“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”

“ஒரு காலத்தில் இன நல்லுறவில் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த கண்டி”

— சீவகன் பூபாலரட்ணம் —

(ஆங்கில ஊடகம் ஒன்றில் மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய குறிப்பை தழுவியது) 

மன்னராட்சிக் காலத்தில், அதிகாரம் முழுவதும் மன்னரின் கைகளில் இருந்தபோது, மன்னர் பரந்த மனப்பாங்கு உள்ளவராக இருந்தபோது, இன மற்றும் மதங்களிடையே நல்லிணக்கமும், வேறுபாடுகளை சகித்துக்கொள்ளும் பாங்கும், பன்மைத்துவத்தை கொண்டாடும் போக்கும் இலங்கையில் காணப்பட்டதாக பேராசிரியர். கணநாத் ஒபேசேகர கூறியுள்ளார். 

இன்று, ஏனைய பல நாடுகளைப் போல இலங்கையும் பிளவுபட்ட, இன மற்றும் மத ரீதியாக முரண்படும்  கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் வாழும் ஒரு நாடுதான். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் இங்கும் இனக்குழுக்களிடையே போட்டியை தூண்டிவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது. 

ஆனால், “மன்னராட்சிக் காலத்தில், அதிகாரம் முழுமையாக அரசர்களிடம் இருந்தபோது, அதுவும் அவர்கள் சக்தி மிக்கவர்களாகவும், பரந்த மனப்பாங்குடையவர்களாகவும் இருந்தபோது நிலைமை இலங்கையில் வேறாக இருந்துள்ளது” என்கிறார் பேராசிரியர் கணநாத் ஒபேசேகர. The Many Faces of the Kandyan Kingdom 1591-1765 என்ற தனது புதிய நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

“அந்தக் காலத்தில் கண்டி இராசதானி பல தேசத்து மக்களும் வந்துபோகும் ஒரு நகராக இருந்துள்ளது” என்றும் பிரபல பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார். 

இன மற்றும் மதங்களுக்கிடையிலான எல்லைக்கோடுகள் இன்று இருப்பதுபோல அன்று அவ்வளவு இறுக்கமாக   இருந்திருக்கவில்லை. நாட்டுக்கு உள்ளே பல இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல மதங்களை இனங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்து, ஒன்றாக வசித்து, வணிகம் மற்றும் தொழில் செய்து, கலப்புத்திருமணங்களை செய்து சுபீட்சமாக வாழ அன்று கண்டியில் இருந்த சூழ்நிலை அனுமதித்திருக்கிறது. 

“மக்கள்(மன்னரும் கூட) பௌத்த மதத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் இடையே மாறுவது என்பது அப்போது வெகு சாதரணமாகவே அங்கு காணப்பட்டதாக” கணநாத் ஒபேசேகர கூறுகிறார்.  

ஒருவர் உள்ளே ஆழமான ஒரு பௌத்தராகவும், வெளிப்போக்குக்கு கத்தோலிக்கராகவும் இருக்கவும் முடிந்திருக்கிறது. பல மதங்களைச் சேர்ந்த வழிபாட்டிடங்கள் எந்தவிதமான தடையும் இன்றி நிர்மாணிக்கக்கூடிய நிலை இருந்திருக்கிறது. மன்னரும் சாதாரண மக்களும் பல மொழிகளை பேசியிருக்கிறார்கள். சாதாரண மக்கள் பெரும்பான்மையின மொழியான சிங்களத்தையும், வணிக மொழியாக தமிழையும் பேச, உயர் அந்தஸ்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவற்றோடு சேர்த்து போர்துக்கீஸ மற்றும் டச்சு மொழியையும் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.  

