சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (5)

(சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீஸ்கந்தராசா)

“இது என் கதையல்ல, 

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”

பத்தாம் வகுப்புப் பரீட்சைக்கு நானும் நண்பர்கள் சிலரும்  

பாடசாலையில்தான் இரவில் தங்கியிருந்து படித்தோம்.  

நவேந்திரன், நடேசன், நவரெட்ணசாமி,  

திருச்செல்வம், கருணானந்தன், யோகேஸ்வரன்,  

சிறிஸ்கந்தராசா (சாவன்னாசிறீ), நான்,  

இன்னும் சிலர் சேர்ந்து ஒன்றாய்ப் படித்தோம். 

எல்லோருக்கும் இரண்டு மாதங்கள் இரவுப்படுக்கை 

பள்ளிக்கூடத்தின் திறந்த மண்டபத்தில் இருந்த  

உயர்ந்த மேசைகளில்தான்! 

பாடசாலையில் அப்போது மின்சாரம் இல்லை.  

ஊருக்கு மின்சாரம் வந்து எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னரும், 

பாடசாலைக்கு மின்சார வசதி கிடைத்திருக்கவில்லை. 

சிறிய போத்தல்களில் விளக்குகளைச் செய்து,  

அந்தக் குப்பி விளக்குகளிலேயே படித்தோம்.  

எங்களில் பெரும்பாலும்  எல்லோரின் வீடுகளிலும்  

வெளிச்சம் தருவது குப்பி விளக்குகள்தான் என்பதால்  

எங்களுக்கு சிறிதளவும் அதில் சிரமங்கள் இருந்ததில்லை.  

அந்தக் குப்பி விளக்குக்களில் அரைவாசி தண்ணீரையும்,  

அரைவாசி மண் எண்ணெய்யையும் நிரப்பியெடுப்போம் 

மண்ணெண்ணெய்யையும் தண்ணீரையும் கலந்தால்  

தண்ணீருக்கு மேல்தான் எண்ணெய்நிற்கும்.  

ஆனாலும் விளக்கு எரியும்.  

குட்டையான திரியுடன், குறைந்த எண்ணெய்யுடன்,  

கூடிய பயன்பெறும் வழி இது.  

விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களல்லவா? சும்மாவா?  

இன்னுமோர் அனுகூலம் இதில் என்னவென்றால்,  

எங்களில் எவருடைய விளக்கிலாவது மண்ணெண்ணெய் முடிந்துவிட்டால்,  

மற்றொருவர், தன் விளக்கிலிருந்து ஊற்றிக்கொடுத்து உதவமுடியும்.  

ஆசிரியரின் மேசைகளே எங்களின் படுக்கைகளாகின.  

மாணவர் மேசைகள் ஒருபக்கம் உயர்ந்து, 

மறுபக்கம் தாழ்ந்து சரிவாக இருக்கும்.  

ஆசிரியர் மேசை ஒன்றையும், மாணவர் மேசை ஒன்றையும் 

அருகருகே இணைத்து, மாணவர் மேசையைத் தலைமாட்டில் போட்டு 

ஒவ்வொருவருக்கும் ஒய்யாரமான  

உயர்ந்த கட்டில்களை ஒழுங்கு செய்வோம்.  

சிலவேளை நாங்கள் காலையில் எழும்புவதற்கு முன்னர் 

அயலூர்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிடுவார்கள். 

திடுக்கிட்டு எழுந்து, வீட்டுக்கு ஓடோடிச் சென்று,  

வெளிக்கிட்டு, மீண்டும் பாடசாலைக்கு விரைவாக வந்துவிடுவோம். 

வகுப்பில் நாங்கள் அமர்ந்திருக்கும்போது,  

மண்டபத்தின் ஒவ்வொரு தூணின் மேலும் மறைவாக உயரத்தில் 

நாங்கள் வைத்துவிட்டுச் சென்ற குப்பி விளக்குகள்  

எங்களைச் சங்கோசப் படுத்திக்கொண்டு இருக்கும். 

எங்களோடு படிக்கும் உள்ளூர், அயலூர் மாணவ மாணவிகளுக்கு  

இந்தவிடயமெல்லாம் நன்கு தெரியும்.  

அவ்வப்போது அவர்கள் அந்தக் குப்பி விளக்குகளையும்,  

எங்களையும் பார்த்து நகைப்பார்கள்.  

அந்த நகைப்புக்களில் கலந்திருந்தது கேலியா அல்லது பாராட்டா  

என்பதில் இன்னமும் எனக்குத் தெளிவு இல்லை.  

