரவையொட்டி நான் எழுதியிருந்த அறிமுகக் கட்டுரையே திரு. ஐ.தி. சம்பந்தன் அவர்களை என்னுடன் முதன்முதலில் இணைத்துவைத்ததென்று கருதுகின்றேன்.
சுடரொளியின் ‘ஏழாவது இலண்டன் சைவ மாநாட்டு சிறப்புமலரை’ 2004இல் திரு. பொன்.பாலசுந்தரம் அவர்களின் துணையுடன் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்டிருந்தார். சி.சரவணபவன் அவர்களை கௌரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருந்த இச்சிறப்பிதழ், இலண்டனில் சைவத் திருக்கோயில்களின் ஒன்றியம் ஏழாவது ஆண்டாக நடாத்திமுடித்த சைவமாநாட்டின் நினைவாக வெளிவந்திருந்தது.
ஐ.தி.சம்பந்தன் அவர்களின் பதிப்பு முயற்சிகள் 1987இல் தொடங்கி 2011வரை தான் அறிந்த பெரியோரைத் தமிழினத்தின் வரலாற்றில் இடம்பெறச்செய்யும் பணியாகவும், அவர்களின் பெரும்பணிகளை தமிழ் உலகிற்கு மீளநினைவுறுத்தி, வெளிச்சமிட்டுக்காட்டும் நோக்கம் கொண்டதாகவும் தான் இருந்த வந்துள்ளதை நாஙகள் இங்கே அவதானிக்க வேண்டும்.
எம்மிடையே வேராகவே மறைந்திருந்து வாழ்ந்துவிட விரும்பிய இவரது வாழ்வின் முக்கிய சில பக்கங்களை கட்டுரைகளாகத் தொகுத்து எழுதிவைக்கவேண்டும் என்ற எனது ‘ஆக்கினை’ தாங்காமல் இவர் தானே எழுதித் தொகுத்த முதலாவது நூல்தான் ‘ஒரு வேரின் சுவாசம்’ என்ற பெயரில் 2011இல் வெளிவந்திருந்தது. சம்பந்தன் ஐயாவின் 75ஆவது அகவை நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அந்த நூலுக்கான தலைப்பையும் நானே வழங்கியிருந்தேன். அவரது வாழ்வின் போக்கைக் கச்சிதமாக அத்தலைப்பே வெளிப்படுத்தியிருந்தது. இதுவே ‘ஐ.தி.சம்பந்தன்’ என்ற தனி மனிதன், தனது சொந்த உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்துகொண்ட முதலாவது எழுத்து முயற்சியாகக் குறிப்பிடலாம். தனது தனிப்பட்ட கருத்துக்களின் கொள்கலனாக வெளிவந்த முதலாவது படைப்பாகவே இந்நூல் அமைகின்றது. இதில் கொழும்பு விவேகானந்தசபை பற்றி,லண்டனில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி,காரை நகர் இந்துக் கல்லூரி பற்றி, சுவாமி விபுலானந்தர் பற்றி, மூதறிஞர் ந.சபாரத்தினம் பற்றி, டாக்டர் தருமலிங்கம் பற்றி, ஆவரங்கால் சின்னத்துரை ஐயா பற்றி, அமரர் கிருஷ்ணா வைகுந்தவாசன் பற்றி, பெரியார் மு.வயிரவப்பிள்ளை பற்றி, கலைமாமணி வி.கே.டி.பாலன் பற்றி எனப் பதினாறு கட்டுரைகளின் வழியாகப் பெருமக்கள் பலரையும் பதிவுசெய்திருந்த சம்பந்தன் ஐயா அவர்கள் 17ஆவது கட்டுரையில் மாத்திரம் தன்னைப்பற்றி சிறிதாக சில வாழ்க்கைக் குறிப்பைத் தந்துவிட்டு அந்த நூலை முடித்துவிட்டார்.