கத்தோலிக்கம்: 

ஜயவீர பண்டார (1511 – 1552) ஆட்சிக்காலத்தில், ஐரோப்பிய கத்தோலிக்க மதகுருமாருக்கு கண்டிய அரசவையில் இடம் இருந்திருக்கிறது. கோட்டை இராஜ்ஜியத்தில் ஒரு சக்தியாகத் திகழ்ந்த போர்த்துக்கீஸரிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக ஜயவீர பண்டார தன்னை “அடையாளத்துக்கு” ஒரு கத்தோலிக்கராக வரித்துக்கொண்டார். ஜயவீர பண்டாரவை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த அவரது மகனான கரலியத்த பண்டார(1552 – 1582) ஒரு அர்ப்பணிப்புள்ள கத்தோலிக்கராக திகழ்ந்துள்ளார். 1562 முதல் 64 வரை பகிரங்கமாகவே கத்தோலிக்கத்தை தூக்கிப்பிடிப்பவராக, கொண்டாடுபவராக அவர் திகழ்ந்துள்ளார். ஆனால், பகிரங்கமாகவே மதம் மாறியவராக அவர் தன்னை வெளிப்படுத்தியமை பௌத்த விவகாரங்களில் இருந்து அவரை அன்னியப்படுத்தியது. அதனால், அவர் தனது மகளான குசுமசனா தேவியுடன் திருகோணமலைக்கு தப்பி ஓட நேர்ந்தது. அவர் சின்னம்மை நோயினால் இறக்கவே, அவரது மகளான குசுமசனா தேவி போர்த்துக்கீசரால் மீட்கப்பட்டு, அவருக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டு, டோனா கத்தரினா என்ற பெயரும் வழங்கப்பட்டது. 

கரலியத்த பண்டாரவுக்கு பின்னர் “கண்டி இராஜதானி” சீதாவாக்கையின் முதலாம் ராஜசிங்கனுக்கும் பேராதனையின்(இப்போது கேகாலை மாவட்டம்) வரசுந்தர பண்டாரவுக்கும் இடையிலான மோதல் களமாக மாறியது. முதலாம் இராஜசிங்கன் வரசுந்தரவைக் கொன்றான். அதேவேளை, வரசுந்தரவின் மகனான கொன்னப்பு பண்டார கண்டியை கைப்பற்றுவதற்காக கோட்டையின் தர்மபாலவின் உதவியைப் பெற்றான். கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியிருந்த தர்மபால கோட்டை இராஜதானியை லிஸ்பனில் உள்ள போர்த்துக்கீஸ மன்னனுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு, அவனது பிரதிநிதியாக ஆண்டுகொண்டிருந்தான். தர்மபாலவின் தந்தையான விதிய பண்டாரவின் சகோதரரும், கத்தோலிக்க இளவரசருமான செம்பகப்பெருமாளின் மகளை கொன்னப்பு பண்டார மணந்தார். இந்தத்திருமணம் கத்தோலிக்க முறைப்படி தர்மபாலவின் மாளிகையில் நடந்தது. இந்தத் திருமணந்தான் முதன் முதலில் போர்த்துக்கீஸ சொல்லான “கசாது” என்ற பெயரால் அழைக்கப்பட்டதாகும். 

இருந்தபோதிலும் தனது நம்பிக்கைக்குரிய சலப்பு பண்டார என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவில் கோவாவுக்கு கொன்னப்பு பண்டார நாடு கடத்தப்பட்டார். கோவாவில் கொன்னப்பு பண்டாரவுக்கு அதிகாரபூர்வமாக ஞானஸ்தானம் வழங்கப்பட்டு, அவரது பெயர் ஆஸ்திரியாவின் டொன் யோஆவு என்று மாற்றப்பட்டது. பின்னர் கண்டியில் முதலாம் இராஜசிங்கனின் ஆட்சியை அகற்றுவதற்கான போர்த்துக்கீசரின் திட்டத்துக்கு தலைமைதாங்க அவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால், இராஜசிங்கனை வீழ்த்திய பிறகு, கொன்னப்பு பண்டார போர்த்துக்கீஸரை ஏமாற்றி தானே கண்டிக்கு அரசராகிவிட்டார். முடிசூடிய அவர் தனக்கு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரைச்சூட்டிக்கொண்டார். 

