காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)

காலக்கண்ணாடி – 04 (மீண்டும் இந்தியா..?)

—அழகு குணசீலன் —

“மீண்டும் இந்தியா …

மாலைபோடும் தமிழ்தேசியம். 

மருண்டோடும் சிங்களதேசியம்.” 

“வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!” – என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவூட்டும் அரசியல். 

இந்திய பிரதமர் மோடி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்மக்கள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கான 13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று இலங்கை அரசைக் கோரியிருப்பது தான் இந்த மாலைக்கும் மருட்சிக்கும் காரணம். 

சிங்களதேசியத்தின்  சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிடி கொடுக்காமல், பட்டும் படாமல் பதில் அளித்திருக்கிறார். 

அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் தமிழர்கள் உட்பட அனைத்து இனமக்களினதும் நலன் சார்ந்து மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுநோக்கி செயற்படுவதாக அந்தப் பதில் அமைந்துள்ளது. 

இதற்கிடையில் இந்திய நிலைப்பாட்டை இலங்கை அரசு புறக்கணிக்க முடியாது என்ற தொனியில் சம்பந்தர் கருத்து வெளியிட்டுள்ளார். 

இந்த முக்கோண அரசியல் சூழலில்…. 

காலக்கண்ணாடி வண்டியில் நான். முன்கண்ணாடியில் குறும், நெடும் பார்வையில் இரு பிரதமர் கருத்துக்களும் விழுகின்றன. பின்னால் கடந்து வந்த பாதைக்காட்சியைக் காட்டும்  கண்ணாடியைப் பார்க்கிறேன். அதில் கடந்த காலம் விழுகிறது. 

காலம்  சுழல்கிறது. கண்ணாடியும் கூடத்தான். அப்போதுதானே கண்ணாடியில் காட்சிகள் விழும். டெல்லியில் பிரபாகரன், இந்திய இராணுவம் தரையிறக்கம், கொழும்பில் உடன்பாடு, தப்பிப்பிழைக்கிறார் ராஜீவ்,  சுதுமலைக்கூட்டம், ஆயுத ஒப்படைப்பு, 

“த்திறிஸ்ரார்”  தலைமன்னாரில்  தரையிறக்கம் எல்லாமே கண்ணாடியில் தெரிகின்றன. 

வடக்குகிழக்கு இணைந்த மாகாணசபை, வரதராஜப்பெருமாள் முதலமைச்சர். பெருமாளின் ஈழப்பிரகடனம், கப்பல் ஏறல்…….இப்படி இன்னும் பல நிகழ்வுகள். 

இன்று காந்தி சிலைக்கு மாலை போட்ட தமிழ்தேசியம். அன்று ராஜீவ் காந்திக்கு மாலை போட்டு….?. ஆம்!  தேசிய விடுதலையின் பேரால் தற்கொலையாளி போட்ட கொலை மாலையும், அதனால் ஈழம் தாங்கிய இழப்புக்களும், இழந்து போன போராட்டமும்…..! எல்லாக் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக சுழல்கின்றன. 

அன்று அண்ணன், தம்பி அரசியல் பேசி இந்தியாவை வெளியேற்றிய தமிழ், சிங்கள தேசியங்கள் மீண்டும் இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலை. ஒருதரப்பு மாலையோடும் மறுதரப்பு மருட்சியோடும் நிற்கிறது. 

திலிபன்  நினைவு நாளின் பெயரால்  இணைந்த  தமிழ் தேசியங்கள் யாழில் காந்திக்கு மாலையிட்டு, தங்கள் அகிம்சை அரசியலை சத்தியம் செய்திருக்கிறார்கள். இதனால் நீண்ட நாட்களின் பின் 

இந்தியாவுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இது இந்திய விவகாரம் அல்லவா? இலங்கை அரசால் தடைசெய்யவோ, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரவோ முடியவில்லை.  

1983 கறுப்பு யூலையின் பின் இந்திராகாந்தி பார்த்தசாரதியை சமாதானத் தூதராக கொழும்புக்கு அனுப்பினார். அப்போது வீரகேசரி இப்படி எழுதியது. பாரதப்போரில் கண்ணன் போன்று பார்த்தசாரதியின் வகிபாகத்தை மதிப்பிட்டெழுதியது. 

