அரசியல் யாப்பின் 20வது திருத்தமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

அரசியல் யாப்பின் 20வது திருத்தமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

 —- வி.சிவலிங்கம் —

இலங்கையில் இன்று மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்று அரசியல் அமைப்பின் 20வது திருத்தமாகும். நாட்டில் ‘கொரொனா’ தொற்றுநோயின் தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துச் செல்லும் வேளையில் அரசாங்கம் அரசியல் அமைப்பு மாற்றங்கள் ஊடாக அதிகாரத்தை மேலும் இறுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் ‘கொரொனா’ வைரஸ் தாக்குதல் காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதிகளில் அதிகளவு தங்கியிருந்த இலங்கைப் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது.  

இலங்கையின் பொருளாதாரம் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நாட்டிற்கு வருமானத்தையும், வேலை வாய்ப்பையும், பொருளாதாரத்தையும் ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறையும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.  

இவ்வாறு தொற்றுநோயினால் நாட்டின் பொருளாதாரம் சிக்கலடைந்துள்ள நிலையில், அரசாங்கம் அரசியல் யாப்பில் மாற்றங்கள் என்ற பெயரில் அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், அதேகட்சியைச் சார்ந்தவர் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருக்கையில் 20வது திருத்தத்தின் மூலம் பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்து, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் அதிகரிப்பதன் அவசியமென்ன? பிரதமரும், ஜனாதிபதியும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் எனில் 19வது திருத்தம் ஒருவேளை அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஆனால் சகோதரர்களே முக்கிய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வேளையில், இரு தரப்பினரும் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கையில் அவசர அவசரமாக 20வது திருத்தத்தின் மூலம் பிரதமரின் அதிகாரத்தைக் குறைக்க என்ன அவசியம் எழுந்துள்ளது? இவ்வாறான வினா எதிர்க்கட்சிகளால் மட்டுமல்ல, அரசாங்க உறுப்பினர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. பல அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்தின் உள்ளடக்கம் குறித்துத் தமக்கு எதுவுமே தெரியாது எனப் பகிரங்கமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

20வது திருத்தம் என்பது ஜனாதிபதியைச் சர்வாதிகாரியாக மாற்றும் ஒருநிலைக்கு, அதிகாரம் குவிக்கப்படுவதாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவ்வாறான முயற்சி 18வது திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் மகிந்த அரசைத் தோற்கடித்தார்கள். மீண்டும் அதே முயற்சி மேற்கொள்ளப்படுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாக அரசியல் கட்சிகள், பிரஜைகள், சமூக அமைப்புகள் போன்றன 20வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. உயர் நீதிமன்றத்தில் இதற்கான விவாதங்கள் முடிவுற்றுத் தீர்ப்பு ஜனாதிபதியிடமும், சபாநாயகரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இவைபற்றிய விபரங்கள் எதிர்வரும் அக்டோபர் 20 ம் திகதி பாராளுமன்றம் கூடும்போதே தெரிய வரலாம். இருப்பினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில பகுதிகள் கசியவிடப்பட்டுள்ளன. இச் செயல்களின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையிலும் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அத் தீர்ப்பின் விபரங்கள் பற்றிய பார்வையை வாசகர்களின் நன்மை கருதித் தரப்படுகிறது. 

பத்திரிகைகளில் கசியவிடப்பட்ட தீர்ப்பு: 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் 20வது திருத்தத்தில் உள்ள 4 பிரிவுகள் பாராளுமன்ற சிறப்பு வாக்கெடுப்புடன், மக்களின் ஒப்புதல் வாக்கும் பெறப்பட வேண்டுமெனவும், சில பகுதிகள் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.  

ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல்: 

