— அழகு குணசீலன் —
இலங்கையில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தாக்குதல்கள் குறித்த அரசாங்க தரப்பின் அடுத்தடுத்த அறிவிப்புக்களையும் அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் படிக்கும் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வியட்நாம் போர் நினைவுக்கு வருகிறது.
இன்று போன்று இலகுவான, சக்தி வாய்ந்த தொழில்நுட்ப ஆயுதங்கள் இல்லாத அந்தச் சூழலில் வியட்நாமிய விடுதலைப் போராளிகள் அமெரிக்காவை எதிர்த்து போராடிய முறைகளில் இதுவும் ஒன்று.
அமெரிக்க டாங்கிகளையும், பாரிய படைநகர்வுகளையும் தவிர்க்க – தகர்க்க போராளிகள் மாடுகளை தற்கொலை குண்டு தாரிகளாகப் பயன்படுத்திய தந்திரோபாயம் தான் அது. மாடுகளுக்கு சாராயத்தை பருக்கி போதையூட்டி டாங்கிகள், படை களின் நகர்வுகளின் போது கட்டவிழ்த்து விட்டபோது மாடுகள் வெறிகொண்டோடி டாங்கிகளில் மோதி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டன. இந்த முறையானது பிற்காலத்தில் மிருகவதை எதிர்ப்பு அமைப்புக்களால் பெரும் கண்டனத்திற்குள்ளானது.
இன்று ஈஸ்டர் படுகொலைகள் – விசாரணைகள் தொடர்பான செய்திகள் இதையே நினைவூட்டுகின்றன. தாங்கள் புனித மரணத்தை தழுவப்போகிறோம் என்று தெரிந்தும், அதற்கான குண்டுகளை சுமந்தும், அது வெடிக்கும் போது தான் மட்டும் அல்ல இயலுமானவரை அதிகமான மனிதர்களை கொல்ல வேண்டும் என்ற ஆவேசத்துடன் தற்கொலை தாக்குதல்களை சுயவிருப்பில் தேர்ந்தெடுத்தவர்களை, அதற்கான நீண்டகால பயிற்சிகளையும், தயாரிப்புக்களையும் செய்து தாக்குதல் நடாத்தியவர்களை, ஏதோ அப்பாவிகளாகவும்(?), அவர்களின் அப்பாவித்தனத்தை (?), அறியாமையை(?) யாரோ? தங்கள் அரசியல் தேவைகளுக்கு வஞ்சகமாக பயன்படுத்திவிட்டார்கள் என்ற பாணியில் கதைகள் சொல்லப்படுகின்றன.
ஸஹரான் குழுவினர் என்ன? காசுக்காகவும் அல்லது வேறு வசதியான வாழ்க்கை, வெளிநாட்டில் குடியேறுதல் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பியா? மரித்தார்கள். பூசையில் கலந்து கொண்டுள்ள குழந்தைகளையும், பெண்களையும், ஆண்களையும் கொல்ல எவ்வளவு மனத்தைரியம் – மனவைராக்கியம் தேவை? இது அடிப்படையில் ஒரு இலட்சிய வெறியில் இருந்தே எழமுடியும். பள்ளிவாசலில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கும், ஹஜ் யாத்திரைக்கு சென்று திரும்பியவர்கள் மீது புலிகள் குருக்கள் மடத்தில் மேற்கொண்ட தாக்குதலுக்கும், பௌத்த பிக்குகள் மீது மகாஓயாவில் புலிகள் கருணாவின் கட்டளையில் மேற்கொண்ட தாக்குதலுக்கும், ஈஸ்டர் படுகொலைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்று தற்கொலை தாக்குதல் மற்றது தாக்கிவிட்டு தப்பி ஓடுதல் அவ்வளவு தான். புலிகள் காசுக்காகவும், வசதிகளுக்காகவுமா இது போன்ற தாக்குதல்களையும், மற்றைய இராணுவ இலக்கற்ற தற்கொலை தாக்குதல்களையும் செய்தார்கள்? புலிகளுக்கு ஊட்டப்பட்டிருந்த இன, மத வெறி மனநோயே இதற்கு காரணம்.
