மண்முனைக் கண்ணகைக்கு வரலாற்றில் ஒரு பெருவிழா….!(வெளிச்சம்:081)

மண்முனைக் கண்ணகைக்கு வரலாற்றில் ஒரு பெருவிழா….!(வெளிச்சம்:081)

 — அழகு குணசீலன் —

மட்டக்களப்பின் – படுவானில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் கிராமங்கள் தோறும் சிலப்பதிகார சிலம்பொலி கேட்கிறது. “கண்ணகி கலை இலக்கிய கூடல்” தனது பத்தாவது கண்ணகி விழாவை இப்பிரதேச கிராமங்களை ஒன்றிணைத்து நடாத்துவதே இதற்கு காரணம். மண்முனையை அடுத்து வாவிக்கு மேற்கே அருகருகே அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை  பிரதேசத்தின் மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைக்காடு கிராமங்களை தொடுத்து போர்த்தேங்காய் அடித்தல், கொம்பு முறிப்பு விளையாட்டு, பண்பாட்டு பவனி உள்ளிட்ட கலை இலக்கிய நிகழ்வுகளைக்கொண்ட  கண்ணகை கலை இலக்கிய பெருவிழாவாக,2025 செப்டம்பர்  25ம் திகதி முதல் 28ம் திகதி வரை உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பாரிய நிகழ்வு இது. வைகாசித்திங்களுக்கு பின்னர் படுவான்கரையில் கண்ணகையின் எழுச்சி விழாவாக இது அமைகிறது. இப்பகுதி மக்கள் கண்ணகையை இவ்வாண்டு இருதடவைகள் தரிசிக்கிறார்கள்.

பட்டிநகர் தம்பிலுவில், காரைநகர், வீரமுனை 

   பவிசுபெறு கல்முனை, 

கல்லாறு, மகிமூர், எருவில் 

  செட்டி பாளையம், புதுக்குடியிருப்பு, செல்வ 

  முதலைக் குடா, கொக்கட்டிச் சோலை 

  அட்டதிக்கும் புகழு வந்தாறு மூலை 

   அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும் 

  வட்டிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை 

மனதினில் நினைக்க வினை மாறியோ டிடுமே”

 உடுகுச்சிந்தின்   இந்த 71 வது பாடல்  கூறுவதை விடவும்,  மட்டக்களப்பின் முழுநீள பெருநிலப்பரப்பில் 25 க்கும் மேற்பட்ட கண்ணகி வணக்கத்தலங்கள் உள்ளன.

தமிழகத்தின் தென்கோடியில் கன்னியா குமரியில்  கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலையை கிழக்காசியாவையே புரட்டிப்போட்ட சுனாமியினால் அசைக்க முடியவில்லை. அதே மனோ பலத்துடன் கண்ணகையை மட்டக்களப்பு மக்கள் தங்கள் இதயங்களில் இருத்தியிருக்கிறார்கள். சூறாவளி, போர், சுனாமி எதுவும் கண்ணகையை அள்ளியும், அடித்தும் செல்ல முடியவில்லை.  அது மட்டுமின்றி ஆகம விரிவாக்கத்திற்கு எதிராகவும் கண்ணகை அம்மன் வழிபாடு அன்று போல் இன்றும் கிராமிய சிறுதெய்வ வழிபாட்டில்  எதிர்நீச்சல் போடுகிறது.

மட்டக்களப்பின்  சிறுதெய்வ வழிப்ட்டில் கண்ணகை அம்மன் சடங்கு தனித்துவமானது. இன்றைய சூழலில் திருவிழா, உற்சவம் ,…. கொடியேற்றம், கொடியிறக்கம், தீர்த்தம்…. போன்ற பல சொற்பிரயோகங்கள்  எல்லா இடங்களிலும் போன்று  மட்டக்களப்பின் மற்றைய தெய்வ வழிபாடுகளில் உள் நுழைந்திருக்கிறது.  ஆனால் மட்டக்களப்பின் சிறுதெய்வ வழிபாட்டில் கண்ணகை, மாரி, வைரவர், காளி, நாகதம்பிரான், வீரபத்திரர் ….. சிறுதெய்வ வணக்கத்தில் சடங்கு, கதவு திறத்தல், கும்பம் வைத்தல், கதவடைத்தல், குளிர்த்தி … போன்ற மரபு ரீதியான வழக்கு சொல்லாடல்கள் இன்னும்,  இத்தனை அலைகளுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கின்றன.  இவை மட்டக்களப்பின் சிறுதெய்வ வணக்கத்தின் குறியீடுகளாகின்றன.