தன்னை புனிதப்படுத்திக்கொள்ள அவர் மீண்டும் பௌத்த மதத்துக்கு மாறியும் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கீஸர் கண்டியை ஆக்கிரமித்தனர். மறைந்த கரலியத்த பண்டாரவின் கத்தோலிக்க மகளான டோனா கத்தரினாவை கண்டியில் முடிசூடச் செய்வது அவர்களது திட்டம். ஆனால், போர்த்துக்கீஸப் படையை முழுமையாக நிர்மூலம் செய்த விமதர்மசூரியன், டோனா கத்தரினாவை சிறைப்பிடித்து, தானே அவரை திருமணம் செய்துகொண்டார். 

இந்தக் கதையின் சுவார்சியமான விடயம் என்னவென்றால், திருமணத்துக்குப் பின்னர் கடும் பௌத்தராக மன்னர் இருக்க, டோனா கத்தரினாவோ தொடர்ந்தும் அர்ப்பணிப்புள்ள கத்தோலிக்கராகத் திகழ்ந்தார். இருந்தாலும் தனது குழந்தைகளை அவர் பௌத்தராகவே வளர்த்தார். 

16ஆம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பது இலங்கையில் ஒன்றும் அசாதாரண விடயமல்ல. பல மக்கள் இரு மதங்களை பின்பற்றுபவர்களாகவும் இருந்தார்கள். “பௌத்தர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்க முடியும். சிலர் தேவாலயங்களுக்கும் போய்வந்தார்கள். அதேவேளை அவர்கள் தொடர்ந்தும் பௌத்தர்களாகவும் இருந்து வந்தார்கள்” என்கிறார் கணநாத் ஒபேசேகர. பலர் இயேசுவை, இந்துக்கடவுளான விஷ்ணு போல வரித்துக்கொண்டார்கள். அவரை கருணைக் கடவுளாக அவர்கள் பார்த்தனர். “கன்னி மரியாளை” பத்தினி தெய்வமாக(கண்ணகி) அவர்கள் வழிபட்டனர். 

போர்த்துக்கீஸ மற்றும் ஒல்லாந்தர்களின் செல்வாக்குக்கு உட்பட்டதால், விமலதர்மசூரியனும், டோனா கத்தரினாவும் பாதி மேற்கத்தைய பாணி வாழ்க்கையையே வாழ்ந்தனர். டோனா கத்தரினாவும் அவரது பிள்ளைகளும் மேற்கத்தைய உடைகளையே அணிந்தனர். போர்த்துக்கீஸ மொழியை சரளமாகப் பேசிய மன்னர், டச்சு மொழியையும் பேசக்கற்றுக்கொண்டார். அதேவேளை பௌத்தத்தின் வளர்ச்சிக்கு தன்னை அவர் அர்ப்பணித்தார். புத்தரின் புனித தந்தத்தை ஒரு தேவாலயத்தில் வைத்து பூசித்தார். இலங்கையருக்கு பௌத்தத்தை போதிப்பதற்காக பிக்குமாரை அழைத்துவர, பர்மாவின் அரசனுக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பினார். ஆனால், விமலதர்மசூரியன் ஒன்றும் ஒற்றைக் கருத்துடையவர் அல்ல. “அவர் மதச் சுதந்திரத்தில் பூரண நம்பிக்கை வைத்திருந்தார்” என்று டச்சு வரலாற்று ஆய்வாளரான பி.ஏ.பல்தெயஸ் கூறுகிறார். நாட்டின் கிழக்குக் கரையோரமாக உள்ள தமிழ் இந்துக்களுடனான உறவை மேம்படுத்த அவர்களின் இளவரசி ஒருவரையும் அவர் மணந்துகொண்டார். 

