முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள்

முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள்

 — கருணாகரன் —

புலம்பெயர்தோர் வாழ்வைக் குறித்த வேறுபாட்டதொரு புரிதல் மந்தாகினி குமரேஷின் ‘இரை தேடும் பறவைகள்’  கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. புலம்பெயர்தலின் வலியையும் புதிய (பனித்) திணையில் (நிலத்தில்) ஒட்டிக் கொள்ள முடியாத அந்தரிப்பையும் இந்தத் தொகுதியிலுள்ள முதற் கவிதை தொடக்கம் பலவும் சொல்கின்றன. புலம்பெயர் தமிழ்ப்பரப்பின் பெரும்பாலான உணர்வலை இதுதான். கூடவே தாய்நிலம் மீதான நினைவுகளாகவும். ஆனாலது வெறுமனே நினைந்துருகுதல் என்றில்லாமல் விடுதலை வேட்கையாக. 

இவ்வாறான புலம்பெயர்தல் அல்லது புதிய திணையில் வாழ நேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், மியன்மார், ஆபிரிக்க நாட்டினர் என உலகத்தின் பல திசைகளிலிருந்தும் அகதிகளாகிப் பெயர்ந்து ஏதோவொரு நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டில் 117.2 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து அல்லது நாடற்றவர்களாக உள்ளனர் என UNHCR இன் மதிப்பீட்டறிக்கை சொல்கிறது. இவர்களிற் சிலருக்கு திணைகள் அதிகம் பிரச்சினையாக இருப்பதில்லை. அவர்கள் பனியோடும் வெயிலோடும் கூடிய திணையைச் சேர்ந்தவர்கள் என்பதால். இலங்கை, பர்மா போன்ற நாடுகளைச் சேர்ந்தோருக்கு பனியும் குளிரும் கூட ஒரு தீராப் பிரச்சினை. மற்றும்படி மொழி, உணவு, தொழில், பழக்க வழக்கங்கள் எனப் பண்பாட்டுப் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த அனைவருக்கும் உண்டு. இதெல்லாம்  புலம்பெயர்வுகளின் தொடர் பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள். இருந்த போதும் அவர்கள் இவற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? தங்களுடைய இலக்கிய எழுத்துகளிலும் சினிமா, ஓவியம், நாடகம் போன்ற கலை வெளிப்பாடுகளிலும் இதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான எழுத்துகளும் கலை வெளிப்பாடுகளும் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவைபற்றிய அறிமுகங்களையாவது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நம்மைப் போன்ற சக புலம்பெயரிகளின் (அகதிகளின்) பிரச்சினை எப்படியாக உள்ளது? அவர்கள் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுடைய உணர்நிலைகள் எவ்வாறுள்ளன என்று தெரியும். 

400, 500 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகாண் பயணங்களின் மூலமும்  வெவ்வேறு காரணங்களுக்காகவும் புதிய நாடுகளுக்குச் சென்று குடியேறி வாழ நேர்ந்தவர்களின் பிரச்சினைகளும் அனுபவங்களும் எப்படியிருந்திருக்கும்? ஆக்கிரமிப்புக்காகச் சென்றோராகட்டும் வணிகம் மற்றும் தேசாந்தர நிலையில் யாத்திரீகமாகச் சென்றவர்களாகட்டும், அனைவரும் இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? அன்று இன்றுள்ள அளவுக்கு தொடர்பாடல் தொடக்கம் அனைத்து வசதிகளும் சீராக  இருந்திருக்காது. இந்த நிலையில் புதிய திணையில் இணங்கிக் கொள்வதற்கு நிச்சயமாக அவர்களுடைய மனமும் உடலும் மிகச் சிரமப்பட்டிருக்கும். அதைப்பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. வரலாற்றில் எங்கும் அத்தகைய பதிவுகள் பெரிதாகக் காணப்படவில்லை. இப்படி இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்த Robert Nocks என்பவர் தான் இலங்கையில் இருந்த அனுபவங்களை (1659 -1680) An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக எழுதியுள்ளார். இது தமிழில் ‘இலங்கைத் தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு“ என்ற பெயரில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. அதில் அவருடைய அனுபவங்கள் வேறாக இருந்தாலும் புதிய திணையில் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஓரளவுக்குப் பேசப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் அவர்கள் எல்லாவற்றையும் கடந்து இணங்கியும் துணிச்சலாடு எதிர்கொண்டும் வாழ்ந்திருக்கின்றனர். அதற்கான மனத் தயாரிப்பு அவர்களிடம் இருந்துள்ளது. புலம்பெயர்ந்து இன்னொரு நிலத்துக்குச் சென்றால், அதனோடு இணங்கியே தீர வேண்டும். வேறு வழியில்லை. அதுவும் கதியற்றவர்களாகச் சென்று விட்டால், அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்றுத்தானாக வேண்டும். ஏற்றே நிமிர வேண்டும். கல்லில் துளிர் விடும் விதையைப்போல.

