படுவான் திசையில்…

படுவான் திசையில்…

— படுவான் பாலகன் —

“நியமனங்களில் உள்ளூர் மக்களை கவனத்தில் கொள்ளுங்கள்”

‘நீ, உயர்தரம் கற்று சித்தியடைந்தாய் தானே, அரச உத்தியோகம் எடுத்தையா?, மேசனுக்கு கூலியாளாக நின்றுதானே வேலை செய்கிறாய்’ என்கிறான் புலேந்திரன். சில்லிக்கொடியாறு மைதானத்தின் ஓரமாக புலேந்திரன் ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தான். அதிக வெப்பம் காரணமாக துவிச்சக்கரவண்டியில் விறகுகளைக் ஏற்றிக்கொண்டு அங்கு வந்த புலேந்திரனுக்கு களைப்பாக இருக்க அவ்விடம் இளைபாறுகின்றான். புலேந்திரனைக் கண்ட கமலேந்திரனும் அவ்விடத்தில் நின்றுகொண்டான். இருவரும் ஒரே வகுப்பில் கற்காவிட்டாலும், ஒரே பாடசாலையில் கற்றவர்கள். பாடசாலை பருவத்தில் இணைபிரியா நண்பர்களாகவும் இருந்தனர். இதனால் இருவரும் தங்களுக்கு ஏற்படுகின்ற எந்ததொரு நன்மை, தீமை விடயங்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு.  

நீண்ட நாட்களாக இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு அரிதாகவே இருந்தது. வீட்டின் வறுமை, உழைக்க வேண்டிய சூழலுக்கு இருவரும் தள்ளப்பட்டிருந்தனர். ஆனாலும் கமலேந்திரன் உயர்தரம் கற்று சித்தியடைந்தவன். புலேந்திரனும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்தவன். ஆனால், உயர்தரம் கற்கச் செல்லவில்லை. இதனை கமலேந்திரன் புலேந்திரனிடம் என்ன காரணம் எனக்கேட்டு உயர்தரம் கற்க அனுப்ப வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தான். புலேந்திரனை தேடிச்சென்று அவனிடம் கூறுவதற்கு அவனுடைய வீட்டுப்பொறுப்புக்களினால் நேரம் ஒதுக்கமுடியவில்லை. இதனால், புலேந்திரனைக் கண்ட சந்தோசத்தில் மர நிழலில் நின்றுகொண்டு இருவரும் கடந்த காலத்தை நினைவுகூர்ந்து, பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போதுதான், கமலேந்திரன் புலேந்திரனைப் பார்த்து ‘பாடசாலையில் சிறப்பு பெறுபேறு பெற்றாய், உயர்தரம் கற்க ஏன் செல்லவில்லை’ என்ற வினாவினை எழுப்பினான். அவ்வினாவிற்கு கமலேந்திரன் எதிர்பார்த்திராத பதிலொன்றினை,  புலேந்திரன் வழங்கினான். ‘நீ உயர்தரம் சித்தியடைந்தாய் தானே உனக்கு அரசவேலை கிடைத்ததா?’ என்று கேட்டான். கமலேந்திரன் சற்று மௌனமாகவே இருந்தான். தொடர்ந்து புலேந்திரன் பேச்சை நீடித்துச் சென்றான். நமது ஊரில் வெள்ளையன், சின்னத்தம்பி, அபிலேகா, சின்னமுத்து, சீனித்தம்பி, சதுஸ்காந், திரவியம் இப்படி பலபேர் உயர்தரம் கற்றுச் சித்தியடைந்தவர்கள்தான்.  ஒருவருக்காவது அரசவேலை கிடைச்சிருக்கா? நம்மட ஊரில் இதுவரைக்கும் யாராவது அரச வேலை பார்க்கின்றனரா? சிற்றூழியர் என்றாலும், நகர்புறத்திலும், வேறுமாவட்டத்திலும், சகோதர இனத்தவர்களும்தான் அப்பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். அப்படியிருக்க, நம்ம செலவு செய்து கற்று என்ன பிரியோசனம்?வாசிக்கிறதுக்கு, கடிதம் எழுத, விண்ணப்பம் நிரப்ப சாதாரணதரம் வரை கற்றால் போதும்தானே? அதுதான் உயர்தரம் கற்கவில்லை என்றான் புலேந்திரன். 

