— சிவா பரமேஸ்வரன் (மூத்த விளையாட்டுச் செய்தியாளர்) —
ரசிகர் நிறை அரங்குகளின் உளவியல்
ஆளில்லாத அரங்குகளும் அலுவலங்களும் எதிர்காலத்தில் யதார்த்தமாகும் என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே எச்.ஜி.வெல்க்ஸ் போன்ற அறிவியல் எழுத்தார்கள் எதிர்வு கூறியிருந்தனர். உலகம் வேகமாக மாறும். அறிந்து கொள்ள முடியாத பல நோய்கள் ஏற்படும் அப்போது மக்கள் புதிய முடிவுகளைத் தேடுவார்கள் என்று அவரைப் போன்றோர் அப்போதே கூறியிருந்தனர்.
அவர்கள் சொன்னது போலவே, கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று உலகையே ஆட்டிப் படைத்து, இப்போது ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை யாராலும் இன்னும் எதிர்வு கூறமுடியவில்லை.
இருந்தபோதிலும், விளையாட்டுலகமோ பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தமது ஆட்டத்தை மீண்டும் தொடங்கிவிட்டது.
மனிதனின் அத்தியாவசியமான பொழுதுபோக்குகளில் ஒன்றான விளையாட்டு, “சமூகப் பொருளாதாரத் தாக்கங்களை” பெருமளவில் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. மனித குலத்தின் ஒரு வடிகால் விளையாட்டு என்பது யதார்த்தம்.
ஆளில்லா அரங்கில் ஆட்டம் ஆரம்பம்
உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியும் இம்முறை ஆளில்லாத அரங்குகளில் நடைபெற்றன.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, உலகக் கோப்பை கால்பந்து போட்டி, நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை நேரில் காண நுழைவுச் சீட்டு வாங்க இரண்டு நாட்களுக்கு முன்னரே வரிசையில் நிற்பதெல்லாம் பழங்கதைகளாகி வருகின்றன.
ஆனால் அரங்கில் ரசிகர்கள் இல்லாத ஆட்டம் சோபிக்குமா என்று கேள்விகள் இப்போது எழுந்துள்ளன. இதற்கான தீர்க்கமான விடை இன்னும் கிடைக்கவில்லை-முட்டையா கோழியா, எது முதலில் வந்தது என்பது போல்தான் இது.
ஆளில்லா அரங்குகள் குறித்த ஆய்வுகள்:
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிஃபோர்ணியா பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகமும் இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தின. ஆனால் முடிவுகள் எதிரெதிராக இருந்தன. அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வு முடிவோ அரங்கத்தில் ரசிகர்கள் இருப்பது விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களது திறமையை மேலும் வெளிக்கொணர உதவும் என்கிறது. ஆனால் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழத்தின் ஆய்வு முடிவோ அரங்கில் ஆளில்லாமல் அமைதி நிலவும் போது விளையாட்டு வீரர்களால் கூடுதல் கவனம் செலுத்தி தமது திறமைகளை மேலும் வெளிப்படுத்த முடியும் என்கிறது.
நியூயார்க்கின் பிளஷிங் மெடோஸ் மைதானத்தில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. டென்னிஸ் உலகின் மகாராணி என்று அறியப்படும் செரீனா வில்லியமஸ் இதுவரை 23 ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் மிக அதிகமான கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளவர் செரீனா. இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய வெற்றிகளையும் சேர்த்தால் அவரது கிராண்ட் ஸ்லாம் வெற்றி 39 ஆகும். தற்போது 38 வயதாகும் அந்தப் பெண் சிங்கத்தை எதிர்க்க பலர் அச்சப்படுகின்றனர்.
அசாத்திய ஆளுமையும் ஆடுகளத்தில் அவர் சுழன்று பந்துகளை அடிக்கும் லாவகமும் தனித்துவமானது. முன்கை வீச்சு மற்றும் பின்கை வீச்சு இரண்டிலும் சம வல்லமை கொண்டவர் செரீனா. இன்னும் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் அதாவது 25 வென்ற பிறகே ஓய்வு குறித்து சிந்திக்கப் போவதாக கூறியுள்ளார் செரினா வில்லியம்ஸ்.
