‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-12) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-12) 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் தமிழர்களும் தமிழர் தம் அரசியல் தரப்புகளும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் /எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை வெளிப்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும். 

26.03.2022 அன்று ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே ஜனாதிபதி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறப்பட்டாலும் தமிழரசுக் கட்சியும், ‘புளொட்’டும் (சித்தார்த்தனும்) தான் கலந்து கொண்டன. ‘ரெலோ’ கலந்து கொள்ளவில்லை. இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் வெளிப்படவில்லை. அதன் பலவீனம்தான் வெளிப்பட்டது. 

சி.வி.விக்னேஸ்வரன் அணியினர் பங்குபற்றவில்லை. ஆனால் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்து ஜனாதிபதிக்குத் ‘தலை’யையும் தமிழ் மக்களுக்கு ‘வாலை’யும் காட்டிக் கொண்டனர்  சி.வி.விக்னேஸ்வரனின் அணியினர். சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் சி.வி.விக்னேஸ்வரன் அணியிலேயே உள்ளனர். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியின் தனி வழி அனைவரும் அறிந்ததே. ‘இரு தேசம்; ஒரு நாடு’ என்று ஓதிக் கொண்டும் ‘சமஸ்டி’யைக் கோரிக்கையாக வைத்துக் கொண்டும் தனது கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் மூலக்கொள்கையை ‘ஒற்றையாட்சி’யாக இருத்திக்கொண்டும் ‘சைக்கிள்’ சின்னத்தை உடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ எனும் போர்வையால் போர்த்திக் கொண்டும் தமிழர் அரசியலைக் குழப்பிக்கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவரது பாராளுமன்றப் பேச்சு மட்டும் ‘பல்லக்கு’ ஆக இருக்கிறது. ஆனால் தம்பியின் போக்கு ‘கால்நடை’ யாகத்தான் உள்ளது. இவரது அரசியல் கறிக்குதவாதது. 

26.03.2022 அன்று நடந்த சந்திப்பின்போது வடக்குக் கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பல உறுதிமொழிகளையும் உத்தரவாதங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியது மட்டுமல்ல புதிய அரசியலமைப்புக் குறித்தும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பா.உ. ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தார். 

அதே சுமந்திரன்தான் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய தாமாகவே பதவி விலக வேண்டுமென்றும்- ஐக்கிய மக்கள் சக்தியினால் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமென்றும்- ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை (Impeachment) கொண்டுவரப்பட வேண்டுமென்றும்- உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் (பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கம்) உத்தேச தேசிய அமைச்சரவையில் (National Cabinet)- அது அமையுமோ தெரியாது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதென்றும் தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ கூடித் தீர்மானம் எடுக்கும் முன்பு முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு தன்னிச்சையாக ஊடகங்களுக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறார். அப்படியாயின் 26.03.2022 அன்று ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சியும், சித்தார்த்தனும்) சென்றதன் நோக்கம் என்ன? தங்கள் இருப்பை வெளிப்படுத்துவதற்காகவா? தங்களுக்குத் தாங்களே தெளிவில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. 

மறுபக்கத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிஙகமும் உள்ளிட்ட அணி கூடி நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கும்படியான கோரிக்கையை முன்வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றவேண்டிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே (உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல நேரிடலாம்) சாத்தியமான இவ் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியப்படுமா? அவ்வாறானாலும் இதனால் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா? அல்லது இவர்கள் கோரும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’அலகுதான் கிடைத்துவிடுமா? 

இவர்களிடமும் அணுகுமுறை குறித்த தெளிவு இல்லை. 

சுமந்திரனைப் போலவே கஜேந்திரன் பா.உ. வும் முந்திக்கொண்டு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமது கட்சியான தமிழ்த் தேசியமக்கள் முன்னணி ஆதரவு என்றும் அறிக்கையிடுகிறார். இப்போது என்னவென்றால் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மகஜரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கஜேந்திரனும் கையெழுத்திட்டுளளனர். உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேறினால் இலங்கைதற்போது எதிர்நோக்கும்பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடுமா? அல்லது இவர்களது தாரக மந்திரமான ‘இரு தேசம்; ஒரு நாடு’தான் கிடைத்துவிடுமா? 

இவர்களிடமும் அணுகுமுறை குறித்த தெளிவு இல்லை. 

ஆக, தற்போது நிலைமை என்னவென்றால் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ் ஊடகங்களால் தமிழ்த் தேசியக் கட்சிகளெனக் குறிசுடப்பட்டுள்ள இம் மூன்று அணியினரிடமும் (இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தெளிவான திட்டங்களோ நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளோ உபாயங்களோ இல்லை. 

தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்துவரும் இம் மூன்று அணிகளினதும் ஒரே நோக்கம் எரிகிற வீட்டில்பிடுங்கியது இலாபம் எனஅடுத்த தேர்தலில் எந்த அணி தமிழ் மக்களின் வாக்குகளை அதிகம் சுருட்டிக் கொள்வது என்பது மட்டுமே. 

