— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
எனது ஊரின் அருமைக்கும், பெருமைக்கும் காரணமாக
நினைவு தெரிந்த நாளில் இருந்து
எனக்குத் தோன்றுவன எத்தனையோ என்றாலும்,
பல்லாயிரம் மக்கள் இந்தப் பரந்த உலகில் சிறந்துயர
கல்வியைக் கொடுத்து வாழ்வில் கரையேறச் செய்கின்ற
பள்ளிக்கூடம்தான் என் நெஞ்சில்
பட்டென முன்னின்று பளிச்சிடுகின்றது.
ஆம்!
அந்நாளில் சைவப் பாடசாலையாகத் தொடங்கி,
அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாக அமைந்து,
நாங்கள் நுழைந்த காலத்தில் வித்தியாலயமாக விளங்கி,
நாங்கள் விளைந்த காலத்தில் மகா வித்தியாலயமாக வளர்ந்து,
பின்னாளில் மத்திய மகாவித்தியாலயமாக உயர்ந்து,
இந்நாளில் தேசியப்பாடசாலையாக சிறந்து,
கடந்த ஒரு நூற்றண்டுகாலமாக கல்வி அருள்
பாலித்து வருகின்ற பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசியப் பாடசாலையே அது!
களுவாஞ்சிகுடியின் மத்தியில், மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், இப்போது அறநெறிப்பாடசாலை அமைந்துள்ள இடத்தில்
ஆரம்பிக்கப்பட்டு, ஏட்டுக்கல்வி மூலம் மாணவர்களுக்குக் கல்வியூட்டிக் கொண்டிருந்த திண்ணைப்பாடசாலை, 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி, களுவாஞ்சிகுடி இந்துச் சபையால் பொறுப்பேற்கப்பட்டது. அன்று முதல் “களுவாஞ்சிகுடி சைவப்பாடசாலை” என்ற பெயரில் முறையான பாடசாலையாக இயங்கத்தொடங்கியது.
காலப்போக்கில், பாடசாலையின் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டும், இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், அது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
அதன்படி பாடசாலையின் ஒரு பகுதி அதே இடத்திலும்,
மறுபகுதி புதியதோர் இடத்திலும் இயங்கத் தொடங்கின.
புதிய இடத்தில் அமைந்த பாடசாலை “மட்/பட்டிருப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, களுவாஞ்சிகுடி”என்ற பெயரில் இயங்கத்தொடங்கியது. அதுவே, ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி, இன்று விண்ணை இடிக்கும் இமயம் போலத் தேசியப் பாடசாலையாகப் புகழோங்கி நிற்கின்றது.
என்னைப்போன்ற எண்ணற்ற மனிதர்கள்
கல்வியில் உயர்வதற்கும், கலைகளில் சிறப்பதற்கும்,
பல்வேறு துறைகளில் பட்டொளிவீசி மிளிர்வதற்கும்
நல்லதோர் ஆரம்பக் களமாக அமைந்த அந்தக்
கல்விக் கோவிலின் பெருமையை
எல்லை வகுத்து இயம்பிட முடியாது.
அப்போது “ஆனா” எழுதப் பழகுதற்கு அங்கு நான் சென்றபோது இப்போது எழுந்து நிற்கும் இத்தனை கட்டிடங்கள் இருந்ததில்லை.
நூலகம் இல்லை, பிரார்த்தனை மண்டபம் இல்லை.
சுற்று மதில் இல்லை, சூழவரக் கடைகள் இல்லை.
பக்கத்தில் சந்தை இருந்தாலும் பரபரப்பான சந்தடியில்லை,
வாகனங்களின் இரைச்சலில்லை, மாணவர்க்கும் கரைச்சலில்லை.
இருபாலாரும் படிக்கின்ற கலவன் பாடசாலையாக இருந்தபோதும் ஒரு பாலாருக்கும் மலசல கூடம், ஒன்றுகூட இல்லை.
இப்போது ஆதார வைத்தியசாலையாக இருக்கின்ற இடத்தில்
அப்போது மகப்பேற்று மருத்துவமனை மட்டும் அமைந்திருந்தது.