கண்டியின் சகிப்புத்தன்மையுடைய கலாச்சாரம் செனரத் மன்னரின்(1604 – 1635) ஆட்சியிலும் தொடர்ந்தது. விமலதர்மசூரியவின் ஒன்றுவிட்ட சகோதரரான செனரத் ஒரு முன்னாள் பிக்கு. ஆனால், அவர் விமலதர்மசூரியன் இறந்த பின்னர், அவரது மனைவியான டோனா கத்தரினாவை திருமணம் செய்தார். முஸ்லிம்களிடம் அவர் இரக்கம் கொண்டிருந்தார். கடும்போக்கு கத்தோலிக்க போர்த்துக்கீஸரால் மேற்குக்கரையில் இருந்து 4000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது, அவர்களை செனரத் கிழக்கு கரையோரமாக குடியேற்றினார். தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கத்தோலிக்கர்களை ஒல்லாந்தர்கள் துன்புறுத்தவே, அவர்களுக்கும் கண்டியில் செனரத் தஞ்சம் கொடுத்தார்.  

விமலதர்மசூரியன் மற்றும் அவரை அடுத்து வந்த ஆட்சியாளர்களின் கீழ் கண்டி பல்வேறு மத, இனங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு இடமாக திகழ்ந்ததாக கணநாத் ஒபேசேகர கூறுகிறார்.  

“கண்டியில் சிங்களவர்களுக்கு மத்தியில் பல முஸ்லிம்கள், துருக்கியர்கள் மற்றும் பல்வேறு மதத்தவரும்  வாழ்ந்தனர். அவர்களுக்கு தனித்தனியான சட்டங்கள் இருந்தன. பிரமோக்கள்(பிராமணர்கள்) நிறையப்பேர் அங்கு இருந்தார்கள். ஆச்சாரத்தை பின்பற்றும் அவர்களை ஏனைய தேசத்தவரும் நன்கு மதித்தனர். இந்த பிரமோக்கள் உயிர்வாழும் எதனையும் உண்பது கிடையாது” என்று கண்டிக்கு விஜயம் செய்த ஒல்லாந்து அட்மிரலான ஜே.வி. ஸ்பில்பேர்ஜன் கூறியுள்ளார். 

மலேயர்கள், ஜாவாநாட்டவர், வட இந்தியர்கள் மற்றும் கடுமையான இந்து ஆச்சாரங்களை கடைப்பிடிக்கும் ஆண்டிகள், பண்டாரங்களும் அங்கு இருந்ததாக கணநாத் ஒபேசேகர குறிப்பிடுகிறார். அத்தோடு, இரண்டாம் இராஜசிங்கன் (1629 – 1687) தனது ஆட்சியில் வெளிநாட்டவரும் உள்ளடங்குவதை பெரிதாக விரும்பினாராம். ஐரோப்பிய சிறைக்கைதிகளை தமது நாட்டில் கட்டாயமாக குடியமர்த்திய கண்டி மன்னர்கள், அவர்கள் சிங்களப் பெண்களை திருமணம் செய்வதை ஊக்குவித்தார்களாம். அதனால்தான் பல கண்டிக்காரர்களின் தோலின் நிறம் சிவப்பாகியது.  

கோவாவில் இருந்து வந்த ஜெசுவிட்(இயேசு திருச்சபை): 

இலங்கையில் ஒல்லாந்தர் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கத்தோலிக்கரை துன்புறுத்தவே, இரண்டாவது இராஜசிங்கனின் மகனான இரண்டாவது விமலதர்மசூரியன், தனது இராஜ்ஜியத்துக்கு  கத்தோலிக்கத்தை போதிக்க கோவாவில் இருந்து ஜெசுவிட் மிஷனைச் சேர்ந்த ஜோசப் வாஸ் அவர்களை வர அனுமதித்தார். கத்தோலிக்க மிஷனரிமாரை தனது கண்டி இராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று 1638இல் இரண்டாவது இராஜசிங்கனும் ஒல்லாந்தரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரண்டாவது விமலதர்மசூரியனும் அவனது மகனான நரேந்திரசிங்கனும்(1707 – 1739) புறக்கணித்தனர்.  