அதிலும்,  

மறைவாக நமது மனங்களுக்குள் புகுந்து,  

அடிக்கடி கனவுகளைத் தந்துகொண்டிருந்த மாணவிகள்  

ஆசிரியர் பாடம்  நடத்திக்கொண்டிருக்கும்போது  

உயரத்தில் இருக்கும் அந்த விளக்குகளை நிமிர்ந்து பார்த்து,   

ஒன்றும் புரியாததுபோல அப்படியே நம்மையும் சரிந்து பார்த்து,  

செல்லமாய் நகைத்துவிட்டு, செவியோரம் தலைமயிரை விரல்களால் நீவிவிட்டு 

மெல்லத் தலைகுனிந்து புத்தகத்தை விரித்துப் பார்ப்பதுபோல 

சிரித்தபடி ஓரக்கண்ணால் பார்ப்பார்களே ஒரு பார்வை!  

உடல் மட்டும் நமக்கு உடனே சற்றுக் கூனிக்குறுகும். 

உள்ளத்தின் உள்ளே என்னவோ ஒன்று சிலிர்த்துப் பரவும் 

அந்தவோர் உணர்வுக்காகவே ஒரு குப்பி விளக்கையல்ல 

ஓராயிரம் குப்பி விளக்குகளைப் பாடசாலையின் 

கூரைமுழுவதிலும் கொழுத்திக் கொலுவைக்கத் தோன்றும்!  

விடலைப் பருவத்து அந்த நினைவுகள் 

உடலைக்கூட உருக்கிய உள்ளத்து உணர்வுகள்! 

கடலைவிடப் பரந்த கரையில்லாக் கனவுகள் 

தடையின்றி அப்படித் தொடர்ந்தது… எத்தனை இரவுகள்! 

ஊரின் பிரதான வீதிகளில் கண்காணிப்புப் பொலீஸ்காரர்  

உலாச் செல்வது அந்த நாட்களில் வழக்கம். 

இரண்டு பொலீஸ்காரர் சைக்கிளில் தினமும் பலதடவைகள் 

இரவு நேரத்திலும்கூட அவ்வாறு ரோந்து செல்வார்கள். 

மருத்துவ நிலையம், சனசமூக நிலையம், பொதுச்சந்தை, 

பாடசாலைகள், படமாளிகை முதலிய இடங்களில் 

குறிப்புப் பதிவுப் புத்தகம் ஒன்று ஆணியில்  

கொழுவப்பட்டுத் தொங்கிக்கொண்டிருக்கும். 

இரவு உலாவரும் பொலீஸ்காரர் அந்தப் பதிவேட்டில் தங்கள்  

வரவைப் பதிவுசெய்வது வழக்கம். 

அப்படியொரு பதிவேடு எங்கள் பாடசாலையிலும்  

அதிபரின் அறைக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும். 

பெரும்பாலும் நள்ளிரவு வேளையில் பாடசாலைப் பக்கம் 

இரண்டு பொலீஸ்காரர்கள் சைக்கிளில் வருவார்கள். 

இருவரும் தமிழராகவோ அல்லது  

ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவராகவோ இருப்பார்கள். 

அரைக் காற்சட்டையும், சேட்டும் அணிந்திருப்பார்கள் 

தலையிலே அதே காக்கிநிறத்தொப்பி, 

சிலவேளைகளில் மட்டும் கையில் குண்டாந்தடி! 

குறிப்புப் புத்தகத்தில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் எங்களிடம் வந்து 

படிப்பு எப்படிப் போகிறது என்று குசலம் விசாரிப்பார்கள். 

எந்தநாளும் எங்களிடம் அவர்கள் வருவதில்லை 

படிப்பில் நாங்கள் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தால் 

தொந்தரவு செய்யக்கூடது என்று சொல்லாமலே சென்றுவிடுவார்கள் 

சிலவேளை அவர்கள் வரும்போது கடைகளிலே  

சிற்றுண்டி வாங்கிவந்து தருவார்கள். 

எங்களுக்காக வாங்கி வந்து தருகிறார்களா அல்லது தங்களுக்காக வாங்கியதில் தருகிறார்களா என்பதில் எங்களுக்கு அப்போது சிரத்தையும் இருக்கவில்லை, 

பணம் கொடுக்காமல் அவர்களுக்குக் கிடைத்ததாகத்தான் இருக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமும் இருக்கவில்லை. 

இப்படியெல்லாம் நடந்ததா என்று இப்போது பலருக்கு  வியப்பாக இருக்கலாம்! 

முப்பது வருடப் போர்க்காலத்தில் எத்தனையோ விடயங்கள் 

கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு மாறிவிட்டன. 

இரவில் பாடசாலையில் தங்கிப் படிக்கவென்று போன 

இளைஞர்கள் பலர் முற்காலத்தில் படிப்பதைவிட்டு 

இளநீர் பறிக்க ஊரார் மரங்களில் ஏறித்திரிந்தார்களாம் 

களவாக மரவள்ளிக் கிழங்கு புடுங்கச் சென்றார்களாம் 

உடைந்த கதிரைகளின் கால்களை அடுப்பெரிக்க 

உபயோகித்து கிழங்கு அவித்துத் தின்றார்களாம் 

கடற்கரையில் நண்டடித்துவந்து கறிசமைத்து உண்டார்களாம் 

கடந்த காலத்தில் நடந்த இக்கதைகள் கனபேருக்குத் தெரியும். 

