—த. ஜெயபாலன்—
புலம்பெயர் கனவை நிராகரிக்கும் மேற்கத்தைய மனப்பாங்கு…
வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் மக்கள் கூட்டத்தின் புலம்பெயர்வு என்பது இயற்கையான செயல் முறையாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்து வருகின்றது. இதனை வளர்ச்சியின் படிநிலையாகவும் பார்க்கலாம்.
ஒரு கலத்தைக் கொண்ட உயிரினத்தில் இருந்து எத்தனையோ ஆயிரம் உயிரினங்களாக பல்கிப் பெருகி மிகவும் சிக்கலான கட்டமைப்பைக்கொண்ட அறிவார்ந்த மனிதன் பல நூற்றுக்கணக்கான இனங்களாகவும் பல நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசியும் பல்வேறு மதங்களைப் பின்பற்றியும் கூர்படைந்ததற்கு முக்கிய காரணம் இந்தப் புலப்பெயர்வே.
இந்தப் பின்னணியில் இன்றைய இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வை எவ்வாறு நோக்குவது? இதற்கான பதில் நாங்கள் சமூகமாக எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றோம்? எதனை வேண்டி நிற்கின்றோம்? என்பதிலேயே தங்கியுள்ளது.
இலங்கைத் தமிழருடைய சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரே வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர். மற்றுமொரு மூன்றில் ஒரு பங்கினர் தென்னிலங்கையில் வாழ்கின்றனர். அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் இலங்கைக்கு வெளியே வாழ்கின்றனர் – குறிப்பாக மேற்கு நாடுகளிலும் இந்தியாவிலும்.
இலங்கைத் தமிழர்களுடைய புலம்பெயர்வு என்பது இலங்கையில் உள்ள அரசியல் நிலைமைகளோடு அங்கு இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் உள்நாட்டு யுத்தம் ஆகியவற்றோடு தொடர்புபட்டு இருந்தது.
அதற்காக அரசியல் சூழலும் ஆயுதப்போராட்டமும் உள்நாட்டு யுத்தமும் மட்டும்தான் தமிழர்களினதோ ஏனைய சமூகங்களினதோ புலம்பெயர்வுக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. புலம்பெயர்வைப் பொறுத்தவரை பொருளாதாரம் முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. தென்பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் கூட புலம்பெயர்ந்து செல்கிறார்கள் என்பது பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே.
உலக பொருளாதாரம் என்பது அறிவியல் பொருளாதாரமாக துரிதமாக வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் வளர்ச்சியடைந்த மேற்குநாடுகள் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இருந்து திறனாளிகளைக் கவருகின்றன. தங்கள் நாடுகளில் திறனாளிகளை உருவாக்குவதற்குப் பதிலாக இலங்கை போன்ற நாடுகளில் இலவசக் கல்விமுறையால் உருவாக்கப்படும் திறனாளிகளை எவ்வித செலவும் இன்றி மேற்கு நாடுகள் கவர்ந்திழுத்தன. எண்ணெய் வளத்தின் மூலம் செல்வமீட்டும் மத்திய கிழக்குநாடுகள் குறைதிறன் மிக்க உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கின்றனர்.
புலம்பெயர்வை முற்றுமுழுதாக பாதகமான அம்சமாக கொள்ள முடியாது. இலங்கையில் குறிப்பாக வடக்கு -கிழக்கில் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றின் வீழ்ச்சியால் பொருளாதார நலன்களுக்காக இளம் தலைமுறையினரின் கனவு வெளிநாடாக உள்ளது. மேலும் வெளிநாடுகளில் வாழும் உறவுகளும் நட்புகளும் நாடு வந்துசெல்லும் போது செய்கின்ற பந்தாக்களும், நாணயமாற்று வீதம் பலமடங்காக இருப்பதால் அதனை பெருக்கியும் வகுத்தும் பார்த்துக்கொள்ளும் புளாங்கிதமும், குறுகிய காலத்தில் கஸ்டப்படாமல் செல்வத்தைச் சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாக உள்ளது. இலங்கைக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவதில் வெளிநாட்டவர்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகின்றனர்.
வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் வறுமைக்கோட்டின் கீழ் அல்லது அண்மித்து உள்ளன. இலங்கையில் மிகக் கூடிய வறுமை நிலவுகின்ற மாவட்டங்களாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்கள் உள்ளன. இலங்கையில் மோசமான வறுமை நிலவுகின்ற மாவட்டங்கள் தமிழ் மாவட்டங்களே. இதனைததொடர்ந்து தென்னிலங்கையில் மொணராகலை மாவட்டம். மோசமான வறுமை நிலவுகின்ற இம்மாவட்டங்கள் (முல்லலைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மொணராகலை) ஆகியவை இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு தங்கள் வாழ்நிலையயை மேம்படுத்துவதற்காக மக்கள் புலம்பெயர்வது தவிர்க்க முடியாதது.