1987 இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டுக்காலத்தில் களத்தில் இருந்தவர் திக்க்ஷித். ராஜீவ்காந்தி அரசாங்கத்தில் கொழும்பில் இந்தியத்தூதுவர். 

இந்தக் காட்சிகள் அனைத்தும் வெறும் படங்கள் அல்ல. ஒவ்வொரு காட்சியிலும் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்,  பெற்றுக்கொண்ட அனுபவங்கள், அறிந்து கொண்ட பிராந்திய, சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் ஏராளம்!ஏராளம்!!. 

மீண்டும் இந்தியா. என்ற இன்றைய நிலைப்பாட்டில் இந்த கற்றுக் கொண்ட பாடங்களை எப்படி எங்கள் இலக்கை நோக்கி நகர்த்தப் போகிறோம் என்பதுதான் இன்றுள்ள கேள்வி.  

இதற்கிடையில் புகலிட ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த எரிக் சொல்கைம்  தான் சமாதான முயற்சியில் ஈடுபடத் தயார் என்று தெரிவித்திருந்ததையும் இங்கு குறிப்பிடாமல் விட்டுச் செல்ல முடியாது. 

எரிக்சொல்கைம் சொன்ன இருகருத்துக்கள் முக்கியமானவை. 

1. அனைத்துத் தமிழ்தரப்பும் ஒன்றுபட வேண்டும். 

2. சிங்கள மக்களினதும் ,முற்போக்குச் சக்திகளினதும் ஆதரவைப் பெறவேண்டும். 

3. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் (அண்மையில்) சமஸ்டி முறைதான் சரியான தீர்வு என்பது தனது கருத்து என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

இந்தியப்பிரதமர் மோடி மாகாணசபைகளுக்கான 13வது திருத்தத்தின் அமுலாக்கம் பற்றித்தான் குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது. 

 விக்கினேஸ்வரன் உருவேற்றுகின்ற தோற்றுப்போன சுயநிர்ணயம் அல்ல. ஏனெனில் சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்கின்ற உரிமையையும் கொண்டது. 

ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பதுக்கு கேட்டுடுத் தோற்றுப்போக, அன்று தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து கொல்வின் ஆர்.டி. சில்வா கூறிய வார்த்தைகளை இன்று வேறு வார்த்தைகளில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மூன்றாவது தலைமுறை அரசியல் சொல்லும் “ஒரு நாடு இரு தேசம் என்பதும் அல்ல”. 

ஏன்?தந்தை செல்வாவிடம்  இருந்து தத்தெடுத்த சமஸ்டியும் கூட இன்றைய பிராந்திய சர்வதேச அரசியல் நோக்கில் விட்டுக்கொடுக்க வேண்டியவை.  

இந்த வார்த்தைப் பிரயோகங்கள் சிங்கள மக்களின் மனதை வெல்லமாட்டாதவை. மாறாக அச்சத்தையும், அவநம்பிக்கையும், ஏற்படுத்துபவையாகவே அமையும். இவை இணக்கப்பாட்டிற்கு மாறாக முரண்பாட்டை வளர்த்து புரிந்துணர்வை சிதைத்து சிங்கள கடும்போக்காளர்களுக்கு சும்மா இருந்த வாய்க்கு அவல் போட்ட கதையாகி விடும். ஜாக்கிரதை….!. 

ஆகவே…. 

மீண்டும் இந்தியா சமாதான முயற்சி அல்லது  இராஜதந்திர அழுத்தம் நிலைகுலையாது படிப்படியாக சாதகமாக நகர்த்தப்பட தேவையானது என்ன? 

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் நடைமுறைச்சாத்திய ஜதார்த்த தீர்வுக்கு விட்டுக்கொடுப்புடனும், இதயசுத்தியுடனும், புரிந்துணர்வும், பொறுமையுடனும்  செயற்படவேண்டி இருக்கும். இரு தரப்பும் இங்கு கொடுக்க வேண்டிய விலை சற்று அதிகமாகவேதான் இருக்கப் போகின்றது. “கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா” என்று அப்புக்காத்து அரசியல் இங்கு தேவையற்ற, தவிர்க்கப்பட வேண்டியவற்றில் ஒன்று. 

