— அழகு குணசீலன் —
” தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் வராத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என்று, அண்மைக்காலமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடிக்கடி தெரிவித்து வருகிறார். இக் கருத்து வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும், தேர்தல் சட்டங்களின் 82 வது சரத்தை மீறும் வகையிலும் அமைந்துள்ளது”.
இதை எதிர்க்கட்சிகள் சொல்லியிருந்தால் பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றுவிடலாம். ஆனால் சொல்லியிருப்பது சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்(PAFFREL). எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றுக்கு பத்துமுறை பரிசீலிக்க போகிறாராம் ஜனாதிபதி. மக்கள் அந்த வார்த்தைகளாலேயே தேர்தலில் திருப்பியடிக்கவேண்டும். திசைகாட்டிக்கு வாக்களிக்க முன்னர் “ஒன்றுக்கு பத்துமுறை” சிந்தித்து அதிகாரப்பரவலாக்கத்தின் அடித்தளமான உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்களிக்கவேண்டியது அவசியமாகிறது.
ஜனாதிபதி ஜனநாயகத்தை மீறிய இந்தக் கருத்தை எட்டு தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக பேசியிருக்கிறார். திஸமாராகம, புத்தள, கண்டி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கந்தளாய், மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் ஜனாதிபதி வாக்காளர்களுக்கு விடுத்த இந்த மறைமுக மிரட்டல் குறித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட, பல கட்சிகளின் தலைவர்கள், இவர்களில் பலர் சட்டத்துறை சார்ந்தவர்கள் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களுக்கூடாக ஜனாதிபதியை கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். ஜனாதிபதியின் செயலாளருக்கு இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையில் தேர்தல் ஆணையகத்திற்கும், ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சட்டச் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அவர் திருக்கோவிலில் வைத்து விடுத்த சவால் இது.
“உள்ளூராட்சி சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 82 “இ”, மற்றும் 82″ஈ” ஆகிய இரண்டு பிரிவுகளையும் ஜனாதிபதி மீறியிருக்கின்றார். ஜனாதிபதி மீறியிருப்பதை தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த பேராசிரியர் அர்ச்சூன் பராக்கிரம தேர்தல் ஆணைக்குவில் முறைப்பாடு செய்துள்ளார். அது குறித்து தேர்தல் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் அரசியலமைப்பில் 35வது உறுப்புரையில் ஒரு பிரிவு இருக்கின்றது. அது ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்பதற்கான விடுபாட்டு உரிமை. இதன்படி பலரும் நினைப்பது ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான். ஆனால் அப்படியல்ல. அப்படி யாராவது வழக்கு தொடுத்தால் ஜனாதிபதி நீதிமன்றுக்கு சென்று விடுபாட்டு உரிமையை கோர முடியும் என்பதே அது” என்று சட்ட இருட்டறைக்குள் வெளிச்சம் போட்டுள்ள சுமந்திரன், சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இரு சவால்களை விடுத்துள்ளார்.
சவால்:1. ” ஜனாதிபதி நேரடியாகவே தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் . ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்கின்ற தென்பு உங்களுக்கு – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றதா? நீங்கள் உண்மையாகவே சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழுவாக இருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுங்கள். ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை.”
சவால்:2. “அப்படி தேர்தல் ஆணையகம் வழக்குத் தொடுக்கின்றபோது , ஜனாதிபதிக்கான விடுபாட்டு உரிமையை விலக்கி அந்த வழக்கை அவர் எதிர்கொள்ளத்தயாரா” ? என்று அடுத்த சவாலை ஜனாதிபதிக்கு விட்டிருக்கிறார் சுமந்திரன்.
தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய முன்னெடுப்பில் சுமந்திரனின் அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்களும் அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் ஜனநாயக, நடுநிலையான தேர்தல் ஒன்றுக்காக சுமந்திரனின் இந்த சவால்களை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமக்குள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி இல்லாத, பொல்லாத பொய்களை பேசி வருகின்றனர். அந்த பாணியில் தான் ஜனாதிபதியும் தனது வழக்கு விடுபாட்டு சிறப்புரிமையை பயன்படுத்தி வாய்க்கு வந்தவாறு பேசி வருகிறார். இந்த போக்குகளை எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிழித்து தொங்கவிட்ட அநுரகுமார திசாநாயக்கவும், தோழர்களும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதையே செய்கிறார்கள். இதற்கு பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தல், புதிய அரசியல் கலாச்சாரம் என்ற வெள்ளையடிப்புக்கள் வேறு.
இலங்கையின் ஒட்டு மொத்த அரசியல் வரலாற்றில் மட்டும் அன்றி, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சி வரலாற்றிலும் முதற்தடவையாக , ஜனாதிபதியின் கூற்றுக்கு விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த வகையில் இது அநுரகுமார ஆட்சியில் ஒரு கறுப்பு வரலாற்று பதிவு.
ஜனாதிபதி திசாநாயக்க இதற்கு மீண்டும் ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் பதிலளித்த இருக்கிறார். “உள்ளூராட்சி மன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது”, என்பதையே தான் கூறியதாக அவரது மறுப்பு கூறுகிறது.
