வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்

வழிபாட்டுச் சடங்குகளும் குணமாக்கலும்

— கமலநாதன் பத்திநாதன், களுவன்கேணி  —

இன்றைய நடைமுறைச் சூழலானது மனிதர் உட்பட உலகின் அனைத்துக் கூறுகளினையும் இயல்பு அழிந்த, இயைபற்ற தன்மையுள் சிக்கித் தவிக்க விட்டிருக்கிறது.  இதனை எவரும் மறுப்பதற்கில்லை. காரணம் வெள்ளம் கடந்த பின்  அணை கட்டுதல் சாத்தியமல்லவே. 

இவ்வாறான போக்குகள் மலிந்த இவ்வுலகியல் போக்கிலே மனிதரையும், மனிதமனங்களையும் ஓரவளாவது மீட்டெடுக்கும் செயற்பாட்டுத் திறனைக் கொண்டதாகவே “குணமாக்கல்” என்பது நடைமுறையில் இருக்கிறது. 

குணமாக்கல்: 

 சரி, இந்த “குணமாக்கல்” என்றால் என்ன? அதனை எப்படி புரிந்துகொள்ளவேண்டும்?  

குணமாக்கல் என்றால் உடலில் நோய் வயப்பட்ட ஒருவர் தான் பெற்றுக்கொண்ட சிகிச்சை மூலம் நல்ல நிலைக்குத் தேறி வந்துவிடுதல் என்பது மாத்திரமல்ல. (அது ஒருவகையான மாத்திரைகளுடன் சம்மந்தப்பட்ட, குணங்குறிகளின் மாற்றத்துடன் கூடிய குணமாக்கல் தன்மையும், புரிதலும் ஆகும்).  

ஆனால் இங்கு நாம் பார்க்கப் போகின்ற “குணமாக்கல்:” என்பது மனித மனத்தினுள்(உளம்) புதைந்து கிடக்கின்ற உளநெருக்குதலின் விளைவுகளில் இருந்து விடுபடும் நிலையைக் தருகின்ற குணமாக்கலும்,  அதற்கான செயற்பாடுகளும் ஆகும்.  

“குணமாக்கல்” என்பது ஒரு மீட்டெடுத்தலுக்குக்குச் (Recovery) சமனான வினையாகும். உளப்பாதிப்புற்ற ஒருவரை தனது பழைய தொழிற்பாட்டு (இயங்கு) நிலைக்கு சகல வழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைக்கு வழிவகுக்கும் செயன்முறையினையே நாம் குணமாக்கல் என்கின்றோம். பாதிக்கப்பட்ட நபர்களை  ஒரு இயல்பான தொழிற்பாட்டு நிலைக்கு மாற்றி,   அவர்களின் முன்னைய தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, அவர்களை சமூகத்திற்கு உபயோகமானவர்களாக மாற்றும் நடவடிக்கைகளை  பொதுவில் “குணமாக்கல் செயன்முறை” என்பர்.  

இச் செயற்பாடானது, ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகின்ற அதே சமயம் நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, செயற்பாட்டுத்திறன், மகிழ்வு போன்ற உணர்வுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகையாகக் கொடுக்கின்றது எனலாம்.  

உளநிலை வெளிப்படுத்தல்: 

நோயானது(உடல், உளம் சார்ந்த) நபரொருவரின்  சிந்தனைச் செயற்பாட்டினைப் பாதிக்கும்போது, அவரின் நடத்தைசார் தொழிற்பாடுகள் அனைத்தும் பாதிப்படைகின்றன.  சமூகத்தில் அவருக்கான வெளியும் குறைந்து விடுகின்றது. ஒருவர் தான் வாழும் சூழலிலே பதற்றமான, பயங்கரமான, பயந்த சூழ்நிலைகளுக்கு ஆட்படுகின்றபோது, அவர் அதற்கான வெளிப்பாடுகளை  தான்சார்ந்த சூழலில், தன்னூடாக வெளிக்காட்ட முனைகின்றார். இவ்வாறானவர்கள் வெளியில் செல்லாதிருத்தல், எதற்கும் பயப்பிடும் தன்மையுடன் காணப்படல், பிறருடன் முரண்படல், தன்னைத் தாழ்வாக அல்லது உயர்வாக எண்ணல் போன்ற எதிர்வினைகளை காண்பிப்பர்.  இதற்கு ஒவ்வொரு தனிமனிதருள்ளும் காணப்படுகின்ற மனவழுத்தமே (Trauma) காரணமாகின்றது. (அண்மைக்கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளும், அதற்கு பயந்து தொற்றாளர்கள் மறைந்திருத்தல் போன்றனவும் இதற்கான சில உதாரணங்களே.) 