அதற்குப் பின்புறத்தில் மருத்துவிச்சியின் விடுதி.
அந்த விடுதிக்கும், பாடசாலைக்கும் இடையில் ஒரு முட்கம்பி வேலி.
அந்தவேலியின் அருகோடு, விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குப் பின்னால் நாற்புறமும் கிடுகினால் மறைத்துக் கட்டப்பட்ட ஒரு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குள் கல்லால் அமைந்திருந்த கக்கூசு பராமரிப்பற்றதால் பாவனைக்குதவாமல் கற்களையும், முட்களையும், கழிவுகளையும் நிரப்பிக்கொண்டு குட்டிச் சுவர்போலக் கூரையில்லாமல் நின்றது.
இப்போது கல்வி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில்
அப்போது பிரிவுக் காரியாதிகாரி (DRO)அலுவலகம் இருந்தது.
அந்த அலுவலகத்திற்கும் பாடசாலைக்கும்
எல்லையாக அமைந்திருந்த வேலியோரந்தான் ஆண்கள் சலம் கழிக்கும் இடமாக அமைந்தது.
வேலிகளில் நின்றிருந்த கம்பிக்கட்டைகளின் அடிப்பகுதி
ஈரளிப்பாகவே எப்போதும் காணப்படும்.
வரிசையாக நின்றிருந்த கிளிசறியா மரங்கள்
மாணவர்களின் சிறு நீரால் செழித்து நின்றன.
பாடசாலை வளவின் மத்தியிலே ஒன்றும்,
மருத்துவமனைப்பக்கமாக இன்னொன்றுமாக
இரண்டே இரண்டு கட்டிடங்கள் இருந்தகாலத்தில்
அந்த ஆலயத்தினுள் அடியெடுத்து வைத்தவர்களில் நானும் ஒருவன்.
அப்போது, முன்வாசலில் இரண்டு மாமரங்கள்
காய்த்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.
ஒன்றின் காய் அதிகமாய்ப் புளிக்கும்.
மற்றையது அறவே புளிக்காமல் உருசிக்கும்.
கறுக்காய், மாங்காய் என்று கடித்து எங்கள் மனமெல்லாம் களிக்கும்.
நாங்கள் பாடசாலையை விட்டு வெளியேறிய காலம் வரை
அந்த மரங்கள் அங்கேயே நிழலும், பழமும் கொடுத்துக்கொண்டு நின்றன.
பாடசாலையின் முற்பக்கத்தில் வேலிகளில்
அகன்ற கிளைகளைப் பரப்பிக்கொண்டு ஆலமரங்கள் கோலோச்சின.
ஆலமர விழுதுகள் நீண்டு வளர்ந்து நிலத்தைத் தொட்டன.
நீளமான விழுதுகளைப் பற்றிப்பிடித்து அந்தரத்தில் சுற்றிச் சுற்றி ஆடுவோம்.
அவற்றை ஒன்றோடொன்று பிணைத்து ஊஞ்சல் கட்டுவோம்.
பள்ளிக்குப் பின்னால் வேப்பமரங்கள் சடைத்து நின்றன.
ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி வகுப்பறைகள் இல்லாமல் நீளமான மண்டபங்களில் அடுத்தடுத்துப் பல வகுப்புக்கள் நெருக்கமாக அமைந்திருந்ததால்
மரங்களின் நிழல்களில்தான் பெரும்பாலான வகுப்புக்கள் நடைபெறும்.
கதிரைகளைத் தூக்கிச் சென்று மரங்களின் கீழே
வட்டமாகப் போட்டு வகுப்புக்கள் நடைபெற்றன.
பழம் தின்னவரும் குருவிகள் மரங்களில் கூடுகட்டிக் குடியிருந்தன.
மரத்தின் கிளைகள் காற்றில் அசையும்போது,
குருவிக் கூடுகள் சிதைந்தன.
மாணவர்களின் தலைகளில் அவற்றின் பாகங்கள் விழுந்த சம்பவங்களும் நடந்தன.
