கோத்தா  கோஹோம்.. அடுத்து என்ன? ..  அறிவுரை அல்ல ஆதங்கம் 

கோத்தா  கோஹோம்.. அடுத்து என்ன? ..  அறிவுரை அல்ல ஆதங்கம் 

(ஒட்டுமொத்த ஊழல், இனவாதத்துக்கு எதிரான போராட்டமாக வேண்டும்) 

  — பி.ஏ. காதர் —  

இந்த போராட்டத்தை நெறிப்படுத்தும் இளைஞர்களே, அதனை அலையாய் திரண்டு அர்ப்பணிப்போடு தாங்கிநிற்கும் வீரம் செறிந்த மக்களே, உங்களை என் மனம் ஆறத்தழுவுகிறது. உங்களிடம் இருந்து நான் அரசியல் பாடம் பல கற்றுக்கொண்டிருக்கிறேன். நாளைய இலங்கை எப்படி இருக்கவேண்டும் என்ற கனவை அனைவர் மனதிலும் நீங்கள் விதைத்திருக்கிறீர்கள். 

பிரிட்டிஷ்காரர் இந்நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆட்சிக்கு வருவததற்காக பொருளாதார திட்டங்களைமுன்வைப்பததற்கு பதிலாக அனைத்து தலைமைகளும் இனவாதத்தையே கிளப்பின. இதனால் இலங்கை இனரீதியில் பிளவுண்ட நாடாகமாறியது. அதனைவேற்றுமையில் ஒற்றுமைப்பட்ட நாடாக மாற்றும் முயற்சியை நீங்கள் தான் முதல் தடவையாக வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறீர்கள். உண்மையான இலங்கையின் பன் முகம் கொண்ட அடையாளம் எதுவாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.  

ஆயினும் ஒருவகையான கவலை கலந்த அச்சம் என் மனதில் குடிகொள்கிறது. இத்தனை மக்கள் இப்படியானதொரு போரட்டத்தை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. ஆனால் இதன் வெற்றியை அதே பழைய திருடர் கூட்டத்தின் இன்னொரு அணி அபகரித்தது விடுமோ என அஞ்சுகிறேன். மக்கள் போராடுகிறார்கள் ஆளும்வர்க்கம் வெற்றியை கபளீகரம் செய்துகொள்கிறது என்ற கூற்று உண்மையாகிவிடுமோ என்று பாயமாகஇருக்கிறது. உங்கள்அர்ப்பணம், உழைப்பு, அனைத்தும் விழலுக்குஇழைத்த நீராகிவிடுமோ என்ற பீதி என்னை ஆட்கொள்கிறது.  

ஏன்தெரியுமா

இதுவரை நடந்த ஆட்சி மாற்றங்களும் இப்படித்தானே முடிந்தன. ஆட்சியில் இருப்போர் மீதுள்ள ஆத்திரத்தில் அவர்களை மாற்றிவிட்டு பழைய திருடர்களை ஆட்சிக்கு கொண்டுவந்தோம். மீண்டும் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மறுபடியும் முன்பு தூக்கியெறிந்த அதே திருடர்களை ஆட்சியில் அமர்த்தினோம். 1970ல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை தூக்கி எறிந்து, சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை மீண்டும் அரியணை ஏற்றினோம். 1977ல் மறுபடியும் சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முன்னர் தூக்கி எறிந்த அதே ஐக்கிய தேசிய கட்சியை அறுதி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி பீடத்தில் அமர்த்தி அதற்கான விலையை இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.  

 2015ல் ராஜபக்ச குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக எழுந்தோம். அதனை தூக்கி எறிந்துவிட்டு நல்லாட்சியை கொண்டுவந்தோம். ரணிலின் வங்கி முறி கொள்ளை பற்றி கூக்குரலிட்டோம். மீண்டும் ராஜபக்ச குடும்பத்தை 2019ல் மீண்டும் அறுதி பெரும்பான்மை பலத்தோடு சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தோம். இப்போது அவர்களுக்கு எதிராக தெருவில் நின்று போராடுகிறோம்.  

இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்?மறுபடியும் ராஜபக்ச குடும்ப ஊழல் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு வங்கி முறிகொள்ளையன் என்று வர்ணிக்கப்பட்ட ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்தபோகிறோமா? ராஜபக்சவின் ஆஸ்தான குருவாக இருந்து இனவாதம் போதித்த, இலங்கை அரசியலில் இனவாத சித்தாந்ததை ஒரு அம்சமாக ஆக்கிய சம்பிக்க ரணவக்க, அவருக்கு எந்த விதத்திலும் சளைக்காத இனவாதிகளான கம்மன்பிலா, விமல்வீரவன்ச, இலங்கையை இனவாதரண பூமியாக மாற்றியவர்களில் ஒருவரான ரத்ன தேரர், இன்னும் இவர்களைப் போன்றோரை ஆட்சியில் அமர்த்த அழகு பாரப்பதற்காகவா இந்த போராட்டம்?   

இப்படியானவர்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்துவிட்டு உங்கள் கனவை, எங்கள் கனவை, நிறைவேற்ற முடியுமா? ராஜபக்ச குடும்ப ஆட்சியை விரட்டி அடிப்பது மாத்திரமல்ல அவர்கள் மீண்டும் என்றென்றைக்கும் ஆட்சிக்கு வராமல் இருப்பதையும் உறுதிசெய்யவேண்டும். இந்த ‘டீல்’ தாசர்கள் அதை செய்வார்களா இல்லை அவர்களை காப்பாற்றுவார்களா? ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல, இந்த திருடர் கூட்டத்தில் எவரையும் மன்னிக்க கூடாது, அவர்களின் கடந்த காலத்தை மறக்கக்கூடாது. 

அப்படியானால் எம் மக்களின் இன்றைய உன்னத கனவு சிதையாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும்?இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு 77 வருடமாகிறது. அதன் பின்னர் இங்கு இதுவரை 26 பிரதம மந்திரிகள் மாறியிருக்கிறார்கள் 7 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதிகள் ஆட்சிசெய்திருக்கிறர்கள். 79 பதிவுசெய்யப்பட்ட அரசியல் காட்சிகளும் 20,74 பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. 341 உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 8,327 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒன்பது மாகாண சபைகளில் 455 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதைவிட பாராளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரும், நாமும், இத்தனை காலம் சாதிக்க தவறியதை இந்தச் சில நாட்களில் கோத்தா கோ ஹோம் கிராமத்தின் முன்னெடுப்பாளர்களான இந்த இளம் தலைமுறையினர் சாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தமானதுதான். ஆனால் இந்த உன்னதமான வரலாற்று பயணத்தை நீங்கள்தான் தொடங்கி வைத்தீர்கள். இந்த பயணம் வெறுமனே ஒரு ஆர்ப்பாட்டமாக முடிவடையக்கூடாது. முன்னாள் உள்ள பயணம் நீண்டது கடினமானது. சரியான திசையை தேர்ந்தெடுத்தால்.. சரியான கொள்கையையும் திட்டத்தையும் வகுத்தால் அந்த வரலாற்று கடமையையும் உங்களால் செய்து முடிக்கமுடியும். எப்படி? 

முதலில் போராட்டத்தின் இலக்கை தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டும்.கோத்தாவையும் மஹிந்தவையும் அவர்களது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அனுப்புவது மாத்திரம்தான் இப்போராட்டத்தின் ஒரே இலக்காக மாற்றும் சதி ஒன்று திரை மறைவில் சிலரால் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்த போராட்டத்தின் நோக்கம் உண்மையான இலக்கைநோக்கி நகர்ந்தால் தங்களுக்கும் ஆபத்து என்பது அவர்களுக்கு தெரியும். சந்திரிகா பண்டாரநாயக்கா போன்றோரின் நிலைப்பாடுகளும் இதற்கே துணைபோகினறன. 

எனவே எமது போராட்டம் அமைப்பை (சிஸ்டம்) மாற்றுவதாக இருக்கவேண்டும், ஆளை மாற்றுவதுவதாக மாத்திரம் இருக்கக்கூடாது. கோத்தாவையும் மஹிந்தவையும் அவர்களது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அனுப்புவது தொடக்கமாக இருக்கவேண்டுமே தவிரமுடிவாக இருக்கக்கூடாது.ஊழல் புரிந்தவர்களை மாத்திரமல்ல, இனவாதிகளை மாத்திரமல்ல இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த அனைத்து அரசாங்ககளினதும் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் ஆகியோரையும் தூக்கி எறியாமல் இப்பணிபூர்த்தி அடையக்கூடாது. 

