அம்மாவைச் சொல்லி என்ன செய்ய? 

அம்மாவைச் சொல்லி என்ன செய்ய? 

  — அதிசயன் — 

“வழமையைப் போல வீட்டுக்குக் காசனுப்பினால், பதினைஞ்சு நாளைக்குள்ளை காசு முடிஞ்சுதெண்டு அம்மா சொல்லுறா? இனிக் காசைச் சாக்கிலதான் அனுப்போணும்” எண்டு சலிக்கிறான் நண்பன். 

“ஆனால் அம்மா ஒண்டும் கண்டபடி செலவழிக்கிற ஆளில்லை. போர்க்கால நெருக்கடிக்குள்ள தாக்குப் பிடிச்சுப் பழகின ஆள். வலு இறுக்கமான கை. தேவையில்லாமல் இழகாது. அதுக்காக ஒருக்காலும் பஞ்சம் கொட்ட  மாட்டா. பசி கிடக்கவும் விடா” எண்டு அவனே சொன்னான். 

“இலங்கையில இப்ப இருக்கிற பொருளாதார நெருக்கடிக்கு இனிக் காசனுப்பிக் கட்டாது. பேசாமல் ஆக்களை இங்கால (வெளிநாட்டுப் பக்கமாக) கூப்பிடுறதுதான்  வழி. அங்க ஆளை வித்துக் குடுத்தாலும் கட்டுப்படியாது” எண்டான் பக்கத்தில நிண்ட நண்பன். 

அவன்ரை நிலைமையும் இதுதான். மாதக் காசு எண்டு மாசாமாசம் அனுப்பிற காசு காணாதெண்டு, ரண்டு கிழமைக்கு முந்தி அவன்ர தகப்பனும் தணிஞ்ச குரல்ல சொன்னார். 

அவருக்குப் பிள்ளையளிட்ட கை நீட்டிக் காசு வாங்கவும் விருப்பமில்லை. வாங்காமல் இருக்கவும் முடியேல்ல. 

நிலைமை அப்பிடி. அந்தளவுக்கு நாட்டு நிலைமை கொண்டு வந்து விட்டிருக்கு. 

“நாடே ஆராரிட்டையோவெல்லாம் கையேந்துதாம். நீங்கள் பெத்த பிள்ளையிட்ட வாங்கினால் என்ன?” எண்டு மனிசிக்காறி சொன்னா. அவ சொன்னாலும் மனசுக்குள்ள ஒரு மெல்லிய கூச்சம். 

எல்லாத்துக்கும் காரணம், இலங்கையில உருவாகியிருக்கிற பொருளாதார நெருக்கடிதான். மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் சாமன்களின்ரை விலையேறிக் கொண்டிருக்கு. அதை விடப் பொருட் தட்டுப்பாடு. யுத்த காலத்தில கூட இப்பிடியொரு தட்டுப்பாடு வரேல்ல. அப்ப அறாவிலை வித்ததுதான். அது வேற. பொருளாதாரத் தடை இருந்ததால, தடுக்கப்பட்ட பிரதேசங்களுக்குப் பொருட்கள் வராது. அப்பிடி வந்தால் அதுக்கு மூண்டு நாலு மடங்கு விலையிருக்கும். அதைத் தவிர்க்கேலாது. ஏனெண்டால் நிலைமை அப்பிடி. 

ஆனால், அது யுத்தம் நடக்கிற பிரதேசங்களுக்கு மட்டுந்தான். மற்ற இடங்களில அப்பிடியிருக்கேல்ல. அங்கயெல்லாம் வழமையைப்போல கட்டுப்பாட்டு விலையிலதான் விற்றது. 

ஆனால், இப்ப அப்படியில்லை. இந்த நிலைமையே வேற. 

இது இலங்கை முழுக்க நடக்கிற தளம்பல். சமைக்கிற காஸிலேயே விளையாட்டைக் காட்டிறான்கள் எண்டால்…அடுப்படியே வெடிக்கத் தொடங்கீட்டுது.. 

கடைசியில அடுப்பைக் கூட எரிக்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கு இந்த (கோத்தபாய) அரசாங்கம். இதுக்குள்ள பொருட்களின்ரை விலையேற்றம்…. போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு. விவசாய உள்ளீட்டுப் பொருள் தடை… 

இண்டைக்குக்கு இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கேக்க, இலங்கையில சீமெந்தின்ரை விலை 100 ரூபாய் கூடியிருக்கு எண்டு அறிவிப்பு வந்திருக்கு. பால்மா 160 ரூபாயால மேலும் கூடியிருக்கு… 

அரிசி, பருப்பு, சீனி, உருளைக் கிழங்கு, வெங்காயம், மஞ்சள் எண்டு எல்லாப் பொருளுக்கும் தவளைப் பாய்ச்சல்ல விலை கூடிக் கொண்டுதானிருக்கு. 

எரிபொருட்களின்ரை விலையும் அப்பிடித்தான். கிழமைக்குக் கிழமை கூட்டப்படுது. 