தற்கொலை குண்டுதாரிகள் சரி, பிழைக்கு அப்பால் அவர்கள் வரிந்து கட்டிக்கொண்ட இலட்சியத்திற்காக தங்களை தாங்களே வெடிக்கச்செய்து மாண்டுபோகின்றனர். இந்த தயார்படுத்தலுக்கு நீண்டகால மூளைச்சலவையும், இலட்சியம் மீதான வெறியும் தேவை. அந்த வெறி மதவெறியாகவோ, இனவெறியாகவோ, அதிகார வெறியாகவோ இருக்க முடியும். வேண்டுமானால் அவர்கள் சார்ந்த அரசியல் அதை மதம், இனம் மீதான பற்று- பக்தி எனவும் அவர்கள் தேச பக்தர்கள் எனவும், மாவீரர்கள் எனவும் பட்டம் சூட்டலாம். இதனால் தான் கார்ள் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்றார் போலும். இந்த கொடூரமான தற்கொலை தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகளும் ஒரு கருவியாக பயன்படுத்தினர். முற்போக்கு எழுத்தாளர்(?) முருகையன் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல்களை புகழ்ந்து குறள் வடிவில் ஒரு அதிகாரத்தை கூட எழுதியிருந்தார். அந்த அதிகாரத்தின் பெயர் “தற்கொடை”. இது கரும்புலிகளுக்கு மட்டும் அல்ல ஐஎஸ்ஐஎஸ் குண்டுதாரிகளுக்கும் பொதுவானதுதான்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஈஸ்டர் படுகொலை தொடர்பான விசாரணைகளை பதவிக்கு வந்த ஆறு மாதங்களில் ஆரம்பித்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் பக்கத்தில் உள்ள காற்று வளம் – இது தேர்தல் காலம் என்பதாகும். அடுத்தது பேராயர் ஈஸ்டர் தினத்தில் வீதியில் இறங்குவோம் என்று எச்சரித்தது. இதற்கு பதிலாக ஜனாதிபதி ஏப்ரல் 21 ம் திகதியை பிதான சூத்திரதாரியை அறிவிப்பதற்கான காலக்கெடுவாக அறிவித்திருந்தார். அது முடிந்து இரண்டு வாரத்தை தொடுகிறது. யாரையாவது “திருப்பலி” கொடுக்கவேண்டிய தேவை ஐனாபதிக்கு இருக்கிறது.
ஏப்ரல் 8ம் திகதி பிள்ளையானும், பின்னர் அவரின் சாரதியும் கைதுசெய்யப்பட்டதை தவிர எதுவும் நடக்கவில்லை. அதுவும் அவர்களின் கைது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ். ரவீந்திரநாத் அவர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போனது தொடர்பானது என்று கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த கைதுகளும், தடுத்து வைப்புக்களும் ஈஸ்டர் படுகொலைகள் அரசியல் மயமாக்கப்படுகின்றனவா? இந்த கைதுகள் அரசியல் பழிவாங்கலா? என்று சந்தேகங்களை எழுப்பியுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும், பயங்கரவாத சட்டத்தையும் நீக்குவதாக மக்கள் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி அந்த அதிகாரங்களை தேர்தல் காலத்தில் பயன்படுத்துவது குறித்து சிவில் அமைப்புக்கள் பலவும் கண்டித்துள்ளன.