அதே சமயம் இப்போராட்டம் ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாத்திரம் சுருங்கிவிடக்கூடாது. பழைய இடதுசாரிகள் ஊழல் அற்றவர்கள் தான். அவர்கள் பங்காளிகளாக இருந்த ஸ்ரீமா பண்டாரநாயக்க தலைமையிலான 1970 -77 அரசில் ஊழல் அற்ற இடதுசாரி அல்லாத அமைச்சர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் நல்லட்சியை தரமுடிந்ததா? இவர்கள் காலத்தில்தானே புதிய ஊழல்மிக்க அரச முதலாளித்துவமும் இனவாதமும் கைகோர்த்து நர்த்தனம் ஆடின. மலையக தமிழ் மக்கள் அன்று சிந்திய கண்ணீரை மறக்க முடியுமா? 

ஆகவே ஊழலை ஒழிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இனவாதத்தை ஒழிப்பதும் நாட்டின் அபிவிருத்திக்கான சரியான வேலைத்திட்டத்தை முனனெடுப்பதும் அவசியம். இவை மூன்றில் ஒன்று குறைந்தாலும் அது நல்லாட்சியாக அமையமுடியாது. இந்த போராட்டம் அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக மாத்திரம் அமையக்கூடாது. நிர்வாக அதிகாரத்தில் இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் இனவாதிகளுக்கும் எதிரான போராட்டமாகவும் விரிவடைய வேண்டும். அப்போதுதான் போராட்டத்தின் முதல் கட்டம் பூர்த்தியடையும்.  

அனைத்துக்கும் மேலாக நாம் வேண்டுவது நபர்களின்மாற்றம்மாத்திரம் அல்ல அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தமும்தான். இதுவே எமது அடிப்படை கொள்கையாக இருத்தல் வேண்டும். இல்லையேல் இப்போராட்டம் வெறுமனே கோத்தா கோ கம வின் ஆர்ப்பாட்டமாக நாளடைவில் அடங்கிப்போகும். 

மூன்று நிலைகள்… 

எமது வேலைத்திட்டம் மூன்று நிலைகளை கொண்டதாக அமையவேண்டும். முதலில் இப்போது செய்ய வேண்டிய எமது உடனடி செயல் திட்டம் ஒன்று தேவை. இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பாராளுமன்ற முறைக்கு எதிரான போராட்டமல்ல ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம். அதனை தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே செய்யமுடியும். ஆனால் இன்றைய சூழலில் அதுவரை காத்திருக்க முடியாது. மறுபுறத்தில் கோத்தா கோ ஹோம் போராட்டத்தின் பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் மக்கள் கோரிக்கைக்கும் -அக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பாராளுமன்றத்தித்திற்கும் இடையே ஒரு தொடர்பின்மை காணப்படுகிறது, இந்த இடைவெளியை அனைத்து 225 பாராளுமன்ற பிரதிநிதிகளும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் விரிவடைய செய்கிறது. மறுபுறத்தில் இந்த நிலைமையானது கோ ஹோம் கிராமத்தை ஒரு அழுத்த குழுவாக (Pressure group) மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வர பலரும்  கோஷ்டிகளாக பிரிந்து நாற்காலிக்கான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த கட்டுப்பாடும் போராடும் மக்களுக்கு கிடையாது. இந்த நிலைமையை மாற்ற என்ன செய்யலாம்?    

எனது அனுபவம் சொல்கிறது. முதலில் ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் அழுத்தம் கொடுக்கும் குழுக்களை அமைத்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கோ ஹோம் கிராமத்தின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்தல் வேண்டும். சகல கட்சிகளிலும் உள்ள ஊழலும் இனவாதமும் அற்ற திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை இனம்கண்டு அவர்களுடன் நல்லுறவு பேணவேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் 21வது திருத்தத்தை வரைந்து, அல்லது ஏனைய கட்சி எதுவாக இருந்தாலும் அது முன்வைக்கும் வரைவை நிபணர்களின் துணையோடு பரிசீலித்து ஒப்புதல் அளித்து நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அடுத்து ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேணை (impeachment) நிறைவேற்றப்பட்டு கோத்தா பதவி நீக்கம் செய்யப்படுதல் வேண்டும். 