இம்மாவட்டங்களின் வறுமைக்கு அம்மாவட்டங்களின் கல்விநிலையின் வீழ்ச்சியும், தேக்கமும் காரணம். அதே நேரம் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, சனத்தொகை அடர்த்தி அற்ற, பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு கல்வியியலாளர்கள், திறனாளிகள் சென்று அப்பிரதேசங்களை முன்னேற்றுவார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கற்கை நெறியயை பூர்த்தி செய்யும் இளம் மருத்துவர்கள் கூட தென்னிலங்கையிலாவது பணியாற்றுவதற்கான வாய்ப்பையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கின்ற பட்சத்தில் அவர்கள் வெளிநாடு செல்லவே முற்படுகின்றனர். அதனால் தான் வடமாகாணத்தில் கூட சிங்கள மருத்துவர்கள் வந்து பணியாற்ற வேண்டிய நிலையுள்ளது.
மேற்குநாடுகளில் ஏற்படும் மாற்றம்
ஆனால் அண்மைக் காலத்தில் இப்போக்கில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. இதுவரை உலகமயமாதலை ஊக்குவித்து வந்த மேற்குநாடுகள், தற்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றைக் கருத்தில் எடுத்து உலகமயமாதலுக்கு எதிரான தத்தம் தேசியவாதத்தை உயர்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் இன் “மேக்கிங் அமெரிக்கா கிரேட் எகெய்ன் – Making America Great Again” என்பதோ, பிரித்தானியாவின் “பிரிக்ஸிட் – Brixit” என்பதோ அதனையே காட்டுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 அசாதாரண உலகச் சூழலும் நாடுகளை தத்தம் எல்லைகளுக்குள் குறுக்கி உள்ளது.
தொழில்நுட்பத்தின் துரிதவளர்ச்சியானது மனித வலுவின் தேவையயை வலுவாகக் குறைப்பதுடன் மனிதனுடைய திறமையை அவன் வாழும் நாட்டின் எல்லைகளைக் கடந்து இணைய வழியாக கடத்தவும் சுரண்டவும் வாய்ப்பளித்துள்ளது. அதனால் புலம்பெயராமலேயே மனிதனுடைய திறனை மட்டும் வாங்குவதற்கு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்க இராணுவ மையத்தில் இருந்தே சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெங்களுரில் இருந்தவாறே விரிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதனால் புலம்பெயர்வுக்கான அவசியம் குறையும் என்றே எதிர்பார்க்கலாம். 5ஜி தொழில்நுட்பத்தின் வருகையோடு குவான்டம் கொம்பியூட்டர்ஸின் வருகையோடும் தற்போதுள்ள தொழில் சூழல் முழுமையாக மாற்றமடையும்.
தற்போது மேற்கு நாடுகளும் கூட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளன. மனித வலுவை தொழில்நுட்பம் மாற்றீடு செய்வதால் இன்று நாம் செய்கின்ற 60 வீதமான வேலைகள் (கடைச் சிற்பந்திகள், வாகன ஓட்டுநர்கள், வங்கிப் பணியாளர்கள், கணக்கியலாளர்கள், உணவு தயாரிப்பவர்கள் ) எதிர்காலத்தில் அவசியமில்லாமல் போய்விடும் நிலையிலுள்ளது. இந்த மேற்கு நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ளவர்களுடைய வேலையின்மை பிரச்சினையைக் கையாள வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்தவே முயற்சிப்பர். பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் தற்போதைய உலக பொருளாதாரச் சூழல் தொழிலாளிகள்,திறனாளிகளின் புலம்பெயர்வுக்கு எதிராகவே உள்ளது. இந்நிலை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் கடுமையாகவே இருக்கும்.
ஆகையால் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இவ்விடயங்களைக் கவனத்தில் எடுத்து பொருளாதார வளர்ச்சிக்கும்,அபிவிருத்திக்கும் பலமான வாய்ப்புள்ள தங்கள் பிரதேசங்களையொட்டிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.புலம்பெயர் உறவுகள் அதையொட்டிய பொருளாதார முயற்சிகளுக்கு முதலீடுகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
மணியோடர், உண்டியல் பொருளாதாரம் வெறுமனே நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்ததற்கு மாறாக பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்தத் தவறினால் தாயகம், பூர்விகம் என்பனவற்றுக்கும் இன்னும் சில ஆண்டுகளில் எவ்வித அர்த்தமும் இருக்காது. கல்வி, பொருளாதாரம்,அபிவிருத்தி ஆகியவற்றில் முன்னேற்றமடையாத தாயகத்தில், பூர்வீக நிலப்பரப்பில் எந்த தேசப்பற்றாளனும், இனப்பற்றாளனும் வாழ்வதற்குத் தயாராக இருக்க மாட்டான் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அதனை முன்னேற்றுவதற்கான செயற்திட்டங்களை முடக்கிவிட வேண்டும்.