தனது முன்னோடியான பிரான்ஸிஸ் சேவியரைப் போல அருட்தந்தை ஜோசப் வாஸும் ஏழை மக்கள் மத்தியில் வெற்றிகரமானவராக திகழ்ந்தார். அவரது எளிமையான சேவை மனப்பாங்குடனான வாழ்க்கையும் வறியவர்களுக்கு உதவுவதும் ஏழைகளை கவர்ந்தது. பிரான்ஸிஸ் சேவியரைப் போன்று அருட்தந்தை ஜோசப் வாஸ் சப்பாத்துக்களை அணிவது கிடையாது. பழைய கறுப்பு அங்கியையே அணிந்திருப்பார். சன்னியாசி போல தரையில் படுத்துறங்குவார். அவரது எளிய வாழ்க்கை அவருக்கு மக்கள் மத்தியில் “மகாசுவாமி” என்ற பெயரைக் கொடுத்தது. அவர் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது. பிராமணர்களுக்கு எப்போதும் இலங்கையில் மரியாதை அதிகம். 

அருட்தந்தை ஜோசப் வாஸ் மற்றும் அவரது வழி வந்தவரும் அவருக்கு பின்னர் பணியாற்றியவருமான கோவாவின் கொங்கணி இன பிராமணரான அருட்தந்தை ஜேகோம் கொன்கல்வெஸ் ஆகியோரின் அண்மையில்  வளர்ந்தவர்தான் நரேந்திரசிங்க மன்னர். தமிழிலும் சிங்களத்திலும் கத்தோலிக்க இலக்கியத்துக்கு கணிசமான பங்கினை ஆற்றியவர் அருட்தந்தை ஜேகோம் கொன்கல்வெஸ். தான் ஒரு பௌத்தராக இருந்த போதிலும் வாஸ் மற்றும் ஜேகோம் கொன்கல்வெஸ் ஆகியோரின் சகவாழ்வை விரும்பியவர் மன்னர் நரேந்திரசிங்கன். இளம் பிக்குகளுக்கான இருப்பிடத்தையும் அவர் அமைத்தார். விஷ்ணுவுக்கும் நாதனுக்கும் வழிபாட்டிடங்களையும் அவர் அமைத்தார். தலதா மாளிகையை புனரமைத்து அதன் சுவர்களின் புத்த பெருமானின் 32 முன்பிறப்பு கதைகளை ஓவியமாக வரையச் செய்தார். 

தமிழக நாயக்கர் தொடர்பு:  

கண்டி இராஜ்ஜியத்தின் தாராளப்போக்கு குறித்த எந்த விடயமும் நாயக்க வம்சத்தை சேர்ந்த அதன் 3 அரசர்களைப் பற்றி பேசாது பூரணமாகாது. இந்த நாயக்க வம்சத்தினர் தமிழ் நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். கண்டியின் முடிக்குரிய சிங்கள மன்னர்கள், நாயக்க வம்ச இளவரசிகளை திருமணம் செய்துகொண்டதன் மூலம்தான் இந்த நாயக்க வம்சத்தினர் கண்டி இராஜவம்சத்துக்குள் நுழைந்தனர். தமது இராணுவ நடவடிக்கைகளில் தென்னிந்திய படையினரை சிங்கள மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். போர்த்துக்கீஸருக்கு எதிராக 1638இல் கன்னொருவவில் நடந்த போரில் இரண்டாவது இராஜசிங்கனால் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அந்தப் போரில் அவர் வெற்றிபெற்றார். நாயக்க மன்னர்கள் உறுதியுடன் பௌத்தத்தை வளர்த்தனர். கடைசி மன்னனான சிறி விக்கிரம இராஜசிங்கன் மீது கொஞ்சம் குறை கூறப்படுவதுகூட, அவர் சர்வாதிகாரியாகவும், கண்டியின் தலைவர்களை தன்னோடு அணைத்துப் போகாததற்காகவும் தானாம்.