— பி.ஏ. காதர் —
கோத்தா வெளியேறு கிராமத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை விமர்சிப்பவர்கள் கூட அதனை கடந்து போகமுடியாமல் உள்ளது.
பல பார்வைகள்..
21.04.2022 அன்று ‘நியூஸ்பெர்ஸ்ட்’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க “கோத்தா வெளியேறு கிராமத்தில்” நடைபெறும் போராட்டத்தை பிரான்சு புரட்சிக்கு ஒப்பிட்டார். இலங்கையின் முன்னணி தொழில் அதிபர்களின் ஒருவரான கிரிஷாந்த பிரசாத் குரே அண்மையில் ‘நியூஸ் பெர்ஸ்ட்’ பத்திரிகைக்கு (19.04.2022) வழங்கிய ஒரு நேர்காணலின்போது ‘இப்போராட்டம் முடிவடைந்த பின்னர், முழு உலகமும் சிவில் செயல்பாட்டுக்கான பாடபுத்தக முன்னுதாரணமாக இலங்கையை நோக்கும்’ என பூரிப்புடன் கூறினார்.
இத்தகைய கருத்தை மறுக்கும் வர்க்க சிந்தனையாளர் “இப்போராட்டம் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டமே தவிர சமூக அமைப்பை மாற்றுவதற்கான போராட்டமல்ல, இதனால் ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்து கிடையாது. எனவே ஆளும் வர்க்கமும் இதனைக் கொண்டாடுகிறது.” என கூறுகிறார்கள். இன்னும் ஒரு சாரார், “இதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்?இதற்கான நிதியும் ஆலோசனையும் சர்வதேச ஆதரவும் எங்கிருந்து வருகிறது?” என வினா எழுப்புகிறார்கள். “எந்த தலைமையும் இல்லாமல் நடைபெறும் இப்போராட்டம் எந்த திசையில் பயணிக்கும் எங்கு போய் முடியும் எனக்கூறமுடியாது, எனவே கவனமாகத்தான் ஆதரிக்கவேண்டும்” என இன்னொரு சாரார் எச்சரிக்கை செய்கிறார்கள். “விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் தெருவில் இறங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் நடத்தும் போராட்டத்தை ஒரு காளியாட்டமாக ‘கோத்தா வெளியேறு கிராமம்’ மாற்றிஅதன் வீரியத்தை குறைத்து ஆட்சியாளர்களை காப்பாற்றிவருகிறது” என்ற விமர்சனமும் ஒலிக்கிறதும். இன்னொரு புறத்தில் ஒரு சில பேரினவாத பெளத்த பிக்குகள்” உண்மையான சிங்கள பெளத்த அரசு இது, இதனை காப்பாற்றுவது எமது கடமை’ என கூக்குரல் இடும்போது மறுபுறத்தில் ஒரு சில குறுகிய தமிழ் தேசியவாதிகள் “எம்மை அழிக்கும்போது நீங்கள் எல்லோரும் எங்கே போயிருந்தீர்கள்” என கேள்வி எழுப்புகிறார்கள்.
பேரினவாதிகளும் குறுகிய தேசியவாதிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதும் இவர்களின் குரல்கள் பெரிதாக ஒலிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இவ்இரட்டையர்களின் இனவாத கருத்தை ஒதுக்கிவிடவேண்டும். ஆனால் மேற்கூறிய ஏனைய கருத்துகளை அவ்வாறு ஒதுக்கிவிட முடியாது.
நினைத்தோமா இப்படி நடக்கும் என்று…
2009 ல் தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீதும் 2019 திட்டமிடப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பிணக்குவியலின் மீதும் முஸ்லீம் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறியாட்டத்தின் மீதும் தனி சிங்கள வாக்குகளை அறுவடை செய்துகொண்டு அறுதி பெரும்பான்மை இராட்சத பலத்தோடு ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தபோது எண்ணிக்கையில் சிறுபான்மையான அனைத்து தமிழ் பேசும் மக்களது எதிர்காலமும் கேள்விக்குறியானது. பெளத்தமத பீடமும் அறுதிபெரும்பான்மை சிங்கள மக்களும் சிங்கள அரச படைகளும் மாத்திரமல்ல, முழுநிர்வாக இயந்திரமும் நீதிமன்றமும் கூட இவ்வாட்சியாளர்களின் பின்னால் இனவாத ரீதியில் அணிதிரண்டு நின்றபோது பாசிசத்தின் கோரமுகம் தென்படத் தொடங்கியது. மஹிந்த இவர்களின் மற்றொரு மதமானார் நாட்டை மீட்ட தெய்வமகனாக இவர்களால்கொண்டப்பட்டார். யாரவது எதிர்பார்த்தார்களா ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களே இவ்வளவு சீக்கிரம் கிளர்ந்தெழுந்து “ஆட்சியைவிட்டு வெளியேறு” எனதெருவில் இறங்கி போராடுவார்கள் என்று?
