— அழகு குணசீலன் —
ஒரு வாரத்தையும் கடந்து காலிமுகத்திடல் “மக்கள் போராட்டம்” தொடர்கிறது. ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ஏற்றாற்போன்று 24 மணி நேர சேதி சொல்கின்றன. ஒரு பக்கத்தில் இவை வலிந்து சொல்லும் சேதியாக உள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக அரசியல் கலப்பற்ற, கட்சிப் பின்னணிகள் அற்ற, உள் நாட்டு வெளிநாட்டு சக்திகளின் உந்துதல்கள் அற்ற முற்று முழுதான மக்களின் சுயாதீனமான செயற்பாடு இந்தப் போராட்டம் என்று காட்டுவதற்கு அவை முயற்சி செய்கின்றன. புனிதப் படுத்துவதற்காக அவை “படாத பாடு” பாடுபடுகின்றன. இது அவை மீதான சந்தேகத்தை இயல்பாகவே ஏற்படுத்திவிடுகிறது.
காலிமுகத்திடல் நிகழ்வுகளை தொடரும் எவரும் இதனை அவதானிக்க முடியும். மேற்குலக பாணியில், நன்கு திட்டமிட்டு ஒழுங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்த உள்ளூர் அரசியல் சக்திகளின் பிரசன்னம் திடீரென காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களும் அவற்றோடு தொடர்பான உள்ளூர் அமைப்புக்களும் இவற்றிற்குப் பின்னணியில் உள்ளன என்ற சந்தேகம் நிலவுகின்றது. மேற்குலக, பிராந்திய நாடுகளின் மறைகரம் குறித்து பேசப்படுவதையும் முற்றாக மறுக்கமுடியாது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகேட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பொருளாதாரப் பிரச்சினையே இல்லை என்பதைப்போன்று பெருஞ்செலவில் சகல அடிப்படைவசதிகளுடனும் நடாத்தப்படுகிறது. அன்றாட உணவுக்கு வழியில்லை என்று கூறும் மக்கள் இன்றைய சூழலில் தங்கள் வயிற்றைப் பட்டினி போட்டு போராட்டத்திற்கு உணவும்,
கடிப்பானும் குடிப்பானும் விநியோகம் செய்ய முடியுமா? காலிமுகத்திடலில் கூடியிருப்பவர்களுக்கு உணவு வழங்க ஒருவேளைக்கு, ஒரு நாளைக்கு, ஒருவாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு ஏற்படக்கூடிய செலவு எவ்வளவு? இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது. அதுவும் ஒரு வங்குரோத்து நாட்டில்?
இங்கு கூடியிருப்பவர்கள் பெரும்பாலும் மத்திய கொழும்புவாசிகள், குறிப்பாக நடுத்தர வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்கள். கொழும்புக்கு வெளியில் இருந்து வேலைக்கு வருபவர்கள் அவ்வப்போது “புதினம்” பார்க்கும் வகையில் அங்கு வந்து போகிறார்கள்.
இது அங்கு இடம்பெறுவது சாமானிய மக்களின் பட்டினிச் சாவுக்கு எதிரான போராட்டம் என்பதற்கப்பால் ஒரு தேர்த்திருவிழாவாக, கொண்டாட்டமாக காட்சிப்படுத்தப்படுகிறது. அதைவிடவும் இலங்கையின் வெளிநகரங்கள், கிராமங்கள், தோட்டப் பகுதிகள், மற்றும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இறக்குமதி செய்யப்பட்டவர்களால் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தவையையும் இன்று காணமுடியவில்லை.
இவை அனைத்தும் ஊடகங்கள், மக்களின் சுயாதீனமான போராட்டம் என்று திருப்பி திருப்பி அடித்துச் சொல்லும் சேதிகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை புனிதப் படுத்துவதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? அதற்குப் பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் எவை?
இச் சக்திகளுக்கு ஒரு தேவை இருக்கிறது. அதுதான் பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண்பதை மறைத்து, இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கை மறைத்து, மக்களுக்கு பொருளாதாரத்தைக் காட்டி ஏமாற்றி, தமக்கு வேண்டிய அரசியல் மாற்றத்திற்கான திசையை நோக்கி நகரவைப்பது. அதுவே இன்று காலிமுகத்திடலில் இடம்பெறுகிறது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை பட்டியலில் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் பின் தள்ளப்பட்டு, ஆட்சிமாற்றம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்துவதற்கும் இதுதான் காரணம்.
