—அழகு குணசீலன்—
DEBT -TRAP DIPLOMACY…!
இலங்கையின் இன்றைய அரசியல், பொருளாதார அமைதியின்மைக்கு சீனாவினதும், இந்தியாவினதும் நவகாலனித்துவ மேலாதிக்க அணுகுமுறை கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது .
பூகோள அரசியலில் சிறிலங்காவை – இந்து சமுத்திரத்தை யார்? கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற இருதரப்பு போட்டிக்குள் சிக்கியுள்ளது இலங்கை. நவகாலனித்துவ கடன் கண்ணி / கடன் பொறி இராஜதந்திரத்தில் இருந்து இலங்கையை :
ஐ.எம்.எப் விடுவிக்குமா….?
அது அவ்வளவு இலகுவானதா….?
பிணையெடுக்கும் இந்தியாவின் முயற்சி அமெரிக்க, இந்திய கூட்டுத்திட்டமா…..?
என்ற கேள்விகள் இன்று உரத்து ஒலிக்கின்றன.
ஐ.எம்.எப்., உலகவங்கி என்பன ஒன்றும் புனிதக் கோயில்கள் அல்ல. மேற்குலக நாடுகளின் நவகாலனித்துவக் கொள்கைகளை அவர்களின் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துகின்ற, முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகவர்கள். DEBT-TRAP DIPLOMACY AGENTS. ஆக, இலங்கை நவகாலனித்துவத்தின் ஒரு முகவரில் இருந்து இன்னொரு முகவருக்கு கைமாறுகிறது. ஒரு பொறியில் இருந்து இன்னொரு பொறிக்குள் விழ்கிறது.
எல்லோரும் வைத்தியம் செய்ய வருவது நோய்க்கல்ல, வெறும் அறிகுறிகளுக்கே. எல்லா நோய்களுக்கும் இவர்களிடம் இருப்பது பனடோல் குளிசைதான்- சர்வரோக நிவாரணி. தலைவலி, வயிற்றுவலி, நம்ம ஊர் கிறுகிறுப்பு, சூனியம், பேய்பிசாசு, பித்தம் எல்லாவற்றிற்கும் பனடோலே கதி.
இலங்கையில் அரசாங்கத்தை மாற்றினால் எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று “வெதமாத்தயா சித்தாலேப” அரசியல் மக்களுக்கு போதிக்கும் பாடத்திற்கும் பனடோல் வைத்தியத்திற்கும் வேறுபாடில்லை.
இலங்கையின் ஒரு தரப்பினர் இந்த பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் சீனாவும், இந்தியாவும் இருப்பதாக நம்புகின்றனர். சீனா ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் தனது பொருளாதார வலையை வீசி அதற்குள் அந்நாடுகளை வீழ்த்தியுள்ளது. சீனாவின் எதிரியும், வல்லரசுப் போட்டியாளருமான அமெரிக்கா இந்த வலைவீச்சு அணுகுமுறையை “DEBT -TRAP DIPLOMACY” என்று குறிப்பிடுகிறது.
இதன் அர்த்தம் கடன் உதவிகளை வழங்கி, வாங்கிய நாடுகள் அதனை திருப்பிக்கொடுக்க முடியாத கடன் சுமைக்குள் தத்தளிக்கும்போது கடன் வழங்கிய நாடு தனது பொருளாதார அழுத்தங்களை பிரயோகித்து தனது இலக்கை அடைந்து கொள்வது. நம்ம ஊர் பாஷையில் தவித்த முயல் அடித்தல்.
எப்படியிருப்பினும் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் அது சீனாவில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் 2020இல் 10 வீதம் மட்டுமே. பெரும்பகுதியான 30 வீதம் சர்வதேச கடன் முறி ஒப்பந்தங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து பெறப்பட்ட கடனின் வீதாசாரம் 11 வீதமாகும்.
ஆனால் சீனக்கடன்கள் அடிப்படை நிர்மாணக் கட்டமைப்புக்களுக்காக வழங்கப்படுவது ஒரு பிரச்சினையாக உள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு இதில் முக்கியமான ஒன்று. இதற்கு சீன எக்ஸ்ஸிம் வங்கி கடன் வழங்கியது. துறைமுகம் நட்டத்தில் இயங்குகிறது. இதனை 99 வருட குத்தகைக்கு இலங்கை சீனாவுக்கு வழங்கி அதற்காக 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுகிறது.