இவ்வாறான “குணமாக்கல்” செய்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு குணமாக்கல் உறவுமுறை என்பது மிக முக்கியமான விடயமாகும். அவ்வாறான உறவுமுறையானது சமூக உறவுகள் மூலமோ அல்லது வேறு வழிவகைகளில் இருந்தோ கிடைக்கப் பெறலாம். எமது மக்கள் ஆரம்ப காலங்களில் தம்மைத் தாமே ஆடல்கள், பாடல்கள், சடங்குகள் மூலம் ஒவ்வொரு உள நெருக்குதல்களில் இருந்தும் குணப்படுத்திக்  கொண்டிருந்தனர். ஆனால் பின்னைய காலங்களில் வந்த மேலைத்தேய சிந்தனைக்கு ஆட்பட்டு ஒவ்வொரு விடயங்களினையும் இயக்கும் அல்லது மேலாண்மை செய்யும் தன்மை கொண்டவர்களாக, ஒவ்வொன்றையும் கோட்பாட்டுக்குள் விளங்க முட்படுபவர்களாக காலனீயப் பிடிக்குள் தம்மைத் திணித்துக் கொள்கின்றனர்.  

ஆனால், ஆரம்ப கால வாழ்க்கை முறையானது இவ்வாறெல்லாம் இல்லாமல் மனித நடத்தைக் கோலங்கள் அனைத்தையும் உளக்குணமாக்கல் தன்மைகள் கொண்டு செவ்வனே வழி நகர்த்திச் செல்லும் இயற்கையுடன் இயைந்த, இயற்கையயை தன்வயப்படுத்தும் வழிமுறைகளைக் கொண்டதாகவே இருந்தன. குணமாக்கலிலே பிரதானம் ஒருவரது நம்பிக்கையே. ஆகவேதான் அதனுடன் தொடர்புடைய சடங்குகள், வழிபாட்டு முறைகள், களியாட்டங்கள் என்பன மிகப்பிரதான பங்கு வகிப்பவையாகக் காணப்படுகின்றன.  

அனேகருக்கு தனது கவலை குணமாக வேண்டும் என்கின்ற தேவையானது உணரப்பட வேண்டும். இவ்வுணர்தலினை சடங்காற்றுகைகள் அபரிமிதமாகச் செயற்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. ஆனால் இன்றைய கால காலனீயச் சிந்தனைகளும், பார்ப்பனீயத் தீவிரவாதமும் அதனோடு இணைந்த செயற்பாடுகளும் சடங்காற்றுகைகளை நாகரிமற்ற வினைப்பாடுகள் என எளிதில் புறந்தள்ளி விடுகின்றமையும், அதனையே மேலைத்தேய வருடிகளான உள்ளூர் அறிவு ஜீவிகளும் ஆமோதித்துப் பிழைப்பு நடத்துவதும் வேதனைக்குரியன. 

கடவுள் நம்பிக்கை தரும் பாதுகாப்பு உணர்வு: 

மனிதரிடையே காணப்படுகின்ற கடவுள் (இயற்கை) வழிபாடானது ஒருவகையான பாதுகாப்பு நம்பிக்கை இணைப்பாக மனிதர்களுக்குக் காணப்படுகின்றது. அதாவது கடவுள் நம்பிக்கை எனப்படுவது ஒருவருக்கு நான் என்னிலும் மேலான பாதுகாப்புத் தன்மையுடன் இணைக்கப் பட்டுள்ளேன் என்னும் உறுதியான எண்ணப்பாட்டினைக் கொடுக்கும் “புனைவு மெய்மையே”.  