இந்த இடத்தில் வீ.சி. கந்தையா  பண்டிதர் எழுதிய “மட்டக்களப்பு தமிழகம்”  என்ற மட்டக்களப்பு வரலாற்று நூலை, அதன் முக்கியத்துவம் அறிந்து இரண்டாம் பதிப்பாக  பிரான்ஸ் “எக்ஸில்” நிறுவனம் மறுபதிப்பு செய்துள்ளது. அதில் “எக்ஸில் ” தனது இரண்டாம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மட்டக்களப்பின் கண்ணகை வழிபாட்டின் தனித்துவத்திற்கும், அதன் பின்னணியிலான சமூக, பொருளாதார, அரசியல் பின்னணிக்கும், மட்டக்களப்பின் கலாச்சார, பண்பாட்டு தனித்துவத்திற்கும் கட்டியம் கூறுவதாக உள்ளது.

“……. வீரசைவ வழிபாட்டு முறைகளும், சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுக்கப்பட்ட சனங்களின், சாமிகளின் இன்றைக்குமான இருப்புகளும் மட்டக்களப்பின் யதார்த்தம். மகுடி கூத்து, நாட்டுக் கூத்து, பள்ளு, வசந்தன் ஆட்டம், கொம்பு விளையாட்டு…. போன்ற பண்டைய அடையாளங்களோடும், பறை மேளம், உடுக்கை…. போன்ற எண்ணற்ற இசைவடிவங்களோடும் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள்.

தாய்வழி சமூகத்தின் எச்சங்களை இன்றுவரை கொண்டுள்ள மட்டக்களப்பில் பெண் தெய்வ பண்புகளும், பெண் நாட்டார் வழக்காறுகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இச்சனங்களின் வாழ்வியல் விழுமியங்களை தக்கவைக்கும் எத்தனிப்பு அவசியமானது. அந்த மீள் உயிர்ப்பே பிராமணிய கருத்தியலுக்கு எதிரான நமது சமூகத்தின் பன்முக அடையாளங்களை தேடுவதற்கான முயற்சியாகும். நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட இச் சனங்களின் பண்பாட்டில் இருந்துதான் நமது விடுதலைக்கான கூறுகளை முன்னெடுக்க முடியும்….”

இந்தப் புள்ளியில் தான் நாம் இன்று கண்ணகையைச் சந்திக்கின்றோம். “எக்ஸில்” நிறுவனத்தின் விருப்பும், “கண்ணகி கலை இலக்கிய கூடத்தின்” இலக்கும்  போர்த்தேங்காயாக ஒன்றையொன்று சந்தித்து கண்ணகை வணக்கத்தின் கலாச்சார, பண்பாட்டு தனித்துவத்திற்கான வழக்கத்திற்கும், மரபுக்கும் மீள் உயிர்ப்பு செய்கின்றன என்றே கொள்ளவேண்டும்.

கண்ணகை வழிபாடு கண்டி இராச்சியத்தில் இருந்து மட்டக்களப்பு தேசத்தின் தென் பகுதிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. இன்றைய கண்டி பெரஹெராவின் அத்திவாரம் ‘பத்தினித்தெய்யோ’  ஊர்வலம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மட்டக்களப்பின் தெற்கே பாணமையில் கண்ணகை – கோவலன் வழிபாடு இருக்கிறது. அங்கு கோவலனை ‘களுதெய்யோ’ (கறுப்பு கடவுள்) என்று அழைக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் தாய்வழி குடி முறைமை சமூகக்கட்டமைப்புக்கு சமாந்தரமாக கண்ணகி வழிபாட்டில் தகப்பன்வழி சேரிமுறைமை உருவாகியுள்ளது. கொம்பு முறிப்பு விளையாட்டின் இரு தரப்பாக இந்த சேரிகள் அமைகின்றன.  அதாவது கொம்பு முறிப்பு விளையாட்டின் இரு அணிகள் வடசேரியும், தென்சேரியுமாகும். கோவலன் சார்பு அணி வடசேரி, கண்ணகை சார்பு அணி தென்சேரி.

