பொங்கல் அரசியல்….!ஜல்லிக்கட்டு: தமிழா நீ மல்லுக்கட்டு…..!       (மௌன உடைவுகள்: 66)

பொங்கல் அரசியல்….!ஜல்லிக்கட்டு: தமிழா நீ மல்லுக்கட்டு…..! (மௌன உடைவுகள்: 66)


— அழகு குணசீலன் —

இலங்கையில் தைப்பொங்கல் பண்டிகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் எடுப்பில்  கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பெரும் எடுப்பு பாரம்பரிய தமிழர் பண்பாட்டு பொங்கலாக அல்லாமல் அரசியல் பொங்கலாக பரிணமித்து இருந்தது அனைவரும் அறிந்ததே. எப்போதும் போன்று தமிழ்த்தலைவர்கள் இனப்பிரச்சினை தீர்வுக்கு  தைப்பொங்கல் தினத்தை காலக்கெடுவாக பொங்கி எழுந்து அறிவிப்பது தமிழர் அரசியல் பண்பாடாகிவருகிறது. சம்பந்தர் ஐயா தள்ளாடும் வயதிலும் மீண்டும் அந்த பாரம்பரிய பொங்கல் அரசியலை செய்திருக்கிறார் – எச்சரித்திருக்கிறார். தைப்பொங்கல் என்பது ஒரு அரசியல் பண்டிகை என்றும் , பொங்கலில் காலக்கெடு விதிப்பதும், ஆட்சியாளர்களை எச்சரிப்பதும்  தமிழர் பண்பாடு என்றும் எதிர்கால சந்ததி தவறாக விளங்கிக்கொள்ளாமல் இருந்தால் சரி. ஏனெனில் ஒன்றை திரும்பதிரும்பத் செய்ய அது (தவறான) வரலாறாகிவிடும்.

கிழக்குமாகாணம் பொங்கல் விழாவை பெருவிழாவாக மார்கழியில்,  தமிழுக்கு தை பிறப்பதற்கு முன்பே கொண்டாடியது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் புண்ணியத்தில் கிடைத்த வரப்பிரசாதமாக பெரும்பாலான மக்கள் இதைக் கருதுகிறார்கள்-பாராட்டுகிறார்கள். இலங்கை அரசாங்க நிதியில், இந்திய உதவியுடன் இந்த விழா நடாத்தப்பட்டது. இதன் பின்னணியை  அவர்கள் புரிந்துகொண்டால் சரி. மொத்தத்தில் இயல்பாக மக்கள் தங்கள் பொங்கல் விழாவை பாரம்பரியமாக கொண்டாடுவதை விடவும் அரசாங்க பொங்கல் விழாவாக இது அமைந்தது.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசியுடன் தயாரிப்பு, நெறியாள்கை, பாடல், இசை, கதைவசனம் , தொழில்நுட்பம், ….. அனைத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானே.  இந்திய பொலிவூட் சினிமா கதாநாயகனாக  ஆளுநர் காட்சிப்படுத்தப்பட்டார். உண்மையில் இது ஒரு தனிநபர் வழிபாட்டு நிகழ்வாகவே வடிவெடுத்திருந்தது.

“ஜல்லிக்கட்டு நாயகன், இலைஞர்கலின் எலுச்சி நாயகன், இலங்கை கிலக்கு மாகானத்தின் ஆலுனர்…….. எல்லோருக்கும் அல்லி ,அல்லி கொடுப்பவர் மக்கல் தலபதி வருக….வருக…. ” என்று இறக்குமதி செய்யப்பட்ட  “அரிவிப்பாலர்” வெளுத்து வாங்கினார். கிழக்கு மாகாண ஆளுநரின் வாகனம் இந்திய பிரதமர் மோடியின் வாகனப் பாணியில் நகர இருபக்கமும் கறுப்பு பூனைகளாக பாதுகாப்பாளர்கள் ஓட்டமும் நடையுமாக ……… !  

மற்றொரு பொங்கல் விழாவில் யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவற்றை விடவும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஆங்காங்கே பொங்கல் கொண்டாடி இருக்கிறார்கள்.   திருகோணமலையில் கிழக்குமாகாண பொங்கல் விழாவில்  பங்கேற்ற தமிழரசுக்கட்சி, மட்டக்களப்பில்  மாட்டுப்பொங்கலை கறுப்புப்பொங்கலாக  அனுஷ்டித்து இருக்கிறது. கிழக்குமாகாண பொங்கல் விழாவில் பங்கேற்கும்போது  அரசியல்வாதிகள் பண்ணையாளர்களை மறந்து மேடையில் அணிவகுத்தார்கள். அப்போது அது வெள்ளைப்பொங்கல். மட்டக்களப்பு மாட்டுப்பொங்கல் கறுப்பு…! கரிநாள்…!

