ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம்

ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம்

 —  பேராசிரியர் சி. மௌனகுரு —

ஈழத்தில் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் (பகுதி 1)

அறிமுகம் 

ஈழத்தில் வாழும் இனக்குழு மக்களுள் சிங்களவர்,  தமிழர்,  இஸ்லாமியர் முக்கியமானவர்கள். இவர்களைச் சிங்களம் பேசும் மக்கள், தமிழ்ப் பேசும் மக்கள் என இரண்டு பிரதான மொழியியற் பிரிவுகளுக்குள் அடக்கலாம். தமிழ்ப் பேசும் மக்கள் எனத் தமிழருடன் இஸ்லாமியரையும் உள்ளடக்கும் சொற்றொடர்  1950களுக்குப் பின்னர் ஏற்பட்ட ஓர் அரசியற் சொற்றொடராகும். 

இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் இம்மூன்று இனங்களும் அதிகாரப் பகிர்விலும் அரசியலிலும் முனைப்புடன் இருக்கின்றன. 

இலங்கை இன அமைப்பின் பன்மைத்தன்மை பற்றிப் பலவாறு கூறினும் இலங்கை வரலாறு சிங்கள அரசர்களினதும், சிங்கள மக்களினதும் வரலாறாகவே காட்டப்பட்டுள்ளது.  இது இனங்களுக்கிடையே பரஸ்பர அவநம்பிக்கைகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கக் காலாகவும் அமைந்துள்ளது.  வரலாற்றுப் போக்கு ஏற்படுத்திவிட்ட இன முரண்பாடுகள் இன்று இலங்கை எதிர் கொள்ளும் பிரதான சவாலாகிவிட்டது. 

இந்நிலையில் தமிழரும் இஸ்லாமியரும் தத்தமது தனித்துவங்களை அழுத்துவதிலும் தத்தமது வரலாறுகளை உருவாக்குவதிலும் ஈடுபடுகின்றனர். இவை இவ்வினங்களுக்கான ஒர் அரசியற் தேவையாகவும் அமைந்துள்ளது. 

இந்நிலையில் தமிழர் என்று ஒரு குரலில் கூற முடியுமா?  தமிழரிடையே பிரதேச, சாதி, வர்க்க, பால் வேறுபாடுகளால் பிரிந்த தமிழர்கள் உள்ளனர். இஸ்லாமியரிடையே பிரதேச, வர்க்க, பால் வேறுபாடுகளால் பிரிந்த இஸ்லாமியர் உள்ளனர். எனவே ஈழத்தமிழ் பேசும் மக்களின் வரலாற்றை எழுதுவது எப்படி என்ற வினாக்களும் எழுப்பப்படுகின்றன. 

இச்சூழலிலேதான் ஈழத்தின் சில பிரதேசங்களும்,   இனக்குழுமங்களும் தமது பிரதேச, சாதி வரலாறுகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு, வவுனியா, மலைநாடு போன்ற பிரதேசங்களிலும் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களிடையேயும் இப்போக்கு அண்மைக்காலமாக முனைப்படைந்துள்ளது.  இப்போக்கு ஈழத்துக்கு மாத்திரமன்றி பொதுவாகத் தென்னாசியாவுக்குரிய ஒரு பொதுப் போக்காகவும் காணப்படுகின்றது. 

இக்கட்டுரையில் இதற்கான காரணங்களை விளங்கிக் கொள்வதும் மட்டக்களப்பில் இப்போக்கு எம்முறையில் வெளிப்படுகின்றது என்பதை இனம் காண்பதும் மேற்கொள்ளப்படுகின்றன. 

இக்கட்டுரை நான்கு பகுதிகளாக அமைகின்றது. முதலாம் பகுதியில் சாதி வரலாறுகள் எழுவதற்கான காரணங்களும் ஈழத்தமிழர் வரலாறு கட்டமைக்கப்பட்ட விதமும் கூறப்படுகின்றது. 

இரண்டாம் பகுதியில் மட்டக்களப்பு மாறி வருவதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன. 

மூன்றாம் பகுதியில் மட்டக்களப்பு சாதி,  இன வரலாறு கூறும் நான்கு நூல்கள் இம் மாற்றத்திற்கும் ஈழத்தமிழர் வரலாறு எழுதுவதற்கும் எப்படி பதிற்குறி (Response) தருகின்றன என்பது ஆராயப்படுகின்றது. 

நான்காம் பகுதியில் முன்னெடுக்க வேண்டிய அம்சங்கள் சம்பந்தமான சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. 

1. சாதி வரலாறு எழுதுவதற்கான காரணங்களும் ஈழத் தமிழர் வரலாறு கட்டமைக்கப்பட்ட விதமும் 

இன்றைய சூழல் 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டம் மிக முக்கியமான காலகட்டமாகும். பூகோளமயமாக்கம் (Globalization) உலகை மிக நெருக்கமாக்கிவிட்டுள்ளது. சாதி, மதம், இனம், தேசம் என்பனவற்றைக் கடந்து பூகோளமயமாக்கலில் பெரும் முதலின்,  முதலாளிகளின்,  நிறுவனங்களின் பின்னணியுள்ளது. 