மட்டக்களப்பில்  கொம்பு முறிப்பு வருடா வருடம் இடம்பெறுகின்ற ஒரு விளையாட்டாக இருந்துவந்துள்ளது. களுதாவளையில் உள்ள ‘கொம்புசந்தி’ மற்றும் மண்டூர் ‘கொம்பு வம்மியடி’ என்ற குறியீட்டு இடப்பெயர்கள் கொம்பு முறிப்பு இடம்பெற்ற இடங்களாக அமைகின்றன.

அன்றைய கொம்பு முறிப்பு காலம் கிராமங்கள்  அணிகளாக பிரிந்து நிற்கும் இன்றைய தேர்தல் காலத்தை நினைவூட்டும்,  கட்சிப்போட்டியாக காணப்படும். கொம்பு முறிப்பில் ஒரு சேரியினர், மறுசேரியினரை கேலிசெய்து பாடுகின்ற பாடல்கள் சுவாரஸ்யமானவை.

   “ஆற்றோரம் சிறாம்பி கட்டி 

     அங்கே நின்று வடமிழுத்து 

    வேர்த்துவாறான் தென்சேரியான் -அவனை

    வெள்ளி மடல் கொண்டு வீசுங்கடி.”   இது தென்சேரியினர் தங்கள் தரப்பை ஆதரித்து பாடும் பாடல்.

ஆற்றோரம் சிறாம்பி கட்டி 

   அங்கே நின்று படை பொருது

 தோற்றுவாறான் தென் சேரியான் – அவனை 

துடைப்பான் கட்டாலே அடியுங்கடி”   இது தோற்ற தரப்பை நக்கல் அடித்து பாடுவது.

இந்த பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா மண்முனை தென்மேற்கில் இடம்பெறுவதால்  பண்டைய மண்முனை அரசு பேசுபொருளாகிறது.  கலிங்க நாட்டு இளவரசி உலக நாச்சியாரின் இராஜதானி மண்முனை. மட்டக்களப்பின் மத்தியில்  வடக்கே கோறளை, தெற்கே கரவாகு/ பாணமை பற்றுக்களுக்கு இடையில் அமைந்துள்ள அன்றைய, இன்றைய நிர்வாகப் பிரதேசம். மண்முனையை அடிப்படையாகக்கொண்டே  மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில், மண்முனை போரதீவு -வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு பிரதேசங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் கண்ணகி கலை இலக்கிய கூடத்தின் இந்த நிகழ்வு மண்முனைப்பற்றுக்களை பொதுவாக உள்வாங்கியும், சிறப்பாக படுவான்கரை பெருநிலப்பரப்பை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறது.

கண்ணகி விழாவின் பிரதான மையமாக மகிழடித்தீவு அமைகிறது. மகிழை மகேசன் என்று நாடறிந்த ஆய்வாளர் க.மகேஸ்வரலிங்கத்தின் ஊர் மகிழடித்தீவு. இந்த விழாவில் அமரர் மகேஸ்வரலிங்கம் நினைவுகூரப்படவுள்ளார். நினைவு கூரப்படவுள்ள இன்னொருவர் அண்மையில் மறைந்த கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா. கண்ணகிவிழா நிகழ்வுகள் வெடியரசன் அரங்கில் முதல் நாள் ஆரம்பித்து தொடர்ந்து, கவுந்தியடிகள், கூலவாணிகன் சாத்தனார், சேரன் செங்குட்டுவன் அரங்குகள்  என விரிந்து இளங்கோவடிகள் அரங்கில்  இறுதிநாள்  நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது.

மேலும், செங்கதிரோன் கோபால கிருஷ்ணனின் ‘சிலப்பதிகார செய்திகள்’ , மற்றும் ‘முனைக்காடு தா.சிதம்பரப்பிள்ளை தொகுத்து வெளியிட்டுள்ள ‘வாழும் வசந்தன்’, ராணி சீதரன் எழுதிய ‘சிறுவர்க்கான சிலப்பதிகாரம்’ , பேராசிரியர் சு.சிவரெத்தினத்தினம் தொகுத்த ‘கண்ணகிவழக்குரை ஆய்வுகள்’ என்ற நூல்களின் அறிமுகங்களும் இடம்பெறவுள்ளன.  