முதலில் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், மக்களின் ஒப்புதல் வாக்களிப்பும் பெறப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் தீர்ப்பினை ஆராய்ந்தால் அதில் முதலாவதாக ஜனாதிபதிக்கு எதிராக நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் நாட்டின் பிரஜைகளால் வழக்குத் தொடர முடியாது என 20வது திருத்தம் கூறுகிறது. இத் திருத்தம் தொடர்பாக அரசின் சார்பில் வாதாடிய சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர் எனவும், அவர் தனது கடமைகளைச் செய்யும்போது தடைகள் எதுவும் அவருக்கு இருக்கக்கூடாது. அவர் கடமையை மேற்கொள்ளும்போது தடைகள் எதுவும் ஏற்பாட்டால் அவரால் தனது கடமையை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் போகும். எனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விலக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் நீதிமன்றம் இவ் வாதத்தை ஏற்கவில்லை. இப் பிரச்சனை தொடர்பாக சட்ட மா அதிபர் தெரிவித்த காரணங்கள் ஜனாதிபதியின் செயல்களில் நியாயமற்ற தன்மை மற்றும் செயற்பாடுகள் என்பவற்றிற்கும், கடமைகளைத் திறம்பட நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கிடையில் தெளிவான மற்றும் ஆக்கபூர்வ உறவை ஏற்படுத்த அவை தவறிவிட்டன எனவும் தெரிவித்ததோடு, சட்ட மா அதிபரின் வாதமாக முன்வைக்கப்பட்ட ‘ஜனாதிபதியின் செயற்பாடுகளைத் தடையின்றி மற்றும் திறமையுடன் நிறைவேற்றுவதற்கு போதுமான ஏற்பாடு, பாதுகாப்பு அவசியம்’ என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. இவ் விவாதங்களின்போது சிவில் சமூகத்தின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஜனாதிபதிக்குக் குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்கு அளிப்பது நாட்டின் பிரஜைகள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் அடிப்படை உரிமை மீறப்படுவதாக வாதித்தனர்.  

இருப்பினும் நீதிமன்ற அபிப்பிராயப்படி 20வது திருத்தத்தின் 5வது பிரிவு திருத்தப்பட்டால் அதாவது உச்ச நீதிமற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறுவதற்கான தருணங்கள் விபரிக்கப்பட்டால் இவ்வாறான முரண்பாடுகளைத் தவிர்க்கலாம் எனவும் தெரிவித்து 20வது திருத்தம் சட்டமாக்கப்பட வேண்டுமெனில் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், மக்களின் ஒப்புதல் வாக்களிப்பும் அவசியம் எனத் தெரிவித்தது. 

இங்கு எமது கவனத்திற்குரிய இன்னொரு அம்சம் எதுவெனில், இத் தீர்ப்பு அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைவாக இருப்பதை அதாவது ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ அடிப்படையில் தவறிழைத்தால் அல்லது தவிர்த்தால் அதற்கு எதிராக சட்ட மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் கோரிக்கையை பிரஜைகள் முன்வைக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.   

தேர்தல் ஆணையம்: 

அரசியல் யாப்பு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பார்க்கையில் நீதியானதும், நியாயமுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தவும், சுதந்திரமும், நியாயம் பொருந்திய  தேர்தலை நடத்துவதற்கு தமக்கு உதவும்படி தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பின் அவ்வாறான வேண்டுகோளை ஏற்று அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஜனாதிபதியின் கடமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு சபை பிரதான பங்கு வகிக்கிறது. அச் சபையிலிருந்து ஜனாதிபதி தெரிவு செய்யலாம்.  

கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் ஆணையாளர்களாக மூவரே செயற்பட்டனர். அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டார். அதன் இன்னொரு உறுப்பினராக பேராசிரியர் ரத்னஜீவன் கூல் என்ற தமிழர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது அரசியல் அபிப்பிராயங்கள் அரசின் சில செயற்பாடுகளை விமர்ச்சிப்பதாக அமைந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில் அவர் தமிழர் என்பதாலும், அரசை விமர்ச்சிப்பவர் என்பதாலும் அவருக்கு எதிரான கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் அதிகரித்திருந்தன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தில் மூவர் மட்டுமே இருப்பதும், ரத்னஜீவன் கூல் அவர்கள் அடிக்கடி யாழிலிருந்து கொழும்பிற்குப் பயணம் செய்யவேண்டியிருந்ததாலும் ஆணைக்குழுக் கூட்டம் தடைப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்ததோடு, ஏன் மூவராக மட்டுப்படுத்தினார்கள்? என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் தற்போது 20வது திருத்தத்தில் மீண்டும் மூவரே நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை ஜனாதிபதியே நியமிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நியாயமாகச் செயற்படுவதை தேர்தல் ஆணையகம் கண்காணிக்கிறது. ஆனால் 20வது திருத்தம் ஊடகங்களே தம்மைச் சுயதணிக்கை செய்யும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

இங்கு தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தேர்தலை நடத்துவதற்கான உத்தியோகஸ்தர்கள், பணம் மற்றும் பல தேவைகளை அரசாங்கமே வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனில் தேர்தல் காலத்தில் அரச நிர்வாகம், ஊடகங்கள் தேர்தல் விதிகளை மீறுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க முடியாது.  

