படுவான் திசையில்…

படுவான் திசையில்…

— படுவான் பாலகன் — 

மாணவர்களால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார்?

நீதி என்பது எல்லோருக்கும் சமமானது. ஆனால் படுவான்கரை மக்களை சூழ்ந்திருப்பது அநீதி மாத்திரந்தான். எங்குதான் நீதியைக் கேட்டுப் போவதென்று தெரியாமல் இருக்கிறதேயென கன்னன்குடா சந்தியில் நின்று கந்தவனமும், இராசதுரையும் பேசிக்கொண்டனர். 

எந்தப்பக்கம் நீதி கேட்டு போவதென தெரியாமலே இருவரும் சிந்திக்கொண்டிருந்தனர். இவர்கள் நின்றுகொண்டிருந்த சந்தி ஒரு முச்சந்தி. இதில் ஒருபக்க வீதி கன்னன்குடா பாடசாலை நோக்கி செல்கிறது. மற்றோர் வீதி மயானத்தினை நோக்கி செல்கிறது. அடுத்த வீதி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அலுவலகத்தினை கடந்து செல்கின்றது. இதில் எந்தப்பக்கம் நீதி கேட்டு போவதென்பதுதான் இருவரின் திண்டாட்ட நிலைக்குக் காரணம். 

‘என்னடா சங்கடம், ஒன்றுமே தெளிவாகச் சொல்லாமல், நீதி, அநீதி’ என பேசுகிறார்களே என நீங்கள்  சிந்திக்ககூடும். இதேநிலைதான் படுவான்கரைப்பகுதியில் வாழும் மக்களின் நிலையும். பல்வேறு விடயங்களில் அநீதிக்குள்ளாக்கப்படும் சமூகமாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.  

“நெல்லுக்கு இறத்த நீர் புல்லுக்கும் பொசிவது”போல, நகரத்தில் நான்கு அபிவிருத்திகள் நடைபெற்றால் ஓரிரு அபிவிருத்திகள் மாத்திரமே  படுவான்கரைக்கு கிடைக்கின்றன. ஒருதுறையில் புறக்கணிக்கப்பட்டால் பரவாயில்லை, ஒவ்வொரு துறையிலும் புறக்கணிப்படுவதுதான் இங்குள்ள மக்களின் வேதனை.  

கல்வி, விளையாட்டு, பொருளாதாரம், விவசாயம், குடிநீர், வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, தொழில்பேட்டை, தொழில்வாய்ப்பு என பல்வேறு துறையிலும் அநீதியை எதிர்கொண்டவர்களாகவே படுவான்கரை சமூகம் இருந்து வருகின்றது. இதில் கல்வித்துறையைப் பற்றித்தான் இருவரும் பனைமரத்தின் கீழ் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டமை இங்குள்ள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான், ஆனால் என்னமோ துரதிஸ்டம், பாடசாலைகளில் மாணவர்கள் இருக்கின்றனர், சில பாடங்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. இதைப்பற்றி அடிக்கடி பேசினாலும் கூட இன்னமும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. அரசாங்கத்தின் இலவச கல்வி என்கின்ற அடிப்படை உரிமைகூட இப்பகுதி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனை எங்கு முறையிடுவது?,  யார் நீதி தருவது? என்பதுதான் கந்தவனத்தின் கேள்வியாக இருந்தது.  

‘ஓம்டா தம்பி’ என மெதுமெதுவாக கதையினை ஆரம்பிக்கிறார் இராசதுரை, ‘நல்லது செய்வதற்கு யாரும் முன்வருவது குறைவுதானே, நல்லவனை நல்லா பேசுவதும் இல்லைதானே. ஒருவேளை ஆசிரியர்கள் இல்லாமலே அர்ப்பணிப்பான சேவையின் ஊடாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் பல்வேறு மட்டங்களில் முன்னேறி வருவதைக் கண்டு பொறாமை கொண்டவர்கள், அது முன்னேறிவிடக்கூடாதென்பதற்காக இங்குள்ள பாடசாலைகளின் குறைகளை தீர்க்காமல் உள்ளார்களோ?’ என பகிடியாக தனது கதையை ஆரம்பித்தார் இராசதுரை. 

‘நம்மட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்கள் சிலர் நேரசூசி இல்லாமலே இருக்கின்றனராம். ஆனால் நம்மட வலயத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் 40 பாடவேளையும் படிப்பித்தும் இன்னும் நேரம் போதாமல் பின்னேரம், இரவு என வகுப்புக்கள் நடாத்தி கற்பிக்கின்றனர். சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்களுக்கு அப்பாடங்கள் போதிக்கப்படாமலே உள்ளன.’  