ஜனாதிபதியின் கூற்று உண்மையானால் கட்சி தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், சிவில் அமைப்புக்கள் கூறியவை எல்லாம் பொய்யா? திரிபுபடுத்தலா? அல்லது ஜனாதிபதி சொல்வதுபோல் தவறாக விளங்கிக்கொண்டதன் விளைவா? தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள “பெப்ரல்” அமைப்பு கூடவா இதை தவறாக புரிந்து கொண்டு, திரிபுபடுத்தி பொய் சொல்கிறது….? ஜனாதிபதிக்கு வக்காலத்து வாங்கியுள்ளவர், கூடிய சீக்கிரம் பிரதமர் பதவிக்கு காத்திருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க . “தமிழ்மக்களை ஏமாற்றிய கட்சிகளுக்கு இது பற்றி பேச அருகதையில்லை” என்று கருத்துச்சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.
இதன்படி ரத்நாயக்க என்ன சொல்ல வருகிறார்? இதுவரை “ஏமாற்றியவர்கள்” பேசமுடியாது , இனி “ஏமாற்ற்ப்போகிறவர்கள்” தாங்கள் தான் பேசமுடியும் என்பதா? ஜே.வி.பி.யின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரிடம் இருந்து வந்துள்ள இந்த பதிலுக்கும், ஜனாதிபதி தேர்தல் சட்ட சரத்து 82 ஐ, மீறியுள்ளார் என்ற கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும், பெப்ரல் குற்றச்சாட்டுக்குமான பொறுப்பு வாய்ந்த பதிலா இது…? ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம், கருத்து சுதந்திரம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற விடயங்களில் அரசாங்கத் தரப்பை எவ்வளவுக்கு விமர்சித்துள்ளது. இப்போது திசைகாட்டி வந்த வழியை மறந்து வேறு ஒரு வழியால் போய்க்கொண்டிருக்கிறது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்வு கூறல் புலனாய்வு அறிக்கைகள் அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை மதிப்பிடுவதற்கு புலனாய்வு அறிக்கை ஒன்று தேவையா? கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் விகிதாசார முறையின் கீழ் இடம்பெற்றவை. போனஸ் முறையைக் கொண்டவை. புதிய சட்டத்தின் கீழான உள்ளூராட்சி தேர்தல் போனஸ் அற்ற விகிதாசார முறையைக்கொண்டது; இதில் அரசாங்கம் கடந்தகால வெற்றியைப் பெறமுடியாது. இந்தப் போனஸ் இழப்பை சரி செய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளுக்காக வாடியடித்து, வாயடித்து மிரட்டல் பிரச்சாரம் செய்கிறது.
உண்மையில் இந்த தந்திரோபாயம் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான அதிகார பகிர்வு- சுயாட்சி கோட்பாட்டை மறுதலித்து, பேரினவாத ஆட்சி அதிகாரத்தை சிறுபான்மை தேசிய இனங்கள் மீது திணிக்கின்ற ஒரு அரசியல் அணுகுமுறையாகவே இந்த தந்திரோபாயத்தை கொள்ள முடியும். இது அரசாங்கத்தின் “இலங்கையராதல்” அரசியல் பொறிக்குள் மறைந்துள்ள இன, மத, கலாச்சார, பண்பாட்டு தனித்துவங்களையும் கடந்து, கிராமிய மட்ட தலைமைத்துவத்தை கூட கொழும்பு தேசிய அரசியலுக்குள் கரைக்கின்ற பேரினவாத தந்திரோபாயம்.
இந்த போக்கு எதிர்காலத்தில் 13 வது திருத்தத்தினூடான அதிகாரப்பகிர்வை புதிய அரசியல் அமைப்பு ஒன்று வந்தால் (?), திட்டமிட்டு இல்லாமல் செய்வதற்கான வழிமுறை மட்டும் அன்றி, இதைக்காட்டி இந்தியாவையும், சர்வதேசத்தையும் இது விடயத்தில் திசைதிருப்ப அரசாங்கத்திற்கு வாய்பாபாக அமையும். இதனாலேயே இந்த தேர்தல் வடக்கு, கிழக்கு சிறுபான்மை தேசிய இனங்கள் தங்கள் அரசியல் அடையாளத்தையும், இருப்பையும் நிலைநிறுத்த மிக, மிக அவசியமானது.
ஜனாதிபதி தையிட்டி விகாரை விடயம் குறித்து வெளியிட்ட கருத்தும் நில ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதும், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு குறுக்கு வழியில் நீதியை தேடும் முயற்சியாகவும் உள்ளது. இது ஜனநாயக விரோதமானதும், சமூக அநீதியை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. இந்த விவகாரத்தில் தையிட்டி நில உரிமைக்காக போராடும் குழுக்கள் சமாதானத்தீர்வுக்கு எதிரானவை என்றும், அக்குழுக்கள் இல்லாவிட்டால் இப்பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறுவது நீதிக்கான போராட்டங்களை மறுதலிப்பதாக உள்ளது. இந்த போதனையை அநுரகுமார திசாநாயக்க காலிமுகத்திடல் “அரகலய” போராட்டக்காரர்களுக்கு போதிக்க மறந்தது வாஸ்த்தவம்தான். மக்கள் போராட்டம் மூலம் அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் ஆறு மாதங்களில் ” அதிகார வெறியில் மக்கள் போராட்டங்களை” “குழப்பவாதிகளின் செயல்” என்று காட்ட பார்க்கிறார்கள்.
கடந்து வந்த வழியை மறந்து திசைகாட்டி தவறான திசையை காட்டுகிறதா………?