— விளையாட்டு விரும்பி —
இன்று மட்டக்களப்பில் மாத்திரமல்ல இலங்கையிலும் அதையும் தாண்டி உலகெங்கும் வாழும் இலங்கையராலும் இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு பெயர்தான் இந்த “தேனு”.
அவர் விளையாடும் ஒரு சிறு காணொளி எங்கும் பரவலாகப் பேசப்படுகின்றது.
அரங்கம் பத்திரிகையில் இவரைப்பற்றியும் இவரது திறமை பற்றியும் ஒரு வருடத்துக்கு முன்பாகவே நாம் பாராட்டி எழுதியிருந்தோம். பலர் அதை மறந்திருக்கக்கூடும். ஆனால் தனது திறமையால் அவர் பலரது கவனத்தையும் மீண்டும் கவர்ந்திருக்கிறார்.
அதேவேளை அரங்கம் இணையத்தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டின் பின்னடைவு பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
அந்தக் கட்டுரை பல வாதப்பிரதி வாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. அங்குள்ள வசதியீனம், வளக்குறைவுகள் மற்றும் பாராமுகம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இப்போது இந்த கிரிக்கெட் வீரரின் காணொளியில் மட்டக்களப்பின் கிரிக்கெட்டின் நிலைமைகள் குறித்த சில விடயங்கள் மறைமுகமாக வெளிவந்துள்ளன.
தான் மட்டக்களப்பில் கிரவல் மைதானத்தில்தான் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அங்கு ஒரு புற்தரை மைதானம் இல்லை என்றும் அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.
இவ்வாறு இவர் குறிப்பிட்டாலும் இப்பயிற்சிகளை இவர் எவ்வாறு பெற்றிருப்பார் என்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். இதைப்பற்றி பின்னர் ஆராய்வோம்.
இனி தேனுவைப்பற்றி பார்ப்போம்…
மட்டக்களப்பில் நகரில் உள்ள இருதயபுரம் கிராமத்தில் ஒரு நடுத்தர சாதாரண குடும்பத்தில் ரெட்ணராஜா – ஜெயலட்சுமி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் இந்த தேனுரதன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கற்றுவந்த இவர், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார்.
என்றோ ஒருநாள் தான் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதற்காக அவர் தனது கவனம் முழுவதையும் விளையாட்டில் செலுத்தி வந்தார்.
தனது திறமையால் பாடசாலையில் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த இவர், 13 தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிக்காக விளையாடியுள்ளதுடன், பிறீமாவின் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடாத்தி இருந்தார்.
சகலதுறை ஆட்டக்காரரான இவரின் திறமையால் 2016ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான கிழக்கு மாகாண கிரிக்கெட் அணிக்கும் தலைமைதாங்கிய பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார். இவர் மட்டக்களப்பின் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வீரராக தன்னை பதிவு செய்து, விளையாடிய போதிலும் இவர் பயிற்சிகளை மேற்கொள்ள புற்தரை மைதானங்களோ, புதிய பயிற்சி களங்களோ இவருக்கு கிடைக்கவில்லை. கிரவல் மைதானங்களில்தான், தன் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறான பயிற்சியில் ஈடுபட்டால் தேசிய அணியிலோ, முதல்தர கிரிக்கெட் அணிகளிலோ இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று கவலைப்பட்ட ஒரு சிலர், இவரை கொழும்பில் உள்ள ஏதாவது கழகத்தில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
அதன்படி இவரை கொழும்பில் உள்ள புளும்பீல்ட் கழகத்தில் இணைத்து பயிற்சியில் ஈடுபட வைத்தனர். அசுர பலம் கொண்ட இவர், பயிற்சிகள் மூலம் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். அங்குள்ள புற்தரை மைதான பயிற்சிகள் இவருக்கு கைகொடுத்தன.
காலப்போக்கில் இவரது திறமையைக் கண்ட பல கிரிக்கெட் கழகங்கள் இவரை தம் அணியில் இணைத்துக்கொள்ள முற்பட்டபோதிலும் உரிய வாய்ப்பு வழங்காமல் இவரை புறம் தள்ளவே முயற்சித்தன.
தான் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க வேண்டும் என்கின்ற இவரின் வெறித்தனமான ஆதங்கமே இவரை பின்னர் இலங்கை இராணுவத்தில் இணைய வைத்துள்ளது.
பனாகொட இலங்கை இராணுவத்தில் தன் கிரிக்கெட் திறமையை வைத்து, அணியில் இடம்பிடித்தார். இவரின் திறமையை கண்ட, இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களான தினேஸ் சந்திமால் மற்றும் சீதுவ பிரசன்ன ஆகியோர் இவரை தேர்வு செய்தனர்.
இந்த வாய்ப்பின் ஊடாக “2020ல் ஆமி கொமாண்டர் லீக் T20 (Army Commander League T20)” போட்டிக்காக பிறீமா ஸ்டெலா ஈஸ்டன் வொறியஸ் (Prima Stella Eastern Warriors) அணிக்காக அசேல குணரெத்தினவின் தலைமையில் இவர் இப்போது விளையாடி வருகின்றார்.
இந்தக்கட்டுரையை எழுதும்போது, இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றாலும் முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டாம் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அப்போட்டியிலேயே ஒரு ஆபாரமான பிடியை எடுத்தாகவும், அதன் பின்னரே தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கிடைத்த வாய்ப்பைச் சரிவர பயன்படுத்தி இன்று உலகெங்கும் உள்ள இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஓர் கிரிக்கெட் வீரராக தேனுரதன் திகழ்கின்றார். தனக்கு எப்போதும் உறுதுணையாக பனாகொட இராணுவ முகாமின் அதிகாரி சாஜன் மேஜர் நளின் பண்டிதரெட்ண இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், அவரது கடுமையான முயற்சியும், பயிற்சியுமே அவரை இலங்கை அணிக்காகவும், சர்வதேச மட்ட ஆட்டங்களிலும் ஜொலிக்கச் செய்ய வேண்டும். அவர் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அவரை வாழ்த்துவோம்.
இனி நாம் நம் பிரச்சனைக்கு வருவோம். இன்று கிழக்கு மாகாணத்தில் இவரைப் போன்ற பல மிகச் சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு புற்தரை ஆடுகளமோ, நுணுக்கங்களுக்கான புதிய பயிற்சி வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. தேனுரதன் மட்டக்களப்பில் இருந்துகொண்டே தொடர்ந்தும் விளையாடி வந்திருந்தால் இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்கவே முடியாது.
எனவே மட்டக்கப்பில் புற்தரை மைதானத்தை அமைப்பதன் மூலமும் புதிய நுணுக்கமான பயிற்சிகளை வழங்குவதன் மூலமும் நாம் மட்டக்களப்பில் இருந்து முதல்தர போட்டிகளிலாவது கலந்து கொள்ளும் வீரர்களை உருவாக்க வேண்டும். புற்தரை மைதானங்கள் பல அங்கு உருவாக்கப்பட வேண்டும். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அங்கு புலம்பெயர் தமிழர் உதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிரிக்கெட் கிராமம் போன்றவற்றின் அரங்குகளின் நிர்மாணம் விரைவுபடுத்தப்படுவதும் அதற்கு அவசியமாகும். அதற்கு புலம்பெயர் தமிழர் உதவி மாத்திரம் இருந்தால் போதாது, உள்ளூர் அதிகாரிகளும் ஏனையோரும் உதவ முன்வரவேண்டும். குறைந்தபட்சம் தடைகளையாவது போடாமல் இருக்க வேண்டும்.
விளையாட்டுச் செய்திகளுக்கான அனுசரணை
கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்