சரி, அரசியல் மாற்றத்தை வேண்டுகிறார்கள் என்றால்,அதற்கான கோரிக்கைகள் சிங்கள பேரினவாத அரசையும், அதற்கான கட்டமைப்பையும் பாதுகாப்பதாகவே உள்ளது. சிறுபான்மைத்தேசிய இனங்களான மலையக, முஸ்லீம், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்து எந்தக்கோரிக்கையும் இல்லை.
கூட்டத்தோடு கோவிந்தாவாக நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு, 19வது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்தல், பாராளுமன்றத்தை கலைத்தல், இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் என்பனவற்றின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைப் பிரச்சினைகள் எப்படித் தீர்கப்படவுள்ளன. இது குறித்த திட்டவட்டமான முன்மொழிவுகள், கோரிக்கைகள் என்ன?
இந்தக்கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் யாரை நம்பி, எது கிடைக்கும் என்று நம்பி மக்கள் வீதியில் இறங்குவது. சிறுபான்மை தேசிய இனங்கள் அரசியல் தீர்வாக கூப்பன்மாவையும், அரிசியையும் அல்லது கோத்தாவின் இடத்தில் சஜீத்தையும் கேட்கவில்லை என்பதை வீதிக்கு இறங்க அழைப்புவிடுபவர்கள் அறிவார்களா?
சிறுபான்மை மக்கள் வீதிக்கு இறங்குவதற்கு முன்னர் அவர்களின் அதிகாரப்பகிர்வு அபிலாஷைகள் குறித்து உறுதிமொழி வழங்கப்படவேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் சஜீத் பிரேமதாச ஒரு நாடு இரு தேசத்தை அங்கீகரித்தாரா? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு உதவிகோரும் வெளிச்சக்திகளிடம் இந்த உத்தரவாதத்திற்கான பொறுப்பை ஏற்குமாறு சிறுபான்மை அரசியல் தலைமைகள் பேச வேண்டும். இல்லையெனில் தமிழ்பேசும் மக்கள் சுமந்திரனின் வீதியில் இறங்கும் அழைப்பை ஏற்பது எங்களை நாங்களே ஏமாற்றுவதாக அமையும்.
காலிமுகத்திடலில் சிங்கள அரசியல் தலைவர்களை, அமைப்புக்களைக் கொண்டு பகிரங்கமாக தமிழரசு கோரும் சுயாட்சியை வடக்கு கிழக்குக்கு வழங்குவோம் என்று பகிரங்க அறிவிப்புச் செய்ய சுமந்திரனால் முடியுமா? இதற்காக தமிழ்மக்கள் வீதியில் இறங்கவேண்டியதில்லை. இதை அவர்கள் 74 ஆண்டுகளாக செய்திருக்கிறார்கள். இதே காலிமுகத்திடலிலும் செய்திருக்கிறார்கள். செய்ய வேண்டியது சிங்கள மக்கள்.சிறுபான்மையினருக்குபெரும்பான்மையினருக்கு சமமான உரிமையை வழங்கு என்று அவர்கள் கோரிக்கை விடவேண்டும். இதை சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் செய்விக்க வேண்டும். செய்வார்களா..?
சிங்கள அரசிடம் அதிகாரப்பகிர்வு குறித்து எந்த உத்தரவாதமும் பெறாது நிபந்தனையற்று இந்திய இராணுவத்தை வெளியேற்ற சிங்கள பேரினவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் விளைவை முப்பது ஆண்டுகள் கடந்தும் தமிழ்பேசும் மக்கள் அனுபவிக்கிறார்கள், அதுவும் சிங்கள பேரினவாத ஜே.வி.பி. உடன் ஒத்துழைத்து இதைச்செய்தோம் என்பது வெட்கத்துக்குரியது, பிச்சை பாத்திரம் ஏந்தி கொழும்பு, டெல்கி, நியூயோர்க், லண்டன் என்று சிலர் ஓடித் திரிகிறார்கள். ஆயுதப்போராட்டம் அற்ற இச்சூழலில் தமிழ்த்தேசியம் மரபு ரீதியான போலி தரகு அரசியலில் இருந்து ஐதார்த்த அரசியலுக்கு திரும்ப வேண்டும்.
சப்பாத்துக்கு அளவாக கால்களை வெட்டுவதை தவிர்த்து, கால்களுக்கு அளவான சப்பாத்தைக் கோருவதே ஜதார்த்த அரசியல்.