அதே சமயம் பாராளுமன்றதில் உள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த மேற்கூறிய தேர்நதெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தற்கலிகமாக ஒன்றிணைத்து இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வேண்டும். இவர்களுக்கு மூன்று கடமைகளை வழங்க வேண்டும். ஒன்று, நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டல். இரண்டு, புதிய அரசியலமைப்பை மக்களுடனும் நிபுணர்களுடனம் கலநதுரையாடி நிறைவேற்றுதல் (இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் வரையப்பட்டு நிறைவேற்ற முடியாமல் போன அரசியல் அமைப்பிலுள்ள நல்ல அம்சங்களும் கடந்த ஆட்சியில் மக்களால் முன்வைக்கப்பட்ட சிறந்த ஆலோசனைகளும் உள்வாங்கப்படுத்தல் வேண்டும்).மூன்றாவதாக இதுவரை முன்மொழியப்பட்ட தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பான நல்ல கருத்துகளை உள்வாங்கி புதிய தேர்தல் முறை ஒன்றினை வரைதல். இவற்றுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும வழங்குவதற்க துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவரகளையும், சகல கட்சிகளையும், சகல தேசிய இனங்களையும், இளைஞர்களையும். பெண்களையும் கொண்ட ஒரு ஆலோசனை சபையை கோத்தா கோ கிராமத்தின் ஒப்புதலோடு நியமித்தல் வேண்டும். இந்த ஆலோசனை சபை புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று சபையாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இம்மூன்று கடமைகளையும் ஒன்பது மாதங்களுக்குள் நிறைவேற்றி பொதுதேர்தலுக்கு செல்லவேண்டும். 

அத்துடன் இவ்விடைக்கால அரசு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை நடுநிலையோடு விரைவாக முன்னெடுக்கக்கூடிய -கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படும் ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்கவேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் வேண்டும். 

இந்த உடனடி வேலைத்திட்டம் முழுமையானதோ முடிவானதோ. அல்ல கலந்துரையாடலுக்கான அடித்தளம் மாத்திரமே. இப்படியான ஒரு உடனடித்திட்டம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு இப்போராட்டம் நகர முடியாது. 

அடுத்த தேர்தலிலும் இதே திருடர் கூட்டம் ஆட்சிக்கு வருமானால் அது இன்று நடைபெறும் போராட்டத்தின் தோல்வியாகவே கருதப்படுத்தல் வேண்டும். எனவே, அடுத்த தேர்தலில் யாரை வெற்றிபெற வைப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக நீங்கள் மாறவேண்டும். ஏனெனில் அடுத்த பாராளுமன்றிற்கு தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய பொறுப்புகள் உண்டு. அவற்றை அவர்கள் சரிவர செய்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் உங்களுக்குண்டு. 

அடுத்து அமையப்போகும் அரசாங்கம் அரசியலிலும், சமூகத்திலும் நிர்வாகத்திலும், புரையோடிப்போயுள்ள ஊழலையும் இனவாதத்தையும் வேரோடு தூக்கி எறிவதற்கும் திட்டவட்டமான நடவடிக்கை தேவை. இதற்காக, இதுவரை நடைபெற்ற பாரிய ஊழல்கள், போர்க்குற்றம், பாரிய மனித உரிமைமீறல், இனவாத தாக்குதல்கள் போன்றவை  தொடர்பாக விசாரணை செய்வதற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கும் சுயேட்சையான பல்வேறு விசாரணைக குழுக்களை அமைக்க வேண்டும். அவை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான பல்வேறு பொறிமுறைகளை உருவாக்குவது அவசியம். அனைத்துக்கும் மேலாக நாட்டை அபிவிருத்தி செய்து உண்மையான நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட குறுகிய காலதிட்டமும் நீண்ட காலதிட்டமும் அதனால் வரையப்படுத்தல் வேண்டும். இப்பணிகளை அடுத்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதே சமயம் இவற்றில் எல்லாம் உங்கள் பங்களிப்பு இருத்தல்வேண்டும். 

இப்பணியை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பது தொடர்பாக விரிவாக உரையாடவேண்டும். நாமும் அடுத்த கட்டுரையில் அதுபற்றி உரையாடுவோம்.