மந்தாகினி குமரேஷ், ஈழத்தமிழர் நிலைநின்று புலம்பெயர்வைப் பற்றி எழுதுகிறார். இன்னும் கூர்மையாகப் பார்த்தால், ஈழப்போராட்டப்பரப்பிலிருந்து புலம்பெயர நேர்ந்த நிலைமைகளைக் குறித்து எழுதுகிறார் எனலாம். அதனோடு இணைந்த கனவுகளையும் நினைவுகளையும் அவை உண்டாக்கும் உணர்வலைகளையும். உட்குமைவும் விடுதலை வேட்கையின் தவிப்பும் மிஞ்சித் துடிக்கும் கனவுகளும் மந்தாகினியின் கவிதைகளில் பொருண்மைப்பட்டிருக்கின்றன.

ஈழப்போராட்டத்துடன் ஐக்கியப்பட்டிருந்த குடும்பத்தைச்  சேர்ந்தவர் மந்தாகினி. ஈழப்போராட்டம் மிகுந்த சிக்கலையும் பேரவலப்பரப்பையும் கொண்டது. இந்தச் சிக்கல்களும் பேரவலமும் ஈழப்போராட்டத்துடன் இணைந்திருந்தவர்களையும் கடுமையாகப் பாதித்தது. மந்தாகினியின் குடும்பத்துக்கும் இது நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் அதைத் தாக்குப் பிடித்தே நின்றனர். ஈழப்போரின் முடிவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டை விட்டு வெளியேறச் செய்து புலம்பெயர வைத்தது. களத்தில் அடிபட்டுச் சேதங்களோடும் வலிகளோடும் குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர்களில் ஒருவராகினார் மந்தாகினி. இன்னொரு திணையில் – புதிய நிலைகொள்ளலில் – அவர்கள் இணங்கித் தீரவேண்டிய காலக்கட்டாயம். அந்த வாழ்க்கையே இந்தத் தொகுதியின் சாராம்சமாகும்.

“மழை நனைத்த சிறகுகள் போல்

கனத்த மனதுகள்

காலைக் கடிவாளமிட

வலிந்து வைத்த காலடியின்

வேதனைச் சுவட்டோடு

சிலர் வந்தோம்…”

(இரைதேடும் பறவைகள்)

ஈழத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற நிலையை இந்தவரிகள் சொல்கின்றன. அதற்குப் பின்னர் அங்கே எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகளும் அவை உண்டாக்கிய உணர்வலைகளும் சில கவிதைகளில் பேசப்படுகின்றன. இன்னொரு தொகுதிக்கவிதைகள் இந்தப் புலப்பெயர்வுக்கு முன்னரான காலத்தையும் களத்தையும் கொண்டுள்ளன.

“எங்கள் தெருக்கள்

அப்போது

குன்றும் குழியுமாய்

மூடிக்கிடந்தன.

நாங்கள்

உறவுகளேதுமற்று

தனித்திருந்தோம்.

இருபது நாள் வயதுடைய

கடிதங்களே உறவுகளாய்

கண்டபோதில்

உவகை கொண்டும்

நின்று கழிக்க நேரமின்றி

உருண்டோடின காலங்கள்…”

(உறவு)

மந்தாகினி புலம்பெயர்ந்து புதிய திணையில் ஏதோ வகையில் வாழ்வைக் கட்டமைத்தாலும் அவருடைய மனம் அதிலிருந்து வெளியேறி தாய் நிலத்திலும் அதனுடைய கனவிலும் (அது தாயக விடுதலைக் கனவு) தத்தளிக்கிறது. அப்படித் தத்தளிக்க வைக்கும் வகையிலேயே நிகழ்ச்சிகளும் அமைந்து விடுகின்றன.