கற்றல் என்பது அரச உத்தியோகத்திற்காக மட்டுமல்ல. எமது வாழ்க்கைக்கு அது உதவும். கற்பது வீணல்ல. இவையனைத்தும் புலேந்திரனுக்கும் தெரியும். ஆனாலும், பொதுவாகவே கற்பது என்னத்திற்கு என்று கேட்டால் பெரும்பாலானோர் அரசவேலை எடுப்பதற்கு என்றே கூறிக்கொள்வர். அவ்விடயம் மனதில் ஆழப்பதிந்தமையினால்தான், அரசவேலை கிடைக்கவில்லை என்பதற்காக தொடர்ந்து கற்பதற்கு மறுகின்றான் புலேந்திரன். 

புலேந்திரன் கூறிய ஒருவிடயம் கமலேந்திரனை நிறையவே சிந்திக்கத் தூண்டியது. இலங்கை நாட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. சம உரிமை என பேசப்படுகின்றது. ஆனால் எல்லாம் பேச்சளவில்தான். நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அந்நியமனங்களை பெற்றுக்கொள்பவர்கள் யார்? கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம்? என பல வினாக்கள் அவனுக்குள்ளேயே எழுந்தன. 

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகள்தான் மட்டக்களப்பு மேற்கில் உள்ள பாடசாலைகள் அனைத்தும்,  அதுபோன்று பட்டிருப்பு வலயத்தில் உள்ள பாடசாலைகளில் பெரும்பான்மையானவை மாகாணசபைக்குட்பட்டவையே. இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் பெரும்பான்மையான பாடசாலைகளுக்கு சிற்றூழியர்கள், காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த சிற்றூழியர்கள், காவலாளிகள் வேறு பிரதேசத்தினை, வேறு இனத்தினைச் சேர்ந்தவர்கள்.  அவர்களும் தங்களது கட்டாய சேவைக்காலங்களை நிறைவு செய்து இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளனர். இதனால், பாடசாலைகள் பல இப்பதவி வெற்றிடங்களுடனே இருக்கின்றன. இதனால் பாடசாலையின் அதிபர்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகம். வலயம், மாகாணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரவுகளை வேண்டிக்கொண்டியிருக்கின்றனர். அத்தரவுகளை வழங்குவதற்கு அதிபர்கள் வலய, கோட்ட கல்வி அலுவலகங்களை நோக்கி ஓடவேண்டியவர்களாக இருக்கின்றனர். இதனால் பாடசாலை நிருவாகத்தினை கவனிப்பதுகூட கடினமாகவே இருக்கின்றது. ஆசிரியர்களை அனுப்பினால் மாணவர்களின் கல்வியை அது பாதிக்கும். இவ்வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளமையினால் பாடசாலையில் உள்ள நிருவாகத்தினர் எதிர்கொள்ளும் துன்பதுயரங்கள் மறுபுறம்.  

இப்பதவிகளுக்கு பாடசாலைகள் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த கற்ற இளைஞர், யுவதிகளை நியமனம் செய்கின்றபோது, அக்கிராமத்தில் உள்ள வறுமைப்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமடையும். தமது பாடசாலை என்ற நோக்கில் விசுவாசமான, அர்ப்பணிப்பான சேவையை எதிர்பார்க்க முடியும். அவர்கள் பின்னால் உள்ள மாணவர்களுக்கு இவர்களை உதாரணம் காண்பிக்க முடியும். கற்க மறுக்க நினைக்கும் பலர் கற்பதில் ஆர்வம் செலுத்துவர். தமது கிராமங்களும் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட கிராமங்களாக வளர்ச்சி பெறும். புலேந்திரனைப் போன்றோர் கேள்வி கேட்பதனை நிறுத்த முடியும். அரச வைத்தியசாலையில் உள்ள சுகாதார தொழிலாளர்கள் நியமனங்களுக்கோ,  ஏனைய துறைகளில் உள்ள சிற்றூழியர் போன்ற நியமனங்களுக்கோ உரிய சூழலில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்புகின்றபோது, கிராமங்களும் வளர்ச்சிபெறும். என்பதுதான் கமலேந்திரனின் எண்ணம்.  

‘கடந்த காலங்களில் உரிய பாடசாலைகள் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை நியமித்திருந்தால், பல கிராமங்களில் அரச உத்தியோகத்தர்கள் இல்லாத நிலை உருவாகியிருக்கமாட்டாது? இதனை நம்மட உறுப்பினர்களாவது கவனத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் பேசி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அப்போதுதான் புலேந்திரன் போன்ற பலர் உருவாகாமல் இருப்பதை தடுக்க முடியும்’ என எண்ணியவனாக அவ்விடத்தில் இருந்து அகன்றான் அவன்.