இறுதிநாள் நிகழ்வுகள் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவனத்தின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சிவரெத்தினம் தலைமை தாங்குகிறார். சிறப்புரையை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு பேராசிரியர் வீ.அரசு.  ‘திராவிட இனக்குழு – பாலினம் – கண்ணகிகள்’ என்பது அவரது சிறப்புரையாக அமைகிறது. ‘கொற்றவன் தீர்ப்பும் குற்றவியல் சட்டமும்’ என்ற தலைப்பில் பாடும்மீன் சிறிகந்தராசாவின் சிறப்புரை இடம்பெறவுள்ளது.

“மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு – ஓர் அறிமுகம்” என்ற நூலில் அதன் ஆசிரியர் க.மகேஸ்வரலிங்கம் இப்படி பதிவிடுகிறார்.

” மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் சிறுதெய்வங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளமையை உணரமுடிகிறது. வாழ்க்கையின் எழுச்சியும், வீழ்ச்சியும் சிறுதெய்வ தங்களின் விருப்பு, வெறுப்புக்களில் தங்கியிருப்பதுபோல் இங்குள்ளவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. நோயின்றி வாழுதல், வீட்டில் அமைதிநிலவுதல், செய்தொழில் விருத்தியடைதல், பாதுகாப்போடு இருத்தல், எதிர்ப்புக்களை வெல்லுதல் இன்னோரன்னவை எல்லாம் சிறு தெய்வங்களின் கருணையினாலேயே சாத்தியமாகும் என்று மட்டக்களப்பார் நம்பி வந்தனர். சிறு தெய்வங்களை வெறுத்தால் இவை எதுவும் சாத்தியப்படாது என்று இவர்கள் அஞ்சினர்.”

வானம் பார்த்த பூமியாக – மானாவாரி நெற்செய்கையை நம்பியிருந்த படுவான்கரை விவசாய சமூகம் இயற்கையை நம்பியே பயிரிட்டனர். மழைவேண்டி மாரி அம்மன், கண்ணகி அம்மன் சடங்குகளையும், கொம்பு முறி விளையாட்டையும் செய்தனர். மக்களைத் தாக்கிய சில நோய்களில் இருந்து விடுபடவும் இவ்வகையான சடங்குகள் நம்பிக்கையளித்தன. வாவிக்கரையின் மேற்கே, படுவான்கரையில் நிலப்பிரபுத்துவ சரிவுக்கு பின்னரும் சிறு தெய்வவழிபாட்டை தொடர்ந்தும் பேண முடிந்திருக்கிறது. அந்த வகையில் கண்ணகி வழிபாடு நிலைத்து நின்றதுடன் ஆகம சாஸ்த்திரங்களால் அது அடித்துச்செல்லப்படாமலும் பாதுகாக்ககப்பட்டுள்ளது.

 “சங்கால குடி முறையும், சங்கமருவியகால கண்ணகிவழிபாடும் கிழக்கில் இன்னும் உயிரோடு இருக்கின்றன. துளுநாடு தொடங்கி குடகு, கேரளம், தமிழ்நாடு, யாழ்ப்பாணம் ஊடாக மட்டக்களப்பு வரையான பிரதேசங்களில் மட்டக்களப்பில் மட்டுமே கண்ணகி வழிபாடு ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலை பெற்றுள்ளது. கண்ணகை கேரளாவில் பகவதி அம்மன் ஆனாள், கர்நாடகத்தில் சந்திரா ஆனாள், மங்களூரில் மங்காளா தேவியானாள், தமிழ்நாட்டிலும், யாழ்ப்பாத்திலும் இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி போன்ற பல்வேறு பெயர்களைப்பெறலானாள். மட்டக்களப்பிலேயே கண்ணகை கண்ணகையாக உள்ளாள்” என்று கூறுகிறார் மானிடவியல் சமூக விஞ்ஞானி பேராசிரியர் பக்தவத்சல பாரதி.

 ஆக, கண்ணகையை கண்ணகையாக. காத்த மண் மட்டக்களப்பு. இதை விடவும் வேறு என்ன மதிப்பெண் மட்டக்களப்பின் தொன்மை மிகு, தனித்துவ பண்பாட்டிற்கு  தேவை? இந்த இலக்கின்  தொடர் பயணத்தில் கண்ணகி கலைஇலக்கிய கூடலின்  பத்தாவது கண்ணகி விழா பத்தோடு பதினொன்று அல்ல என்பதை அதன்  நிகழ்வுகள் பறைசாற்றி நிற்கின்றன .