ஈழத்தமிழர்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அதீத அக்கறைகொண்ட திரு. ஐ.தி.சம்பந்தன் அவர்களின் பதிப்புத்துறை நடவடிக்கைகளில் பிரசவம்கண்ட நூல்கள் யாவும் ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளதையும் இங்கு எம்மால் அவதானிக்கமுடிகின்றது. அத்தகைய ஆவணப்படுத்தல் என்ற விருப்பலைகளில் எழுந்த இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை நாம் இலகுவாக இரு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். தான் அறிந்த தமிழறிஞர்கள், சமூக சேவையாளர்கள் பற்றிய தனது மனப்பதிவுகளையும், கணிப்பையும் முன்வைத்து இவர் தனது பார்வைக் கோணத்தில் எழுதிய அவர்களது வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புக்கள் ஒருவகை. சமகால இலங்கை அரசியல் வரலாறு பற்றிய இவரது நுணுக்கமான பார்வைகள் இரண்டாவது வகை.
‘ஒரு வேரின் சுவாசம்’ நூலின் கட்டுரைகளைப் பார்வையிட்டு பொறுமையாகத் தொகுத்து அழகுபடுத்தி அவருக்கு வழங்கிய எனக்கு, அந்த நூல் சம்பந்தன் ஐயாவின் வரலாற்றை திருப்திகரமாக வெளிப்படுத்தவில்லை என்ற உணர்வையே நெருடலாக ஏற்படுத்தியிருந்தது. இதனை அவரிடம் நூல் தயாரிப்பு நிலையிலிருந்தே தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தேன். ‘மற்றவர்களை ஆவணப்படுத்தியது போதும். இனியாவது உங்களை முழுமையாக ஆவணப்படுத்துங்கள். உங்களை விட்டால் வேறு எவராலும் அதைச் செய்யமுடியாது போகலாம். இதனை நீங்கள் செய்யாதுவிட்டால் எதிர்காலத்தில் வரலாறு உங்களை விரைவில் மறந்துவிடும்’ என்று அவரது இறுதிக்காலம் வரை இடித்துரைத்த வண்ணமிருந்தேன்.
இந்நிலையிலேயே எனது நச்சரிப்பைத் தாங்காமல், அவரது மலரும் நினைவுகளை ஓரளவு வெளிப்படுத்தக்கூடியதாக மற்றொரு கையெழுத்துப் பிரதியை எனக்கு 2013இல் அனுப்பிவைத்துவிட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டார். காலக்கிரமத்தில் அதனை வடிவமைத்து ‘நீங்காத நினைவுகள்: தமிழ்த்தொண்டர் ஐ.தி.சம்பந்தனின் நினைவுத் தடங்கள்’ என்று தலைப்பிட்டு அவருக்கு இலங்கையிலேயே வழங்கியிருந்தேன். அந்த நூலுடன், இலங்கையிலிருந்த வேளை அமரர் சிற்பின் உதவியுடனும், வேறும் சகாக்களின் ஆதரவுடனும் மேலும் பல அத்தியாயங்களைச் சேர்த்து அதனை நூலாக்கும்பொருட்டு பதிப்பகத்திடம் வழங்கிவிட்டு லண்டன் திரும்பிவிட்டார். பின்னர்2014இல் இந்த நூல் வெளியாயிற்று. இந்நூல் ஓரளவாவது அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவுசெய்திருக்கின்றது என்று கருதுகின்றேன். இருப்பினும் இது நான் கண்ட ‘ஐ.தி.சம்பந்தன்’ என்ற ஆளுமையினை முழுமையாக தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தவதாகக் கருதமுடியவில்லை.
இவரது சமூக வாழ்வின் முக்கிய சில பக்கங்களை இந்த நூல்வழியாக சுயசரிதை வடிவில் ஐ.தி.சம்பந்தன் அவர்கள் வழங்கியிருக்கின்றார் என்று வேண்டுமானால் இந்நூலைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். தனது மனதில் இடம்கொண்டவர்கள் பற்றியும் ஆங்காங்கே அவர்களுடனான தனது தொடர்புகளையும் இந்நூலில் குறிப்பிட்டிருந்தார். இவர் எதேச்சையாகக் குறிப்பிட்ட சில சம்பவங்கள் சில சலசலப்புகளையும், சில முகச்சுழிப்புகளையும் ஏற்படுத்தத் தவறவில்லை. இவர் கூறிச்சென்ற சில விடயங்களின் வாயிலாக இலங்கை, தமிழகம், புகலிடம் என இவரது தொடர்புகள் எவ்வாறு விரிந்துள்ளன என்பதை இந்நூல் வழியாகப் புலப்படுத்தியிருந்தார்.