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினை ஜனாதிபதியின் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே இதுவரை தீர்வாக தந்திருக்கிறது. பேரினவாத கடும்போக்காளர்கள் – பௌத்த பிக்குகளை மீறி நியாயத்தின் பக்கம் நிற்பதற்கு ஜனாதிபதி தயங்குகிறார். அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் அழைத்து மாநாடு நடாத்துவது அல்ல தீர்வு. எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு நடைமுறைப்படுத்துவதும், கண்காணிப்பதும் ஜனாதிபதி செயலகத்தின் கடமை. அல்லது ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறுவது போன்று “ஆளுநர் ஜனாதிபதியின் கிழக்குமாகாணத்திற்கான நேரடிமுகவர்” என்பதால் ஜனாதிபதியின் முடிவுகளை மாகாண மட்டத்தில் அவர்  நடைமுறைப்படுத்த வேண்டும். தைப்பொங்கல் தமிழர் பண்பாட்டு பண்டிகையை , அதன் மறுபாதியான மாட்டுப்பொங்கலை தவிர்த்து அரைகுறையாக கொண்டாடுவது  பண்ணையாளர்களை மட்டும் அல்ல பாரம்பரிய தமிழர்பண்பாட்டையும் அவமதிக்கும் செயல்.

அத்தோடு திருகோணமலையைச் சேர்ந்த கலாநிதி ஒருவர் புகலிட ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்  இது அரசியல் பொங்கல் என்பதை உறுதிப்படுத்த ஆதாரங்களை தேடினார். இந்த விழா “இனப்படுகொலையைத் தொடர்ந்த பண்பாட்டு கொலை” என்று வர்ணித்த அவர்  கொழும்பு அரசாங்கம் கிழக்கில் இன நல்லிணக்கம் நிலவுகிறது என்று காட்டி சர்வதேசத்தை ஏமாற்றி, சர்வதேச நாணயநிதி உதவிகளை பெறும் முயற்சி என்று கூறினார். இவரும் நிகழ்வை அரசியல் மயப்படுத்தினாரே அன்றி சமூகத்தில் இருந்து எழுந்த தர்க்கரீதியான தமிழர்பண்பாடு சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அரசியலுக்கு அப்பால் ஒரு விடயம் உண்மை. பண்பாட்டின் அடையாளம் மொழி. திருகோணமலை விழாவில் மொழிக்கொலை நடந்திருக்கிறது.

கிழக்கு மாகாண பொங்கல் விழா குறித்து ஊடகங்கள் வாயாரவாழ்த்தி எழுதியிருப்பதுடன், இதனை ஒரு வரலாற்றுச்சாதனையாகவும், தொண்டமானை வரலாற்று நாயகனாகவும் புகழாரம் சூட்டியுள்ளன. சமூக ஊடகங்களில் கூட ஆங்காங்கே சில சில சலசலப்பு சத்தங்கள் கேட்டாலும் ஒட்டு மொத்தத்தில் சாதகமான பதிவுகளையே பார்க்கக்கூடியதாக இருந்தது. யார், யாரெல்லாம் இந்த பதிவுகளை இடுகிறார்கள் என்பதும் அது, அவர்களின் ஜனநாயக கருத்துரிமை என்பதும் வேறுவிடயம். வந்தாரை வரவேற்பதும், அவர்தம் பணியை போற்றுவதும் கிழக்கின் பண்பாடு. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கிழக்கு மாகாண செயற்பாடுகளை பாராட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராட்டுபவர்கள்  இது போன்ற ஒரு விழா இதுவரை இலங்கையில் நடைபெறவில்லை, ஜல்லிக்கட்டு அதன் உச்சக்கட்டம், 1500 , 1008,500, 100 போன்ற இலக்கங்களை கொண்டு இந்த விழாவை மதிப்பிடுகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய விழா என்பதும், வரலாறு காணாதது என்பதும், செந்தில் தொண்டமானைத்தவிர வேறு எந்த ஆளுநராலும் இதை செய்திருக்க முடியாது என்பதும் உண்மையே.  ஆனால் இலக்கங்களை முக்கியப்படுத்தி மதிப்பிடுவதற்கு தைப்பொங்கல் – பண்பாட்டு நிகழ்வு ஒன்றும் எண்கணிதம் அல்லவே. 

 கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை வளாகமோ, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களோ, மற்றைய பல்கலைக்கழக நிறுவனங்களோ இந்த விழாபற்றி   “கப்சிப்” என்று இருக்கிறார்கள். கிழக்கின்  பொங்கல் விழா அதன் தனித்துவ பண்பாட்டு கோலங்களை  பெருமளவாக உள்வாங்கி இருக்க வேண்டும். இதன் மூலம் இறக்குமதி கலாச்சார வியாபாரத்தை  தவிர்த்து இருக்கலாம் அல்லது குறைத்து இருக்கலாம். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெறும் பார்வையாளர்களாக்கப்பட்டார்கள்.  