சர்வதேச நாணய நிதியம்..!
இலங்கை தொடர்ச்சியாக அந்நியச்செலாவாணிப் பிரச்சினையை எதிர்நோக்கியதனால் சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து பலதடவைகளில் கடன்களைப் பெற்றுள்ளது. 1965இல் இருந்து 16 தடவைகள் பெருந்தொகையான கடன் உதவியை ஐ.எம்.எப். இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்தக் கடன்கள் ஒவ்வொரு தடவையும் மிகக்கடினமான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன.
(*) வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைக்கப்படவேண்டும்.
(*) கடுமையான நாணயக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
(*) மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தை குறைத்தல் வேண்டும்.
(*) இலங்கை ரூபாவை நாணயப் பெறுமதி இறக்கம் செய்து ஏற்றுமதியை அதிகரித்தல் வேண்டும்.
(*) நெகிழ்ச்சியற்ற அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட வேண்டும்.
உண்மையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடொன்றில் இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் கஷ்டமானது. இதனால் தொடர்ந்தும் கடன் வாங்கியே ஆட்சியை நடாத்த வேண்டிய நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் இருந்தன / இருக்கின்றன.
இதன் காரணமாகவே உள்நாட்டு பொருளாதாரக் கொள்கையில் தலையிடாத, மாற்று நிபந்தனைகளை விதிக்கின்ற சீனா, இந்தியாவில் இலங்கை தங்கியிருந்தது. எதிர்த்தரப்பு ஐ.எம்.எப். இடம் போங்கள் என்று ஆலோசனை கூறியபோதும் அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை. மறுபக்கத்தில் இன்று விமர்சனம் செய்கின்ற வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, அனுரகுமார போன்றவர்களும் இதனை விரும்பவில்லை.
ஐ.எம்.எப். இலங்கைக்கு கடைசியாக 2016இல் கடன் வழங்கியது. 2016 முதல் 2019 வரையான மூன்று ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாகப் பெறப்பட்டது. இந்த தடவை நிபந்தனைகள் கடினமாக இல்லாததால் பொருளாதாரத்தில் ஆரோக்கியம் அவதானிக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதுடன் முதலீடு, சேமிப்பு மற்றும் வருமான அதிகரிப்பும் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்ன வெனில் இக்காலப்பகுதியில் மேற்குலகின் செல்லப் பிள்ளையாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது இலகு கடன் நிபந்தனைகளுக்கு காரணமாயிற்று.
யுத்தம் இடம்பெற்றபோது 2006இல் தலா உள்நாட்டு உற்பத்தி 1,436 டொலர்களில் இருந்து 2014இல் 3,819 டொலர்களாக அதிகரித்தது. இது விடயத்தில் இலங்கை உக்ரைன், பிலிப்பைன்ஸ், இந்தனோசியாவுக்கு சமமான வளர்ச்சியைக் காட்டியது.
1.6 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்த நிலையில் இருந்து மீளக்கூடியதாக இருந்தது. இது இலங்கையின் சனத்தொகையில் 8.5 வீதம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. இது மத்திய தரவர்க்க வீகிதாசாரத்தை உயர்த்தியது. 2019 உலக வங்கி அறிக்கையானது இலங்கையை மேல் மத்திய வருமான பிரிவில் பட்டியலிட்டது.
இன்றைய இந்த பொருளாதார நிலையானது ஒருவருடத்திற்கு முன்னர்தான் மோசமடைந்தது. இலங்கை அடைந்து பொருளாதார வளர்ச்சியில் பெரும்பகுதியை வெளிநாட்டுக் கடன்களை மீளளிக்கப் பயன்படுத்தியது. இதனால் 2006இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 வீதத்தை எட்டியிருந்தது. 2015இல் பொருளாதார உறுதிக்கொள்கை கைக்கொள்ளப்பட்டு குறைந்த வளர்ச்சி வீதம் உறுதிப் படுத்தப் பட்டபோதும் வெளிநாட்டுக் கடன் தொடர்ந்தும் அதிகரித்தது.
