‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்  (வாக்கு மூலம்-11) 

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்  (வாக்கு மூலம்-11) 

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்சித் தலைவர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கெதிராகவும்- பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கெதிராகவும்- அரசாங்கத்திற்கெதிராகவும் எதிரணிக் கட்சிகளாலும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் – பேரணிகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. 

அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதியினால் இம்மாதம் முதலாம் திகதி (01.04.2022) பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை -பின்னர் 02.04.2022 மாலை 6.00 மணி முதல் 04.04.2022 காலை 6.00 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு- சமூக ஊடகங்களின் முடக்கம் – பின்னர் 05.04.2022 அன்று நள்ளிரவு முதல் விலக்கப்பட்ட அவசரகால நிலைமை- பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை இராஜினாமா – காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை- கொழும்பு காலிமுகத்திடல் முன் வீதியில் பொலீஸ் கனரக வாகனங்களின் குவிப்பும் பின் அவை அகற்றப்பட்டமையும் – 18.04.2022 அன்றைய புதிய அமைச்சர்கள் நியமனம்  என்று எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்திற்கு எதிரானஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிடவில்லை. ஜனாதிபதி கோட்டாபாய பதவிவிலக வேண்டுமென்றகோரிக்கை நாளுக்கு நாள்வலுப்பெற்று வருகிறது. 

எதிரணியைப் பொறுத்தவரை ‘பொது ஜன பெரமுன’ க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துப் பின் அதிலிருந்து வெளியேறியுள்ள பங்காளிக் கட்சிகளென்றாலும் சரி அல்லது அரசாங்கக் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் அதிருப்தியாளர்கள் அணியென்றாலும் சரி -பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளென்றாலும் சரி தங்களுக்குள்ளேயே ஐக்கியப்படாமல் ஆளுக்கொரு கோரிக்கையையும் கட்சிக்கு ஒரு கோரிக்கையையும் அணிக்கு ஒரு கோரிக்கையையும் தனித்தனியாக முன்வைத்து அரசியல் குட்டையைக் குழப்பி அதில் மீன்பிடிக்கக் காத்திருக்கிறார்களேயொழிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான எந்தவொரு உருப்படியான யோசனைகளையும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. 

எதிரணிகள் அது சிங்களத் தரப்பு என்றாலும் சரி தமிழ்த் தரப்பு என்றாலும் சரி முஸ்லிம் தரப்பு என்றாலும் சரி அடுத்த தேர்தலைக் குறிவைத்து – ஆட்சி மாற்றத்தைக் குறிவைத்து- அரசியல் செய்கின்றனவே தவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான எந்தவொரு உருப்படியான யோசனையும் அவற்றிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 

மக்களோ மாற்று வழி தெரியாமல் அங்கலாய்த்துப் போயுள்ளனர். 

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டபாய தாமாகப் பதவிவிலகினாலோ அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பு ஒழிக்கப்படுவதினாலோ அல்லது 20 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நீக்கிப் பதிலாக 19 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை மீளக்கொண்டு வருவதனாலோ அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதனாலோ அல்லது ஜனாதிபதி மீது குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவந்து (அது நீண்ட நடைமுறையைக் கொண்டது – long process) நிறைவேற்றி ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வதனாலோ அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுவதனாலோ பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக எந்தத் தீர்வும் வந்துவிடப் போவதில்லை. 

சிலவேளை தற்போதுள்ள ஜனாதிபதி தார்மீகப் பொறுப்பேற்றுத் தாமாகவே அரசியல் நாகரீகத்துடன் பதவியை விட்டு விலகினாலோ (இதற்குச் சாத்தியம் குறைவு) அல்லது குற்றப்பிரேரணை (Impeachment) மூலம் பதவியிழந்தாலோ (இதற்கும் சாத்தியம் குறைவு) அரசியலமைப்பு விதிகளின்படி தற்காலிக ஜனாதிபதியாகப் பிரதமர் தவறின் சபாநாயகர் பதவி ஏற்பார். பின் பாராளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து புதிய நிரந்தர ஜனாதிபதியை ஜனாதிபதிப் பதவியின் மிகுதிக் காலத்திற்குத் தெரிவுசெய்யும். இந்த நிகழ்வுகள் நடைபெற்றால் தற்போதைய ஜனாதிபதிக்கும் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் சற்றுத் தணியுமே தவிர, இது பொருளாதார நெருக்கடிக்கு எந்தத் தீர்வையும் உடனடியாகத் தந்துவிடப் போவதில்லை. தலையணையை மாற்றுவதால் தலையிடி தீரப்போவதில்லை. 

சகல கட்சிகளும் ஒன்றிணைந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்பதும் இன்னொரு பக்கத்துக் கோரிக்கை. 

அரசியலமைப்பில் இவ்வாறான ‘இடைக்கால அரசாங்கம்’ என்ற விடயமொன்றில்லை. பாராளுமன்றம் கலைந்தால் அல்லது கலைக்கப்பட்டால் அடுத்த புதிய பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடந்து அதன் பெறுபேறுகளுக்கமைய புதிய பாராளுமன்றம் அமையும் வரைக்கும் பழைய அமைச்சரவை இடைக்காலத்தில் ‘காபந்து அரசாங்கம்’ ஆகச் (Care Taker Government) செயற்படுமேயொழிய ‘இடைக்கால அரசாங்கம்’ என்றொன்றில்லை.அப்படியேயென்றாலும் அதனை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளவர் யார்? ‘இடைக்கால அரசாங்கம்’ என்றொன்று இல்லாத போது அதனை அமைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இல்லை. 

