இதயம் பத்திரம் – 1 

இதயம் பத்திரம் – 1 

      — யோ.அன்ரனி — 

வயது அதிகரித்து முதுமை நெருங்கும்போது பல மாற்றங்கள் எங்களைச் சுற்றியிருக்கும் குடும்ப, நண்பர் வட்டங்களில் நிகழ்வதை அவதானிக்கலாம். உடல் நோய்கள், அவற்றிற்காகத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டிய மருந்துகள் பற்றிய உரையாடல்கள் சந்திப்புகளில் அதிகம் பேசப்படுவது சாதாரணமாக நிகழும். ஒரு இருண்ட மாற்றமாக, எங்களையொத்த வயது மட்டத்தினரிடையே திடீர் மரணங்கள் முன்னரை விட அதிகளவில் நிகழ்ந்து எதிர்காலம் பற்றிய பயத்தை மூட்டும்.  

தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, புலம் பெயர்ந்து வசதிவாய்ப்புகள் கொண்ட மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் சரி, எங்களுடைய மக்கள் அடிப்படையான இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் மேற்கத்தைய மக்களை விட சிறிது பின்தங்கியே இருக்கிறார்கள் எனக் கருதுகிறேன். பாடசாலைக் கல்வியில், ஐந்தாம் ஆண்டிலிருந்தே சுகாதாரக் கல்வியைப் பாடத்திட்டத்தில் கொண்டிருந்தாலும், எங்கள் சமூகத்தில் வளர்ந்தோர் தமது இதய ஆரோக்கியம் பற்றி முதலில் கவலை கொள்வது உடலில் கொலஸ்திரோல் அதிகரித்த பின்னர் தான். இந்த நிலையை மாற்றினாலே பல இதய நோய்களினால் ஏற்படும் உடல் ஊனத்தையும், திடீர் மரணங்களையும் குறைக்கலாம். எங்கே ஆரம்பிப்பது? 

இதய இரத்தக் குழாய் நோய்களே முதன்மையான ஆட்கொல்லிகள் 

உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் மரணத்திற்குக் காரணமான முதல் மூன்று காரணிகளாக இருப்பவை, மாரடைப்பு (ischemic heart disease), மூளையில் இரத்த அடைப்பு (stroke), நீரிழிவு (diabetes) ஆகிய மூன்று நோய் நிலைகளும் தான். இவற்றுள் நீரிழிவு முதலில் ஏற்பட்டால், அது உடலின் பல்வேறு அங்கங்களிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளால் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு என்பன உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், நீரிழிவு இல்லாதோரிலும் கூட மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படலாம் -அதற்கான ஆபத்துக்காரணிகள் சில அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆண்களாக இருப்பதும், வயது அதிகரிப்பதும் அடிப்படையில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. எங்கள் பெற்றோர், உடன் பிறப்புகளில் இந்த நோய்கள் இருந்தால், பரம்பரைக் காரணிகளால் எங்களுக்கும் இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் சிறிது அதிகரிக்கும். எனவே, பால், வயது, பரம்பரை ஆகிய மூன்றும் இதய இரத்தக் குழாய் நோய்கள் சார்ந்து நாம் மாற்ற இயலாத மூன்று காரணிகள். எனவே இவை மூன்றும் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள ஏதுமில்லை. ஆனால், மாற்றக்கூடிய  இன்னும் பல காரணிகளை நாம் கையாள்வதன் மூலம், இதய இரத்தக் குழாய் தொடர்பான நோய்களைத் தள்ளிப்போடவும், தவிர்க்கவும் முடியும் என்பது எங்கள் சமூகத்தில் அழுத்திச் சொல்லப் படவேண்டிய ஒரு தகவல்.    