‘மனிதம் காத்திருந்தது’ என்ற கவிதை இதற்குச் சான்று.

ஈழப்போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட போராளிகளின் ஒளிப்படங்கள் இணைய வெளியில் வெளிவந்து ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள நீதியைக் குறித்துச் சிந்திப்போர் அனைவரையும் கலங்கடித்தது. அது மந்தாகினியையும்  தத்தளிப்புக்குள்ளாக்குகிறது.

“வலைத்தளங்களில் உலாவிய

அப்படங்கள் உண்மையா?

கருகிஇ உறுப்பிழந்து

உயிரிழந்து உடலும் இழந்து சிதறி..

வேறுபாடற்று..

குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் வயோதிபர்

என வேறுபாடற்று..

விறகடுக்கினால் போல்

அடுக்கிடந்த அவர்கள் பற்றிய

படங்கள் உண்மையா?

நாணம் மறைத்த ஆடையிழந்து

பேய்க் கூட்டம் வன்புணர்ந்த

இன்னிசைகளின் தோற்றஉரு

உண்மையா? மாயமா?….”

தேச விடுதலை என்பது இவ்வாறான அவலப்பரப்பில் சென்று முடிந்த யதார்த்தத்தை, கொடுமையை, உலகத்தின் கையறு நிலை அல்லது அதனுடைய தந்திரத்தைக் குறித்த விமர்சனத்தை இந்தத் தத்தளிப்பின் வரிகள் சொல்கின்றன.

தாய் நிலம் மீதான கனவுக்கு ‘காத்திருப்பு’ என்ற கவிதை இன்னொரு சான்று. இது ஒரு குறியீடாக, மண்ணுக்குள் புதையுண்டு போன வீரர்களின் நினைவைப் பேசுவனூடாக உணர்த்தப்படுகிறது.

“காட்டோர இல்லங்களில் துயிலும் நீங்கள்

விதையாய் மண்ணில் உறைந்து

விழுதாய் வருவீர் எழுந்து

கார்த்திகை மலரும் காந்தள் போலென்று

இன்றும் நம்புகிறோம்…”

போராட்டம் போராகி, அதுவும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் முடிவுற்றாலும் மனம் அடங்கவில்லை. அது மேலும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது. இந்த மாதிரியான உணர்வலையுடன், நம்பிக்கையுடன் எழுதப்படும் ஈழக்கவிதைகளும் கதைகளும் அபுனைவுகளும் அதிகம். அதற்குக் காரணம், ஈழ விடுதலை என்பது அந்தளவுக்கு ஆழ்விருப்புக்கொண்டது. லேசில் கலைந்து கரைந்து விடாத மாபெரும் கனவு. என்பதால்தான் உலகம் முழுவதிலுமுள்ள ஈழத்தமிழர்கள் இன்னும் விடுதலை வேட்கையைக் குறித்துப் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமுள்ளனர். மந்தாகினியும் தன்னுடைய பாத்திரத்தை ஏற்கிறார். இப்படிப் பலரும் தமது பாத்திரத்தை ஏற்றுச் செயற்படும்போது அதிலிருந்து எப்படித் தன்னுடைய குரலால் – கவிதைகளினால் – வேறுபட்டுத் தெரிகிறார்? என்று நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு கவிதைக்குரல் தனித்துவமாக ஒலிப்பதைக் கொண்டே அதனுடைய கவனமும் தாக்கமும் வரலாற்றில் இருக்கும். இலக்கியத்தின், கலையின் அடிப்படைக் கூறுகளில் இது முக்கியமானது. மந்தாகினியின் தனித்துவம் அல்லது வேறுபாடு என்பது, ‘நான் யார்?’ என்ற கவிதையில் ஓரளவுக்குத் தெரிகிறது. அவர் பெரும்பாலான பெண் கவிஞர்களைப்போல பெண்ணியத்தை உரத்த தொனியில் பேசும் கவிஞரல்ல. அதேவேளை தன்னடையாளத்தைக் குறித்துச் சிந்திக்காமல் விடவுமில்லை.

