‘லோங் கொவிட்’ – கொரொனா தொற்று நீங்கிய பின்னரும் தொடரும் பிரச்சினை

‘லோங் கொவிட்’ – கொரொனா தொற்று நீங்கிய பின்னரும் தொடரும் பிரச்சினை

—- சீவகன் பூபாலரட்ணம் —

கொவிட் 19 என்னும் கொரொனா தொற்றில் இருந்து விடுபட்டாலும் சிலருக்கு, அது சார்ந்த நோய்க்குறிகள், பல மாதங்களுக்கு தொடர்வதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

குறிப்பாக களைப்பு, தொடர்ச்சியான வலி மற்றும் சுவாசச் சிக்கல் என்பன நீண்ட காலத்துக்கு தொடருகின்றதாம்.  

இந்த நிலைமைக்கு லோங் கொவிட் (நீடித்த கொவிட்) என்று மருத்துவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பலவீனத்தை கொடுப்பதுடன் சிலரது விடயத்தில் கொஞ்சத்தூரம் நடப்பதுகூட சிரமமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

இவ்வளவு காலமும் நோய் தொற்றுக்காலத்தில் நோயாளிகளின் உயிரை எவ்வாறு காப்பது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், இப்போது கொவிட் பாதிப்பால் மக்கள் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து அறிய வருகின்றது. 

இந்த “லோங் கொவிட்” ஏன் மக்களை பாதிக்கிறது, இதில் இருந்து மக்கள் நிரந்தரமாக குணமடைய முடியுமா என்ற கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடிப்பது இன்னமும் சிரமமாகத்தான் இருக்கிறது. 

“லோங் கொவிட்” என்றால் என்ன? 

இதற்கு ஒரு மருத்துவ வரைவிலக்கணமோ அல்லது லோங் கொவிட் உள்ளவர்களுக்கு இன்ன இன்ன நோய்க்குறிகள் மட்டுந்தான் காணப்படும் என்றோ சொல்ல முடியாது உள்ளது. லோங் கொவிட்டால் பாதிக்கப்பட்ட இருவரை எடுத்துக்கொண்டால், அவர்கள் இருவருக்கும் ஒரே வகையான நோய்க்குறிகள் காணப்பட்டன என்று சொல்ல முடியவில்லையாம். 

இருந்தபோதிலும் இதனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கு “அதீத உடற்களைப்பு” என்பது பொதுவாகக் காணப்படுகின்றது. 

சுவாசிக்கச் சிரமம், விடாத இருமல், மூட்டு வலி, தசை வலி, கேட்டல் மற்றும் பார்வைக் குறைபாடு, தலையிடி, மணம் அல்லது சுவை இழத்தலுடன் கூடிய இதய, நுரையீரல் பாதிப்பு ஆகியவையும் பொதுவாக லோங் கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படலாம்.  

மன அழுத்தம், மன விசாரம் மற்றும் தெளிவாக சிந்திப்பதில் சிக்கல் போன்ற உள நலக்குறைபாடுகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளன. 

மக்களின் அன்றாட வாழ்க்கையை இது மோசமாக பாதிக்கிறது. இதுபோன்ற உடற்களைப்பு தனக்கு இதற்கு முன்னர் என்றும் ஏற்பட்டதில்லை என்று சிலர் கூறுகின்றனர். 

யாருக்கு லோங் கொவிட் பாதிக்கும்? 

தீவிர சிகிச்சைப்பிரிவு வரை சென்று சிகிச்சை பெற்ற தீவிர கொவிட் நோயாளிகளுக்குத்தான் லோங் கொவிட் பாதிக்கும் என்று சொல்ல முடியாது. கொவிட் மிகவும் மெல்லிதாக தாக்கியவர்களுக்கும் இது வரலாம். 

இங்கு மேலே சொன்ன ஒரு நோய்க்குறியாவது 87 வீதமான கொரொனா தாக்கிய நோயாளிகளுக்கு, அவர்கள் குணமடைந்த இரு மாதங்களின் பின்னர் கூட தென்பட்டிருக்கிறது. இவர்களில் அரைவாசிப்பேருக்கு இன்னமும் கடும் களைப்பு காணப்படுகின்றது. 

லோங் கொவிட் பாதிப்பை எப்படி இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது என்பதற்கு இன்னமும் தெளிவான பதில் கிடையாது. உடலைத் தாக்கிய கொரொனா வைரஸ் முழுமையாக உடலை விட்டு வெளியேறி விட்டாலும், சில இடங்களில் மாத்திரம் அது தேங்கி இருப்பதாக, இதனைப் பார்க்கலாம். 

இது அசாதாரணமானதா?: 

ஒரு வைரஸ் உடலைத் தாக்கி, அதிலிருந்து நாம் குணமடைந்த பின்னர், உடற்களைப்பும் இருமலும் தொடருவது பொதுவான அம்சந்தான். இந்த இருமலும், களைப்பும் போக சிலவேளைகளில் நீண்ட காலம் பிடிக்கும். 

சில காய்ச்சல்கள் வந்துபோன பின்னர் பத்தில் ஒருவருக்கு உடற்களைப்பு போக ஒரு மாதமாவது பிடிக்கும். 1918 இல் பெருமளவில் பரவிய ஒருவகை தொற்றுக்காய்ச்சலின் பின்விளைவாக பார்க்கின்ஸன் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தனவாம். கொவிட்டைப் பொறுத்தவரை இந்த நோய் அறிகுறிகள் அதிகமாக தொடருகின்றன. 

மக்கள் முழுமையான சுகம் பெறுவார்களா? 

 நாளாக ஆக, லோங் கொவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. ஆனால், 2019இன் கடைசிப் பகுதியில் வந்த கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் இப்போதைக்கு குறைவுதான். ஆனாலும், இப்போதைக்கு இந்த நோய்க்குறிகள் தொடர்வது குறைந்து வருவது நல்லதுதான். ஆனாலும் இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலை வழங்க விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். 

ஆனால், இப்படி லோங் கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று விடயங்களை அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

  • நல்ல ஓய்வு எடுப்பதை உறுதி செய்யுங்கள். பலவந்தமாக உடலை வருத்த முயற்சிக்கவேண்டாம். ஆறுதலாக வழமைக்கு கொண்டுவர முயற்சியுங்கள். 
  • அன்றாட நடவடிக்கைகளை திட்டமிட்டு, வேலைகளை கிழமை முழுவதும் பகிர்ந்து, சாதுவாக செய்து முடியுங்கள். 
  • முன்னுரிமையுடன் செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டு மெதுவாகச் செய்யுங்கள். 

    கொரொனா குறித்த ஆய்வாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களை மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 
    (ஆங்கில ஊடகச் செய்தி ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டது)