சடங்குகளின் சிறப்பம்சங்கள்: 

இவ்வாறான இணைப்பைக் கொண்ட கிராமிய வழிபாட்டுச் சடங்குகள் மூலம் மக்கள் தமக்கு நெருக்கமான கடவுள் தன்மைகளுடன் இன்னும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (உணர்வு ரீதியாக) சடங்கு ஆற்றுகைகளில் எவரும் இன்னொருவரினை வற்புறுத்தி இணைத்துக் கொள்வது கிடையாது. பங்குகொள்ளும்  அனைவரும் தமது சுயவிருப்பின் பெயரில் இணைந்து,  சடங்காற்றுகையின் வழிமுறைகளில் பங்கெடுத்து,  தாமாகவே குணமடைந்து விடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளைக் கொண்ட சடங்கு ஆற்றுகைகள் ஓர் நடத்தைக் கோலச் சிகிச்சை முறையாகும். 

ஓர் வழிபாட்டுச் செயற்றிறனில் சடங்காற்றுகையின் தன்மையில் பல வழக்குகள் காணப்படும். குறிப்பிட்ட சமூகம் மற்றும் அதன் பண்பாட்டு மரபுகளில் நோய் நீக்கல் அல்லது குணமாக்கல் குறித்த உறுதியான நம்பிக்கைப் பாத்திரமாக சடங்குகள் அமைந்து விடுகின்றன. பொதுவாகப் பார்ப்போமானால் சடங்கொன்றின் மூலம் மனித சிந்தனையை வலுப்படுத்தும் மற்றும்  ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தும் வேலைப்பாடுகள் சமூகத்துள்ளே காணப்படுவதை உணரமுடியும் (விதிவிலக்குண்டு).  வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றினை நடத்துகின்ற நபரானவர் அடிப்படையில் மற்ற மனிதர்களுடன் பிரிக்க முடியாத வகையில், மனித மற்றும் மனிதரல்லாதவராகவும், அனேகரின் நேர்மறையான எண்ணத்தின் அதிர்வுக் குவிப்புடனும் பார்க்கப்படுகின்றார். அதேசமயம் கண்ணுக்குப் புலப்படாத அதிமானுட சக்தியுடன் தொடர்பு கொண்டவராகவும் அவர்  பார்க்கப்படுகின்றார்.  அந்த நம்பிக்கையானது பங்குறுவோர்களுக்கு உறவு, பாதுகாப்பு, மகிழ்வு, அமைதி, நம்பிக்கை போன்ற உளத்திருப்தி நிலைமைகளை, குணமாக்கல் செயன்முறைகளின் ஊடாக செவ்வனே கொடுத்துவிடுகின்றது. 

மனித உறவு நிலை: 

இவ்வாறான வேலைப்பாடுகளுடன் கூடிய சடங்காற்றுகைகளிலே பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது சமூக மட்டத்திலே உயர்ந்த அல்லது தாழ்ந்த என்னும் வர்க்கப் பேதம் கொண்ட மனித கூட்டங்கள் அனைத்தும் ஒன்றாகச் சங்கமிக்கும் வழிபாட்டுச் சடங்கு (பார்ப்பனீய ஆழுகைக்குட்படாத இயற்கையுடன் இயைந்த) நடவடிக்கை ஒன்றிலே, அதுவரை காலமும் சமூகத்தில் சாதாரண மனிதராகக் காணப்பட்ட ஒருவர் குறித்த சடங்கினை நடத்துபவராகக் காணப்படும்போது, அங்கு அவர் அனைவரையும் விட பெரிய அதிமானுட தன்மை கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார், மதிப்புக் கொடுக்கப் படுகின்றார். அத்தருணம் அவரும், அவர் சார்ந்த சமூகமும் ஓர் உயரிய தன்மை கொண்ட பாத்திரங்களாக மாற்றப்படுகின்றனர்.  