“என் வண்ணமென்ன?” என்ற கேள்வியே அதுதான்.

“அலைமோதும் வண்ணக் கலவை கொண்டேன்

ஆத்திரம் கொண்டு சிவப்பானேன்

துயர் தந்த போர்வையினுள் முடங்கும்போது

கறுப்பானேன்

துரோகங்கள் என்னைப் பழுப்பாக்கின

அன்பும் காதலும் என்வாழ்வை

அரவணைக்கும் வேளை

பச்சைப் புல்வெளியாய் பசுமை கொண்டேன்

நல்லது நடக்க நீலம்

என் மண்ணிறத்து மேனியில்

ஊதா ஊர்வலம் போனது…

இப்படி விரிந்து கொண்டே செல்லும் கவிதை,

“கணனியெழுத்துகள்

நீ பிரித்தானிய அடியென்றது

கடவுச்சீட்டு கனடியன் என்றது!

அலமலந்து போனேன்.

நான் யார்?

என் வண்ணமென்ன?

ஆகாச வெளியில் அசைந்தாடும்

வெற்றிடம் நான்”

எனக் கவிதை முடியும்போது ஒரு கணம் அதிர்ச்சியாக வெறுமை ஏற்படுகிறது. மறுகணம் பெருந்துயர் கவிகிறது. அகதி நிலை என்பது மற்ற எல்லா அடையாளங்களைக் குறித்துச் சிந்திப்பதையும் விட மேவி, தான் யார் எனத் தேடுகிறது. மந்தாகினியின் கவிதைகளில் இந்த அகதிக்குரலே தொடர்ந்தும் ஒலிக்கிறது. தன்னுடைய இளமைக்காலத்தை நினைவில் மீட்டும்போதும் அகதி நிலை மறைதொனியில் ஒலிக்கிறது. ஆகத் தன்னைத் தக்க வைப்பதற்கான எத்தனமே மந்தாகினியின் கவிதைகள். அது அவர் தன்னை மட்டும் தக்க வைப்பதற்கான குரல் அல்ல. தன்னை என்பதன் மூலமாக தான் சார்ந்தோரை, தன்னினத்தோரை என விரிந்து அமைகிறது. பெயர்தலும் அகதியாதலும் என்பது தனியே ஒருவருக்கு நேரும் நிலைமை அல்ல. அது பலருக்குமானது. குறிப்பாக தமக்கான வாழும் உரிமைகளைப் பற்றிப் பேசுவோருக்கு நிகழ்வது. அதையே மந்தாகினி பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

யாருடனும் உரையாடலைத் தொடங்கக் கூடிய எளிய கவிதைகளே மந்தாகினியினுடையவை.  பயண வழியில் சந்திக்கின்ற மனிதர்களோடு பேசுவதைப் போல, பகிர்வதைப்போல எளிமையானவை. ஆனாலும் அதற்குள்ளும் தகிக்கும் வெம்மையை உணரலாம்.

“வலுவான தக்கைகொண்டு

அடைக்கப்பட்ட வளிக்குமிழ்களாய்

உணர்வுகள்..

மறுக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்

முளையாகக் கிள்ளப்பட்ட

ஆசைகள்

முட்டி மோதின உள்ளே.

அமுக்கம் தவிர்க்க

வெடிக்க நினைக்கும்

கண்ணாடிக் குடுவையாய் மனம்…”

(எல்லைகள்)

இந்தக் குமுறல் சாதாரணமானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பெண்ணின் ஆழ்மனத் தவிப்பும் வெடிப்புமாகும். ‘சொல்லாத சேதிகளில்’ தொடங்கிய இந்த வெடிப்பு தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மந்தாகினியைக் கடந்தும் எத்தனை தலைமுறைகளுக்கு இது நீளும் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு நம் தமிழ்ச்சமூகத்தின் அசைவு – முன்னேற்றம் அல்லது மாறுதல் மிக மெதுவாக நத்தைப்பயணமாகவே நிகழ்கிறது. இது எதிர்பார்ப்புக்கு எதிரானது. அது உண்டாக்கும் சலிப்பும் கோபமும் சாதாரணமானதல்ல.

