சத்தியசோதனை: ஜெனிவாவில் மூன்று நாள் மௌனவிரதம்.?(வெளிச்சம்:082)

சத்தியசோதனை: ஜெனிவாவில் மூன்று நாள் மௌனவிரதம்.?(வெளிச்சம்:082)

   — அழகு குணசீலன் —

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த ஆண்டுக்கான இறுதிக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் செப்டம்பர் 08ம்   திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 08ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வுகளுக்கு சமாந்தரமாக  சுவிஸ் வெளிநாட்டு அமைச்சின் அனுசரணையுடன், அரசுசார்பற்ற அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட. சுவிஸ் சமஷ்டி அமைப்பு தொடர்பான கருத்தாடல் ஒன்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு  குறித்த கலந்துரையாடலாக இடம்பெற்றது.

இதில் இலங்கைத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு, உள்ளும், வெளியும் செயற்படும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கிற்கு  இலங்கை அரசாங்கத் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவும் அழைக்கப்பட்டிருந்தது. இவர்களோடு சுவிஸ் தமிழ் இளைஞர் அமைப்பினரும் (TYO) அழைக்கப்பட்டிருந்தனர். ஒருவகையில் இலங்கையின் தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு எந்த வகையில் அமையவேண்டும் என்பது குறித்த  அரசாங்க, தமிழ்த்தேசிய தரப்புக்களை நாடிபிடித்து பார்க்கும் ஒரு முயற்சி. இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினைக்கு ‘இரு அரசு’ தீர்வு மீண்டும் பேசுபொருளாகி பூகோள அரசியலில் உரத்து பேசப்படுகின்ற நிலையில் இலங்கை தொடர்பான இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஜே.வி.பி- என்.பி.பி. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறுகின்ற இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டில் அரசாங்கம் நாட்டில்  தீர்வு காண வேண்டிய பட்டியலில் அதிஉயர் முன்னிலையில் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொண்ட முன்னெடுப்புகள் எவை? இது தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எவை?   இரண்டுக்கும் உள்ள இடைவெளிகள் எவை? என்பனவற்றை  திரும்பிப் பார்க்கின்ற ஒரு சந்திப்பு என்றும் கூட இதைச்சொல்லலாம். இரு தரப்புக்கும் இடையில் உள்ள கருத்தியல் இடைவெளியை சர்வதேசம் அறிந்து கொள்ளவும் இது உதவக்கூடும். தமிழர் தரப்பு கோரிக்கைகள் அறியப்பட்டவை என்றாலும்  மாற்றங்களுக்கான  புதிய அரசாங்கத்தின் முகத்தை சுவிஸ் இராஜதந்திரிகள் முக்காட்டை நீக்கி பார்க்கக்கூடியதாகவும் இருந்துவந்துள்ளது.

 வெளிச்சம் அறிந்த வகையில் அரசாங்கத் தரப்பும், தமிழ்த்தரப்பும் ‘பட்டி மன்றப்  பாணியில்  கருத்துக்கு கருத்தால் பதிலளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்மக்களின் “ஏக பிரதிநிதிகளாக” (எட்டு  எம்.பி.க்கள், அதிக வாக்குகள், வடக்கு, கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எம்.பி.க்கள் : இது சுமந்திரனின் தாரகமந்திரம்)  கற்பிதம் செய்து அரசியல் செய்கின்ற தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளரும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சத்தியலிங்கத்திற்கு வந்ததுதான் சோதனை. கருத்தரங்கில் மூன்று நாட்கள் மௌனவிரதம் இருந்திருக்கிறார்.  அவர்  ‘நீராகாரமும்’ இன்றி உண்ணாவிரதமும் இருந்திருந்தால் அதை திலீபனின் நினைவேந்தல் என்றாவது எடுத்துக்கொள்ளலாம். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால், அவர்  மட்டும் இல்லையென்றால் ஊரார்காசில் ஊர்சுற்றிய கதையாகத்தான் தமிழ்த்தேசிய அரசியல் போய் முடிந்திருக்கும். வைத்தியர் சத்தியலிங்கம் அரசியல் நோய்களுக்கு தன்னால் வைத்தியம் செய்ய முடியாத அறிவு பற்றாக்குறையை -இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழரசுக்கட்சியின் இந்த பரிதாபகரமான நிலைக்கு காரணம் என்ன? ஒரு வெளிநாட்டு சந்திப்பில் இலங்கையின் எரியும் பிரச்சினையாக உள்ள தமிழ்த்தேசிய பிரச்சினை பேசப்படப்போகிறது என்று அறிந்திருந்தும், இதற்கு தனது பிரதிநிதியை அனுப்புகின்ற தமிழரசுக்கட்சி ,:

அதற்காக அவரை தயார் படுத்தவில்லையா?  

அல்லது இத்துறை சார்ந்த தகுதியானவர்கள் தமிழரசில்  இல்லையா?

 தமிழரசின் நிலைப்பாடு என்ன என்பது கூட தெரியாமலா சத்தியலிங்கம் ஆள் பேருக்கு ‘போடுகாயாக’ அனுப்பப்பட்டார்? 

என்ற கேள்விகள் எழுகின்றன. 

சரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளவுக்கு அரசியல் யாப்பு, அதிகாரங்கள் குறித்த  சட்ட வாதங்களை நிலமும், புலமும் சத்தியலிங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் அவர் சுவிஸ்க்கு அனுப்பப்பட்டதற்கான தேர்வில் அவருக்கு நிட்சயம்   அவரின் ஆங்கில மொழி அறிவு’ உதவியிருக்கும் என்றே கொள்ளவேண்டியுள்ளது . அப்படியானால் “விடயதானமற்ற ஆங்கிலம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்” என்று வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அதைக்கூட பயன்படுத்தி தமிழரசின் கொள்கையை அவர் பேசாதது  தமிழ்மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

சுவிற்சர்லாந்தை  பொறுத்த மட்டில் மொழி ஒரு பிரச்சினையே இல்லை. அவர் தமிழிலே பேசியிருந்தாலும் அரசாங்கம் அல்லது குறிப்பிட்ட ஏற்பாட்டு நிறுவனம் அதற்கான மொழிபெயர்ப்பு ஒழுங்குகளைச் செய்திருக்கும். அதை விடவும் சுவிஸ் இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் கூட அவரால் தமிழில் கூறப்பட்ட கருத்துக்களை சுவிஸின் தேசிய மொழிகள் நான்கிலும் வேண்டுமானால் ஐந்தாவது மொழியாக ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பார்கள். இந்த வகையில் சத்தியலிங்கத்தின் மூன்று நாள் மௌனம்  தமிழ்த்தேசிய அரசியலில் பொறுப்பற்ற ஒரு துஷ்பிரயோகம் என்றே கொள்ளவேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகளில் பொதுவாக எம்.ஏ.சுமந்திரன் அல்லது இரா.சாணக்கியன் கலந்து கொள்வதே தமிழரசின் சரியான தேர்வாக இருந்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கான காரணம் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழ்த்தேசிய  தீவிர பக்தர்கள் சுமந்திரன், சாணக்கியன் அரசியல் மீது கொண்டுள்ள அதிருப்தியும், இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் எதிர்நோக்கிய எதிர்ப்புகளுமாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியானால் அதை வார்த்தைகளால்  சமாளிப்பதற்கான ஒருவர் பாராளுமன்ற குழுத்தலைவர் சிறிதரன் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதை சுமந்திரன் -சாணக்கியன் – சிவஞானம் தரப்பு விரும்பியிருக்கவும் மாட்டார்கள். இந்த உட்கட்சி சுத்துமாத்து அரசியலால் தமிழரசுக்கட்சி ஜெனிவாவில் ஊமையாகி இருக்கிறது.