யாராவது எதிர்பார்த்தார்களா சிங்கள இனவாதத்துக்கு எதிராக சிங்கள மக்களே குரல் கொடுப்பார்கள் என்று? சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் மொழி கடந்து மதம் கடந்து ஓரணியில் நின்று போராடுவார்கள் என்று? இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அதிசயம் நடைபெறுகிறது. இந்த அதிசயம் எப்படி நடைபெற்றது?
புரட்சிகர சூழலும் புரட்சியும்..
புரட்சிகர சூழல் என்பது இதுதான். ஆயிரம் நூல்களைவிட ஒரு புரட்சிகர போராட்டம் மக்களுக்கு ஆயிரம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என ஒரு மேதை கூறியது இதைத்தான். வி.ஐ.ஜோன் ரீட் “உலகை குலுக்கிய அந்த பத்து நாட்கள்” என்ற நூலில் உலகை மாற்றிய 1917 ரஷ்ய புரட்சி, 1547 முதல் ரஷ்யாவில் கோலோச்சிய சார் மன்னராட்சியை சில நாட்களில் தூக்கி எறிந்ததை நேரடி சாட்சியாக விபரித்தது இதைத்தான்.
பல்லாண்டுகளாக சிறுகச்சிறுக திரண்ட மக்களின் அதிருப்தித்துகள் கொதிநிலை கொண்டு பொங்கி எழும் போது அவை புரட்சிகர சூழல் எனப்படுகின்றன. எல்லா புரட்சிகர சூழல்களிலும் புரட்சிகள் வெடிப்பதில்லை. பாரிய போராட்டங்கள் யாவும் புரட்சியாக மாறுவதுமில்லை. 2010 டிசம்பர் 18ம் திகதி முஹம்மது பௌஷீசி என்பவர் போலீஸ் ஊழலுக்கும் வன்முறைக்கும் எதிராக தீக்குளித்ததை அடுத்து துனிசியாவில் வெடித்த ஜனநாயகத்துக்கான பாரிய போராட்டம் இதற்கொரு உதாரணம். 1955 டிசம்பர் 1 ம் திகதி ரோசா பார்க்ஸ் என்ற கறுப்பின வீரப்பெண் தான் அமர்ந்திருந்த பஸ் ஆசனத்தை வெள்ளை இன பயணிக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததை அடுத்து இன ஒதுக்கல்வாத போலீசார் அவரைக் கைது செய்ததை தொடர்ந்து வெடித்த நிறவெறிக்கு எதிரான மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) தலைமையில் அமெரிக்காவிலே நடைபெற்ற பாரிய போராட்டம் நிறவாதத்திற்கு பலத்த அடிகொடுத்து ஜனநாயக கோரிக்கைகள் பல வென்றெடுத்தாலும் கூட- புரட்சியில் முடியவில்லை.
வோல் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (Occupy Wall Street ) என்ற சுலோகத்தின் கீழ் வங்கிகளுக்கும் கார்போரேட்களுக்கும் எதிராக 17 செப்டம்பர் 2011 அமெரிக்காவில் நடத்தப்பட்ட பாரிய போராட்டமும் சரி, 2013 ஜூலை மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ‘கருப்பு உயிர்கள் முக்கியம்’ என்ற இயக்கம் (Black lives matter ) 2020 மே 25ம் திகதி ஜார்ஜ் பிலோயிட் என்ற கருப்பு நிறத்தவர் டெரெக்சோவின் என்ற வெள்ளை நிறவாத பொலிஸ்காரன் முகம் நிலத்தில் கிடக்க அவரது கழுத்தில் தனது முட்டுக்காலை வைத்து நெறித்துக் கொன்ற கோரச் சம்பவத்தை அடுத்து உலகளாவிய ரீதியில் வெடித்த நிறவாதத்திற்கெதிரான இயக்கமும் சரி சமூக புரட்சியில் முடிவடையவில்லை. ஆயினும் இவை யாவும் வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தன.