முஸ்லீம் பிரதேசங்களில் இடம்பெற்ற, அல்லது முஸ்லீம்கள் புலிகளின் தற்கொலை தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்ட போது அவற்றை பயங்கரவாத தாக்குதல்கள் என்றவர்கள், ஐ.எஸ். ஸஹரான் குழுவினரின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாகப் பார்க்கத்தவறுகிறார்கள். காத்தான்குடியில், ஒல்லிக்குளத்தில், சாய்ந்தமருதுவில், கிறித்தவ தேவாலயங்களில், ஹோட்டல்களில் நடந்தவை எல்லாம் மனிதநேயத்தாக்குதல்களா ? இந்த தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல என்றும், அல்லது அதை ஏற்க மறுத்தும் ஸஹாரான் குழுவினர் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது கண்ணுக்கு முன்னால் உள்ளதை கண்டும்காணாததாக விட்டு அதற்கு பின்னால் என்ன உள்ளது என்று தேடும் அரசியல்.
இந்த முரண்பாட்டை தமிழ்த்தேசிய அரசியலிலும் காணமுடியும். யார், தற்கொலைத் தாக்குதல்களை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பலமான போராட்ட வழிமுறை என்று கூவி புனிதப்படுத்தினார்களோ/, படுத்துகிறார்களோ அவர்களே ஈஸ்டர் படுகொலை தற்கொலை தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக அடையாளப்படுத்துகிறார்கள். புலிகளின் தற்கொலை தாக்குதல்களை தங்களின் அரசியலுக்கு ஏற்ப நியாயப்படுத்தியவர்கள் ஐ.எஸ். ஸஹரான் குழுவினரின் தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல் என்று கூறி அதற்கு பொறுப்பானவர்களை ஐ.எஸ்.க்கு வெளியே தேடுகிறார்கள். இது விடயத்தில் தமிழ்த்தேசிய, முஸ்லீம் தரப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஓரணியில் செயற்படுகின்றனர். ஆனால் தமிழ்த்தேசிய தரப்பு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் மற்றைய சிங்கள, முஸ்லீம் தரப்புக்களுக்கும் உங்கள் குறுந்தேசியவாதம் பயங்கரவாதம்தான்.
ஈஸ்டர் படுகொலைகள் குறித்து கடந்த கால இலங்கை அரசாங்கங்கள் மட்டும் அல்ல இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, டென்மார்க், நெதர்லாந்து, பிரிட்டன், துருக்கி, ஜப்பான், போர்த்துக்கல் , இஸ்ரேல் என்பனவும் ஒருங்கிணைந்த புலனாய்வை செய்ள்ளன. இந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் இத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதும் இதற்கு ஒரு காரணம். ஐ.எஸ். ஸஹரான் குழுவே இத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று FBI மற்றும் அவுஸ்திரேலிய, இந்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. கொலையாளிகளின் படங்களை குழுவாக ஆயதங்களுடன் தாக்குதல் உறுதிமொழியாக வெளியிட்டுள்ளது. “கரும்புலிகள் தலைமையிடம் இருந்து விடைபெறும்” இவ்வாறான படங்களை புலிகளும் தாக்குதல்களுக்கு பின்னர் வெளியிட்டனர். இந்த நிலையில் புலிகளின் படங்களையும், உரிமைகோரல்களையும் புலன்விசாரணைகளில் ஒரு ஆதாரமாக. சாட்சியமாக எடுத்துக்கொண்ட அரசாங்கம் ஐ.எஸ். அமைப்பின் உத்தியோகபூர்வ தகவல்களை மறுதலித்து செயற்படுவது அநுர அரசாங்கம் தனக்கு வேண்டாத, அரசியல் எதிரியை தண்டிக்க ஆதாரம் தேடுகிறதா? என்ற சந்தேகம் தெற்கில் வலுக்க காரணமாகிறது..
பிரான்ஸ் 24 இன் ஊடகவியலாளர் குழு ஒன்று மாவனெல்லையில் புத்தர் சிலை தாக்கப்பட்ட பின்னர் அங்கு சென்று உள்ளுர் மக்களை சந்தித்தது. ஸஹரானின் NTJ மீதே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மந்தாகினி கஹ்போட், அல்பின் அல்பாரெஸ், தோமஸ் டெனிஸ், பிலோமின் ரெமி ஆகிய ஊடகவியலாளர்கள் இக்குழுவில் இருந்தனர். “இந்தக் குழுவின் இருப்பை நாம் அறிந்திருந்தோம்.ஆனால் அவர்கள் இவ்வளவு ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்தாக அந்த ஊடகவியலாளர்களின் அறிக்கை கூறுகிறது.
