(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
தமிழ்த் தேசிய அரசியலை நடுநிலை நின்று பக்கச் சார்பின்றி காய்தல் உவத்தலின்றி நுட்பமாக நோக்கினால் அகிம்சைப் போராட்டமெனினும் சரி ஆயுதப் போராட்டமெனினும் சரி கடந்த எழுபத்தைந்து வருட காலத்தில் (1949-2024) இன்று வரை எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) -அ. அமிர்தலிங்கம்- தோழர் பத்மநாபா ஆகிய மூவரையும் தவிர வேறு எவரையும் தனி நபர் மற்றும் கட்சி நலன்களுக்கு அப்பால் நின்றும் தன்முனைப்பில்லாமல் மக்கள் நலன் சார்ந்து அரசியல் தீர்க்கதரிசனத்துடனும் தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர்களாகக் காணமுடியவில்லை.
ஆனால், துரதிர்ஷ்டமாக தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியும் இன்று இல்லை; அமிர்தலிங்கம் வழிநடத்திய தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று இல்லை; தோழர் பத்மநாபா கட்டமைத்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இன்று இல்லை. இம்மூன்று கட்சிகளுமே இத்தலைவர்களின் மரணத்தின் பின்னர் தடம் புரண்டுவிட்டன.
மேற்கூறப்பெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)-(இப்போதைய) தமிழரசுக் கட்சி-(இப்போதைய) தமிழர் விடுதலைக் கூட்டணி-(சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான (இப்போதைய) ஈ பி ஆர் எல் எஃப் (தேர்தல்கள் திணைக்களத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனப் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது)- ரெலோ-புளொட்-ஈரோஸ்-(சி வி விக்னேஸ்வரன் தலைமையிலான) தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய எட்டுக் கட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால்,
தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாதவை எனத் தமிழ் ஊடகங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ பி டி பி)-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி எம் வி பி) (இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து கிளை விட்டிருந்தாலும்கூடப் புலிகளின் முகவராகச் செயற்படவுமில்லை; அடையாளப்படுத்தப்படவுமில்லை)-அகில இலங்கை தமிழர் மகாசபை-தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (சுரேஷ் பிரேமச்சந்திரனின் அரசியல் போக்குடன் முரண்பட்டுச் சுரேஷ் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப் பிடமிருந்து பிரிந்துவந்து பத்மநாபாவின் பாதையில் தோழர் சுகு-திருநாவுக்கரசு சிறிதரன் தலைமையில் செயற்படும் கட்சி) மற்றும் (ஈ பி டி பி இடமிருந்து பிரிந்து வந்த சந்திரகுமார் தலைமையிலான) சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் உள்ளன.
இந்த ஐந்து கட்சிகளும் புலிகளின் முகவர்கள் அல்லாமலும்-அரசியல் சித்தாந்த ரீதியாகப் புலிகளின் ‘பாசிச’க் கொள்கைக்கு எதிரானதாகவும்-எதிர்ப்பு அரசியலுக்கு வெளியே இணக்க அரசியலை நோக்கியும்-1987 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் 13 ஆவது திருத்தத்தையும் எந்த பிசிறும் (தடுமாற்றமும்) இல்லாமல் அனுசரித்துப்போகும் கட்சிகளாகவும் தம்மை அடையாளம் காட்டியுள்ளன.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் இப்போது இந்த ஐந்து கட்சிகளும் இணைந்த/இணையும் அணியையே இக் கட்சிகளின் சரி பிழை; பலம் பலவீனம்; ஒட்டுமொத்த வடக்கு கிழக்குத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிருக்கும் வாக்கு வங்கியுடன் ஒப்பிடும்போது இக்கட்சிகளுக்கிருக்கும் குறைந்த வாக்கு வங்கி; தமிழ்த் தேசியக் கட்சிகளினால் இக் கட்சிகளின் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் என்பவற்றிற்கும் அப்பால் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கேனும் ‘மாற்று அரசியல்’ அணியாக அடையாளப்படுத்தலாம்.
ஆனால், துரதிர்ஷ்டமான நிலைமை என்னவெனில் இவ் ஐந்து கட்சிகளும் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டு 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையேனும் முழுமையாக அமுல் செய்யும் ஒரு பொது வேலைத் திட்டமொன்றினூடாக ஓர் அரசியல் இறுக்கத்தைக் கொண்டிருக்கும் வகையில் ஓர் அணியாகக் கட்டமைக்கப்படவில்லை; மேற்கிளம்பவில்லை.