கோத்தா வெளியேறு கிராமம் உருவான பின்னணி…
இலங்கையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இதுதான். இதற்கான ஒட்டுமொத்த உரிமையும் Gota GO Home Village கோரமுடியாதுதான், ஆனால் அதுவகிக்கும் முற்போக்கான பாத்திரத்தை குறைத்து மதிப்பிடமுடியாது.
இப்போராட்டம் எவ்வாறு தொடங்கியது?
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அதற்கு கோவிட் 19b மாத்திரம் காரணமல்ல. இதற்கான காரணத்தை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. வயலுக்கு பசளை இல்லை. மீன் பிடி படகுகளுக்கு எண்ணெய் இல்லை. குழந்தைகளுக்கு பால்மா இல்லை. மக்களுக்கு உணவில்லை. மக்களிடம் பணம் இல்லை, பணம் இருந்தால் கடையில் பொருட்கள் இல்லை. படிப்பதற்கு வீட்டில் வெளிச்சமில்லை. சமையறையில் சமைப்பதற்கு கேஸ் இல்லை. மின்வெட்டால் நட்டின் முழு பொருளாதாரமே ஸ்தம்பித்து போயுள்ளது. மக்கள் தொழிலுக்கு செல்லாமல் நாட்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள். இதுவரை 8 பேர் வரிசையில் நின்று மயக்கமுற்று விழுந்து இறந்திருக்கிறார்கள். இப்படியான ஒரு அவலநிலையை மக்கள் இதுவரை இலங்கையில் சந்தித்ததில்லை. இவ்வாறு மக்கள் அல்லல் படும்போது ராஜபக்ச குடும்பத்தின் ஊழலும் ஆடம்பர வாழ்வும் ஆணவ மனோபாவமும் மக்களின் ஆத்திரத்திற்கு மேலும் தூபமிட்டுள்ளது.
இதனால் கொதித்தெழுந்த மக்கள் தனித்தனியாகவும் தன்னெழுச்சியாகவும் தெருவில் இறங்கி போராட தொடங்கினார்கள். அவற்றை நசுக்க அவன் கார்ட் அதிபதி நிசங்க சேனாதிபதியினதும், இராணுத்திலும் போலீசிலும் உள்ள சிலரதும் துணையோடு அவற்றை நசுக்க அரசு தயாரானது. அதுவரை அன்றாடம் எழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த சில அரசியல் கட்சிகளும் கூட அரச பயங்கரவாத அடக்கு முறைக்குதாம் முகங்கொடுக்க நேருமோ என்ற அச்சத்தில் தலைமை பொறுப்பிலிருந்து பின்வாங்கின. இதனால் தன்னெழுச்சியான இப்போராட்டங்கள் கட்டுமீறிப்போய் அரசின் விருப்பத்திற்கு இரையாகும் ஆபத்து உருவானது. 2022 மார்ச் 31ம் திகதி மீரிஹானவில் உள்ள ஜனதிபதி கோதபாயவின் இல்லத்தருகே நடைபெற்ற தன்னெழுச்சியான போராட்டம் இவ்வாபத்தை கோடிட்டுகாட்டியது.
அங்குமுன்- திட்டமிடாத மக்கள் அணிதிரண்டு தமது ஆத்திரத்தை அமைதி வழியில் வெளிக்காட்டினர். மேற்கூறிய அரசின் கூலிகள் கூட்டத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர், ஒரு இராணுவ பஸ்சுக்கு அவர்களில் ஒருவனே நெருப்பு வைத்தான் என்று கூறப்படுகின்றது. அவன் செய்வதை ஊடகங்கள் படம் பிடித்து அம்பலப்படுத்தின. ஆனால் அவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. போலீஸ் மக்களை தாக்கியது. சுமார் 50 பேர் காயமடைந்தனர் 45 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கு அப்பகுதியில் பிரகடப்படுத்தப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் இத்திட்டம் இம்முறை பலிக்கவில்லை. மாறாக மக்கள் போராட்டமாக அது பரிணமித்தது. முன்னூறுக்கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகி பெரும்பான்மையினரை விடுதலை செய்தனர். அதன் பின்னர் மக்கள் போராட்டத்தின் குவிமையமாக காலிமுகத்திடல் மாறி Gota GO Home Village ஆக உருவானது.
