தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த பார்வை

தி. ஞானசேகரனின் ‘எரிமலை’ நாவல் குறித்த பார்வை

— செங்கதிரோன் — 

‘ஞானம்’ இதழ் 227இல் (ஏப்ரல் 2019)’தொடரும் அரசியல் உரையாடல், தி. ஞானசேகரனின் ‘எரிமலை நாவலை முன்னிறுத்தி’ எனும் தலைப்பிலே பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்கள் எழுதிய விமர்சன எழுத்துக்ளைப் படித்தேன். 

வழமை போல் தற்காலத்தில் நூல்களுக்கான ‘ரசனைக்குறிப்புகள்’ எழுதுபவர்களைப் போல் நூலாசிரியரை ‘முகஸ்துதி’ பண்ணாமல் மிகவும் பொறுப்புடனும் கவனமாகவும் எரிமலை நாவலை முன்னிறுத்தி தனது அரசியல் உரையாடலை ஆரம்பித்துவைத்த பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். ஒரு மூத்த நாவலாசிரியரான தி.ஞானசேகரனிடம் நான் ஆவலுடன் எதிர் பார்த்தது ‘எரிமலை’ நாவலைப் படித்த போது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவரால் எழுதப்பெற்ற இந் நாவல் முப்பத்தினான்கு ஆண்டுகள் கழித்து வெளியிடப் பெற்றதனால்தானோ என்னவோ நாவலின் உள்ளடக்கம் அரைத்தமாவையே அரைக்குமாற்போல் ‘சப்’ என்று உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப்போல. இலங்கைத் தமிழ்த்  தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்லது தமிழ்த் தேசியப் போராட்டம் அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் என எப்படி அழைக்கப்பெற்றாலும் இப் போராட்டமானது பின்னாளில் இப்போராட்டத்திலிருந்த அத்தனை நியாயங்களும் ‘பாசிசத்தின்’ பாதணிகளின் கீழ் நசுங்குண்டு தனது மக்கள் நலன் சார்ந்த தத்துவார்த்தத் தளத்தை இழந்து ‘வன்முறை’ யாக அறத்தைப் புறந்தள்ளிய ஆயுதக் கலாசாரமாக வடிவெடுத்தது. ‘தந்தை செல்வா’ காலத்தில் தடம் பதித்த தமிழ்த் தேசியம் பின்னர் தடம் புரண்டு போனது. போராளிகளினதும் (அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி) அப்பாவிப் பொதுமக்களினதும் (அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி) பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்துவிட்டுப்-பாரிய சொத்தழிவுகளை ஏற்படுத்தி விட்டு-பலவிதமான பண்பாட்டுச் சீரழிவுகளையும் உளவியல் தாக்கங்களையும் உண்டாக்கிவிட்டு இப் போராட்டம் விடை பெற்றுள்ளது. எந்த மக்களின் மீட்சிக்காக இப்போராட்டம் முன்னெடுக்கப் பெற்றதோ அம்மக்கள் இன்று தங்கள் சமூக பொருளாதார அரசியல் இருப்பைப் பேணிப்பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நகர்வு என்னவென்று தெரியாது திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டது போல திசையறியாது கலங்கி நிற்கின்ற ஒரு காலகட்டத்தில் அரைத்த மாவையே அரைக்கின்ற ‘எரிமலை’ போன்ற நாவலால் விளையக்கூடிய சமூகப்பயன்பாடு என்ன என்ற கேள்வியே என்னுள் எழுகிறது. 

எந்த விதமான சமூகநல நாட்டமும் இல்லாமல் சமூக மாற்றத்தையோ சமூக மறுமலர்ச்சியையோ சிந்தனையில் கொள்ளாமல் வெல்லுகின்ற குதிரையில் காசைக்கட்டும் தேர்தல் அரசியலை மட்டும் கவனத்திலெடுத்து காய் நகர்த்துகின்ற ‘போலித்’ தமிழ் தேசியம் பேசி அரசியல் பிழைப்பு நடாத்துகின்ற தற்காலத் தமிழர் தம் அரசியல் தலைமைகளின் அழுங்குப் பிடியிலிருந்து அப்பாவித் தமிழர்களை மீட்டெடுத்து ஓர் அறிவுபூர்வமான சமூக மாற்றத்திற்கான அரசியலை நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய அவசர தேவைப்பாடு எழுந்துள்ள ஒரு கால கட்டத்தில்  ‘எரிமலை’ நாவலின் வரவு ஒரு காலாவதியான கதையாகவே எனக்குப் படுகின்றது. 

 சீட்டிழுப்பு முடிந்த பின் பரிசு பெறாத ‘சுவீப் டிக்கட்’ போல. தமிழ்ப்புத்திஜீவிகளில் அனேகமானோரின் பலவீனம் அல்லது ‘பிழைப்பு’அல்லது ‘தப்பித்தல்'(Escapism) என்னவெனில் ஒரு விடயத்தையிட்டு ‘ Subjective ‘ ஆக மட்டுமே கதைப்பது. அந்தக் கதையாடல் யதார்த்தமான ‘ Objective ‘ ஆக இருப்பதில்லை. தற்காலச் சூழலில் இலக்கியத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி, அரசியலிலும் சரி இந்த ஆபத்தான போக்குத்தான் அதிகம் நிலவுகிறது. ‘எரிமலை’ நாவலும் இதற்கு விதிவிலக்காக இல்லாமல் ‘ Subjective ‘ ஆகவே உள்ளது. ‘ Objective ‘ ஆக இல்லை.