பூகோளமயமாக்கலில் நாடுகள் (Nation) தேசிய இனங்கள் (Nationality)  சாதிகள் (Caste) என்பனவற்றின் தனித்துவங்கள் அழிவதும் இயல்பு.  

இப்பின்னணியில் தேசங்களின் தனித்துவங்களும் பேசப்படுகின்றன. பூகோளமயமாக்கலுக்கும் தேசங்களுக்குமிடையே முரண்கள் உருவாகின்றன. 

தேசங்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒர் இனம் வாழும் தேசங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் தேசங்கள்  ஆகியவை அவை.  

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் தேசங்களில் தேசிய இனப் போராட்டங்கள், தீவிரமாக நடைபெறுகின்றன. 

இந்நிலையில் விளிம்பு நிலை (Peripheral) மக்களைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு தேசத்தின் பொருளாதார உற்பத்தியில் பங்கு கொள்ளாது வாழும் மக்களை நாம் விளிம்பு நிலை மக்கள் எனலாம். இவ்வகையில் ஒரு தேசத்தில் வாழும் மிக அடிநிலை மக்களின் வரலாறுகள் (Subaltern History) எழுதப்படுகின்றன. பெண்கள், கறுப்பர்களின் தனித்துவங்கள் பேசப்படுகின்றன. 

இந்நிலையில் வழக்கம்போல வர்க்க அடிப்படையில் போராட்டங்கள் நடைபெறுவதும், வர்க்க அடிப்படையில் வரலாறுகள் எழுதப்படுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தேசிய வாதத்திற்கு எதிராக மாக்ஸிய வாதம் இருந்த நிலை மாறி மாக்ஸியத்திற்கு எதிராக தேசியவாதம் பலம் வாய்ந்த சக்தியாக இந்நூற்றாண்டில் உருவாகியுள்ளது. தேசிய வாதத்தையும் கணக்கிலெடுத்து தன்னை வளர்க்கும் நிலைக்கு மாக்ஸியம் வந்துள்ளது. 

இவ்வகையில் பூகோளமயமாக்கம், தேசங்களின் தனித்துவம்,  தேசிய இனங்களின் போராட்டங்கள், வர்க்கங்களின் போராட்டங்கள், விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள்,  பெண்களின் போராட்டங்கள் என்பன இன்று எம்மைச் சூழ உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளாகும். 

இச்சூழலில் எமது சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,  சரித்திராசிரியர்கள் இந்தப் பின்னணிகளுள் ஒன்றைச் சார்ந்தவராக அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றைச் சார்ந்தவராக இருத்தல் இயல்பு. 

தென்னாசியாவும் இனம் / சாதிகளும் 

தென்னாசியாவுக்குள் இந்தியாவும், இலங்கையும் முக்கியமாக உள்ளடங்கும். இவ்விரு நாடுகளிலும் சமூக அமைப்புகள் ஏனைய உலக நாடுகளைவிட வித்தியாசமானவை. சாதி அமைப்பை இவை அடிப்படையாகக் கொண்டவை. இந்நாடுகளின் புராதன மதமான இந்து மதம் இச்சாதி அமைப்பு மேலும் இறுகக் கருத்தியல் வடிவம் தந்தது என்பர். இந்து மதத்தை எதிர்த்து எழுந்த ஏனைய இந்திய மதங்களும், இந்தியாவுக்குள் வந்த இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களும் இந்திய, இலங்கையில் சாதி அமைப்புக்குத் தக தம்மை இயைபுபடுத்தித் கொண்டன (கிறிஸ்தவர்களின்,  பெளத்தர்களின்  சில கோயில் அமைப்புகள் புத்த பீடாதிபதிகள், கிறிஸ்தவ ஆயர்கள் தெரிவில் சாதி அமைப்பு முக்கிய இடம்பெறுகிறது) என்பதும் ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளன. இந்திய இலங்கைச் சாதி அமைப்பிலே ஒரு அதிகாரப் படிநிலையைக் காணமுடியும்.  பிராமணர் அதி உயர்ந்த அதிகாரமுடைய சாதியினராகவும் பறையர் மிகக் கீழ்ப்படி நிலையிலுள்ள சாதியினராகவும் வைத்து ஏனைய சாதிகளை அவர்கள் அச்சமூக அமைப்பில் பெறும் முக்கியம் கொண்டு அதிகார அடைவில் சாதிகளை வரிசைப்படுத்தும் சமூக அமைப்பு இந்தியாவில் உண்டு. 

தமிழரில் வேளாளரையும் சிங்களவரில் கொய்கம சாதியையும் அதிஉயர்ந்த அதிகாரமுடைய சாதியினராகவும் பறையர்களை மிகக் கீழ் நிலையிலுள்ளவராகவும் வைக்கும் ஒரு சமூக அமைப்பு இலங்கையில் உண்டு. இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையில் தமிழ்ப் பகுதிகளிலும், பிராமணருடன் வேளாளர் சமூகத்தில் உயர்நிலையில் வைத்து எண்ணப்படுகின்றனர். 