இதையொத்த கருத்துக்களையே ஈஸ்டர் படுகொலைகளுக்கு பின்னர் சாதாரண முஸ்லீம் பொதுமக்கள் குறிப்பாக காத்தான்குடி, சாய்ந்தமருது மக்கள் தெரிவித்திருந்தனர். நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் இந்தப் படுபாதகச் செயலை அங்கீகரிக்கவில்லை. ஆனால் முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்களின் போது தமிழர்கள் இந்தளவுக்கு மனிதாபிமானமற்ற அந்த நடவடிக்கைகளை பொதுமக்களாக வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது துரதிஷ்டம். தமிழ்ப்பிரதேச பல்கலைக்கழக சமுகங்கள் கூட ஒத்தோடின. இந்த ஒத்தோடல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியைத்தான் புலிகளின் பிரிவின்போது கிழக்கு பல்கலைக்கழகமும் அனுபவித்தது என்பதை மிக வருத்தத்துடன் பதிவிடவேண்டியுள்ளது.
விஜிதரன், செல்வி, ரஜனி திரணகம, ரவீந்திரநாத், தம்பையா போன்று ….. பலரை இங்கு பட்டியலிடமுடியும். இது சம்பவங்கள் இடம்பெறும்போது ஓடி ஒழித்து விட்டு , எல்லாம் கச்சிதமாக முடிந்த பின்னர் “செத்தவீட்டில் செய்யும் அரசியல்”. பல்கலைக்கழக புத்திஜீவிகளின் புத்திசாலித்தனம். இது பற்றி பேசிய மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு சிங்கள பேரினவாத ஒத்தோடிகள் என தமிழ்த்தேசியம் சாயம்பூசியது.
தமிழ்மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட அத்துமீறல்களை மட்டும் அன்றி அரசபயங்கரவாதம் வடக்கு, கிழக்கில் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளையும் ஆகக்குறைந்த பட்சம் தமிழ் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீதான படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களையும் பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டு கொள்ள வில்லை. வடக்கு கிழக்கு கிறிஸ்த்தவர்களை அவர் தமிழர்களாகவும், பயங்கரவாதிகளாகவுமே இனம்கண்டிருந்தார். இது சிங்களவர்கள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை மட்டும் அவர் கண்டிக்க காரணமானது. ஐ.எஸ். பயங்கரவாதம் தங்கள் வீட்டுக்கதவைத்தட்டும் வரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர் அவர். இதனாலேயே வடக்கு கிழக்கை மையப்படுத்தி தமிழ் ஆயர்கள் அமைப்பு ஒன்று உருவாக வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இந்தியா – இலங்கை இடையிலான பாலம் அமைப்பு செய்திவந்தவுடன் அரசியல்வாதிகளையும் விஞ்சி தனது சிங்கள தேசியப்பற்றை – விசுவாசத்தை வெளிக்காட்டியவர். எப்போதும் கோத்தபாய, ஜே.வி.பி. சிங்கள தேசியவாத கடும்போக்காளர்கள் பக்கமே அவர் தன்னை நிலைப்படுத்தினார்.
ஈஸ்டர் படுகொலை விசாரணைகள் அரசியல் தலையீட்டில் இருந்து விடுவிக்கப்படவேண்டியது முதல் நிபந்தனையாக அமையவேண்டும். தற்போது ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷானி அபயசேகர இடைநடுவில் உள்வாங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுரேஷ் சாலே, அவருடன் தொடர்பிலும், தகவல் பரிமாற்றத்திலும், தரகராகவும் செயற்பட்ட அசாத் மௌலானா சனல் 4 க்கு வழங்கியுள்ள சுயசாட்சியம் விசாரணைக்குழுவால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். அவர் தனக்கு தெரிந்தவற்றில் விரும்பியவற்றை மட்டும் அள்ளிவீசிவிட்டு தப்பி போகமுடியாது. இன்று இருப்பவர்களுள் கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த ஒப்புதல் வாக்குமூலம் அசாத் மௌலானாவுடையது.