உண்மையில் இத் தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) என்னசெய்ய வேண்டுமென்றால் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்ய வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை (Single Demand), இதனை ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து குறிப்பாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி மற்றும் சமத்துவக் கட்சிஆகிய ஐந்து கட்சிகள் இணைந்த அதிகாரப்பகிர்வு இயக்கத்துடன் கூட்டிணைந்து முன்வைத்து அதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய அரசியல் களவேலைகளை மக்கள்மத்தியிலும் பொருத்தமான அரசியல் மட்டங்களிலும் கூட்டாக மேற்கொள்ளவேண்டும். இது ஒன்றே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியான விளைவைத்தரும். 

அதனை விடுத்துச் சிங்களவர்கள் ‘கோட்டபாய வீட்டுக்குப் போ’ என்று கோரிக்கை விடும்போது அவர்களுடன் சேர்ந்து தமிழர்களும் கோஷமிடுவது புத்திசாலித்தனமல்ல. அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கும்- மின்சார வெட்டுக்கும் எதிராக ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை நோக்கி எதிர்ப்பு உணர்வுகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக வெளிப்படுத்துவது என்பது வேறு விடயம். அதில்தவறுமில்லை.  

தமிழ் மக்கள் தலைவர்களை நம்பியிராது தாமாகவே அறிவுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். 

‘ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏசுமந்திரன் தெரிவித்தார்’ (காலைக்கதிர் 16.04.2022) 

அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச உறுப்பினர்களையும் பதவி விலகக்கோரி கொழும்பு- காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் இருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்கவேண்டும்-இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் கோரிக்கைவிடுத்தார்’ (காலைக்கதிர் 16.04.2022) 

மேற்படி செய்திகளைப் படித்தபோது ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போலத் தமிழர் தரப்பு வழமைபோல் தன் வாயால் கெட்டு விடுமோ என்றுதான் எண்ணத் தோன்றிற்று. 

2010 க்கு முன் சுமந்திரனின் பெயரையே கேள்விப்படாதவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். 2010 இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் (தமிழரசுக் கட்சிக்குக்) கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை இரா.சம்பந்தன் தன் சுய விருப்பத்தின் பேரில் சுமந்திரனுக்கு வழங்கியதால் ‘யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி’யாகத் தமிழ்த் தேசிய அரசியல் பிரவேசம் செய்த சுமந்திரனுக்கு அதற்கு முன் தமிழ்த் தேசிய அரசியல் தளம் எதுவுமே கிடையாது. அதனால் சுமந்திரனிடம் தமிழ்த்தேசிய அரசியல் அனுபவமும் தமிழ்த் தேசிய அரசியல் முதிர்ச்சியும் இல்லை. அதனால் அடுத்த ஆட்சி மாற்றத்தையும்- அடுத்த தேர்தலையும் சம்பந்தனுக்குப் பின் (மரணத்தின் பின்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதையும் மனதில் வைத்து மலினமான அரசியல் செய்கிறாரே தவிர, தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்கால நலன்கள் குறித்த தொலை தூரப் பார்வை அவரிடமில்லை. எனவே வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் சுமந்திரனின் கூற்றுகளால் தவறாக வழிநடாத்தப்படாமல் கவனமாக இருக்க வேண்டுமென்று இப் பத்தி எச்சரிக்கை செய்கிறது.  

ஏனெனில், இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் இலங்கையின் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் காரணியாக ‘உள்ளூர் அரசியல்’ விளங்கப் போவதில்லை. தீர்மானிக்கும் காரணியாக இந்து சமுத்திரப் பிராந்திய ‘புவிசார் அரசியல்’தான் இருக்கப்போகிறது. எனவே இதனைப் புரிந்து கொண்டு இலங்கைத் தமிழர்கள் புத்திசாலித்தனமாகத் தங்கள் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். சுதந்திர இலங்கையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தமிழர்களை வஞ்சித்த ‘உள்ளூர் அரசியல்’ எமக்கு இனியும் உதவப்போவதில்லை. ஆதலால் பட்டறிவின் அடிப்படையில்புவிசார் அரசியல்நீரோட்டத்துடன் பயணிப்பதே தமிழ்மக்களுக்கு வாய்ப்பானது. ஆனால் அவ்வாறான போக்குதற்போது தம்மைத்தாமே தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) எனப் பிரகடனப்படுத்திச் செயற்படும் எந்தக் கட்சியினிடத்தும் உறுதியாகக் காணப்படவில்லை. 

ஆதலால், காலம் கடந்துவிட்ட இந்த நிலையிலாவது இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலுடன் உறுதியாகப் பயணிக்கக்கூடிய மாற்று அரசியல் சக்தி ஒன்றினைத் தமிழ் மக்கள் அடையாளம் காண்பது அவசியமானது. அத்தகைய மாற்று அரசியல் சக்தியினை அடையாளம் காண்பதற்குப் பொருத்தமான தருணமும் இதுவே. 

