சொல்லத் துணிந்தேன்—32

சொல்லத் துணிந்தேன்—32

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

13 இன் தேக்கத்துக்கு யார் காரணம்?

அண்மையில் (26/09/2020) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்புக் காணொளி உரையாடலின்போது, பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வலியுறுத்தியிருந்தார்.  

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருந்தது. 

பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்திற்கும் அதன் கீழ் அமைக்கப்பெற்ற மாகாண சபை முறைமையினூடான அதிகாரப் பகிர்வுக்கும் வழிவகுத்த இந்திய — இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்றது 29 ஜூலை 1987 அன்று ஆகும்.  

பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும் மாகாணசபை முறைமையும் அமுலுக்கு வந்தது 1988ல் ஆகும். இப்போது முப்பத்தியிரண்டு வருடங்களாகின்றன. 

இந்திய — இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலும் சரி, அதற்குப் பின்னர் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த காலஞ்சென்ற ஆர். பிரேமதாச, காலஞ்சென்ற டி.பி. விஜயதுங்க, சந்திரிகா விஜயகுமாரதுங்க பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் காலத்திலும் சரி, தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ பதவி வகித்துள்ள ஓராண்டு காலத்திலும் சரி,  பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் இன்னும் அர்த்தமுள்ள விதத்தில் அரசியல் விருப்புடன் முழுமையாக இலங்கை அரசாங்கங்களினால் அமுல் செய்யப்படவில்லையென்பது உண்மையே.  

இது விடயத்தில் இந்தியா தன் பங்குக்கு முழுமையான அழுத்தத்தை இலங்கை அரசாங்கங்களுக்குக் கொடுக்கவில்லையென்பதும் உண்மையே. 

‘ புண்ணுக்கு விஷமா? மருந்துக்கு விஷமா?’ என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழர் தரப்பு அதாவது தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர்களின் அரசியல் தலைமைகள் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளனவா? அதற்கான காத்திரமான அரசியல் வேலைகளை உளப்பூர்வமாக முன்னெடுத்து வந்துள்ளனவா? என்பதை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும். 

பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது இந்தியாவுக்குத் தேவையானது என்பதை விட தமிழ்த் தரப்புக்குத்தான் தேவையானது என்பதில் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் எவ்வளவு தூரம் பிரக்ஞாபூர்வமாகச் செயல்பட்டுள்ளன என்பதே கேள்வி. 

 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் 1987 ஜூலை 29இல் கைச்சாத்தானதும் அதற்கு முன்னர் 1983 ஜூலைக் கலவரத்தைக் தொடர்ந்து இந்தியா சென்று தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய செயலாளர் நாயகம் அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் வந்த வரலாறு பற்றி ஒரு கைநூலை வெளியிட்டிருந்தார். அந்தக் கைநூலின் உள்ளடக்கம் இவ் ஒப்பந்தம் தமிழர் விடுதலைக் கூட்டணியால்தான் உருவானது எனும் சாரப்படவே எழுதப்பட்டிருந்தது. 

 தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்ததும் — இதன்கீழ் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்திற்கமைய நிறுவப்பெற்ற வடக்குக் கிழக்கு (தற்காலிகமாக) இணைந்த மாகாண அரசின் நிர்வாகத்தைக் குழப்பியதும் — இவ் ஒப்பந்தத்தை அமுலாக்க இலங்கை வந்திருந்த இந்திய சமாதானப் படையின்(IPKF) மீது போர் தொடுத்ததும் வேறு விடயம். ஆனால் தங்களால்தான் உருவானதாகக் கூறப்பட்ட இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குத் தமிழர்தம் அப்போதைய அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான பங்களிப்புச் செய்ததா?  

  1988 இல் நடந்த வடக்குக் கிழக்கு  (தற்காலிகமாக) இணைந்த மாகாண சபைத் தேர்தலைப் பகிஸ்கரிக்கும்படி புலிகள் தமிழ் மக்களை அச்சுறுத்திய வேளையிலும் தமிழ் மக்களை அத் தேர்தலில் பங்கு கொள்ளும்படி அமிர்தலிங்கம் அவர்கள்   அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டதைத் தவிர, (அதனால்தான் அவர் பின்னாளில் புலிகளால் கொல்லப்பட்டார்) பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யவும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையை நிலைநிறுத்தவும் வலுப்படுத்தவும் தமிழர் விடுதலைக் கூட்டணி எதுவுமே செய்யவில்லை.  