திரு ஐ.தி.சம்பந்தன் அவர்களது நூல்களையும், அவர் வீட்டில் தேடிப் பாதுகாத்து வைத்திருக்கும் ஆவணங்களையும் ஒழுங்குபடுத்தித் தருமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார். நானும் சாக்குப் போக்குச் சொல்லி நாட்களைக் கடத்தி இறுதியில் இனியும் இழுத்தடிக்க முடியாது என்ற நிலையில் அவரது இல்லத்திற்குச் சென்று அங்கிருந்த நூல்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்க அவருக்கு உரிய செயன்முறைத் தொழில்நுட்ப அறிவினை வழங்கியிருந்தேன்.
அவரது இல்ல நூலக அறையில் இருந்த வேளையில் அவர் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களுக்கடையே இலங்கைத் தமிழ்த் தொழிற்சங்கம் பற்றிய ஆவணத் தொகுப்புகள் எனது சிந்தையைக் கவர்ந்திருந்தன. தான் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த ஒரு வரலாற்று நிகழ்வினை நல்லதொரு ஆவண நூலாகத் தொகுத்து வழங்கக்கூடிய பல தகவல்கள் அவரது தனிப்பட்ட நூலகச் சேர்க்கையில் காணப்பட்டன. அவரது வாழ்நாளிலேயே அதனை மீள வாசித்து, தனது அனுபவங்களையும் சேர்த்து எழுதி, அதனை முழுமையாகத் தொகுத்து நூலுருவில் வழங்கவேண்டும் என்று அவரிடம் இடைவிடாமல் நெருக்குதல் அளித்து வந்தேன். ‘ஆடிக்காற்றுக்கு அம்மி நகர்வதுபோல’ அவரும் ஒருபடியாக அதனை தொகுத்து ஒரு நூலாக எழுதியிருக்கிறார். அதுகூட நான் எதிர்பார்த்த முழுமையைத் தரவில்லை. மேலோட்டமாகத் தனது பல்வேறு சமூகப் பணிகளுக்குள்ளும் நேரத்தைக் கண்டெடுத்து அவசர அவசரமாக எழுதியும், முன்னர் எழுதி வைத்திருந்த விடயங்களை ஆங்காங்கே இணைத்தும், இந்நூலைத் தொகுத்திருப்பதாகவே கையெழுத்துப் பிரதியை வாசித்தபோது எனது மனதில் தோன்றியது.
அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்த சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் விரிவான வரலாற்றை எழுதி ஆவணமாக்கித் தரவேண்டும் என்று நான் 2016களில் முன்வைத்த வேண்டுகோளைஅவர் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், அதற்காக நேரத்தை ஒதுக்க அவர் சார்ந்த அரசியல் ஆர்வம் இடம்கொடுக்கவில்லை. பின்னர் கொரொணா காலத்தில் அவரும் அடிக்கடி சுகவீனமுற்றதைப் போலவே நானும் சுகவீனமுற்றேன். முன்னரைப் போல அவரை ஊக்குவிக்க ஆஸ்பத்திரியும் வீடுமாகவிருந்த எனது சுகவீனம் தொடர்ந்தும் இடம்கொடுக்கவில்லை.
அவர் எழுதத் தவறிய அவரது வாழ்க்கை வரலாற்றையும், சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் வரலாற்றையும் என் வாழ்நாளில் எப்படியாவது ஆவணப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் என்னிடம் தேங்கியுள்ளது.
அமரர் ஐ.தி.சம்பந்தன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இவரது குலதெய்வமான திக்கரை முரகனை வேண்டிக்கொள்வோம்.