மரத்தை மாத்திரம் பார்த்தால் காட்டைப் பார்க்க முடியாது
இதன் பின்னனியில் வெளிசக்திகளின் கரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூற முடியாது. ஏனெனில் இத்தகைய பாரிய நெருக்கடிகள் நாடுகளில் ஏற்படும் போது வல்லரசுகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது இன்றையப் போக்காகும். வர்ண புரட்சிகள் (colour revolutions) என குறிப்பிடப்படும் எகிப்து லிபியா உக்ரைன் போன்ற நாடுகளில் நடைபெற்ற மக்கள் பேரெழுச்சிகளின் பின்னால் அமெரிக்கா இருந்ததும், முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகன் காலத்தில் 1983ல் ஜனநாயகத்திற்கான தேசிய பங்களிப்பு (the National Endowment for Democracy -NED) என்ற பெயரில் சி.ஐ.ஏ. யின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பின் மூலம் பிறநாடுகளில் ஆட்சி மாற்றத்துக்காக அங்கு இயங்கும் அரசு சாரா அமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது நிதி வழங்கப்படுகிறது என்பதெல்லாம் இன்று பரம இரகசியமல்ல.
2015 ல் இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றத்தில் கூட வெளிச்சக்திகளின் கரம் இருந்தது. அது போன்றே Gota GO Home மிலும் அதன் கரங்கள் இருக்கக்கூடும். அது மாத்திரமல்ல உளவுப்பிரிவு அதற்குள் ஊடுருவி இருக்கும், ஊடுருவி இருக்கிறது. இது சித்திரத்தின் ஒரு பக்கம் மாத்திரமே. மறுபுறம் அனைத்து அரசியல் கட்சிகளும், பெரும்பாலான சமூக ஸ்தாபனங்களும் தொண்டர் நிறுவங்களும், தொழிலாளர்களும், மாணவர்களும், கல்விமான்களும், தொழிநுட்பவியலார்களும், அனைத்து மதத்தினரும், அனைத்து மொழிபேசுவோரும் ஆண்களும் பெண்களும் குறிப்பாக இளைஞர்கள் தலைமைதாங்குகின்ற இப்போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்குகொள்கிறார்கள். எனவே வெளிச்சக்திகள் ஊடருவிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அதில் இருந்து ஒதுங்குவது காட்டை முழுமையாக பார்ப்பதற்கு பதிலாக மரத்தை மாத்திரம் பார்க்கும் குறுகிய பார்வையாகவே இருக்கும். இப்போக்கு பிழையானவர்களின் கையில் இப்போராட்டத்தை தரை வார்ப்பதாகவே விளைவு அமையும்.
கோத்தா வெளியேறு கிராமத்தின் வரலாற்று பாத்திரம்
கோத்தா வெளியேறு கிராமம் இதுவரைவேறு எந்த அரசியல் கட்சியும் தலைவரும்செய்யாத காரியத்தை செய்துள்ளது, அவற்றுள் நான்கு பிரதானமானவை:
ஒன்று, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிங்கள பெளத்த பேரினவெறியை பின்தள்ளி இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல முழு மக்களுக்கும் அது சொந்தமானது என்ற சித்தாந்த்தை முன்னிறுத்தியுள்ளது. இது தற்காலிகமானதாக இருக்கலாம் ஆனால்இந்த உடைவு முக்கியமானது. இது ஒரு நல்ல ஆரம்பம். இதுவரை பெருந்தேசியவாதத்தின் முன்னால்அடிமை -அமைதி காத்தவர்கள்கூட இனி துணிந்து இந்த புதிய சித்தாந்தத்தை முன்னெடுக்கமுடியும்.