மட்டுமல்லாமல் புலிசார் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருக்கக்கூடிய அரசியல் பலமும் (தேர்தல்களில் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களில் பெரும்பான்மையோர் இத்தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே வாக்களித்து வருகின்றனர்) அங்கீகாரமும் ‘மாற்று அரசியல்’அணி என அடையாளப்படுத்தக்கூடிய இக்கட்சிகளுக்குத் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இப்போது போதாமையாக இருப்பதே இக்கட்சிகளின் பின்னடைவு ஆகும். அதாவது இவ்அணியின் பின்னே ஒரு மக்கள் திரட்சி இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் இந்தியா அசிரத்தையாக இருப்பதற்கும்-அந்த விடயத்தை நெடுங்கயிற்றில் நீளமாக விட்டிருப்பதற்கும் இதுவே அரசியல் தடையாகும்.
இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல்படுத்தவென இலங்கை வந்த இந்திய அமைதிகாக்கும் படை (Indian Peace Keeping Force- IPKF) 1990 இல் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் பெரும்பான்மையாக புலிகளின் முகவர்களாகச் செயற்படும் மேற்கூறப்பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே வாக்களித்து வருகிறார்கள். இந்தத் தடை அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களால் அகற்றப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போல் இந்தியா செயலில் இறங்கும்.
சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப் போனால் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையும் எதிர்த்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளையே தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரித்துக் கொண்டிருக்கும் வரைக்கும் இந்தியா எதுவும் செய்யாது. இது தார்மீக ரீதியாகச் சரியா? பிழையா? என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் இதுதான் யதார்த்தம்.
மாற்றீடாகப் புலிகளின் முகவர்கள் அல்லாத ‘மாற்று அரசியல்’ கட்சிகளிடம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அங்கீகாரத்தைத் திருப்திகரமாக வழங்கினால் மட்டுமே இம்மாற்று அரசியல் கட்சிகளின் கோரிக்கையைத்தானும் ஏற்று இந்தியா செயலில் இறங்கும்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வு ‘தமிழீழ’ த் தனி நாடு என்றாலும் சரிதான் அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’ச் சுயாட்சி அலகு என்றாலும் சரிதான்-13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலென்றாலும் சரிதான் அல்லது இப்போது வெளியிடப் பெற்றுள்ள இமாலயப் பிரகடனத்திலுள்ள (Himalayas Declaration) கோரிக்கையான புதிய அரசியலமைப்பொன்றினூடான (13 ஆவது திருத்தத்திலும் கூடிய) அதிகாரப் பகிர்வு என்றாலும் சரிதான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் தவிர்க்க முடியாத வல்லரசாகத் திகழும் இந்தியாவின் முழுமையான அனுசரணையின்றி குறைந்தபட்சம் இந்தியாவின் கடைக்கண் பார்வையாவது இல்லாமல் ஒரு அங்குலமும் நகர மாட்டாது/நகர்த்தவும் முடியாது.
இலங்கைத் தமிழரின் இனப் பிரச்சனைக்கான தீர்வு இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலுடன் பின்னிப்பிணைந்ததோர் விடயமாகும். இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களும் அதனுள் அடக்கம். இந்த அரசியல் யதார்த்தத்தைத் தமிழ்த் தேசியத் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் தாம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்/அதிகாரத்தில் எப்போதுமே தாம் மட்டுமே இருக்கவும் வேண்டும் என்ற தன்முனைப்புடனும் ஏகப் பிரதிநிதித்துவ மனப்பான்மையுடனும் நடந்து கொண்டமைதான் இலங்கைத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்குக் காரணமாகும்.
அதே வேளை தமிழ் மக்களுக்கான எந்தக் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக்கூட இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் எந்தக் கட்சியோ அல்லது அரசுத் தலைவரோ எந்தப் புற அழுத்தமுமில்லாமல் தானாக விரும்பி முன்வந்து வழங்கப் போவதில்லை. இதுவும் யதார்த்தமே.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை ஆதரித்த/ஆதரிக்கக் கூடிய பெரும்பான்மைச் சிங்களவர் மத்தியிலே இருந்த/இருக்கக்கூடிய முற்போக்குச் சக்திகளெல்லாம் (இடதுசாரிகள் கூட) இப்போது மௌனமாகிவிட்டன அல்லது எதிர்மறையான நிலைப்பாட்டுக்குச் சென்று விட்டன. எனவே, இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கான அழுத்தம் பெரும்பான்மைச் சிங்கள மக்களால் இலங்கை அரசாங்கங்களின் மீது செலுத்தப்படுவதற்கான சாத்தியம் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரசன்னம் இருந்தபோது அவ்வியக்கத்தின் சரி பிழை; பலம் பலவீனங்களுக்குமப்பால் இனப் பிரச்சனைக்கான தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது அழுத்தம் இலங்கை அரசாங்கங்களுக்கும் சிங்கள மக்களுக்கும் 2009 வரை இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு அல்லது நிலைமை புலிகளின் அரசியல் இலக்குகள் அற்ற பழிவாங்கும் ஆயுத நடவடிக்கைகள் காரணமாக 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்றபோது இழக்கப்பட்டுவிட்டது.
(அடுத்த பத்தியிலும் தொடரும்.)