1987 இல் கைச்சாத்தான இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் கையெழுத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச எதிர்த்தார். அமைச்சர்களில் ஒருவரான காமினி ஜெயசூரிய ஒப்பந்தத்தை எதிர்த்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இடதுசாரிகள் இவ் ஒப்பந்தத்தை ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ எனச்சொல்லி எதிர்த்தனர். ஜே வி பி இவ் ஒப்பந்தத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தது. அப்போது எதிர்க்கட்சியாகவிருந்த அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒப்பந்தத்தை நிராகரித்தது. சிங்கள இனவாத சக்திகள் எல்லாமே இவ் 7 எதிர்த்தன. 

சிங்களத் தரப்பு இவ்வாறு எதிர்ப்பாக நடந்து கொண்டபோது தமிழர் தரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இவ்வொப்பந்தத்தினதும் இவ் ஒப்பந்தத்தைச் சிங்கள இனவாத சக்திகள் எதிர்த்ததினதும் பின்னணியைக் கவனத்தில் எடுக்காமல்- இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் யதார்த்தத்தைப் புறந்தள்ளி இவ் ஒப்பந்த அமுலாக்கலைக் குழப்ப எண்ணிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மையாகி இவ் ஒப்பந்தத்தைப் பின்னர் எதிர்த்தது. இவ் ஒப்பந்தத்தை அமுல்செய்யவென இலங்கையில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் யுத்தம் செய்தது. இவ் ஒப்பந்தத்தின் வாயிலாகக் கொண்டுவரப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த ஒற்றை அதிகாரப் பகிர்வு அலகு நிர்வாகத்தைச் சீர்குலைத்து ஜனாதிபதி பிரேமதாசவினால் அதனைக் கலைக்க வைத்தது. 

இதனால், இலங்கைத் தமிழர்களுக்குப் பின்னாளில் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளையும் -அழிவுகளையும் வரலாறு பதிவு செய்துள்ளது. இந்த அனுபவப் பின்னணி இலங்கைத் தமிழர்களுக்கு உண்டு. புவிசார் அரசியல் யதார்த்தத்தை அன்று புறக்கணித்ததன் விளைவு இது. அன்று விவேகம் துணைக்குவராததால் வீரம் விலைபோகவில்லை. 

இன்று கோட்டபாய ராஜபக்சாவை 2019இல் ஜனாதிபதியாக வெல்ல வைத்த சிங்கள இனவாத சக்திகள் அவரை எதிர்க்கின்றன. அவருடைய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவிருந்த இனவாதிகளான விமல்வீரவன்ச மற்றும் உதய கம்மன்வில போன்றவர்கள் அரசாங்கத்தின் பக்கமிருந்து வெளியேறி அரசாங்கத்தை எதிர்க்கின்றனர். கோட்டபாய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் இடதுசாரித் தலைவர்களிலொருவருமான வாசுதேவ நாணயக்காராவும் எதிர்க்கின்றார். பொது ஜன பெரமுனக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கின்றது. எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களான தமிழ் தேசியக்கட்சிகளும்(?) எதிர்க்கின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் கோட்டபாயவுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களும் பங்கேற்கவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பா.உ. பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார். 

இந்த நிலைமையை 1987இல் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னரான நிலைமையுடன் இலங்கைத் தமிழர் தரப்பு மிகவும் நுட்பமாக ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். அன்றிருந்த புவிசார் அரசியல் நிலைமைதான் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் தோன்றியுள்ளது. 

அன்று இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்த அதே சிங்கள இனவாத மற்றும் தமிழ்த் தரப்புச் சக்திகள்தான் இன்று ‘கோட்டபாய வீட்டுக்குப் போ’ விவகாரத்திலும் ஒத்தியங்குகின்றன. இந்திய எதிர்ப்பு வாதம் அன்று பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று மறைமுகமாக முன்னெடுக்கப்படுகிறது. அதுதான் வித்தியாசம். இதனைப் புத்திசாலித்தனமாகப் புரிந்துகொண்டு இலங்கைத் தமிழர்கள் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் நீரோட்டத்திற்கேற்பப் பயணிக்கவேண்டும். 

அவ்வாறாயின், ‘கோட்டபாய வீட்டுக்கு போ’ என்று இன்று சிங்கள இனவாத சக்திகளாலும் ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் சிங்கள இடதுசாரிகளாலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடாது. 

1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உப்படத் தமிழர் தரப்பு விட்ட விவேகமற்ற அரசியல் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவதாயின் இன்று நிலவும் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலைப் புரிந்துகொண்டு அரசியல் மதிநுட்பத்துடன் செயற்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதும் தேவைவீரம் அல்ல; விவேகம். பழிவாங்கும் உணர்ச்சியல்ல; பக்குவமான அரசியல் நகர்வு.