அதனால்,  

எங்கள் பெற்றோர்களும் பள்ளியில் நாங்கள் 

இரவில் தங்குவதற்கு முழுமனதோடு இசையத் தயங்கினார்கள். 

ஆனால் நாங்கள் ஒருநாள் கூட அப்படிச் செய்ததில்லை 

வீணாகக் காலத்தை விரயம் செய்ததில்லை 

நித்திரைக்குப் போகும் நேரம்வரை தொடர்ந்து படித்தோம் 

அத்தனை பேரும் மிகவும் அக்கறையோடு படித்தோம் 

போட்டிமனப் பான்மையுடன் பொறாமையின்றிப் படித்தோம் 

ஒருவருக்கொருவர் பாடங்களில் உதவிசெய்து படித்தோம் 

படித்து முடிந்ததும்  சில நிமிடங்கள் பகிடிவிட்டுச் சிரித்தோம் 

விடலைப் பருவத்து உணர்வுகளை வெளிப்படுத்திக் களித்தோம் 

பார்த்த திரைப்படங்களைப் பற்றிக் கதைத்து மகிழ்ந்தோம் 

படிப்பிற்கு இடயூறு எதுவுமே நிகழாமல் பக்குவத்தோடு நடந்தோம். 

பாடசாலைக்கு இரவுநேரக் காவலாளி ஒருவர் இருந்தார். 

பகலவன் ஓயுமுன் கடமைக்கு வந்து, உதித்தபின்பே செல்வார் 

ஆறுமுகம் வாச்சர் என்றால் அவரைத் தெரியாதோர் 

அந்நாளில் யாரும் ஊரிலே இருந்திருக்க வாய்ப்பில்லை 

முன்னாளில், சைவமகாசபைச் செயலாளர் 

பின்னாளில் ஆலயபரிபாலன சபைத் தலைவர், 

ஆகிய பதவிகளில் இருந்து அரும்பணியாற்றிய, 

அமரர் “கோபா” என்று அழைக்கப்பட்ட, கோ.பாக்கியராசா அவர்களின் 

மைத்துனரே, இந்த ஆறுமுகம் அவர்கள். 

கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்பதெல்லாம் 

என்னவென்று தன்பணியில் இறுதிவரை காட்டியவர் 

ஓரிரவும் தூங்காமல் கண்விழித்துக் காவல்செய்த 

உண்மையான “வாச்சர்” உலகிலே அவர்போல உள்ளனரா தெரியவில்லை 

காரிருளா, அடைமழையா, கடுங்காற்றா எப்போதும் 

கையில் ஒரு “ற்ரோச்” உடன் பலதடவை பள்ளியை வலம் வருவார் 

எவரோடும் எப்போதும் அவர் பிணக்குப் பட்டதில்லை  

அவதூறு யாருக்கும் சொன்னதில்லை, அலட்டிக்கொண்டதில்லை. 

ஒருவகையில் எனக்கு அவர் நெருங்கிய உறவுக்காரர் – ஆனாலும் 

ஒருநாளும் வாய்விட்டு அவர் சிரித்து நான் பார்த்ததில்லை. 

பின்பக்கமாக மேடையோடு அமைந்திருந்த மண்டபத்தில் 

ஐந்து ஆறு மீற்றர் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவரும் 

அமர்ந்திருந்து தனித்தனியாக படித்துக்கொண்டிருப்போம். 

முன்பக்கம் இருந்த மண்டபத்தில் அவர் உட்கார்ந்திருப்பார் 

அடிக்கடி அவர் நடந்துவரும் அரவம் கேட்கும். 

பலதடவைகள் இரவுமுழுவதும் பாடசாலையைச் சுற்றிவருவார் 

ஒரு தடவைகூட எங்கள் மண்டபத்தின் படியேறிவரமாட்டார் 

பள்ளிக்குப் பின்னால் காடு, பக்கத்தில் பிரசவ மருத்துவ மனை 

பிற்பக்கம் சவங்களை வைத்திருக்கும் பிரேத அறை 

பள்ளிக்குள்ளே சடைத்து நிற்கும் பல ஆலமரங்கள் 

கொள்ளிவாய்ப் பேய் உறைவதாய் சொல்லப்படும் வேப்பமரங்கள் 

இத்தனைக்கும் மத்தியில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் படித்தோம் 

நித்திரை வரும்வரை படித்திருந்துவிட்டு நிம்மதியாக உறங்கினோம். 

பயமறியாத இளம்வயதுதான் காரணம் என்று என்னால் சொல்லவும் முடியாது 

பக்கத்து மண்டபத்தில் ஆறுமுகம் வாச்சர் இருந்ததால்தான் என்பதை மறுக்கவும் 

முடியாது! 

(நினைவுகள் தொடரும்)