சனங்களின்ரை நுகர் திறன் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கு. 

உழைப்பில்ல. உற்பத்தியில்லை. விவசாயத்தைச் செய்வம் எண்டால் உரத்துக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடு. 

ரசாயன உரத்தை விட இயற்கை உரம் நல்லதுதான். உடம்புக்கும் விசேசம். ஆனால் பயிர் வளரோணுமே. விளைச்சல் கிடைக்கோணுமே. 

அதுக்கொரு வழியைக் கண்டு பிடிக்காமல் எடுத்த எடுப்பில போய் இயற்கை முறையில விவசாயத்தைச் செய்யுங்கோ எண்டால் எந்தப் பேயன்தான் இதுக்குச் சம்மதிப்பான்? இந்த நிலைமையில ஆர்தான் விவசாயத்துக்குள்ள இறங்குவான்? 

ஆனால் வேற வழியுமில்லை. 

வேற தொழிலும் பெரிசாக இல்லை. 

நாடு உற்பத்தித்துறையைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டு பல ஆண்டுகளாய்ப் போச்சு. 

எல்லாக் காசையும் யுத்தத்துக்குக் கொட்டி, யுத்தத்தைப் பற்றியே சிந்திச்சதால உற்பத்தித்துறையைப் பற்றி மறந்து போச்சினம். சிறு கைத் தொழிலே இல்லை. 

முப்பது நாற்பது வருசத்துக்கு முந்தி (1970, 80களில) யாழ்ப்பாணத்திலயே 60, 70 கொம்பனியள் இருந்தது. மில்க்வைற், லாலா சோப் எண்டு சவுக்காரக் கொம்பனியள், நீர்வேலியில கண்ணாடித் தொழிற்சாலை. வல்லையில, பண்டத்தரிப்பில, கள்ளியங்காட்டில, கரவெட்டியில எண்டு எல்லா இடத்திலும் கைத்தறியும் மெஸின்தறிகளும். கொட்டடியில, சங்கானையில, ஆனைக்கோட்டையில, மண்கும்பானில எண்டு ஒரு பத்துப் பன்ரெண்டு இடத்தில அலுமினியப் பக்டரி… வல்வெட்டித்துறையில் சோடாக் கொம்பனி. அண்ணா கோப்பி, ஆர்.வி.ஜி பீடி, சுருட்டுக் கொட்டில்கள், மாவிட்டபுரத்தில வாளி பக்டரி, அங்கங்க ஆணி ஆலைகள் எண்டு எவ்வளவு… 

இதுகளில் ஏராளம்பேர் வேலை செய்தினம். 

இதைவிட காங்கேசந்துறையில சீமெந்துப் பக்டரி. பரந்தனில சோடாப் பக்டரி. ஒட்டுசுட்டானிலயும் கண்டாவளையிலும் ஓட்டுப் பக்டரி. ஆனையிறவு, செம்மணி, மன்னார் எண்டு உப்பளங்கள். இதுகளில ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு தொழில் வாய்ப்பிருந்திது. 

யுத்தம் வந்ததோட எல்லாம் அழிஞ்சுது. 

யுத்தம் முடிஞ்ச பிறகு ஆளாளுக்குத் தங்கட பையை நிரப்பிறதில கரிசனையாக இருந்தினமே தவிர, நாட்டைப் பற்றி யோசிக்கேல்ல. 

இதால நாடு மெல்ல மெல்ல கடனாளியாக வரத் தொடங்கிச்சு. 

இப்படி நாடு கடன் பட்டுக் கொண்டிருக்கே. இதின்ரை முடிவென்ன எண்டு ஒருதரும் சொன்னதாக இல்லை. அப்பிடி ஆராவது சொன்னாலும் அதைக் கேட்கிற மனநிலையில அரசாங்கமும் இல்லை. அரசியல்வாதிகளும் இல்லை. 

இதால கடைசியில நாடு படு இறுக்கத்துக்குள்ள போய்ச் சிக்கியிருக்குது. 

இதாலதான் இந்தத் தளம்பல். 

விலை நிர்ணயமோ, தரக்கட்டுப்பாடோ, விலைக்கட்டுப்பாடோ இல்லாமல் சந்தை நடக்குது. 

“இது வணிகப் பொருளாதாரத்தின்ர சாபக்கேடு. திறந்த பொருளாதாரம் கடைசியில எங்கட தலைக்கே விலை பேசத் தொடங்கிருக்கு” எண்டு குமுறுகிறார் நண்பர். 

இதை மாற்றாத வரையில கடும் கஷ்டம்தான். ஆனால் இதுக்கான மாற்றத்தை எப்பிடிக் கொண்டு வாறது? 

அரசாங்கத்தின்ரை கஜானா காலி எண்டிறது பகிரங்க ரகசியம். அது என்ன செய்யப் போகுதெண்டு ஆருக்குமே தெரியாது. 