ஒரு சில சமூக ஆர்வலர்கள் எழுப்பிய சில சந்தேகங்கள், கேள்விகளுக்கு கூட பல்கலைக்கழக பண்பாட்டுத்துறையோ, பண்பாட்டு பேராசிரியர்களோ, பெரியவர்களோ சாதகமாக அல்லது பாதகமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.  இவர்களின் மௌனம் கிழக்குமாகாண  பொங்கல் விழா ஒரு அரசியல் பொங்கல் என்பதற்கான சம்மதத்துடன் கூடிய ஒதுங்கலா?. இவர்கள் கிழக்கு பண்பாட்டிற்கு முரணான அல்லது முற்றிலும் பொருத்தமானதாக அமையாத விடயங்கள் குறித்து விழா முடிந்த பின்னராவது வாய் திறக்கவில்லையே. 

 சமூகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் -சந்தேகங்கள்:

—————————————————————————-

(*) தமிழுக்கு தைமாதம் பிறப்பதற்கு முன்னர்  மார்கழியில் தைப்பொங்கல் கொண்டாடுவது சரியா?

(*) ஜல்லிக்கட்டு தமிழக பொங்கல் பண்டிகையின் ஒரு அடையாளம் அதற்கும் கிழக்கு மாகாணத்திற்குமான  தொடர்பு என்ன?

(*) மக்கள் பொருளாதாரதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது இவ்வாறான ஒரு விழாவின் அவசியம் என்ன? அதுவும் இவ்வளவு ஆடம்பரங்களுடன்?

(*) இந்த விழாவுக்கு கலை, கலாச்சார பண்பாட்டு துறைசார்ந்த கிழக்கு பல்கலைக்கழகங்கள் உள்வாங்கப்படாதது ஏன்?

(*)  கிழக்கு மாகாண விழாவில் தைப்பொங்கல் ஒரு பொங்கல் நிகழ்வாக அமைந்ததேயன்றி தமிழ்ப்புத்தாண்டு பண்டிகையாக அமையாதது ஏன்?

(*)  கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான புத்தாண்டு பாரம்பரியங்கள் குறிப்பாக கலை நிகழ்வுகளில் இடம்பெறாதது ஏன்?

(*)  சமூக, அரசியல் கண்ணோட்டத்தில் இது சமூகங்களுக்கு இடையிலான ஒரு நல்லிணக்க விழாவாக பேசப்பட்டது. இதன் அடைவு என்ன?

(*) தைப்பொங்கல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடப்படாததற்கு  இந்து, பௌத்தம் சார்ந்த சித்திரைப்புத்தாண்டை முதன்மைப்படுத்தும் பின்னணி இருந்ததா?

(*) கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாடசாலை மாணவிகள், ஆசிரியைகள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக சமூக ஊடகங்கள் பேசுவதன் உண்மைத்தன்மை என்ன?

(*) கிழக்கின் சிறுதெய்வ வீர சைவ வழிபாட்டு தமிழர் பண்பாட்டிற்கும் – அன்றைய முக்கிய கலை பண்பாடு நிகழ்வுகளுக்குமான தொடர்பு என்ன?  

தமிழர் புத்தாண்டு கொண்டாட்டம்  உலகத்தமிழர்களுக்கு  பொதுவான ஒரு வருடப்பிறப்பு. ஆனால் இது தமிழ்நாட்டில், இலங்கையில், மற்றைய நாடுகளில், பிரதேசங்கள் மட்டத்தில் -கிழக்குமாகாணத்தில்  கொண்டாடப்படுவதில் மக்களின் பாரம்பரிய வாழ்வியல் வேறுபாடுகள் உண்டு. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் முதன்மையான வீரசாகசம். இலங்கை தமிழர்களைப்பொறுத்தமட்டில் இது முக்கியமானதல்ல. அதற்காக கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு பாரம்பரியம் இல்லவே இல்லை என்று கூறமுடியாது. கொட்டியாரத்தில் சம்பூர் பிரதேசத்தில் இந்த “மாடுபிடித்தல்” மரபு உள்ளது. இந்த வகையில் சம்பூர் இடத்தேர்வு ஜல்லிக்கட்டுக்கு பொருத்தமானது.  ஆனால் உள்ளூர் வளங்களை அதிகம் உள்வாங்கி  இந்த விளையாட்டை செய்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். மட்டக்களப்பு பெருநிலப்பரப்பில் “மாடுபிடித்தல்” மரபு  வீசுகயிறு கொண்டு வீசிப் பிடிக்கும் வழக்கமாக உள்ளது.  ஆனால் இது ஒரு விளையாட்டு அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. 