கொழுத்தும் வெயில் நேரத்தில்,
குடைபோல நின்ற ஆலமரத்தின் அடியிலும்
வெப்பமான காற்றை தட்பமாக்கித் தருகின்ற
வேப்பமர நிழலிலும், வகுப்புக்கள் நடக்கும்.
வீசுகின்ற காற்றிலே புளுதி மண்ணின் வாசம் கலந்து மணக்கும்.
ஆசிரியரின் உரத்த சத்தம் அமைதியைக் கிழிக்கும்.
வில்லில் இருந்து வேகமாகப் புறப்பட்ட அம்புபோல,
அவர் சொல்வதெல்லாம் நேராக வந்து எங்கள் செவிகளில் பாயும்.
கூரான பசுமரத்தாணிபோல மூளையில் பதியும்.
பாடசாலையின் பின்புறத்தில்,
இப்போது விளையாட்டு மைதானம் இருக்கும் இடத்திலும்,
இன்னும் சற்றுப் பின்னாலும்
காரை மரங்களும், நாவல் மரங்களும்
சூரை மரங்களும், சுரமின்னா மரங்களும்,
காலத்திற்குக் காலம் காய்த்துப் பழுத்துக் குலுங்கி நிற்கும்.
இடைவேளை நேரத்தில் வாவாவென்று
அவையெல்லாம் எங்களை அழைக்கும்.
ஏழெட்டுப் பனை மரங்களும் இடையிடையே
வானத்தைத் தொடுவதுபோல வளர்ந்து நின்றன.
இந்த மரங்களில் முற்பக்கம் இருந்தவை எல்லாவற்றையும்
அடியோடு தறித்து, வேரோடு பிடுங்கி அகற்றிய பின்னர்தான்
அழகாக இப்போது உள்ள விளையாட்டு மைதானம்
அந்த இடத்தில் அமைக்கப்பட்டது.
அதுவரை,
இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கும்,
பள்ளிகளுக்கு இடையிலான, வட்டார, மாவட்ட
எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும்
பெரியகுளமே மைதானமாகப் பேருதவி புரிந்தது.
வருடங்கள் நகர்ந்தன.
பாடசாலையில் மெல்ல மெல்லக் கட்டிடங்கள் தோன்றின.
விஞ்ஞான ஆய்வு கூடம், விளையாட்டு மைதானம்,
மரவேலைப் பட்டறை, தனித்தனி வகுப்பறைகள்,
அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி என்றிப்படிப்
புதிது புதிதாய்க் கட்டிடங்கள் எழுந்தன.
நீரேற்றும் இயந்திரம் கிணற்றுக்குள் இறங்கியது.
தாகம்தீர்க்கத் தண்ணீர் குழாயிலே ஏறியது.
இடைவேளை நேரத்தில் தண்ணீர் குடிக்க
அயல்வீடுகளுக்குச் செல்வது நின்றது.
ஆசிரியர் தொகை அதிகரித்தது.
மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள்
மாவட்டத்தில் ஏற்கனவே மலைபோல உயர்ந்து நின்ற
நகரத்துப் பாடசாலைகளுக்குச் சவால் விட்டன.
பட்டிருப்புத் தொகுதியின் எட்டுத்திசைகளில் இருந்து மட்டுமன்றி, கல்முனை, அதற்கப்பால் பொத்துவில் தொகுதியில் இருந்தும்கூட
மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள், கல்வியில் தேர்ந்தார்கள்.
காத்தான் குடியில் இருந்து முஸ்லிம் மாணவர்களும்
களுவாஞ்சிகுடிக்குப் பஸ் ஏறி வந்தார்கள்.
பழுதில்லாமல் படித்தார்கள், பல்கலைக்கழகம் சென்றார்கள்.
இவ்வாறு அந்த ஆலயம் தானும் வளர்ந்தது,
தன்னிடம் சரணடைந்த மாணவர்களையும் வளர்த்தெடுத்தது.
அதன் சிறப்பிற்காகவும், உயர்வுக்காகவும் இன்றுவரை எத்தனையோ அதிபர்கள், ஆசிரியர்கள், அயராது உழைத்திருக்கிறார்கள்.
ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் தளராது பணியாற்றியிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற மாணவர்கள் இன்று இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும்,
சென்ற இடமெல்லாம் சிறப்புப்பெற்ற மனிதர்களாகத் திகழ்கின்றர்கள்.
அதற்கு அடிப்படையான முக்கிய காரணவான்களாக
அமைந்தவர்களில் முதன்மையானவர்,
அந்தக் காலகட்டத்தில் அக்கல்விக்கூடத்தின் அதிபராக இருந்த திரு.க.அருணாசலம் சேர்
அவர்கள்தான் என்பது முற்றிலும் உண்மை. சற்றும் மிகையில்லை.
அவரது காலத்தில் க.பொ.த. சாதாரண, மற்றும் உயர்தர வகுப்புக்களில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெற்று வெளியேறி உயர்நிலை அடைந்த மாணவர்களின் தொகை அதற்கு முன்னும், அதனையொட்டிய வேறெக்காலத்தையும் விட மிகவும் அதிகமானது.
கண்டிப்பும், கண்ணியமும் மிக்கவராய்த் திகழ்ந்த அருணாசலம் சேர் அவர்கள் மாணவர்களின் கல்வியில் அளவில்லா அக்கறையோடு வித்தியாலயம் விளங்க உழைத்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை, “அதிபர்” என்ற வார்த்தையை நினைக்கும்போதும், உச்சரிக்கும்போதும் நான் படித்த பாடசாலைகளின் எந்த அதிபரும் மட்டுமல்ல,
எந்த நாட்டின் அதிபரும்கூட என் மனக்கண்முன் தோன்றுவதில்லை.
அருணாசலம் சேர் அவர்களுடைய முகம்தான் சட்டெனத் தோன்றும்.
அந்த அளவுக்கு இன்றுவரை எனது நெஞ்சம் “அதிபர்” என்றாலே அவர் ஒருவரைத்தான்
தெளிவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது.
பாடசாலையின் புகழ் முதன் முதலில்,
பட்டிருப்புத் தொகுதியைக் கடந்து, மாவட்டத்தையும் தாண்டி
இலங்கை முழுவதுமே பரவியது அவரது காலத்திலேதான்!
விளையாட்டுப் போட்டிகள், விஞ்ஞானப் பொருட்காட்சிகள்,
கலை விழாக்கள், களியாட்ட விழாக்கள், கல்விச் சுற்றுலாக்கள், நாடளாவிய பொது அறிவுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், அறிஞர் பெருமக்களின் பேருரைகள்,
என்றிவ்வாறு எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவர் நடாத்தினார்.
(1967 ஆம் ஆண்டில் வித்தியாலயத்தில் நடைபெற்ற விஞ்ஞானப் பொருட்காட்சியைத் திறந்து வைத்த, பல்கலைக்கழக மானியக்குழுத்தலைவர் பேராசிரியர் ஜி.பி.மல்லசேகராவுடனும், பட்டிருப்புத்தொகுதி பா.உ. வும் தமிழரசுக்கட்சித் தலைவருமான திரு. சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள், கல்விப்பணிப்பாளர் எஸ்.தணிகாசலம் ஆகியோருடனும், அதிபர் திரு.க.அருணாசலம் அவர்கள். பின்னால் நிற்பவர் இராசசிங்கம் ஆசிரியர் அவர்கள்.)
கல்விக்கு மேலாக, மாணவர்களின் அறிவையும், ஆற்றலையும் பல்வேறு துறைகளிலும் வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டார்.
அவரது இத்தகைய முயற்சிகளினால்
மாணவர்கள் பயனடைந்தார்கள்,
பெற்றோர்கள் உளம் மகிழ்ந்தார்கள்.
ஆசிரியர்களும் பண்பட்டு உயர்ந்தார்கள்.
அவரது காலத்திலேதான் மாணவர்களுக்குச்
சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுவரை, ஆண்கள் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிவார்கள், பெண்கள் நீளமான சட்டையுடன்
அல்லது கட்டைப் பாவாடை சட்டையுடன் வருவார்கள்.