இது அச்சமூகம் சார்ந்த அனைவருக்குமான குணமாக்கல் வெளிப்பாடாகும். சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த “விக்டர் டெர்னர்”, இவ்வாறான சடங்குச் செயற்பாட்டினை “மீவியல்(liminality)” என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார். இவர் தன் கூற்றுப்படி ‘சடங்குச் சூழலில் தொழிற்படும் சமூக அமைப்பு, இயல்பான சமூக அமைப்பிற்கு நேரெதிரான ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கின்றது’ என்றார். இதனாலேயே விக்டர் டெர்னர் சடங்கின் மையமான இடைவெளியை ‘தலைகீழாக்கம்’ அதாவது இயல்பான சமூக அமைப்பிற்கு தலைகீழான ஒழுங்கமைப்பு உடையது என்ற பொருளில் அழைக்கின்றார். இந்நிலையில் சடங்கில் பங்குபெறுபவர்கள் ஏற்கனவே சமூகத்தில் பெற்றுள்ள அடையாளம், அடக்கு நிலை போன்றவற்றை விடுத்து, புதிய அதிகாரத்தினையும்,  அடையாளத்தினையும் பெறுவதோடு, மிகத்திருப்தியான ஆழ்மன திருப்தியையும் அடைந்து விடுகின்றனர். 

இவ்வாறான சமூகக்குணமாக்கல் தன்மையினை உள்ளூர் சடங்கு ஆற்றுகைகளினால் மாத்திரமேதான் கொடுத்து விட முடியும் எனலாம். வழிபாட்டுச் சடங்குகளில் மிகதிறமான உளவியல் நடத்தைகள் வெளிப்படுகின்றனவாகக் காணப்படும். அச்சூழலில் குறிப்பிட்ட நோக்குடனான உடல் அசைவுகள், சொற்கள், பொருட்கள், பாடல்கள், வாத்திய ஓசைகள், மன்றாடல்கள், நேர்த்திகள் போன்றவை மூலமும் குணமாக்கல் தன்மையானது அவரவருக்கு வெளிப்பட்டு உதவுவதாகக் காணப்படும்.  

கூட்டு நிலையின் உளவியல் திருப்தி: 

சடங்காற்றுகைகளின் போது கூட்டு நிலையிலான ஈடுபாடனாது பங்குபற்றுவோரிடம் காணப்படுகின்றது. இங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே மனவெழுச்சியில் பங்கெடுத்து ஒன்றுபட்டு விடுகின்றனர். இதுவே அசைக்க முடியாத எண்ணத்தின் வலிமை கொண்ட ஓர் உளவியல் திருப்தியைக் கொடுப்பதாக அமைந்து விடுகின்றது. வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றிலே தீயில் எரித்தல், நீரில் கரைத்தல், பலியிடல், நேர்த்தி செலுத்துதல் முதலான செயற்பாடுகள் இடம்பெறும். இவ்வேளையில் பங்குதாரர்கள் குறியீட்டு நிலையில் தமது எதிர்ப்படிமங்களை (கவலைப் பிணிகளை) எதிர்க்கவும், கரைக்கவும், பலியிடவும் செய்கின்றனர். இதன் மூலம் தமக்குண்டான உடல், உள பிணிகளைப் போக்கிக் கொள்ளும் உளவியல்சார் குணமாக்கல் நிலையானது ஏற்பட்டு விடுகின்றது எனலாம். 

வாக்குக்கூறலின்(கட்டுச் சொல்லல்) ஆற்றுப்படுத்தல்: 

இவ்வாறான வழிபாட்டில் உளவியல் மற்றும் உடலியல் பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஒரு தனிமனித உளச்சுகமானது மேற்கண்ட வழிபாட்டு முறைகளின் மூலம் எட்டப்படுகின்றது. மனதுள் புழுங்கிக் கிடந்த உளநெருக்கீடு தணிக்கப்பட்டுவிடுகின்றது. மிகப் பெரும் குணமாக்கல் நிலைமைகளினை மக்கள் அடைந்து விடுவதற்குக் காரணம் தமக்குண்டான அனைத்து பிணிகளையும் தம்மை விஞ்சிய ஓர் அதிமானுட சக்தியிடம் (இயற்கையிடம்) கொட்டித் தீர்த்து, அதனிடம் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுவிட்டோம் என்ற எண்ணப்பாடே ஆகும். அது இயற்கையின் ஆழ் சக்தியே அன்றி, வேறில்லை.  