தொழில் சார்ந்த பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல நாடுகளிலும் உள்ளன. பால்பண்ணை தொழிலுக்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்தில் மாடுகளை பனிக்காலத்தில் தாழ்நிலத்திற்கும், வெயில் காலத்தில் மலைப்பகுதிக்கும் கொண்டு செல்வது வழக்கம். அப்போது மாடுகளின் தலைப்பகுதி மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பசுக்களுக்கு “அழகுராணி” போட்டி நடாத்துவதும் இங்குள்ள ஒரு பிரதேசவழக்கு. பசுக்களின் அங்க அபயவங்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நியதி இருக்கிறது. இந்த வகையில் பார்க்கையில் தமிழர்களின் மாட்டுப்பொங்கல் தொழில்சார் பண்பாட்டு முக்கியத்துவத்தை கொண்டது.

கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் “தமிழ்ப்புத்தாண்டு” என்ற வார்த்தை  பெருமளவுக்கு தவிர்க்கப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது. இது மார்கழியில் வருடப்பிறப்பா என்ற கேள்வியை மறைப்பதாகவும், தைப்பொங்கல் என்பது ஒரு பொங்கல் அதை எப்பவும் பொங்கலாம் என்ற கருத்தியலைக்கொண்டது. சித்திரை வருடப்பிறப்பை முதன்மைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது இருக்கக்கூடும்?  நல்லிணக்கம் பற்றி பேசப்படுவதால் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்ற சிங்கள, தமிழ் தேசியங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருத்தமானது தனித்துவமான தைப்புத்தாண்டைவிடவும், பொதுவான சித்திரைப் புத்தாண்டை  கொண்டாடுவதாகும். அல்லது சிறுபான்மை தேசிய இன மாற்று கலாச்சார பண்பாட்டை அங்கீகரித்து, மதிப்பளித்தல் நோக்கம் என்றால் கிழக்குமாகாண பொங்கல் விழா சகல கேள்விகளுக்கும்  இடையே வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.

இந்த பெருவிழாவை சினிமாப் பாணியில் அன்றி கிழக்கின் பல்கலைக்கழக  பண்பாட்டு துறைகளும் , கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைத்து செயற்பட்டிருந்தால் இந்த விழாவில் ஒரு பகுதி அறிவுசார் ஆய்வரங்க – மாநாட்டு நிகழ்வாக வடிவெடுத்திருக்கும்.   அதன் பண்பாட்டு பெறுமானம் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. கிழக்கிலங்கையின் கிராமிய கலை, இலக்கிய பண்புகளை அதிகமாக கொண்டு அமைந்திருக்கும். 

பொருளாதார நெருக்கடி, கட்சி அரசியல் பிளவுகள், இலங்கை -இந்திய இராஜதந்திர விருப்பங்களை நிறைவேற்றல் மற்றும்  சிங்கள,பௌத்த கடும்போக்கு அரசியல்வாதிகள், மதவாதிகளுக்கு மத்தியில் நெருப்பை நீருக்குள்ளால் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு கிழக்குமாகாண நிர்வாகத்திற்கு இருந்தது. இதை ஆளுநரும், அவரது நிர்வாகமும் செய்திருக்கிறார்கள்.  பல்கலைக்கழகங்களை நேரடியாக இணைத்துக்கொள்ளாத போக்கும் ஒரு வகையில் நியாயப்படுத்த கூடியதே. ஏனெனில் இப்போதே பொங்கல் அரசியலாக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களின் அனுசரணை பல நடைமுறைச்சிக்கல்களை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. இதனால் மாகாண சபையின் -ஆளுநரின் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிமாணவர்கள், ஆசிரியர்களின் உள்வாங்கல் ஒரு  சிறந்த திட்டமிட்ட செயற்பாடு.

பொதுவாக அனைத்து விமர்சனங்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு அப்பால் பாராட்டப்பட வேண்டிய பாரிய பணி . 

இந்த விழாவுக்காக தங்கள் உழைப்பை நல்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைவானவை. எனினும் ஆளுமையான தலைமைத்துவத்தினால்  சிலவற்றையாவது சாதிக்க முடியும் என்பதற்கு கிழக்குமாகாணம்  ஒரு முன்னுதாரணம். இந்த பொங்கல் விழாவும் அந்த வழியில் வந்ததே.

கிழக்குமாகாண சபை இந்த முன்மாதிரி பாத்திரத்தை தொடர்ந்தும் பத்திரப்படுத்த வேண்டும்…..!

**************************************