உணவு முறை இதய நலனில் முக்கியமான ஒரு காரணி   

மேற்கு நாடுகளின் சமூகங்கள் போலவே இலங்கை போன்ற நாடுகளின் சமூகங்களிலும் கடந்த 20 – 30 ஆண்டுகளில் உணவு முறை பெருமளவு மாறியிருக்கிறது – இதுவே அதிகரித்த இதய இரத்தக்குழாய் நோய்களின் அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணி. நாம் நுகரும் நவீன உணவுகள் நார்த்தன்மை குறைந்தவையாகவும், சுத்திகரித்த (refined) மாச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கின்றன – இதனால், மிகையான கலோரிகளை உடல் எடுத்துக் கொண்டு, அந்த மிகையான சக்தியை கொழுப்பாகச் சேமித்துக்கொள்கிறது. இந்த மிகைக்கொழுப்புச் சேமிப்பு தோலுக்கடியில் மட்டுமன்றி, உடலின் வயிற்றுக் குழியினுள்ளும், இதயத்தைச் சூழவுள்ள இரத்தக்குழாய்களுக்கு அண்மையாகவும் படிவதால் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு என்பன உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலானோரில் இத்தகைய கொழுப்புப் படிவு அதிகரித்த உடற்பருமனாக (obesity) வெளிப்பட்டாலும், ஒரு சிறு வீதமான மக்களில், அதிகரித்த உடற்பருமன் இல்லாமலே இதயமும், இரத்தக்குழாய்களும் கொழுப்பினால் பாதிக்கப்படுவது நிகழலாம். எனவே, உடற்பருமன் பிரச்சினை இல்லாதோரும் தங்கள் உணவு முறைகளைஆரோக்கியமாக வைத்திருத்தல் முக்கியம்.      

இதய நலனுக்கு முக்கியமான இன்னுமொரு உணவு சார்ந்தகாரணி கொழுப்பு. நாம்உணவின் மூலம் எடுத்துக்கொள்ளும் கொழுப்பின் அளவு மிகையாக இருப்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் இதய இரத்தக் குழாய்நோய்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த அடிப்படையான விஞ்ஞான உண்மை 70களிலிருந்து மாறவில்லையாயினும், உணவிலுள்ள கொழுப்பின் ஆபத்துப் பற்றிய விழிப்புணர்வு எங்கள் சமூகத்தில் பற்றாக்குறையாக இருப்பதை நண்பர்கள் மட்ட உரையாடல்களின் அடிப்படையில் உணர்கிறேன்.  

முதலாவதாக, எந்த வகையான கொழுப்பையும், எண்ணை வகையையும் நாம் குறைவாகவே உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படையான ஆரோக்கியத் தகவலை மறுதலிக்கும் வகையில் சமூகவலை ஊடகங்களில் “சீனி ஆபத்தானது, கொழுப்பு ஆபத்தில்லை”  என்று முகநூலில் மட்டும் படித்துப்பட்டம் பெற்ற வைத்தியர்கள் கொடுக்கும் ஆலோசனை எங்கள் சமூக நலனுக்கு மிகவும்ஆபத்தானது. அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக எங்கள் சமூகத்தில் பரவிவரும் இன்னொரு ஆபத்தான போலி விஞ்ஞானத் தகவல், “தேங்காயெண்ணெய் எங்கள் உடலுக்கு நல்லது” என்ற விஞ்ஞான அடிப்படையற்ற தகவல். இந்தப் போலி விஞ்ஞான வதந்திக்கு ஒரு சுவாரசியமானதோற்றுவாய் இருக்கிறது -அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஆனால், ஐந்து தசாப்தங்களாக நிகழ்ந்த ஆய்வுகளின் படி, தேங்காயெண்ணெய், பாம் எண்ணெய் (Palm oil), மாட்டிறைச்சி ஆகியவற்றில் இருக்கும் கொழுப்பு வகை எங்கள் உடலில் ஆபத்தான கொலஸ்திரோலின் அளவை அதிகரிப்பதால், இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் காரணியாக நிறுவப்பட்டிருக்கிறது. எனவே, தேங்காயெண்ணெய் அதன் பாண்டல் அடையாத தன்மை காரணமாக சில தமிழ் மருந்துகளில் கரைப்பானாகப் பயன்பட்டாலும், இதய நலனைப் பொறுத்த வரையில் உணவில் சேர்க்கப்படக் கூடாத நச்சுப் பொருள் தான் தேங்காயெண்ணெய். எனவே, அமெரிக்க இதய ஆய்வமைப்பின் (American Heart Association), விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையிலான பரிந்துரைகளின் படி சீனி, சுத்திகரித்த மா/ அரிசி போன்றவற்றின் அளவையும், உள்ளெடுக்கும் கொழுப்பின் அளவையும் உணவில் குறைத்துக் கொள்வது இதய இரத்தக் குழாய் நோய்களின் பாதிப்பைக் குறைக்கும் முதல்படியாக இருக்கிறது.            