2018இல் உல்லாசப்பிரயாணத் துறையால் பெறப்பட்ட 5.6 பில்லியன் வருமானத்தை வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறையான 10 பில்லியன் அமெரிக்க டொலர் விழுங்கிக்கொண்டது. 2020இல் நாட்டின் வருமானத்தில் 72 வீதம் வட்டிக் கொடுப்பனவாக இருந்தது. இந்த நிலையில் மத்திய வங்கி நாணயத்தாள்களை வெளியிட்டதினால் பணவீக்கம் தவிர்க்க முடியாததாயிற்று.
மறுபக்கத்தில் ஏற்கனவே சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 2.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவும் 2.4 பில்லியன் டொலர்கள் அளவுக்கு வழங்கியுள்ளது. ஐ.எம்.எப். இன் 17வது கடனை எதிர்பார்த்து பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் நிபுணர்களும் ஆய்வாளர்களும் இலங்கை சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரவேண்டும் என்று ஆலோசனை கூறியபோதும் மத்திய வங்கியோ அயல் நட்பு நாடுகளை நம்பி ஓடியது. இன்றைய உத்தியோகபூர்வ பணவீக்கவீதம் 14 வீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் உண்மையான சந்தை நிலைமைகளில் அது 55 வீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் மற்றொரு காய் நகர்வை ஆரம்பித்திருக்கிறார். அடுத்தமாதம் “ஆசியான்” மாநாட்டை. அமெரிக்காவில் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் அரசியல், பொருளாதார ஸ்த்திரம் அற்ற சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கு சீனாவின் ‘DEBT- TRAP DIPLOMACY’ குறித்து ஆசியான் நாடுகளை எச்சரிப்பதுடன், அமெரிக்காவின் உதவிக்கரத்தையும் நீட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் யுத்தத்தில் ஆசியான் நாடுகளின் நிலைப்பாடு குறித்தும் பைடன் பேசவுள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்குமான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. இதில் வழக்கத்திற்கு மாறாக இந்தியாவும் கலந்து கொண்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிக்கு பிணை நிற்கத்தயார் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிதி அமைச்சர் சீதா ராமன் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க.- இந்திய புதிய ஏற்பாடு என்று. கருதப்படுகிறது.
இங்கு அமெரிக்க ஆதரவுடன், ஐ.எம்.எப்பின். ஆலோசனையில்
இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் ஒரு பகுதியை அமெரிக்க, சர்வதேச நாணயநிதி உதவியுடன் தள்ளுபடி செய்யவும், கடன்முறி வட்டி செலுத்தும் காலத்தை தள்ளிப்போடவும் அல்லது வட்டியைக் குறைக்கவும் கடன் வழங்கியோர்களிடம் கோரிக்கை விடப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இது நடந்து கொண்டிருக்கும் போது கோத்தபாய புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார். இது அரசியல் உறுதிதித் தன்மையை தற்காலிகமாக நிலைநாட்டும் முயற்சியாகும். எதிர்கட்சிகளின் ஆட்சி அமைக்கமுடியாத பலவீனத்தை அமெரிக்காவும், இந்தியாவும் அவதானித்ததன் அரசியல் நகர்வு இது.
முதலில் கோத்தபாய ஆட்சியை சீனாவுக்கு எதிராக வீழ்த்த முயற்சித்த அமெரிக்காவும், இந்தியாவும், இது இப்போதைக்கு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லை என்பதால் பிளான் “B”யை கையில் எடுத்துள்ளன. இதன் ஒரு வெளிப்பாடே புதிய அமைச்சரவை. மறுபக்கத்தில் “பாம்புக்கும் நோகாது கம்புக்கும் நோகாது” கொழும்பில் அமெரிகத் தூதுவர் விட்டுக்கொண்டு பராக்கு காட்டுகிறார்.
சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் நீண்டகாலத் கடன்களும், இந்திய, சீன குறுங்காலக் கடன்களுடன் நாட்டை படிப்படியாக பொருளாதார ஸ்த்திர நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் அது அரசியல் ஸ்த்திரத் தன்மையிலேயே தங்கியிருக்கிறது. புதிய அரசியல் சூழல் நிலைப்பதே அதைத் தீர்மானிக்கும்.
அன்று இராவணனிடம் இருந்து சீதையை சிறை மீட்டான் அனுமான்!
இன்று இராணுவக் கடன் பொறியில் இருந்து ராஜபக்சாக்களை சிறை மீட்பாரா சீதா ராமன் ?
காலமே…. பதில்….!