வரலாற்றின் பாதையில்………?

வரலாற்றின் பாதையில்………?

— வி.சிவலிங்கம் —

மனித வாழ்வு என்பது பல்வேறு மாற்றங்களைக் கடந்து செல்கிறது. இவை இயற்கைச் சூழல் மாற்றங்களாகவும், மனித செயற்பாட்டு விளைவுகளின் மாற்றங்களாகவும் உள்ளன. இன்று இயற்கையின் தாக்கங்கள் அதன் இயல்பான  மாற்றங்களை முன்கூட்டியே கூற முடியாத அளவிற்கு மாறுகின்றன. வெப்ப அளவு மாற்றங்கள்,  மழையின் அளவு மாற்றங்கள், சுனாமித் தாக்கங்கள் என அடுக்கிச் செல்லலாம்.  

இவ்வாறான இயற்கையின் சீற்றம் என்பது தாமாக ஏற்படுகிறதா? அல்லது வேறு காரணிகளால் தூண்டப்படுகிறதா?  என ஆராயும்போது மனிதன் இயற்கையைச் சீண்டுவதால் ஏற்படும் விளைவுகளாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

மனிதன் இயற்கை வளங்களை அழிப்பதால் இயற்கையின் சமநிலை குலைகிறது. இதன் விளைவாக வழமையாக ஒரு மாதத்தில் பெறும் மழையின் அளவு ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்க்கப்படுகிறது. எதிர்பாராத அளவில் ஏற்படும் இம் மாற்றங்களால் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு மனித வாழ்வு அவல நிலைக்குத் தள்ளப்படுகிறது.  

இயற்கைக்கும், மனித செயற்பாடுகளுக்குமிடையே காணப்படும் சமநிலை என்பது மனித வர்க்கத்தின் தேவைக்கு அதிகமான அவாக்களாலேயே குலைக்கப்படுகிறது.  

உதாரணமாக, நிலத்தடி எண்ணெய் வளங்கள் உறிஞ்சி எடுக்கப்படுவதாலும், அவை எரியூட்டப்படுவதாலும் எழும் வாயுவின் அதிகரிப்பு பூமியின் மேற்பாகத்தை அதிகளவில் வெப்பமூட்டி மண் கூறுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர்வளம் ஆவியாக்கப்படுகிறது. இதனால் பெரும்பகுதி நிலங்கள் வனாந்தரமாக மாறி, பயிர்ச்செய்கைக்கு அல்லது மனித தேவைக்கு உதவாத பிரதேசமாக மாறுகின்றன.  

இங்கு நாம் இயற்கையை மனிதன் சீண்டுவதால் எழும் நிலமைகளைப் பார்த்தோம். இருப்பினும் இயற்கையோடு மட்டுமல்ல, அம் மனிதன் தனது இருப்பைச் சௌகரியமாக்க எடுத்துவரும் நடவடிக்கைகளும் அவனது வாழ்க்கையை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளி வருகின்றன.  

அண்மைக் காலமாக தொலைத் தொடர்பு தொழில் நுட்பம்,  உயிரியல் தொழில்நுட்பம் என்பன மனித வாழ்க்கையை மிகவும் உருட்டிப் போடுகின்றன.  

இத் தொழிற்துறை மாற்றங்கள் ஏற்கனவே காணப்பட்ட அல்லது செயற்பட்ட உறவு விதிகளை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன. நாம் விதிமுறைகளை விரைவாக மாற்றலாம் ஆனால் அவ் விதிமுறைகளின் அடிப்படையில் எம்மைத் தகவமைத்துக் கொள்வது என்பது இலகுவான காரியமல்ல.  

2016ம் ஆண்டு ஐ நா சபையில் தனது பதவிக்கால இறுதி உரையை அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வழங்குகையில் உலக நாடுகள் பலவும் மிகவும் தெளிவான வகையில் பிளவுபட்டுச் செல்வதாகவும்,  இப் போக்குகள், முரண்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக இவை காலம்கடந்த கோட்பாடுகளான தேசம், பழங்குடி, இனம், மதம் போன்றவற்றை நோக்கிப் பின்னோக்கிச் செல்வதாகவும் தெரிவித்தார். இவ்வாறு தற்போதைய முரண்பாடுகளை அடையாளப்படுத்திய அவர் இன்று நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதாரம், பொறுப்புக் கூறும் அரசு, ஜனநாயகம், மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் என்பன மனித முன்னேற்றத்தின் அடிப்படைகளாக அமைவது அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.  