உப்பை என்ன செய்யலாம்

ஆசிய உணவுகளிலும், அதிகம் சுவையூட்டப் பட்ட மேற்கத்தைய உணவுகளிலும் காணப்படும் இன்னுமொரு இதய நலனின் எதிரி உப்பு. சோடியம் குளோரைட் எனப்படும் உப்பு, அடிப்படையில் எமக்கு அவசியமான சோடியம் கனிமத்தை வழங்குகிறது, ஆனால் ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் உப்பே போதுமானது. இந்த 1.5 கிராம் உப்பை நாம் உள்ளெடுக்கும் மரக்கறி வகைகள், மாமிச உணவுகள், தண்ணீர் என்பவற்றிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் -தனியாக உப்பை உணவில் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே மேலதிகமாகச் சேர்க்கப்படும் உப்பு சுவைக்கு மட்டுமே அவசியம், உடலின் தொழிற்பாட்டுத் தேவைக்கு அவசியமற்றது. அமெரிக்க சுகாதாரத் திணைக்களத்தின் (US National Institutes of Health) பலவருட கால ஆய்வுகளின் படி, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ளும் போது, எங்கள் இரத்த அழுத்தம் உடனடியாகவே குறைவடைவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது DASH (Dietary Approaches to Stop Hypertension) எனப்படும் இந்த உப்புக் குறைந்த உணவுமுறை, உயர் இரத்த அழுத்த நோயுடையோரில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய இரத்தக்குழாய் நோய்கள் என்பன குறைந்த பிரதேசமான மத்திய தரைக்கடல் (Mediterranean) பகுதி நாடுகளின் உணவு முறையை அவதானித்தால், அவர்கள் உப்பை உணவினுள் கலக்காமல் மிகச் சிறிதளவாக சமைத்த உணவின் மீது தூவுவதைக் காணலாம். உலகில் மிகக்குறைந்த இரத்த அழுத்தம்உடையோராகக் கருதப்படும் யனோமாமி எனப்படும் அமேசன் பழங்குடியினர், தமது உணவைச் சுவையூட்ட உப்பு அல்லாத பதார்த்தங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழங்குடியின மக்களில் சிறுவயது முதல் 60 வயது வரை, இரத்த அழுத்தம் பாரியளவு மாறுவதில்லை என சில ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த இரு உதாரணங்களும், வேறு பல ஆய்வுகளும் எமக்குச் சொல்வது: உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வது, முற்றாகத் தவிர்ப்பது எங்கள் இதய இரத்தகுழாய் நலனுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு முக்கியமானபடி.    

சுருக்கமாக: இதய நலனுக்கு குறைக்க / தவிர்க்க வேண்டிய உணவுகள்: சுத்திகரித்த மாச்சத்துகளான சீனி, தீட்டிய அரிசி, தீட்டிய மாப்பொருட்கள், கொழுப்பு (அதிலும் வெண்ணை, தேங்காயெண்ணெய்), உப்பு. 

இதய நலனைத் தாங்கும் மூன்று தூண்களில் ஒன்றுதான் ஆரோக்கிய உணவு முறை. அதிக பட்ச இதய, இரத்தக் குழாய் நோய்த் தடுப்பிற்கு உணவு முறையோடு, உடலுழைப்பு, மனதை அமைதிப்படுத்தும் வாழ்க்கை முறை என்பனவும் முக்கியமான மற்றைய இரு தூண்கள். இவையிரண்டும் பற்றி அடுத்த பகுதியில்பார்க்கலாம்.  

-தொடரும்.