தமிழ்நாட்டில் சில வேளைகளில் உயர் அதிகாரத்திற்கான போட்டியில் பிராமணரும் வேளாளரும் போட்டியிட்டமையும் சில காலங்களில் இரு சாராரும் இணைந்து ஏனைய சாதியினர் மீது மேலாதிக்கம் செலுத்தியமையும் சரித்திரவாயிலாக அறியவருகிறோம். 

ஆங்கிலேயர் வருகையின் பின் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளும், முதலாளித்துவம் ஏற்படுத்திய பணப் பொருளாதார முறையும், நவீன கல்விமுறை, கைத்தொழில்முறை என்பனவும் சமூகத்தின் இச்சாதி அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. 

பூகோளமயமாக்கல், தேச வளர்ச்சி, தேசிய இனப்போர், வர்க்கப் போர் என்பன சாதி அமைப்பை அசைக்கின்றன. அடிப்படையாக அமைகின்ற பொருளாதார மாற்றங்கள் சமூக அசைவியக்கத்தை (Social Mobilization) ஏற்படுத்துகின்றன. இதனால் மேல்நிலையில் இருந்த சாதிகளைவிட மத்திய நிலை அல்லது கீழ்நிலையில் இருந்த சாதிகள் மேனிலைச் சாதிகளைப் பொருளாதார, கல்வி, உத்தியோக முறைகளில் மிஞ்சுவது நடைபெறுகிறது. இதனால் பாரம்பரியமான செல்வாக்குடன் இருந்த சாதிகளிடையே தம் அதிகாரம் அழிவதான பயங்கள் ஏற்படுகின்றன. 

இவ்வசைவியக்கம் (Mobilization) காரணமாக அதிகாரப்படியில் உயர் நிலையிலுள்ள சாதியினர் தமது வரலாற்றை எழுதி, அதன் மூலம் அதிகாரத்தை மேலும் நிறுவ முனைவர். 

இடைநிலையிலுள்ள சாதியினர் தம்மை மேனிலைச் சாதியின் தரத்திற்குக் காட்டி வரலாற்றை எழுதி தமது அதிகாரத்தைப் புலப்படுத்த முனைவர்.  

அடிநிலையிலுள்ள சாதியினரும் தத்தம் தனித்துவங்களை பல்வேறு விடயங்களில் புலப்படுத்த முனைவர். 

சமனற்ற பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் இச்செயற்பாடுகளை இந்திய சமூகத்திற் காண முடியும். சமூக மாற்றம் காரணமாகத் தளம்பல் வருகையில் மேல்நிலையினர் தம் பாரம்பரியத்தை மேலும் வலியுறுத்த, தம்மை மகாபாரத,  இராமாயணத்துடன் இணைத்து இனம்காணும் ஒரு போக்கு தென்படும்.  இந்திய மரபில் அது சமஸ்கிருத மயமாக்கலைச் சார்ந்திருக்கும். பிராமணர்கள் போல தம்மைப் பாவிக்கும் தன்மையை மேல்நிலை எழும்பும் சாதிகள் கடைப்பிடிக்கும். 

இடைநிலையிலுள்ள சாதியினர் மேல்நிலையிலுள்ள சாதியினருக்குத் தம்மை உயர்த்துவதும் தம்மை ஏதோ ஒர் உயர்ந்த குழுவினருடன் இணைத்து இனம் காண்பதும் நடந்தேறும். 

மூன்றாம் நிலையிலுள்ள சாதியினர் தம்மை சத்திரியராக உயர்நிலைப்படுத்துவதும் நடைபெறும். 

இவற்றுள் வரலாற்று ஆவணங்களை இலக்கியங்களை, மேனிலைச் சாதியினர் வைத்திருப்பர். அவர்களின் சாதி வரலாறுகள் ஏடு, கல்வெட்டு ரூபங்களாக அவர்களிடமிருக்கும், உண்மையில் அவ்வரலாறு ஒரு சாதியின் வரலாறாக அன்றி அச்சாதியின் ஆளுகை நடத்திய ஒரு குடும்பத்தின் வரலாறாகவே இருக்கும்.  அக்குடும்பம் தன்னதிகாரத்தை நிலை நிறுத்த சாதியைத் துணைக்கிழுக்கும். பின்னர் அச்சாதியின் நிலை நிறுத்தலுக்கு இக்குடும்ப அதிகார வரலாறு உதவி புரியும். இவ்வகையில் இவ்வரலாறு, எழுத்தாவணச் சான்றுகள் கொண்டவையாயிருக்கும். 

சாதியின் கீழ்மட்டத்திலுள்ளோரின் ஆவணங்கள் எழுத்தாவணங்களாயிராது. அவை வாய்மொழி ஆவணங்களாக இருக்கும். 

அக்குறிப்பிட்ட சாதியின் வரலாறு தலைமுறை தலைமுறைக் கூடாக வாய்மொழியால் கடத்தப்படும். அக்கீழ்ப்பட்டச் சாதி பொருளாதார அசைவியக்கம் காரணமாக உயர்நிலை பெறுகையில் எழுத்து வடிவிலுள்ள ஆவணமாக அது உருப்பெறும். 

(தொடரும்…)