சொல்லத் துணிந்தேன்– 31

சொல்லத் துணிந்தேன்– 31

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

கடந்த எழுபது வருட காலத் தமிழ்த் தேசிய அரசியல் அனுபவத்திலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களுக்கென தனியான அரசியல் அடையாளத்தினை — அரசியல் வியூகத்தை அவாவி நிற்கிறார்கள்.  

அதற்குக் காரணம் கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சனைகளுக்கான தீர்வை நாடும்போது, வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு பொதுவான அரசியல் சமன்பாடு பொருத்தமில்லை என்பதே. அதாவது வடக்கு மாகாணத்திற்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தமாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் “கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு”  எனும் அரசியல் கூட்டணி (Political Alliance)   கடந்த இரண்டு வருடங்களாகக் கிழக்கிற்கான  தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்து வருகிறது. இந்த அடையாள அரசியல் தமிழ்த் தேசியத்திற்கோ — வடக்குக் கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கோ — வடக்குக் கிழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு அலகிற்கோ எதிரானது அல்ல என்பதைக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களில் பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் துண்டுப் பிரசுரங்களினூடாகவும் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தி வந்துள்ளது /வருகிறது.  

ஆனால் இதனைச் சரிவர புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாத சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர்களும் அண்மைக்காலமாக இலங்கையில் தேசிய ரீதியில் வெளிவருகின்ற அச்சு பத்திரிகைகளின் வார வெளியீடுகளில், இந்தக் கிழக்கிற்கான தனித்துவமான அடையாள அரசியலை “கிழக்கு மைய அரசியல் வாதம்”  எனத் தவறாக நாமம் சூட்டி, அதனைப் “பிரதேசவாதம்” என்றும் “யாழ் எதிர்ப்பு” என்றும் “தமிழ்த் தேசியத் துரோகம்” என்றும் “தென்னிலங்கை நோக்கிப் போவது” என்றும் கற்பிதம் செய்து கொண்டு, யானை பார்த்த குருடர்கள் போன்றே தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.  

இது ஒரு தவறான புரிதலாகும். ஆனால் இப்பத்தி எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முடியாமல் இதுகாலவரையிலான தமிழ்த் தேசிய அரசியல் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் தவறிழைத்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்த ஒப்புதல் வாக்குமூலமும் உளப்பூர்வமானதா என்பது சந்தேகமே.  

உண்மையில் கடந்த 70 வருட காலமாகத் “தமிழ்த் தேசிய அரசியல்” என்று மயங்கியது, யாழ் மேட்டுக்குடி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களில் மட்டுமே கரிசனை கொண்டு செயற்பட்ட யாழ் மேலாதிக்க — யாழ் மையவாத அரசியலைத்தான். இதனால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் வடக்கு மாகாண தமிழர்களோடும், கிழக்கின் சகோதர முஸ்லிம்களோடும், மலையகத் தமிழர்களோடும் ஒப்பிடுகையில் பாரிய சமூக பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு உள்ளாகிப் போயுள்ளனர். இத்தகைய பின்னடைவுகளைச் சீர்செய்துகொண்டு, எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய இனக் குழுமங்களோடும் பிரதேசங்களோடும் சரிநிகர் சமானமாக வாழ்வதற்குரிய ஓர் எத்தனமே — ஓர் அரசியல் உபாயமே அல்லது அரசியல் அணுகு முறையே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தனித்துவ அடையாள அரசியலே தவிர,  இது “உண்மை’யான தமிழ்த் தேசிய” அரசியலுக்கு எதிரானதல்ல. 

 மேலும், கிழக்கு மாகாணத் தமிழர்கள் அவாவி நிற்கும் தனித்துவமான அடையாள அரசியலுக்கு எதிரான அல்லது உடன்பாடில்லாத சக்திகள் கிழக்கிலே பிள்ளையானும் கருணா அம்மானும் வியாழேந்திரனும் பேசுகின்ற அபிவிருத்தி அரசியலை மையப்படுத்தித்தான் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இதுவும் தவறானதொரு புரிதலாகும். உண்மையில் கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையான், கருணா அம்மான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்கள் பேசுகின்ற அபிவிருத்தி அரசியலுக்கும் அப்பால் தமிழ்த் தேசியம் சார்ந்த அகநிலைப்பட்ட எதிர்பார்ப்புகளும் உண்டு. தமிழ் மக்களின் மன ஆதங்கத்தையும் அகவயப்பட்ட எதிர்பார்ப்புக்களையும் எவ்வாறு பௌத்த சிங்கள பேரினவாதம் புரிந்து கொள்ள மறுக்கின்றதோ அவ்வாறே கிழக்குத் தமிழர்களின் மன ஆதங்கத்தையும் அகவயமான எதிர்பார்ப்புக்களையும் புரிந்துகொள்ள யாழ் மேலாதிக்க வாதம் மறுக்கிறது.  