ஆனால் 20வது திருத்தத்தில் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் வழிகாட்டுதல்கள் தொடர்பான விடயத்தில் தேர்தல் காலத்தில் அரசும், மற்றும் தனியார் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்வது? தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கையில் தனியார், அரசு என்ற வேறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. சட்ட மா அதிபர் சார்பில் வாதிடுகையில் தனியார் ஊடகங்கள் பொது நிதியில் செயற்படவில்லை என்பதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.  

இத்தகைய வாதம் என்பது ‘புரிந்து கொள்ளக்கூடிய அளவுகோல்களை அடிப்படையாக்கொண்ட வகைப்படுத்தலாக அது இல்லை’ எனவும், 20வது திருத்தத்தின் 3வது பிரிவு அரசியலமைப்பின் 3வது பிரமாணத்தை மீறுவதாகவும், அத்துடன் அரசியலமைப்பின் 3வது பிரிவை அதன் 4வது பிரிவுடன் இணைத்து நோக்குகையில் அப் பிரிவு சிறப்பு பெரும்பான்மையுடன், மக்கள் ஒப்புதலும் பெறப்படவேண்டும் எனத் தெரிவித்தது. இருப்பினும் சட்ட மா அதிபர் குழுநிலை விவாதங்களின்போது மீண்டும் அரசியலமைப்பின் 33வது பிரமாணத்திற்கு எடுத்துச் சென்று அம் முரண்பாடு நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது. 

இரட்டைக் குடியுரிமை: 

இதர விடயங்களில் ஒன்றான இரட்டைக் குடியுரிமையை வைத்திருப்பது பாராளுமன்றத் தேர்தல்களில் நிற்பதற்கான தகுதி நீக்கம் என்பதை நீதிமன்றம் நிராகரித்தது. இரட்டைக் குடியுரிமை வாதங்களின்போது இரட்டைக் குடியுரிமை என்பது ‘பிளவுபட்ட விசுவாசம்’, ‘நலன்களின் மோதல்’ போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. இவை ஊகத்தின் அடிப்படையிலானது என்பதால் கவனத்தில் கொள்ள முடியாது என நீதிமன்றம் நிராகரித்தது. 

அரசியலமைப்பு சபையை நாடாளுமன்றக் குழுவாக மாற்றும் விவகாரம் 

20வது திருத்தத்தில் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டு,  பதிலாக பாராளுமன்ற குழு ஒன்றை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுச் சேவையில் ஏற்படும் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள், நீதிபதி நியமனங்கள் தொடர்பாக அப் பாராளுமன்றக் குழு தனது அவதானிப்புகளை வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கையில், அவை அரசியல் யாப்பிற்கு விரோதமாக இல்லாதிருப்பினும் அவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மீள் வரையறை செய்வதாக கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 

இதனை ஆராய்ந்தால் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தெளிவாக வரையறை செய்யப்படுதல் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.  

பிரதமரை மாற்றும் விவகாரம் 

பிரதமரை நீக்கிப் புதியவரை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு இருப்பதாக அரசியல் யாப்பு கூறுகிறது. இருப்பினும் அந்த அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது என்பது ஜனாதிபதி பாராளுமன்றத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டளையிடுவதாகவே கொள்ளவேண்டும் என நீதிமன்றம் தெரிவிக்கிறது. அதாவது புதிய பிரதமரை நியமிப்பது என்பது பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது என்பதால் அது இறையாண்மையை மீறுவதாகாது. எனவே மக்கள் ஒப்புதல் வாக்கெடுப்பு அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பித்தல் தொடர்பானவை  

20வது திருத்தத்தின் 15வது பிரிவு பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கான திருத்தங்கள் என்பது அம் மசோதாவின் தகுதிகள், மற்றும் கொள்கையிலிருந்து விலகிச் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கிறது.  

இம் முயற்சி முற்போக்கானது என நீதிமன்றம் வர்ணித்தாலும், இவ் விதிமுறை சட்ட மா அதிபரினால் முன்மொழியப்பட்டவாறு குழுநிலை வாதத்தின்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களின்போது அகற்றப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.  