பண்டைய மனிதர்களின் வாழ்க்கையைப் போலல்லாது தற்கால மனிதனின் வாழ்வு பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. உதாரணமாக தொற்று நோய்களின் தாக்கங்களிலிருந்து பல கோடி மக்கள் புதிய வகை மருந்துகளின் கண்டுபிடிப்புகளால் மரணத்தின் கோரத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பட்டினியால் மரணிப்பவர்களின் தொகை கணிசமான அளவு குறைந்துள்ளது. விபத்தினால் மரணிப்பவர்களின் தொகையை விட அவை குறைந்துள்ளன.  

ஆனாலும், இயற்கையின் தாக்கங்களும், தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவுகளும் இன்று பெரும் சவால்களாக மாறியுள்ளன. உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது சமூகப் பிரச்சனைகளை அல்லது அரசியல் பிரச்சனைகளைத் தணித்துள்ளாகவே கொள்ளப்படுகிறது. லிபரல் பொருளாதார அணுகுமுறை என்பது முதலாளி – தொழிலாளி முரண்பாடுகள்,  ஆதிக்குடிகள் – குடியேற்றவாசிகள் முரண்பாடுகள் போன்றனவற்றையும் ஓரளவு தணித்திருந்தது. அதாவது சந்தைப் பொருளாதாரம் என்பது உற்பத்திப் பெருக்கத்தினைத் தொடர்ந்து வழங்கும் இயக்கு விசையைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது.  

இவ்வாறான சிந்தனையின் விளைவாகவே பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகள் பல அபிவிருத்தி அடையாத நாடுகளைச் சேர்ந்த மக்கள் தத்தமது நாடுகளுக்குள் பிரவேசிப்பதை ஏற்றுக்கொண்டனர். அதாவது பொருளாதாரம் என்ற ‘கேக்’ தொடர்ந்து வளர்ச்சியடையும் என்பதால் அந்தக் ‘கேக்’ இன் சிறு பகுதியை அவர்களும் பெற்றுக்கொள்ள அனுமதித்தனர். இதனால் மக்கள் அகதிகளாகவும்,  குடியேற்றவாசிகளாகவும் நுழைந்து வாழ்கின்றனர்.  

பொருளாதார வளர்ச்சி என்பது பூமியின் இயற்கை வளங்களைக் குறுகிய காலத்தில் அழித்துவிடும் நிலமைகளை நோக்கிச் சென்றபோது இயற்கையின் சீற்றம் மிகவும் தெளிவாகவே வெளிப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியும் இத் தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்த உதவியது.  

19ம் 20ம் நூற்றாண்டின் தொழில் வளர்ச்சி என்பது மனித வாழ்வின் அர்த்தங்களை மாற்றி எழுதியது. ஒரு வகை நுகர்வுக் கலாச்சாரத்தையும், சிறந்த கல்வி வளர்ச்சியையும், உயர்ந்த சுகாதார ஏற்பாடுகளையும், பெரும் வருமானத்தையும் தரும் பொறிமுறையாக அவை அமைந்தன. இத் தொழில் வளர்ச்சி என்பது புதிய மனித வாழ்வின் அடிப்படைகளையும் உருவாக்கியது. அதாவது சுதந்திரம், மனித உரிமை, தனிமனித சுதந்திரம்,  தொழிற்சங்க உரிமை என்பன போன்ற பல மாற்றங்கள் தோன்றியதோடு, நிலவுடைமைச் சமூதாயத்தில் நிலவிய ஆண்டான் அடிமை உறவுகள், மனிதனை விட கடவுளே உயர்வானவர்,  கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்போரையே வழிபடுதல் எனப் பலமுறைகள் படிப்படியாக வழக்கொழிந்தன.  