உண்மையைச் சொன்னால் நாட்டிலயோ அரசாங்கத்துக்கையோ என்ன கூத்து நடக்குதெண்டு ஒருத்தருக்கும் ஒண்டுமே தெரியாது. 

இதாலதான் அரசாங்கத்துக்குள்ள இருக்கிற மந்திரிமாரே ஆளுக்காள் அடிச்சுக் கொண்டிருக்கிறான்கள். 

“மக்கள் கஸ்ரப்படத் தயாராக இருக்க வேணும்” எண்டு கொஞ்ச நாளைக்கு முதல்ல நிதி அமைச்சர் பஸில் ஒரு எச்சரிக்கை விட்டிருந்தார். தான் “ஒரு தந்தையைப் போலக் கடுமையாகச் சில நடவடிக்கைகளை எடுக்கப் போறன். அதுக்கு மக்கள் தயாராக இருக்கோணும்” எண்டும் சொன்னார். 

அதோட எல்லாப் பொருட்களுக்கும் இறக்குமதித் தடையையும் கட்டுப்பாட்டையும் விதிச்சார். 

இப்ப அவர் மட்டுமல்ல, அமைச்சரவையே இல்லாமல் போயிட்டு. 

அமைச்சரவை இல்லாத நாடாகி விட்டது இலங்கை. 

இப்பிடியெல்லாம் செய்தும் நாடு உருப்படுகிற மாதிரித் தெரியேல்ல. 

சனங்களின்ரை கையிருப்பையெல்லாம் கரைக்கிற ஒரு காலம் வந்திருக்கு. 

இது 1970 களில தெருவில பாணுக்குக் கியூவில நிண்ட காலத்தை மிஞ்சும் போலயிருக்கு. 

எல்லாப் பொருளும் மூண்டு நாலு மடங்கால உயர்ந்தால் உடுக்க முடியுமா? உண்ண முடியுமா? 

இதுக்கெல்லாம் காரணம், நாட்டின்ரை பொருளாதாரத்தை வளக்கிறதைப் பற்றிச் சிந்திக்காமல், இனவாதத்தை வளர்க்கிறதைப் பற்றிச் சிந்திச்சதுதான். இந்தளவுக்கு நிலைமை மோசமாகி எல்லாரும் தெருவுக்கு வந்த பிறகும் இனவாதத்தைக் கைவிடத் தயாரில்லை. 

பஞ்சம் பிடிச்சு பட்டினி கிடந்து செத்தாலும் தமிழன்– சிங்களவன் – சோனகன் எண்ட அடிபாடு குறையாது. வெறுப்பேத்திற சங்கதி நிற்காது. 

இதுக்குள்ள சீனாக்காரனும் இந்தியனும் தங்கட அலுவலைப் பாக்கிறதுக்கு போட்டி போடுறான்கள். 

அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுகம் எண்டு நிண்ட சீனா இப்ப யாழ்ப்பாணம் வந்து நல்லூர்க் கோயில்ல அர்ச்சனை செய்யுது. 

இந்தியா திருகோணமலையில இன்னும் ஒரு 50 வருசத்துக்கு எண்ணெக்குதங்களை எடுத்திருக்குது. யாழ்ப்பாணத்தில மூன்று தீவுகளைகளைப் பங்கெடுத்திருக்கு. 

இதை விட இன்னும் இலங்கையில முதலீட்டுப் போட்டி எண்டு நிறைய நடக்குது. 

நாட்டை மீட்க வேணுமெண்டால் ஐ.எம்.எவ்விடம்தான் போகவேணும் எண்டு எல்லாரும் சொல்லுகினம். 

ஏதோ பெரிய அறிவாளித்தனமாக இந்த ஆலோனையைச் சொல்லுகினம். 

ஐ.எம் எவ் எண்டால் என்ன எண்டு ஆருக்காவது ஒழுங்காத் தெரியுமா? அப்பிடித் தெரிஞ்சு கொண்டால் இப்பிடியொரு மொக்குத்தனமான ஐடியாவை குடுக்க மாட்டினம். 

கையேந்த வெளிக்கிட்டால் அடிமைச் சீவியம்தான் எண்டதைப் புரிஞ்சு கொள்ளோணும். 

இப்பிடி இலவச ஆலோசனை சொல்லுகின்ற புத்திஜீவிகள் நாடு அதல பாதாளத்துக்குள்ள விழுவதற்கு முதல்லயல்லோ அதைக் காப்பாற்றுகிற முயற்சியில ஈடுபட்டிருக்க வேணும்! 

இப்ப கையை மீறி,கட்டுப்பாட்டை மீறிப் போச்சுது எல்லாம். 

இந்த நிலையில எவ்வளவு காசை அனுப்பினாலும் அது ஆனைப் பசிக்குச் சோளப் பொரிதான். 

அம்மாவைப் பேசி என்ன பயன்? அதில என்னதான் நியாயம்? 

எய்தவர்கள் யாரோ. அம்பை ஏன் நோக வேணும்?