மசோதாவும்நீதிமன்றமும் 

மசோதா தொடர்பாக நீதிமன்றத்தை நாடும் கால எல்லை 14 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைக்க 20வது திருத்தம் கோருகிறது. இம் முயற்சி மக்களின் நீதித்துறை அதிகாரத்தை அல்லது சட்டவாக்க அதிகாரத்தை மட்டுப்படுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் இவ்வாறான முயற்சி என்பது மசோதாவிற்கான சவால்கள் வினைத்திறன் மிக்கவையாகவும், திறமையாக தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளது.  

‘ அவசர மசோதா‘ விவகாரம் 

20வது திருத்தத்தின் உட்பிரிவுகள் உச்ச நீதிமன்றம் அதன் தீர்மானத்தினை 24 மணி நேரத்திற்குள் வழங்கும் விதத்தில்  ‘அவசர மசோதா’ என்ற பெயரில் உயர் நீதிமன்றதத்தின் தீர்ப்பை 24 மணி நேரங்களுக்குள் அல்லது ஆகக்கூடியது 3 நாட்களுக்கு மிகைப்படாமல் தீர்ப்பைப் பெறும் பொறிமுறையைக் கொண்டுவந்துள்ளது. இக் கால அவகாசத்தை ஜனாதிபதியே தீர்மானிக்கிறார். அவ்வாறில்லாமல் அம் மசோதாவை பாராளுமன்றத்திற்கு அனுப்பி பாராளுமன்றத்தால் அம் மசோதா தோற்கடிக்கப்பட்டால் மக்கள் ஒப்புதல் வாக்களிப்பு மூலமே சட்டமாக்க முடியும்.    

கணக்காய்வாளர்கள் விவகாரம் 

கணக்காய்வாளரின் அதிகாரங்கள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரிடமுள்ள நிதி அறிக்கையை ஆய்வு செய்வது தொடர்பாக அரசியல் யாப்பின் 154வது பிரமாணத்தை 20வது திருத்தம் மீறுவதாக உள்ளதாக தெரிவித்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்ட மா அதிபரால் முன்மொழியப்பட்ட குழுநிலை விவாதங்களின்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீளவும் அவ் அதிகாரங்களை வழங்கி சட்டவாக்க அதிகாரத்தில் ஏற்பட்ட மோசமான தாக்கத்தை சரிசெய்யும் என நீதிமன்றம் தெரிவித்தது.   

அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட 20வது திருத்தத்தின் சில பகுதிகள் பாராளுமன்ற சிறப்பு பெரும்பான்மையுடன் மக்கள் ஒப்புதல் வாக்களிப்பும் நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றின் மேலும் சில பகுதிகளை குழுநிலை விவாதங்களின்போது மாற்றவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் அரச தரப்பினர் திருத்தங்களோடு முன்வைப்பார்களா? அல்லது புதிய திருத்தத்தினை முன்வைப்பார்களா? என்பது தெரியவில்லை. ஏனெனில் ஜனாதிபதிக்கு பிரதமரின் அதிகாரங்களை வழங்குதல் என்பது அரசாங்க தரப்பிற்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே முயற்சியை மீண்டும் கொண்டுவந்து அமைதியற்ற நிலையைத் தோற்றுவிக்க அனுமதிப்பார்களா? என்பது பிரச்சனைக்குரியதாகும்.  

தற்போது ‘கொரொனா’ நோயின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் அதிகாரங்களை ஜனாதிபதியிடம் குவித்து எவ்வாறான மாற்றங்களைக் காணமுடியும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனாலும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ அவர்கள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவை அவசியம் என வற்புறுத்தி வருகிறார்.  

1977ம் ஆண்டு ஜே ஆர் தலைமையிலான ஐ தே கட்சி நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தை மாற்றுவதாகக் கூறி பாராளுமன்றத்தின் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்ததோடு தமக்கு ஏற்றவாறு அரசியல் யாப்பையும், தேர்தல் முறையையும் மாற்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்தவாறு மாற்றங்கள் நிகழாதது மட்டுமல்ல, அவை எதிர்த் திசையில் சென்று நாட்டின் ஜனநாயக வாழ்வைக் கேள்விக்குட்படுத்தியது. அத்தகைய வாதங்களே இன்றும் தொடர்கின்றன. ஜனாதிபதியின் மட்டற்ற அதிகாரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்காத வகையில் ஜனாதிபதிக்கு எதிராக நாட்டின் பிரஜைகள் நீதியைக் கோர முடியும் என்ற தீர்ப்பு நீதித்துறையின் மேல் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவே கொள்ள முடியும்.