இக் கட்டுரையின் நோக்கம் என்பது இம் மாற்றங்களின் அடிப்படைகளை நோக்கி எமது பார்வையைச் செலுத்துவது அவசியம் என்பதற்கான காரணிகளை ஆராய்வதாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆண்டான் – அடிமை, எஜமான் – குடியானவன் என்ற சமூகக் கட்டுமானங்கள் தோன்றி மறைந்த நிலையில் இன்று காணப்படும் முதலாளி – தொழிலாளி என்ற முதலாளித்துவக் கட்டுமானமும் படிப்படியாக மறைந்து புதிய நவீன தொழில்நுட்ப சமுதாயத்தை நிர்மாணிக்கும் பயணத்தில் செல்கிறதா? என்பது பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு முயற்சியாகும்.  

இன்றைய 21ம் நூற்றாண்டு என்பது அம் மாற்றங்களை நோக்கிய பாதையில் பயணிக்கிறது எனலாம். இம் மாற்றங்கள் என்பது கடந்தகால சமூக கட்டுமானங்கள் உடைந்து செல்வதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்ட போதிலும் இன்றைய நவீன சமூகமாற்றம் என்பது மிகவும் துரிதமாற்றத்தை அடையலாம் என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படுகின்றன.  

உதாரணமாக, நாம் சமீபகால ‘கொரெனா’ தொற்று நோயின் விளைவாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானிக்கையில் இவை நன்கு புலப்படுகின்றன. அதாவது ஆயிரமாயிரம் அதிகாரிகளை மிக விரிந்த கட்டிடங்களுக்குள் அமர்த்தி வேலைவாய்ப்பு வழங்கும் முறை தற்போது தளர்ந்துள்ளது. பாரிய தொழிற்சாலைகளில் ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியும், விநியோகமும் தானியக்கி யந்திரங்கள் மூலமும், ‘றொபொட்’ உதவியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. பல ஆயிரம்பேர் தமது தொழில்நுட்ப உபகரண உதவியுடன் வீட்டிலிருந்தே பணிகளை நிறைவேற்றும் மாற்றம் நிகழ்கிறது. அதே போலவே பல பாடசாலைகள்,  பல்கலைக்கழகங்கள் போன்றனவும் தொலைவழிக் கல்விச் சேவையை ஆரம்பித்துள்ளன. அவ்வாறெனில் பல லட்சம் அரச கல்வி அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் போன்றோரின் எதிர்காலம் என்ன? 

கடந்தகால தொழிற்துறை வளர்ச்சியின்போது பெரும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் கிளர்ச்சிகள், கோட்பாடுகள் என 20ம் நூற்றாண்டின் வளர்ச்சி புதிய வரலாற்றினைத் தந்தது. பிரெஞ்ச் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபா புரட்சி போன்றன புதிய சமூக மாற்றத்திற்கான தத்துவங்களையும், கோட்பாடுகளையும் வழங்கியது. இன்று அவை வரட்டுவாதம் என்ற நிலைக்குத் தள்ளப்படுமா? 21ம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கைத் தீர்மானிக்கும் உயிரியல் தொழில்நுட்பம்,  தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பன எவ்வாறான புதிய தொலைநோக்கை அல்லது தத்துவத்தை எமக்கு வழங்கப்போகிறது? 

எனவே அடுத்து வரும் தசாப்தங்கள் புதிய உலகத்தின் ஆன்மாவைத் தேடுவதாகவும், புதிய சமூக, அரசியல் மாதிரிகளை நோக்கியதாகவும் உள்ளதால் அதற்கான பார்வையை இன்றைய கல்விமுறை எமக்கு அளிக்குமா? எம் முன்னால் பிரதான பாத்திரத்தை வகிக்கும் மத கோட்பாடுகளும், தேசியவாதங்களும் புதிய விளக்கங்களை வழங்குமா? அல்லது எமது கடந்தகால கடவுள் நம்பிக்கைகள், நாடுகளின் எல்லைகள் என்பன உடைந்து புதிய நம்பிக்கைகள், எல்லைகள் தோன்றுமா?