இரண்டாவது, இதுவரை ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கமும் மக்கள் ஆதரவால் பதவிக்கு வரவில்லை, மாறாக ஆட்சியில் இருக்கும் அசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் இன முரண்பாடுகளை பயன்படுத்தியுமே ஆட்சியை கைப்பற்றின. முதற்தடவையாக ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தையும் அரசியல் சீர்திருத்தத்தத்தையும் முன்வைத்தே எந்த கட்சியும் ஆட்சிக்கு வரவேண்டிய நிர்ப்பந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று, ஆங்காங்கே பசளை கோரியும் பால்மா கோரியும் பெட்ரோல் கோரியும் நடைப்பெற்ற பொருளாதார போராட்டங்களுக்கு ஓரூ அரசியல் அடிப்படையை கொடுத்து அனைத்து சக்திகளையும் ‘கோத்தா வெளியேறு’ என்ற கோசத்தின் கீழ் ஒன்றிணைத்து அதனை நாடு தழுவிய கோஷமாக மாற்றியது.
நான்காவதாக, வன்முறையற்ற அமைதி வழி போராட்டமே தமது பாதை என்பதில் உறுதியாக நிற்பதால் மத்திய தர வர்க்கத்தையும் இணைக்க முடிந்தது, அரசின் சதி முயற்சிகளை அம்பலப்படுத்த முடிந்தது, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற முடிந்தது.
இங்கு ஒரு பிரதான விடயத்தை சுட்டிக்கட்ட வேண்டும்: கொழும்புக்கு வெளியே நடைபெறும் மக்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் போராட்டங்கள் இன்றேல் ‘கோத்தா போ’ போராட்டம் வெறும் களியாட்டமாகவே மாறியிருக்கும். அரசாங்கம் தங்கள் மீது மக்களுக்குள்ள ஆத்திரத்தை தணிக்கும் ஒரு வடிகாலாக இதனை பயன்படுத்தி நிம்மதி மூச்சு விட்டிருக்கும். அது மாத்திரமல்ல இதில் முன்னணி பாத்திரம் வகிக்கும் அனுபவமற்ற இளைஞர்களும் வெளிபோராட்டங்கள் இன்றேல் பிழை இழைக்கும் வாய்ப்பு அதிகம். உதாரணமாக போராட்டம் சற்று தொய்வு அடைந்தபோது ராஜபக்ச குடும்பத்தின கூலிக் கும்பல் ஒன்றின் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று பேட்டியளித்ததையும், பின்னர் ரம்புக்கான துப்பாக்கி சூட்டுக்கு பிறகு போராட்டம் சூடு பிடிக்கத்தொடங்கிய பின்னர் மறுபடியும் களியாட்ட மனநிலையில் இருந்து போராட்ட மனநிலைக்கு மாறியதையும் இங்கு நினைவு கூறலாம்.
எமது கடமை என்ன?
தூய புரட்சி என்பது வெறும் கற்பனாவாதமே. அப்படி ஒரு புரட்சி எங்கும் எப்போதும் நடைபெறப்போவதில்லை. மக்கள் போராட்டம் என்பது தெளிவானவர்கள், தெளிவற்றவர்கள் பத்தாம்பசலிகள், புதிய சிந்தையாளர், ஏன் முன்னர் எதிரியாக இருந்தவர்கள் கூட கலந்து கொள்ளும் ஒரு கதம்பமாகும். இதற்குள் முரண்பட்ட பல்வேறு நலன்கள் முட்டி மோதும். இப்படியான வரலாற்று காலகட்டத்தில் எவரும் ஒதுங்கி இருக்கக்கூடாது. விழிப்பு பெற்றவர்கள் இதில் இணைந்து கலந்துbதீவிரமாக செயல்பட்டு தலைமை கொடுக்கவேண்டும். இல்லையென்றால் ‘மக்கள் போராடுகிறார்கள் ஆளும் வர்க்கம் தலைமையை அபகரிக்கிறது’ என்ற ஒரு மகா மேதையின் கூற்று உண்மையாகிவிடும். 2015 லும் இதுவே இங்கு நடந்தது. அது மீண்டும் நடைபெறக்கூடாது. புரட்சிகர சக்திகள் தங்களில் நம்பிக்கை வைக்கவேண்டும், களத்தில் இறங்கி தமது கொள்கையாலும், செயற் திறனாலும் நேர்மையாலும் மக்களின் நம்பிக்கையைவென்று தலைமையை வெல்லவேண்டும், ஊடுருவல்காரர்களை ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வரலாற்று மாற்றம் நடைபெறும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பவனும் வெறும் விமர்சனத்தால் தன்னை தூயவன் என கட்ட முயல்வோனும் வரலாற்றுக்கு துரோகமிழைத்தவனே.