ஆனால், பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒரு ‘குழு’வை அல்லது ‘அணி’யை அரசாங்கத்தை அமைக்கும் படி கோர ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. அப்படியாயின் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல கட்சிகளும் (எதிரணிக் கட்சிகளும் அரசாங்கத்தின் பக்கமிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் அணியும்) இணைந்து பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையை முதலில் எழுத்தில் தெரிவிக்கவேண்டும். பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்படியான ஒன்றுதான் புதிய அரசாங்கமாக (இடைக்கால அரசாங்கமாக) அமையச்சாத்தியமுண்டு. அதற்கானஐக்கியமும் கருத்தொருமைப்பாடும் எதிரணிக் கட்சிகளிடையேயும் அரசாங்கத்தின் பக்கமிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களிடையேயும் இல்லை. 

அப்படி நடைபெற்றாலும் புதிய பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிக்கவும் வேண்டும். அதற்கு வழிவிடும் வகையில் தற்போதைய பிரதமர் ராஜபக்ச தாமாகவே பதவி விலகுவாரா என்பது சந்தேகமே. 

இந்த நிலையில் தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும்தான் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வைத்தேட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை (Political Stability) அவசியம். இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மையும் நல்லெண்ணமும் கூட அரசியல் ஸ்திரத் தன்மைக்குப் பங்களிக்கும். தீர்வைத் தேடும் போது பொருளாதார நெருக்கடிக்கான பிரதானமான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும். நோயின் காரணத்தையும் நோயையும் சரிவர அடையாளம் கண்டால்தான் அதற்கான மருந்தைக் கண்டறிய முடியும். அதற்கு நோயாளியும் ஒத்துழைக்க வேண்டும். 

பல விதமான பக்கக் காரணங்கள் இருந்தாலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான பிரதானமான அடிப்படைக் காரணம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தமும் – இவ் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளும் – யுத்தத்திற்கான செலவுகளும் – 2009இல் இவ் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்றுவரை இவ் யுத்தத்திற்கான மூலகாரணமாயிருந்த இனப்பிரச்சினைக்கு இன்னும் திருப்தியான தீர்வு எய்தப்படாமல் இருப்பதுமாகும் என்பதை அரசாங்கம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்களக் கல்விச் சமூகமோ – சிங்கள அரசியல் தலைவர்களோ இன்னமும் இதுபற்றி பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறார்களில்லை. காரணம் அவர்களும் இவ் யுத்தத்தை ஏதோவொரு வழியில் ஆதரித்தவர்களே. 

மேலும், இலங்கையின் நீதித்துறை மற்றும் காவல்துறைச் செயற்பாடுகளின் மீதும் – மனித உரிமைகள் செயற்பாடுகளின் மீதும் – 2009 இல் யுத்தம் முடிவுற்ற பின்னரான நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளின் மீதும் (Transitional Justice) சர்வதேச சமூகமும் நம்பிக்கையிழந்துள்ளது. இந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான நேர்மையான – வெளிப்படையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டால்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குச் சர்வதேச சமூகம் கைகொடுக்கும். இலங்கை அரசாங்கம் தனது ‘சர்வதேச நன்னடத்தையை’ நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச சமூகத்தின் உதவிகிடைக்காது அல்லது காலதாமதமாகும். சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றிப் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையால் தனித்து நின்று தீர்வு காணமுடியாது. வழமைபோல் கண்துடைப்பு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச சமூகத்தை இலங்கையால் இனி ஏமாற்றவும் முடியாது. 

இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் விரைவாக மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

 * வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிலைமாறு கால நீதி நிவாரணம் இன மத பாரபட்சமின்றித் திருப்தியாகக் கிடைப்பதற்குரிய பொறிமுறைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஏற்படுத்தல். 

 * பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குதல் அல்லது ஐநா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச அமைப்புகளுடன் கலந்துரையாடிச் சர்வதேச நியமங்களுக்கேற்பச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல். 

 * சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக எடுத்தல். 

* அரச ‘சிவில்’ நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுதலை மற்றும் இராணுவ மயப்படுத்தப்படுதலை நிறுத்துதல். (ஏற்கெனவே வழங்கப்பட்ட இவ்வாறான நியமனங்களை ரத்துச் செய்ய வேண்டும்) 

 * அரச நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தல். (ஏற்கனவே நடைபெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்த பாரபட்சமன்ற-பக்கச்சார்பற்ற விசாரணைகளும் அவசியம்) 

 * பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும்- முறையாகவும்-அர்த்தமுள்ள விதத்திலும் அமுல் செய்வதற்கான பொறிமுறைகளை வகுத்தல். 

இவற்றை நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் கொண்டே செய்ய முடியும். அமைச்சரவைத் தீர்மானங்களின் மூலமாகவும் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படக்கூடிய சட்டமூலங்களின் மூலமாகவும் இவற்றைக் காலதாமதமின்றிச் சாத்தியப்படுத்தலாம். இதற்குப் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களோ தேவையில்லை. ஆட்சி மாற்றமும் இதற்கு அவசியமில்லை. ஆக, தேவையானது ஜனாதிபதியின் அரசியல் விருப்பம் (Political Willingness) மட்டுமே. இவை நடைபெற்றால் அயல் நாடான இந்தியா உட்பட (மேலதிக உதவி) ஏனைய சர்வதேச நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் விரைந்து உதவிக்கு வரும்.