வெளிப்படையாகக் கூறுவதானால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் மூன்று விதமான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.                         

  1. ஒட்டுமொத்தமான வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கும் பொதுவான சவாலான பௌத்த சிங்களப் பேரினவாதம்.                                                    
  2.  முஸ்லிம் அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதம்.                                                           
  3.  யாழ் மேலாதிக்க வாதம்.                        

இவற்றில் பௌத்த சிங்களப் பேரினவாதமும் முஸ்லிம் அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய விஸ்தரிப்பு வாதமும் வெளித்தெரிகின்ற புறப்பகைகளாகும். ஆனால் யாழ் மேலாதிக்க வாதம் என்பது உள்ளிருந்து அரிக்கும் அகப்பகையாகும். முதலில் இந்த அகப்பகையை வெற்றி கொள்வதன் மூலமே அல்லது அதிலிருந்து விடுபடுவதன் மூலமே புறப்பகைகளை வினைத்திறனுடன் எதிர்கொள்ள முடியும். எனவே கிழக்கின் தனித்துவ அடையாள அரசியல் என்பது யாழ் மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிரானதே தவிர ‘உண்மை’யான தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது அல்ல.  

விளிம்புநிலைத் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது, யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி பூர்சுவா சிந்தனைகளின் மீது கட்டமைக்கப்பெற்ற, வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றிற்குச் சார்பான தமிழ் ஊடகங்களும் கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் கிழக்கைச் சரியாகக் கையாளவில்லை என்று இப்போது ஒப்புக் கொள்கின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய தலைமைகள் கிழக்குத் தமிழர்களை மட்டுமல்ல கிழக்கு முஸ்லீம்களையும் தென்னிலங்கை அரசியலையும் பிராந்திய அரசியலையும் மற்றும் பூகோள அரசியலையும் கூடச் சரியாகக் கையாளவில்லை என்பதே விரிவுபடுத்தப்பெற்ற உண்மையாகும்.  

கடந்த காலத் தமிழ்த் தேசியத் தலைமைகள் யாவும் தன் முனைப்பு மிக்க யாழ் மேலாதிக்க சிந்தனைகளின் மீது காலூன்றி நின்று கொண்டு இவற்றைக் கையாள முற்பட்டதே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கு அல்லது பின்னடைவுக்குக் காரணமாகும் (அது அஹிம்சைப் போராட்டம் என்றாலும் சரி அல்லது ஆயுதப்போராட்டம் என்றாலும் சரி அல்லது இராஜதந்திரப் போராட்டம் என்றாலும் சரி). 

ஆரம்பத்தில் தமிழர்களுடைய உரிமைக் கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தென்னிலங்கைச் சிங்கள முற்போக்குச் சக்திகள் காலவரையில் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுவதற்கும், புவிசார் அரசியல் நலன்கள் காரணமாகத் தமிழர்களின் நேச சக்தியாக விளங்க வேண்டிய பிராந்திய வல்லரசான இந்தியாவைப் பகைத்துக் கொண்டதற்கும், தத்தம் நலன்களுக்காகத் தமிழர்களின் போராட்டத்தைச் சர்வதேச அரசியல் சக்திகள் பயன்படுத்திவிட்டுப் பின்னாளில் தமிழர்களைத் தூக்கி வீசி விடுவதற்கும் அடிப்படைக் காரணம் தமிழ்த் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தன்முனைப்பும் சுயநலமும் மிக்க யாழ் மேலாதிக்கக் குட்டி முதலாளித்துவ வர்க்கச் சிந்தனையே. இந்த உண்மையைச் சீரணித்துக் கொண்டு தற்காலத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமை தன்னைச் சுய விமர்சனம் செய்து எதிர்கால முன்னெடுப்புக்களைத் தொடர்வதுதான் இதுவரைகாலமும் விட்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாகும்.  

பழைய பல்லவியும் மரபுவழி அரசியலும் இனி பயன் அளிக்கப் போவதில்லை. தமிழ்த் தேசிய அரசியல் புதிய பரிணாமத்தை நோக்கித் திசை திரும்ப வேண்டும். அத்தகைய பிராயச்சித்தங்களிலொன்றுதான் கிழக்குத் தமிழர்கள் தங்களுக்குப் பொருத்தமான தனித்துவமான அரசியலை முன்னெடுப்பதற்கு வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையில் வழிவிடுவதும், அதேவேளை தமிழ்த் தேசிய இனத்தின் பொதுவான பிரச்சனைகளென்று வருகின்றபோது பொருத்தமான தருணத்தில் பொருத்தமான வகையில் வடக்கும் கிழக்கும் கைகோர்ப்பதுமாகும். 

 கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டுக் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின்’ பின்னே அணிதிரள்வார்களாயின் எதிர்காலத்தில் இது சாத்தியமே.