அழியுமுன் எரியுமுன் இந்த உடலைப் புணர் (கவிதை)

அழியுமுன் எரியுமுன் இந்த உடலைப் புணர் (கவிதை)

 — கருணாகரன் — 

அழியுமுன் எரியுமுன் இந்த உடலைப் புணர். 

இச்சையோடு பிரிவதும் விடைபெறுதலும் 

சாபத்தின் நிழலை விதைப்பதாகி விடும் என்கிறது இயல்பாகமம். 

தாபங்களோடும் அடங்காத் தீயோடும் காலமெல்லாம் அலைவது  

பாவமும் சாபமும் நீங்காத வாழ்வாகி  

இப்பூமியைப் பழிக்குழியாக்கிவிடக்கூடும். 

சுடர்ந்தெரியாத தணலின் வெம்மையின் தகிப்பு 

சுடரினும் கூர். 

திமிறும் ஆசைகளும் பெருகும் அன்புமாய்க் 

குமுறும் எரிமலைகளை இச்சிறு உடலில் கொண்டலைவது 

காலப்பழியும் உடற்துரோகமுமாகும். 

யாருடைய பழித்துரைப்புகளுக்கும் அஞ்சி அஞ்சி ஒழித்தொடுங்குதலும் 

உன்னை நீயே அறுத்துக் கலாச்சார டப்பாவுக்குள் அடக்குதலும் 

அநீதியின் வழிப் பயணம் 

எப்பசியும் இயல்பின் விதி என்பது  

சிறுகுருவியினமும் பூச்சிகளும் பூக்களும்  

காடுலாவும் விலங்குகளும் பாம்பும் பிற ஊர்வனவும் 

மனிதரும் மாநிலத்துயிரனைத்தும்  

கலந்து மகிழ்ந்துணர்த்தும் பெரும்பாடம். 

கலவுதலும் குலவுதலும் 

இப்பூமியின் ஆதி நடனமும் அநாதி ஆட்டமுமல்லவா 

இப்பிரபஞ்ச வெளியில்தான் எத்தனை முயங்கொலி கொட்டிக்கிடக்கிறது. 

தேனாயும் தினையாகவும் விளைந்த வயலிது 

பருவத்தின் மீதுன் பூக்களைச் சூடி 

அழியும் பருவம் திரும்பாதோடிச் செல்லும் நதி 

என்றுணர்ந்து  

உனதிளமையின் இசையைப் பாடு. 

பனித்திரையின் ஊடே தெரிகிறது 

உன்னுடைய அந்தரங்கத்தின் முகமும் அடங்காப் பசியும் 

அறியத் துடிக்கும் ருசியின் நாவும். 

அதுவன்றோ ஏழாம் அறிவும் எட்டாம் திணையும்.