  இறுதியில் இந்திய சமாதானப் படை வெளியேறியதும் –  EPRLF தலைமையிலான வரதராஜ பெருமாளை முதலமைச்சராகக் கொண்ட முதலாவதும் இறுதியுமான வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண அரசு அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசா அரசாங்கத்தினால் 1990இல் கலைக்கப்பட்டதும் — பின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் 2007இல் நீதிமன்றத் தீர்ப்பொன்றினால் வடகிழக்கு தனித்தனி மாகாண சபைகளாகப் பிரிக்கப்பட்டதும் எதிர்மறையான நிகழ்வுகளாகும். அப்போதெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த எதிர்மறையான நிகழ்வுகளுக்கும் தங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்பது போல், பட்டும்படாமலே நடந்துகொண்டன. இதற்குக் காரணம் புலிகள் மீதிருந்த பயம் அல்லது பக்தி(?). 

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001இல் புலிகளால் உருவாக்கப்பட்டது. (ஆனால் அது புலிகளால் உருவாக்கப்படவில்லை என்று இரா சம்பந்தன் அவர்களால் இப்போது மறுதலித்துக் கூறப்படுவது வேறு கதை.)  அன்றிலிருந்து புலிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததே தவிர, பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான எந்த அரசியல் கள வேலைகளிலும் அது ஈடுபடவேயில்லை. 

  2009 மே 18 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னராவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலுக்கான எந்தக் காத்திரமான வேலைத் திட்டங்களிலும் இதுவரைக்கும் ஈடுபடவேயில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் அவ்வப்போது ‘பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்‘ எனும் பழமொழிக்கிணங்க, ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’. ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் காலாவதியாகிவிட்டது’. ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும்படி இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்’. ‘பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதை இலங்கை மேலும் இழுத்தடிக்க முடியாது’. என்றெல்லாம் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப முன்னுக்குப் பின் முரணாக அவரது வழமையான பாணியில் பத்திரிகை அறிக்கைகள் விட்டுக்கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தாரே தவிர அதன் முழுமையான அமுலாக்கலுக்கு எந்தக் காத்திரமான அரசியல் கள வேலைகளையும் முன்னெடுக்கவில்லை. 

  இந்தப் பின்னணியில் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கலைப் புலிகள் குழப்பியதும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் அதன் முழுமையான அமுலாக்கலுக்கு விசுவாசத்துடன் உழைக்காததும் கடந்த காலங்களில் தமிழர் தரப்பு விட்ட தவறு என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும்.  

  பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் முழுமையாக அமுல்நடாத்தப்படாததற்குக் காரணம் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் மட்டுமல்ல தமிழர் தரப்பும்தான். இதுவிடயத்தில் தமிழர் தரப்பு தம்மைச் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். 

   நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இப்போது தமிழர் தரப்பு செய்ய வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் அமைந்த வெகுஜனப் போராட்டங்களை வடக்குக் கிழக்கில் முன்னெடுக்க வேண்டும். 

  தமிழ் அரசியல் தலைமைகளின் தன்முனைப்பான — சுய நலமிக்க செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் சலிப்பும் வெறுப்புமுற்று தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தற்போது அந்நியப்பட்டுள்ளார்கள். இத்தேக்க நிலையைக் களைவதாயின் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் கீழ் கொண்டுவரப்பெற்ற பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும் அதற்கமைய நிறுவப்பெற்ற மாகாண சபை முறைமையையும் அனுசரித்துப் போகும் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும், யார் துரோகி? யார் தியாகி?  யார் கள்ளன்? யார் வெள்ளன்? எந்தக் கட்சி பழையது? எந்தக் கட்சி புதியது? எந்தக் கட்சி பெரியது? எந்தக் கட்சி சிறியது? எந்தக் கட்சிக்கு வாக்கு வங்கியுண்டு? எந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கும் அப்பால் தத்தம் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு தன்முனைப்பு மற்றும் தன்னலங்களைக் கைவிட்டு மக்களுக்காக ஒன்றிணைந்து ஒரு ‘கூட்டுப் பொறிமுறை’ ஒன்றினை ஏற்படுத்தி அதனூடாக உரிய அரசியல் கள வேலைகளைத் தாமதமின்றி ஆரம்பிக்கவேண்டும். இல்லையேல் புதிய தமிழ்த் தேசிய அரசியல் தலைமை ஒன்றினை வரலாறு விரைவில் பிரசவிக்கும்.