— அழகு குணசீலன் —
இந்தத் துன்பம் ஒரு குமுறும் எரிமலை!
இதன் முதுமை நாஸிப்படைகள் என்றால் இளமை மியான்மார் படைகள். இந்த முதுமைக்கும் இளமைக்கும் இடையே உலகின் பல நாடுகளில் துயரப்படலம் நிகழ்ந்திருக்கிறது.
அதில் சிறிலங்காவும் ஒன்று.
நான் இங்கு பேசுவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி.
எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாகவே ஏதாவது நடக்கும் என்று உங்களைப்போலவே ஏமாந்து போன உங்களில் ஒருவனான எனது கருத்து இது.
மேலே குறிப்பிட்ட உதாரணங்களின்படி வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் மிக மிக அரிதாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் எம்மவர் நிலையும். சிறிலங்கா அரசு காலத்திற்கு காலம் கடந்த பத்து ஆண்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பதில் அளித்திருக்கிறது.
‘அவர்கள் சரணடைய வில்லை.’
‘அவர்கள் கைது செய்யப்படவில்லை.’
‘அவர்கள் எங்களிடம் இல்லை.’ என்பது அவர்கள் பதில்.
இதை நாம் அவர்கள் உயிருடன் இல்லை என்றும் விளங்கிக்கொள்ளலாமா…?
அரசுகள் இந்த அநியாயத்திற்காக மன்னிப்பு கேட்டதோ, வருத்தப்பட்டதோ, தீர்வு ஒன்றைக் கண்டதோ கிடையாது. இன்றைய உலகில் யேர்மனி மட்டுமே இந்த துயரம் குறித்து வருத்தப்பட்டும், மன்னிப்பு கோரியும் உள்ளது.
மனித இழப்பு என்பது வெறும் உயிர் இழப்பல்ல.
இது எந்தக் கணிதச் சமன்பாட்டினாலும், புள்ளிவிபரங்களாலும் பெறுமதி காணமுடியாத, ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு.
ஒரு குழந்தையின் தாயை, தந்தையை,
ஒரு பெண்ணுக்கு கணவனை, கணவனுக்கு மனைவியை, சகோதரர்களுக்கு சகோதரத்தை, பெற்றோர்க்கு பிள்ளையை, உறவினருக்கு அவர்தம் உறவுகளை மீளக்கொடுக்கமுடியாத மீளாத்துயர் இது.
யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் பதில், விடை கிடைக்காத இதயம் கனத்த எரிமலைக் குமுறல்.
இதன் பொறுப்பாளிகள் யார் என்பதற்கு ஒரு தரப்பைமட்டும் சுட்டி, சுட்டுவிரலைக் காட்டமுடியாது.
சிறிலங்கா அரசபடைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என்பதை மறைப்பதற்கில்லை. ஆனால் சில இயக்கங்களும், ஆயுதகுழுக்களும், இந்தியப்படையும், ஜே.வி.பி.யும் இந்தச் சுட்டுவிரல் திசையில்தான் நிற்கிறார்கள்.
அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல என்ற உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும், இராணுவத்தினரும், ஊர்காவல்படையினரும் இதில் அடக்கம். இருதரப்பிலும் யுத்த நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை.
இவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் அல்லவே என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது.
அல்லது தமிழர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்வியும் எழலாம். உங்கள் கேள்வியை புரிந்து கொள்ள முடிகிறது.
இழப்பு ஒன்றிற்குப் பின்னரான துயரம், துன்பம் எல்லோருக்கும் ஓடும் இரத்தம் போன்று பொதுவான சிவப்பு தான்.
இழப்பால் ஏற்பட்ட சமூக பொருளாதார விளைவுகளும் ஒன்றுதான்.
மனித இதயங்கள் இந்தக் கொடுமையை சுமந்தும், மறக்க முயன்று முடியாமலும், மாறாக நினைவில் நீங்காது இருப்பதும்
எரிமலையாய் கொதிப்பதும் மனிதத்தின் பொதுவான உணர்வு.
சிறிலங்கா அரசு ஒரு காரியாலயத்தை திறந்ததைத் தவிர எதையும் செய்யவில்லை. இது வெறும் “சிவப்பு நாடா” நிர்வாக நடைமுறை மட்டுமே.
ஐ.நா எதையும் செய்ய முடியாதவாறு வீட்டோ உரிமைக்குள் சிக்கி உள்ளது.
அமெரிக்காவும், ரஷ்யாவும், சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உலக நடைமுறையைத் தீர்மானிக்கின்றன.
மனிதம் மறந்து எங்கும் எதிலும் இலாபம் முதலிடம் பெறுகிறது.
உலகமயமாக்கல், பல்தேசியக் கம்பனிகள், இராணுவபலம் போன்றவையே எதையும் நிர்ணயிக்கின்றன.
இந்த நிலையில் இவர்கள் தங்கள் இலாபத்தை பாதிக்கின்ற மனிதத்தின் பக்கம் நிற்பார்களா? எமக்கு நீதி கிடைக்குமா?
இல்லை, யூதர்கள் முதல் ரொஹிஞ்ஞா வரையான மக்கள் போன்று எமது துயரும், துன்பமும் தொடர்கதை தானா?
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நியாயம் கிடைக்காத ஒரு சமூகத்தின் கண்கலங்கிய கேள்விகள் இவை.
அழுத்தம் கொடுப்பதற்கான அரசியல் பலத்தை இழந்து நிற்கின்ற ஒரு இனம் என்ற வகையில் எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் நாம் செய்யக்கூடியது என்ன?
ஆகக் குறைந்த பட்சம் எங்கள் மனதை உறுதிப்படுத்திக்கொண்டு உளவியல் நோய்களுக்குள் சிக்குண்டு போகாமல் எங்கள் எதிர்கால சந்ததியை வளர்க்க முயற்சிபோம்.
இதன் அர்த்தம் எங்கள் போராட்டவரலாறு அவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடாது என்பதல்ல.
எங்கள் வாழ்வை இழந்து நிற்கிறோம் எதிர்கால சந்ததிக்கு வாழ்வை கைமாற்றுவோம்.
அவர்கள் இந்த நெருப்பைத் தவிர்த்து வாழ வழிகாட்டுவோம்.
எல்லாச் சுமைகளும், துயரங்களும், மன அழுத்தங்களும், கொந்தளிக்கும் எரிமலையும் எம்மோடு அடக்கம் செய்யப்படட்டும்.
இது யுத்தம் தந்த சுவடு, மாறாத வடு.
நாங்கள் இன்னும் சுடப்படவில்லையே ஒழிய, கைகளும், கண்களும், வாய்களும் கட்டப்பட்டுத்தான் இருக்கின்றன.