மேல்வகுப்பு ஆண்கள் வேட்டிகட்டி விலாசமாய் வருவார்கள்.
மேல்வகுப்புப் பெண்கள், பாவாடை தாவணியில் பவனி வருவார்கள்.
மாணவர்கள் நீளக்காற்சட்டை அணியும் பழக்கம்
அந்நாளில் மேல்வகுப்பு ஆண்களுக்குக்கூட இல்லை.
பின்னாளில் அது பின்பற்றப்பட்டபோது
அந்தப்பாடசாலையில் நான் இல்லை!
சீருடை அமுலாக்கத்தில் கல்முனையைச் சேர்ந்த கணித ஆசிரியர் சின்னச்சாமி அவர்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு.
வெள்ளைநிற முழுச் சட்டை பெண்களுக்கும்,
வெள்ளைநிற மேற்சட்டை ஆண்களுக்கும்
சீருடையாக முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
கழுத்துப்பட்டி கட்டும் சீருடை பின்னைய காலத்தில்
பின்பற்றப்பட்டது.
ஆறாம் வகுப்பில் நான் படிக்கும்போது
சீருடை அமுலுக்கு வந்தது.
அதனால்,
மேல்வகுப்பிற்கு நான் வந்தபோது
வெள்ளிக்கிழமை தவிர மற்றைய நாட்களில்
வேட்டிகட்டவேண்டிய தேவை இருக்கவில்லை.
விருப்பமான மாணவர்கள் மட்டும்
வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குப் போவதற்காக
வேட்டி கட்டுவார்கள் – நானும் கட்டினேன்!
வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமும்,
அதிபர், ஆசிரியர் விடுதிகளும்,
அருணாசலம் அதிபரின் காலத்திலேதான் அமைக்கப்பட்டன.
வித்தியாலயத்தை விட்டுச் செல்லும்வரை,
விடுதியிலேயே குடும்பத்தோடு தங்கியிருந்து
இருபத்து நான்கு மணி நேரமும் பாடசாலையுடனேயே
இணைந்திருந்த ஒரேயொரு அதிபர்
அவராகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுகின்றேன்.
அந்த ஊரைத் தனது சொந்த ஊராக,
அந்தப் பாடசாலையைத் தனது சொந்தப் பாடசாலையாக,
அங்குள்ள மாணவர்களைத் தனது சொந்தக் குழந்தைகளாக
அவர் நினைத்து அக்கறை காட்டினார் என்றே சொல்ல வேண்டும்.
அதனால்தான், யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியராக மட்டக்களப்பிற்கு வந்து பதவி நிலை எதுவும் இல்லாமல் நிறைவேற்று அதிபராகக் காலடிவைத்த
அருணாசலம் சேர் அவர்கள், மாற்றம் பெற்றுச் செல்லும்போது முதலாந்தர அதிபராக
ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தார்.
வித்தியாலயம் அவர் இருந்தபோது வளர்ந்தது!
வித்தியாலயத்தில் இருந்தபோது அவரது நிலையும் உயர்ந்தது!!
அந்தக் காலகட்டங்களில்
உப அதிபர்களாகக் கடமை புரிந்த, அமரர்கள் பண்டிதர் க.கந்தையா, வித்துவான் க.செபரெத்தினம் மற்றும் உயிரியல் ஆசிரியர் மயிலங்கூடலூர் பி.நடராசன், கணித ஆசிரியர் கல்முனை சி.சின்னச்சாமி முதலியோர் கற்பித்தலுக்கும் மேலாகப் பாடசாலையின் அபிவிருத்தியிலும் மட்டற்ற பணியாற்றினார்கள். அவர்களது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளும், ஒத்துழைப்புக்களும் அதிபரின் முயற்சிகளுக்கு தோன்றாத் துணையாக இருந்தன, கல்விக்கூடம் துலங்கி உயர்வதற்குத் தோள்கொடுத்தன.
(நினைவுகள் தொடரும்)