— சு.சிவரெத்தினம் —
அம்மா
பாலை முறுகக் காச்சி
ஊத்துகின்ற தயிர் மணம்
வாயூற வைக்கும்.
முதியான் கன்றின்
எருமைத் தயிர்
ஒரு ருசி.
இளங் கன்றின்
எருமைத் தயிர்
இன்னொரு ருசி.
பசுக் கன்றின்
தயிர்
மற்றொரு சுவை.
விருந்துக்கும்
அன்புக்கும்
அடையாளம்
எங்கள் தயிர் சட்டி.
‘வொக்கை’ நீட்டி
எமக்குப் பழக்கமில்லை
தயிர்ச் சட்டி நீட்டிப்
பழகிய கைகள்.
மட்டக்களப்பாரும்
தயிர்ச் சட்டிகள்தான்
அரசியல்வாதியும்
புத்திஜீவியும்
பிழைப்புவாதியும்
தயிராய் உண்கின்றனர்.
வெற்றுச் தயிர்ச் சட்டிகள்.
வேலி ஓரங்களிலும்
தாவாரங்களிலும்
நாய் நக்கிக் கிடக்கின்றது.