யார் அந்த ஹிந்தி அபு? அவர் இந்திய புலனாய்வு அதிகாரின் உதவியுடன் விசாரணைக்கு உட்படுத்தப்படமுடியும். இந்திய புலனாய்வு துறையின் தகவல்களை உதாசீனம் செய்தவர்கள், தகவல்களை தொடர்ந்தும் ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் வழங்காதவர்கள் உள்ளிட்ட பலரை விசாரணை செய்யாமல் தெரிவு செய்யப்பட்ட அரசியல் எதிரிகளை மட்டும் முதன்மைப்படுத்தி விசாரணை செய்வது முழுமையான விசாரணையாக அமையப் போவதில்லை. இவற்றிற்கு பின்னரே இதன் பின்னால் இருந்த வெளிநாட்டு, உள்நாட்டு பெரும் புள்ளிகளை- அரசியல் தலைமைகளை – மறைகரத்தை அடையாளம் காணமுடியும்.
அநுரகுமார அரசாங்கம் இங்கு தென்னிலங்கை தேவைகளுக்காக இரண்டு பொறிகளை தமிழ்மக்களுக்கு வைத்துள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது இன்னொரு விடயம்.
1. FBI அறிக்கையை ஏற்றுக்கொண்டால் இறுதி யுத்தத்தில் சர்வதேச பொறிமுறையை நிராகரித்து, இங்கு ஏற்றுக்கொண்டதாக அமையும். எனவே உள்நாட்டு பொறிமுறையின் மூலம் எங்களால் தீர்வு காண முடியும் என்று காட்ட யாரையாவது கழுவில் ஏற்றவேண்டிய தேவை அநுர அரசாங்கத்திற்கு இருக்கிறது.
2. பயங்கரவாத வாததடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதினால் தான் அதைப்பயன்படுத்தி “குற்றவாளிகளை” தண்டிக்க முடிந்தது என்று காட்டுவதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காது இழுத்தடிப்பது.
இந்த இரண்டுக்கும் பின்னால் அமெரிக்க வரிவிதிப்பு அழுத்தங்களும், ஐரோப்பிய ஒன்றிய ஜி.பி.எஸ். வரி நீக்க நிபந்தனைகளும் உள்ளன. அந்த அழுத்தங்களுக்கு எதிராக அநுர அரசாங்கம் இந்த இரண்டு காரணங்களையும் பேச்சுக்களில் முன்நிலைப்படுத்த முயற்சிக்கின்றது.
ஆக,
நடந்தது தற்கொலை குண்டு தாக்குதல். இது யாரையும் யாரும் கட்டாயப்படுத்தி சுயவிருப்புக்கு மாறாக பயன்படுத்த முடியாது. ஆனால் இரு தரப்பு நன்மைகள், இரு தரப்பு இலக்குகள் குறித்து இணைந்து செயற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மறுப்பதற்கும் இல்லை. அதனால் “எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனெனில் தற்கொலை தாக்குதல்களில் “அம்பே” முக்கியம்.அதுவே வெடித்து சிதறுகிறது. இந்த புதையல்கள் கட்சி அரசியலுக்கும், அரசியல் எதிரிகளுக்கும் அப்பால் வெளிப்படைத்தன்மையுடனும், அரசியல் பொறுப்பு, மற்றும் நேர்மையுடனும் தோண்டப்படவேண்டும்.
இல்லையேல்………
ஸஹரான் ஒல்லிக்குளத்தில் போட்டதை அநுர அரசியலுக்காக வாவிக்கரையில் தேடினார் என்ற கதையாகவே இதுவும் கடந்து போகும்!