இப்படிப் பன்முகமாக வெளிப்பாடடையும் மந்தாகினியின் கவிதைகள், தன் காலத்தின், தன் வாழ்களத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அனுபவத்துக்கும் அறிதலுக்கும் முதன்மை அளிக்கும் எழுத்துச் செயற்பாட்டில் அல்லது அவ்வாறான எழுத்து முறையில் இது நிகழ்வதுண்டு. அப்படியென்றால் இவை வெறுமனே காலப்பதிவுகள் அல்லது கால வெளிப்பாடுகள்தானா? என்று யாரும் கேட்கக் கூடும். காலத்தையும் களத்தையும் உதறி விட்டு அல்லது அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என புனைவொன்றில் இயங்கக் கூடிய மனது வாய்த்தவர்கள் வேறு புனைவுகளை உருவாக்கக் கூடும். அவர்களுக்குப் புனைவென்பது மகிழ்ச்சிக்கான ஒரு கலை வெளியாக இருக்கும். அல்லது புனைவின் பரிமாணங்களை வெவ்வேறு விதமாக நிகழ்த்திப் பார்க்கும் விருப்புடையோராக இருக்கும். கலையிலும் இலக்கியத்திலும் எதற்கும் சாத்தியங்கள் உண்டு. அவற்றிற்கு எல்லைகளே இல்லை. எனவே அதை ஏனையவர்கள் செய்யலாம்.

மந்தாகினி தன்னனுபவங்களையும் தான் அறிந்தவைகளையும் எழுத்தில் முன்வைக்க விரும்புகிறார். அது தன்னுடைய கடமைப்பாடு என்பது அவருடைய எண்ணம். நம்பிக்கை. அத்தகைய படைப்புச் செயல்வழியே அவருடையது. நாளை இதிலிருந்து அவர் மீறியோ மாறியோ செல்லலாம். புதிய யோசனைகள் வரலாம். வரலாற்றில் அப்படியான மாற்றங்களும் மீறல்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்பொழுது ஈழப்படைப்பாளிகள் பலரையும்போல மந்தாகினியின் கால்களும் மனமும் மண்ணில் வேர் கொண்டவையாகவே உள்ளன. கால்களும் மனமும் என்பது புறமும் அகமும் என இங்கே அர்த்தப்படுத்தப்படுகிறது. மந்தாகினி ஈழப்போராட்டப்பரப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய புறமும் அகமும் அரசியல் மயப்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மந்தாகினியை 1990 இன் இறுதிப்பகுதியிலிருந்து அறிவேன். ஈழப்போர்ச்  சூழலில்  சமூகச் செயற்பாட்டியக்கத்தில் மக்களுக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். இடையிடையே கவிதைகளையும் கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். “தொடர்ந்து எழுதுங்கள்” என்று ஊக்கப்படுத்தினேன். ஆனால், அவருடைய பணிகளும் வாழ்க்கைச் சூழலும் அவற்றில் தீவிரமாக இயங்க இடமளிக்கவில்லைப் போலும். பிறகு போர். அது அவரையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. இறுதியில் புலம்பெயர்ந்து கனடாவுக்குச் சென்றார். ஆனாலும் அவருக்குள்ளிருக்கும் படைப்பு மனம் ஓயாமல், அலையடித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் விளைவானவையே இந்தக் கவிதைகள். இவை தணிய மறுக்கும் அனற் காற்று. வற்ற மறுக்கும் துயர ஊற்று. உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப முனையும் நியாயக் குரல். கால சாட்சியம். வரலாற்றின் முகத்தில் எழுதப்படும் கண்டன வார்த்தைகள். துயர்ப்பதிவு. உலகத்தை கோமாளியாக்கி வேடிக்கை பார்க்கும் துயரம் தின்னியின் சத்திய வார்த்தைகள்.

மந்தாகினி இன்னொரு காலடியோடு மேலும் புதிய பயணங்களை நிகழ்த்தட்டும்.