இதில் வெளிச்சம்  எழுப்புகின்றன தர்க்கரீதியான ஒரு கேள்வி இந்த குழுவில் எந்த தமிழ்த்தேசிய கட்சிகளும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒருவரை அனுப்பாதது ஏன்? என்பதாகும்.  வடக்கில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சத்தியலிங்கம் பிரதிநிதித்துவம் செய்தார்கள். கிழக்கிலிருந்து……?  உண்மையில் இந்த குழுவில் யாழ்குடா நாடு, வன்னி, கிழக்கு என்ற அடிப்படையில் பிரதிநிதித்துவ பங்கீடு இருந்திருக்கவேண்டும். கஜேந்திரகுமார் தையிட்டி பற்றி பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்சினைகள் கிழக்கிலும் இருக்கின்றன அவற்றை இவர்கள் மூவரும் பேசியதாக தெரியவில்லை. இந்த தவறுகளை வடக்கு அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக செய்து கொண்டு, இது பற்றி கேள்வி எழுப்பினால் பிரதேசவாதம் என்று மிக இலகுவாக அரசியல் அற்று நிறம்தீட்டுகிறார்கள். இந்த புறக்கணிப்பை தென்னிலங்கை கட்சிகள் செய்தால் அதை இனவாதம் என்பவர்கள் தான் இதையும் செய்கிறார்கள்.

இந்த கலந்துரையாடலில்  அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகளுக்கு கஜேந்திரகுமார் பதிலளிக்கிறார். அவரும் இல்லையேல் அம்போதான். தமிழ்த்தேசியம்  ஜெனிவாவில் அம்மணமாகி இருக்கும்.

(*) தமிழ் மக்களின் அரசியல் ஆணை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? என்பது ஜெனிவாவிலும் அரசாங்க – தமிழ்த்தேசிய தரப்புக்களால் உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த கேள்வியை பொதுத்தேர்தல் முடிந்த பின்னர் எழுப்பியவர் திருகோணமலை மாவட்ட எம்.பி.யும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா?   இதற்கு பதிலளித்ததுடன் ,  கஜேந்திரகுமார் ஒரு முக்கிய விடயத்தையும் சொல்லியிருக்கிறார். “தமிழ்மக்களின் அரசியல் உரிமை விவகாரத்தை தமிழ் தரப்பு கையாளவேண்டும். சிங்கள தரப்பு கையில் எடுக்க முடியாது” என்று பதிலளித்திருக்கிறார் அவர். இந்த கருத்து சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைசார்ந்து சுவிஸ் அதிகாரிகள் தரப்பில் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

(*) சுரேஷ் பிரேமச்சந்திரன் 13 வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கம், அதனூடான அதிகார பகிர்வு பற்றி பேசியுள்ளார்.  இதை  யாரும் எதிர்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டத்தில் குறுக்கிட்ட கஜேந்திரகுமார் 13 வது திருத்தத்தை நிறைவேற்ற தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு எதற்கு? அரசியல் அமைப்பில் உள்ளதை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயன்றி தமிழ்க் கட்சிகளின் பொறுப்பல்ல என்றும், அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் வெளிச்சம் கூற வருவது என்னவென்றால் , 159 பேரைக்கொண்டு பாராளுமன்றத்தை நிறைத்திருப்பவர்களுக்கு 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள தடை ள்என்ன?   தமிழ், முஸ்லிம கட்சிகள் உட்பட  அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தாலும் 13 ஐ நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கு உள்ள பிரச்சினை என்ன? அர்ச்சுனாவின் ஒரேயொரு எதிர்கட்சி வாக்குடன் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கப்படவில்லையா?

(*) தையிட்டி குறித்த கஜேந்திரகுமாரின் கருத்துக்கு அரசாங்க தரப்பு ‘ புறு புறுத்திருக்கிறது ‘. அது என்ன புறுபுறுப்பு என்று தேடினால் அது கடந்த அரசாங்கம் செய்ததாம். கடந்த அரசாங்கம் செய்தவை எல்லாம் தவறு என்று ஒட்டுமொத்தமாக பிரகடனம் செய்தவர்கள், இப்போது தேர்வு செய்து தென்னிலங்கையில் கடந்த அரசாங்கம் செய்த தவறுகளுக்கு மட்டும் பரிகாரம் தேடுவதில் இரவு பகலாக உழைக்கின்றனர்.  ஆனால் வடக்கு, கிழக்கில்  கடந்த அரசாங்கங்கள் கொட்டிய குப்பைகளை அள்ள என்.பி.பி. அரசாங்கமும் தயாரில்லை . அரசாங்கத்தின் கட்சி அரசியலுக்கு தேவையானதை தேடித்தேடி செய்கின்றனரேயன்றி சிறுபான்மை மக்களின் தேவைகளை – கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்  சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு அஞ்சுகின்றனர். 

