— “தேசம் நெற்” சஞ்சிகையின் ஆசிரியர், த.ஜெயபாலன் —
தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.
உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.
15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.
இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.
தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.
லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.
அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.
இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.
இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை
உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.
ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.
ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.
உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.
நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.
இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.
1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.
தமிழ் மாவட்டங்களில் தற்கொலை வீதம்:
வடமாகாணம்:
கிழக்கு மாகாணம்
இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது. இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.
இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.
தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.
இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.
தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.
தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.
தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.
தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் ( சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.
உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.