உள்ளூர் சடங்கார்ந்த நடவடிக்கைகளிலே மனிதர்கள் அதிமானுட நிலைக்குச் செல்கின்ற உளவியல் வினை நிலை காணப்படுகின்றது. அவ்வாறு அதிமானுட நிலைக்குச் சென்றவர்களினை மக்கள் தம்மைக் காக்கின்ற பாதுகாப்புச் சக்தி என நம்பி அவரிடம் தமது குறைகளைக் கொட்டித் தீர்த்து, தாம் வணங்கும் கடவுளருடன் ஒட்டி உறவாடும், உளப்புரிதல் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்நடவடிக்கைகளே உடலுளப் பிணியோடு சென்றவர்களுக்கு ஆரம்கட்ட குணமாக்கல் விளைவினைக் கொடுத்துவிடும். உருப்பெற்றவரே தம்மைக் கூப்பிட்டு வாக்குகள் சொன்னால் அது மிகப் பெரிய விடயமாக மக்களுக்கு அமைந்து விடுகின்றது. உருக்கொண்டு ஆடுபவர்கள் தமது அதிமானுட சக்தியினை “வாக்குச் சொல்லல்” என்னும் உரையாடல் வெளிப்பாடாகவே வெளிப்படுத்துகின்றனர்.  

பல்வகையான குறைகளுடனும், உடலுளப் பிரச்சினைகளுடனும் வருகின்றவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களின் வேண்டுகோளினைச் செவிமெடுத்து, அதற்கான தீர்வினையும், ஆலோசனைகளினையும் கூறுவார்கள். இது ஒரு ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படும். மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளான “பெறுமதியான பொருட்கள் தொலைதல், களவுபோதல், குடும்பப்பிரச்சினை, தொழில் பிரச்சினை, திருமணம்  தொடர்பாக தீர்வுகாண முடியாதிருத்தல், உளநோய்கள், பருவகால மாற்றங்களுக்கான தீர்வுகள்” போன்ற பலவகையான நிலைமைகளில் மக்கள் மனம் குழம்பி,  வழிபாட்டுச் சடங்குகளில் பங்கு கொண்டு, வாக்குக் கேட்டலில் (கட்டுச் சொல்லல்) ஈடுபடுவர்.  

இதன் போது வாக்குச் சொல்பவர் தம்முள் உருக்கொண்டு சக்தியினை வெளிக்காட்டும் வண்ணம் உடல் பாவனைகள், குரல் வளம், அசாதாரண சைகைகள் மூலம் மாறுபட்ட  தொனியில் பாதிக்கப்பட்டவருடன் உரையாடுவார். 

இங்கு மிக நுணுக்கமான குணப்படுத்தல் செயற்பாடுகள் வெளிப்படுவதைக் காணமுடியும். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வாக்குச் சொல்பவர், அவர் சார்ந்த குடும்பப் பிரச்சினைகளுக்கான காரணங்களினையும், அதற்கான தீர்வுகளினையும் சொல்லுவார். உதாரணமாக குடும்பத்தவர் ஒருவரின் ஏதாவது உடமைகள் காணாமல் போனதால் அவர் வாக்கு கேட்க போகும்போது, பாதிக்கப்பட்டவர் ஆவேசத்தில் ‘இதற்கு யார் காரணம் அவரை நீ அடையாளம் காட்ட வேண்டும்’ என்று உருவேறியவரை உரிமையாகவும், பகிரங்கமாகவும் கேட்பார். அப்போது உருவேறியவர் ‘நான் யாரென்று சொன்னால், நீ அவருடன் சண்டை போடுவாய், ஆகவே கூறமாட்டேன். உனது பொருள் குறித்த நாட்களுள் கிடைத்து விடும்.’ என்று கூறி பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப் படுத்துவார். இவ்வேளை அதுவரை நேரமும் பழிவாங்கும் உணர்வுடன் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் கட்டளையை ஏற்று சாந்தமடைந்து விடுவார். இதுவோர் குணப்படுத்தல் உத்தியினதும்,  வழிபாட்டுக்  குணமாக்கலினதும் பாரதூரமான நன்மை பயக்கும் நடைமுறை. இவ்வாறான நடைமுறைகளில் வாக்குச் சொல்லுதல் மூலம் குணமாக்குவோர் சரியான நடைமுறைகளைக் கையாளா விடின் பாதிப்புற்றவர்கள் இன்னும் அதிகபட்சமான நோய்ப்படுநிலைக்கு ஆளாகி விடுவர் என்பதும், இன்று அவ்வாறன பல போலி வினைகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதே. 

வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் முதியோராகவும், அறிவுடையோராகவும், அனுபவத்தேர்ச்சி கொண்டவர்களாகவும் வழிபாட்டுச் சூழலிலே இருப்பார்கள். அவர்கள் தங்களை நாடி வருகின்ற மக்களோடு எவ்வாறு  உரையாடுவது,  அவர்கள் சொல்லுவதை எவ்விதம் செவிமடுப்பது என்பவற்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்துடன் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் நல்ல பொருத்தமான ஆலோசனைகள், கருத்துகள், விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக சடங்காச்சாரங்கள், வழிபாட்டின் மூலம் குணமாக்குவோரின் துணை கொண்டு,  உளவளத்துணை வழங்குவதுடன் குற்றவுணர்வு, கவலை போன்றவற்றையும், ஓர் இறப்பின் பின்னர் அனுபவிக்கும் இழவிரக்கம் அல்லது ஒரு மனதைத் தாக்கும் சம்பவங்களின் பின் ஏற்படும் கசப்பான உணர்வுச் சிக்கல்கள் போன்றவற்றையும் குறைக்கிறது அல்லது முற்றாக அகற்றி விடுகிறது என்பதை மறுக்க இயலாது. அதே சமயம் எதிர்மறைத் தாக்கங்கள் இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதே (விதிவிலக்கு).  

மறைமுகக் குணமாக்கல்: 

வழிபாட்டுச் சடங்குகளிலே மறைமுகக் குணமாக்கல் நடைமுறைகளும் உண்டு. அதாவது மேலே நாம் பார்த்தவை தனிமனித உள்மன உளச்சிக்கல்களினை வழிபாடுகளின் மூலம் குணமாக்கிக் கொள்வது பற்றியவையாகும். அது போலவே, இங்கு குறிப்பிட்ட சமயத்தினை அல்லது வழிபாட்டு முறைகளினைப் பின்பற்றுவோர், அவர் தம் வழிபாட்டுச் சடங்கு நடடிக்கைகளின் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மறைமுக குணமாக்கல் நிலைமைகள் பற்றிப் பார்க்கலாம். அதாவது மக்கள் தமது ஊர்கள், குழுக்கள் சார்ந்து பொதுவாக வேண்டுகின்ற தேவைகளான மழைவேண்டல், கடும் வெப்பம் தணிக்கும் குளிர்த்திச் சடங்கு, கும்பத்திருவிழா, வேட்டைத்திருவிழா, கொம்புமுறி விளையாட்டு முதலிய வழிபாட்டுச் சடங்காச்சாரங்களின் மூலமும் மக்களின் பொதுவகையான பிரச்சினைகளில் இருந்து விடுபட குணமாக்கல் உதவுகின்றது. மழை வேண்டலுக்காகவே மாரி, காளி போன்ற தெய்வங்களுக்கு மக்கள் திருவிழாச் சடங்குகளினைச் செய்வதையும் காணமுடியும். இவ்வாறு மேலே சொல்லப்பட்டவை போன்று மக்கள் தமது  பொதுவான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச்   செய்யும் வழிபாட்டுச் சடங்குகளிலும் குணமாக்கல் தன்மைகள் மறைமுகமாக காணப்படுகின்றன.  

உலகமே ஒற்றைச் சொல்லில் முடங்கிக் கிடக்கின்ற தற்சமயம், வழிபாட்டுச் சடங்குகளும் அதன் குணமாக்கல் தன்மைகளும் இன்றியமையாத வினைப்பாடாக அமையமுடியும்.  

தவிர்க்க முடியாத இழப்புக்கள், அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை, தொட்டதிற்கும் நோயுறல் என்ற நிலை, ஊரடங்கு, தனிமைப்படுத்தல், சமூக இடைவெளிகள் போன்ற வழமைக்கு மாறான புது வரவுகளில் மக்கள் சிக்குண்டு தவிக்கின்ற இன்றைய சூழலில், மனிதரிடையே ஆற்ற முடியாத உள நெருக்குதல்கள், பரிதவிப்புக்கள், முடிவெடுக்க முடியா நிலை முதலிய உளத்தேய்வுகளுக்கு உள்ளூர்களில் காணப்படுகின்ற அவரவர் சமூகச் சடங்கு சார்ந்த செயற்பாடுகள் பெருந்தீர்வாக அமைய முடியும்.