மூன்று வயதாகும் அவரது குட்டி மகளான அலெக்சிஸ் ஒலிம்பியா அம்மாவைப் போலவே வரவேண்டும் என்று எண்ணுகிறார். தாயுடன் இப்போது தினமும் அவர் டென்னிஸ் பயிற்சி செய்யும் படங்கள் சமூக ஊடகங்களை கலக்கி வருகின்றன.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்:
இந்த ஆண்டின் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக ஆடவர் டென்னிஸ் தரவரிசையின் முதலிடத்திலிருந்தும் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் எதிர்பாராத வகையில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மூன்றாம் சுற்றுப் போட்டியின் போது அவர் விரக்தியில் பந்தை தரையில் வீச அது எல்லைக் கோட்டிலிருந்து பெண் நடுவர் ஒருவர் மீது பட்டது. திட்டமிட்ட தாக்குதல் இல்லையென்றாலும், போட்டி நடுவரை காயப்படுத்தினால் போட்டியாளர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார் எனும் விதியின் கீழ் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அத்தோது அவருக்கு 250,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு, இந்தப் போட்டியில் அவர் பெற்ற புள்ளிகளும் ரத்து செய்யப்பட்டன.
‘இது எதிர்பாராமல் நடந்தது’ என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார்; ஆனால் `விதி` வலியது என்பது நிரூபணமானது.
அரங்கில் ஆதரவாளர்கள் இல்லாததால் தன்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என்று யாக்கோவிச் சொன்னதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கால்பந்து:
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கால்பந்துப்போட்டி தற்போது பல நாடுகளில் ஆளில்லா அரங்குகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது எனக்கு உற்சாகம் ஏற்படவில்லை. ஏனென்றால் கால்பந்து போட்டிகளுக்கென்று சில இலக்கணங்கள் உண்டு. ரசிகர்கள் அடித்துக் கொள்வது, அரங்கில் ஆரவாரமிட்டு ஊளையிடுவது, சட்டையைக் கழற்றிவிட்ட ஆட்டம் போடுவது, பீயர் ஆறாக ஓடுவது போன்றவை இல்லாமல் கால்பந்து போட்டியா எனும் கேள்வி எனக்குள் எழுந்தது.
கிரிக்கெட்:
கிரிக்கெட் உலகில் ஏராளமான பணம் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்முறை நடைபெறுகின்றன.போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி என்று பல இடங்களில் நடைபெறவுள்ளன.
ஆனாலும் அவையும் ஆளில்லா அரங்குகளிலேயே நடைபெறவுள்ளன. அந்தப் போட்டிகளில் பங்கேற்கும் பன்னாட்டு வீரர்கள் கொரோனோ தொற்று அச்சம் காரணமாக இந்தியா வர அஞ்சினர். இந்திய அரசும் போட்டிகளை இம்முறை நடத்த அனுமதியளிக்காததால் அந்தப் போட்டிகள் கடல் கடந்து அமீரகம் சென்றுள்ளன.
அனைத்து அணியினரும் அங்கு சென்று இரண்டு வார காலம் தனிமைப்படுத்தலைக் கடைபிடித்தனர். இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்றொரு அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் பந்து வீசப்படும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் தான் அந்தப் போட்டியும் உள்ளது.
கடந்த மூன்று தசாபதங்களாகவே விளையாட்டுப் போட்டிகளின் வருமானம் தொலைக்காட்சி உரிமங்கள் மூலமே கிடைக்கின்றன. ஆனாலும் உள்ளூர் ரசிகர்கள் நேரில் சென்று பார்க்க முட்டி, மோதி நுழைவுச்சீட்டைப் பெறும் முயற்சிகளை கைவிடவில்லை.
உளவியல் ரீதியாக கூட்டு மனப்பான்மை எனப்படும் வெளிப்பாடே அரங்குகளுக்கு நேரில் சென்று போட்டிகளைக் காண்பது. பல சிரமங்களை எதிர்கொண்டாலும் தீவிர ரசிகர்களின் உற்சாகம் என்றுமே குறைவதில்லை.
என்னதான், தொலைக்காட்சியில், நமது வரவேற்பறையில் அமர்ந்துநாம் போட்டிகளைப் பார்த்தாலும் நேரில் சென்று போட்டிகளைப் பார்ப்பதும் அந்தச் சூழலின் ஒரு அங்கமாக இருந்து ஆர்ப்பரித்து வெற்றி தோல்வியில் பங்கு பெறுவதும் அந்தக் கூட்டு மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடே.
ஆனால் “எப்போது கொரோனா நம்மை விட்டுச் செல்லும், அரங்கத்துக்குச் சென்று போட்டிகளை அதற்குரிய பந்தாவோடு பார்க்கலாம்” என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது என்னவோ உண்மைதான்.
இந்த ஆண்டு நடைபெறவிருந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரங்கத்தில் ரசிகர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதற்கு முன்னர் கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து உலகம் விடுபடும் என்று நம்புவோமாக.
விளையாட்டுச் செய்திகளுக்கான அனுசரணை
கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்