ஒர் இடத்தில் வளம் குவிக்கப்பட்டும், இன்னோர் இடத்தில் வளம் போதாமல்  இருப்பதும் நீதியா?  நகர்புறத்தில் இருக்கின்றவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் போதியளவு இருக்கின்றன. எவ்வாறும் சென்றுகொள்ளலாம். ஆனால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு செல்வதற்கு பொதுப்போக்குவரத்து கிடையாது. இதனால் தமது வாகனங்களைப் பயன்படுத்திதான் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச்  செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது வாகனங்களுக்கு ஏதும் நேர்ந்தால் அன்றைய நாள் பாடசாலைக்கு விடுமுறைதான்.  வீடு வந்து சேருவதற்கும் சிரமங்களைத்தான் எதிர்கொள்ள வேண்டும். இப்பகுதியில் வேலை செய்பவர்களுக்கு வேறு சலுகைகளும் இல்லை. எல்லோருக்குமான பொதுச்சலுகைகள் மாத்திரந்தான் இவர்களுக்கும் உண்டு.  

சில சட்டங்கள், விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது எல்லா இடங்களிலும் சமமாக பேணப்படுகின்றன. சில விடயங்களில் புறக்கணிப்புக்கள் இடம்பெறதான் செய்கின்றன. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நேரத்திற்கு செல்லாவிட்டால் பிந்தி சென்ற நேரத்திற்கான, காலத்தை வேலை நிறைவுக்கு பின்பு செய்து அன்றைய நாளை எந்ததொரு விடுமுறையும் இல்லாமலாக்க முடியும். ஆனால் ஆசிரியர் சேவையில் இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை இல்லை. காலை 7.30க்கு பாடசாலைக்கு வந்தே ஆகவேண்டும். இந்தநேரம் 7.31ஆனால் கூட குறுங்கால விடுமுறைக்குரியவர்களாக மாறுகின்ற சூழல்தான் உள்ளது. 1.30க்கு பின்னர் பாடசாலையில் நின்று கற்பித்தாலும் அவை தொடர்பில் எப்பொழுதும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அவ்வாறான சூழல்களை கருத்தில் கொண்டு பொதுநலத்துடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்கள் இரவு, பகலாக கற்பிக்கின்றனர். இங்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் வரவுவினை இயந்திரத்தில் பதிவுசெய்வதற்கான நடைமுறைகள் பேணப்பட்டு வருகின்றன. அதேவேளை சகல வசதிகள் கொண்ட நகர்புறத்திலும் விரல் அடையாளம் இட்டு இயந்திர பதிவு செய்யும் நடைமுறை செயலில் உள்ளது. இது பொதுவான நடைமுறைகளாக இருந்தாலும் கூட, இங்கு போக்குவரத்து, வீதிகள் சீரின்மை, காடுகள் சூழ்ந்த பகுதி என்ற எந்ததொரு விடயங்களையும் கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்படவில்லை. குறித்த இயந்திரம் பொருத்தபட்டு, அவை இயங்காமல் இருக்குமாகவிருந்தால் அதற்கான காரணத்தினை கணக்காய்வு பிரிவினர் கேட்பதும், தொடர்ந்து அதீத கவனத்தை எடுப்பதும், நடைமுறைப்படுத்தாவிட்டால் நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பதும் நடந்தேறி வருகின்றன.  

‘பாடசாலையில் மாணவர்கள் வளங்கள் இன்றியும், கணிதம், விஞ்ஞானம், ஆரம்பப்பிரிவு போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் குறித்த பாடரீதியான அறிவை இழக்க நேரிடுகிறது. இவ்வாறான மாணவர்கள்  யாரிடம் நீதி கேட்பது? இவர்களுக்கு இழைக்கும் அநீதிக்கு தண்டணை யாருக்கு வழங்குவது? சில விடயங்கள் மீது காட்டும் அக்கறையை மாணவர்கள் மீது காட்டாமல் இருப்பது ஏன்? ஒரு நிமிடம் தாமதித்து வருகைதருவது பிழையென்று கருதும் அதிகாரிகளும், ஏனைய உத்தியோகத்தர்களும், காலம் பூராகவும் கணிதப்பாட சித்தியில்லாமல் நாள்தோறும் துன்பத்தினை தொடராக அனுபவிக்கின்ற எத்தனையோ மாணவர்களுக்கு என்ன பதிலை கூறப்போகின்றனர்?’ என கந்தவனத்திடம் உரத்துகேட்டவனாக தனது ஆவேசக்குரலை தணித்துக்கொண்டான் இராசதுரை. நம்ம இருவராலும் பேச முடியுமே தவிர இதற்குமேல் நம்மளால் என்ன செய்ய முடியும். ‘எத்தனை தடவை கூறியும் நமது பிள்ளைகளும், சமூகமும் புறக்கணிக்கப்படுவதே வழமையாகிற்றே’ எனக்கூறியவர்களாக இருவரும் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.