சுவிட்சர்லாந்து சமஸ்டி அமைப்பு முறை, நேரடி ஜனநாயகத்தின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள ஒன்று. இதன் அர்த்தம் எந்த ஒரு அரசியல் தீர்மானமும் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படுவதாகும்.  அதாவது  பிரதிநிதிகளை தேர்வு செய்வது மட்டும் அல்ல  ஒரு வீதியமைப்பதும்  மக்கள் கோரினால் அதற்கு வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். இது இலங்கை போன்ற பொருளாதார பலமற்ற நாடுகளுக்கு செலவு கூடிய ஒரு சமஸ்டி முறை. மறு பக்கத்தில் இந்திய மாநில சுயாட்சி, மற்றைய நாடுகளின் சமஸ்டி முறை என்பன இதில் இருந்து வேறுபட்டவை.

இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில்  பாலஸ்தீன சூழலை கொண்டு ஈழத்தமிழர்கள் ‘ இரு அரசு ‘ தீர்வு பற்றி பேசுவது ஜதார்தமற்றது. ‘இரு அரசு ‘ தீர்வு பற்றி கஜேந்திரகுமார் ஜெனிவா கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் ‘ஒருநாடு இருதேசம் ‘ என்பதன் அடிப்படையிலான கட்சிக்கொள்கை, இது  என்று நாம் கடந்து செல்ல முடியும்.

இந்திய – இலங்கை  சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரப்பகிர்வே சமகால பூகோள அரசியலில்  வில்லங்களுக்கு மத்தியிலும் சாத்தியமான ஒன்று. அதை அமுலாக்குவதற்கும், அரசாங்கம் பேசுகின்ற புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் உள்வாங்கப்படுவதற்குமான வாய்ப்புக்களையே தமிழ் முஸ்லிம் தரப்புகள் தேடவேண்டும். இல்லையேல் இழுத்தடித்து –  ஜே.வி.யும்  தனது அரசியல் இருப்புக்காக தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர சக்திகளுடன் இணைந்து இருப்பதையும் இல்லாமல் செய்யவே முயற்சி செய்யும். இதை ஜே.வி.பி.யின். அதிகார மையக்குழுவும், குசினி அமைச்சரவையும் சாடைமாடையாக வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை எதிர்க்கட்சிகளை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கே  புதிய அரசியல் அமைப்புக்கான கால அவகாசத்தை ஜே.வி.பி. திட்டமிட்டு கச்சிதமாக பயன்படுத்திவருகிறது. 

தமிழ்த்தேசிய அரசியல் பூகோள அரசியலில் சிக்காமல் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன், சாத்தியமற்ற கனவுகளில் இருந்து விடுபட்டு  மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரப்பகிர்வை கோருவதில் ஒருமித்து செயற்படவேண்டும்.

.

இல்லையேல் ,

 இருந்ததையும் இழந்தாய் போற்றி….!

இலங்கையராவோம் போற்றி……. …….!

“இலங்கையர்” என்ற உளவியல் உறுதியையும், உணர்வையும்  சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை பொதுமையுடனும், தனித்துவத்துடனும்  பெரும்பான்மை இன அரசியல் அங்கீகரிப்பதன் மூலமே ஏற்படுத்த முடியும் என்பதை ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டிய காலம் இது. இந்த புரிந்துணர்வு இல்லாத ‘இலங்கையராதலுக்கு’  பெயர்  ‘முறைமைமாற்றம் ‘ அல்ல மாறாக சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஆக்கிரமிப்பு -அடக்குமுறை.