இனி, பேச்சு வார்த்தை மேசைக்கு தேவையான சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த உளவியல் தாற்பரியம் என்ன? 

இருதரப்பு நம்பிக்கை ! 

சமூகங்களுக்கிடையே அசைக்க முடியாத நம்பிக்கை நிலவும் போது சமூகங்களுக்கிடையிலான ஒன்றிணைந்த வாழ்வும் ஒற்றுமையும் பலமடையும் என்பது உளவியலாளர்கள் கருத்து. ஆனால் இது முழுமையாக அமைவது நடைமுறைச்சாத்தியம் அற்றதென்றும் சமூகங்கள் குறைந்தளவான நம்பிக்கை அளவுடன் வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்றும் வாதிடும் உளவியலாளர்களும் உள்ளனர். ஏனெனில் இன்றைய பல நடைமுறைகளில் சமூகம் குறைந்த நம்பிக்கையுடன் இயங்குகின்றது. நிச்சயமற்ற, நிரந்தரமற்ற வாழ்வியல் சூழலிலும் சமூகங்கள் சுமுகமாக இயங்குகின்றன. இதற்கு காரணம் வாழ்வியல் குறித்த நம்பிக்கை ஒன்றே. 

நெருக்கடியான காலகட்டத்தில் சமூகங்கள் தங்களை அறியாமலே மற்றவர்களிடம் அல்லது நிறுவனங்களிடம் தங்கியிருக்கின்றன. 

குறிப்பிட்ட நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தெளிவான ஒரு விடயம் என்னவெனில் சம்பந்தப்பட்ட எங்களால் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை என்றால் மூன்றாம் தரப்பை நாடுவது. இதற்கு குறித்த மூன்றாம் தரப்பில் அவர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். அது போல் மூன்றாம் தரப்பும் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். 

நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கு   உண்மை உரைத்தல், வெளிப்படையாகப்பேசுதல், தவறை ஏற்றுக்கொள்ளல்,  நடைமுறைச் சாத்தியமானவற்றைப் பேசுதல் என்பன அடிப்படையாக அமைகின்றன. 

ஒரு அரசாங்கத்தில் மக்கள் வைக்கும் நம்பிக்கை என்பது நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சி நிலை,  வாழ்க்கைத் தரம், பொருளாதார உறுதி, சமூக அமைதி, பாதுகாப்பு என்பன சார்ந்து அமைகின்றது. 

நம்பிக்கை அற்ற ஒரு சமூகம் ஆபத்துக்கு முகம் கொடுக்க தயார் அற்றது. 

இது பொருளாதார முதலீடு போன்றது. இலாபம் கிடைக்கலாம் அல்லது நட்டம் ஏற்படலாம் ஆனால் முதலீடு ஒன்றைச் செய்வதற்கு தற்துணிவும், ஆபத்தை எதிர்கொள்ளும் சக்தியும், நம்பிக்கையும் தேவை. சமாதான பேச்சுக்களில் முன்னடைவு அல்லது பின்னடைவு ஏற்படலாம். இங்கு முக்கியம் தற்துணிவுடன் பங்கேற்பது. 

எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பிற்போடப்படும்போது அது மேலும் பிரச்சினையை இடியப்ப சிக்கலாக்கும். இலங்கை இனப்பிரச்சினைக்கும் இது பொருத்திப் போகும். காலம் கடத்தப்படும் போது நம்பிக்கை கூடிக்குறைந்து  தளம்பல் நிலையில் இருக்கும். 

இதனால் இருதரப்பும் பொறுமையுடன் வார்த்தைகளை அளந்தும், தேர்வு செய்தும், ஒருதரப்பு மறுதரப்பு மனதை காயப்படுத்தாதும், இருதரப்பும் சமநிலை சமபலத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க வேண்டும். 

இலங்கை இனப்பிரச்சினையில் கடந்தகால அச்சம் இருதரப்பிலும் உண்டு. இது நம்பிக்கைக்கு குந்தகமானது என்பதால் கடந்தகால பாடங்களை கருத்தில் கொள்வது அவசியம். மற்றவர்களை போலியாக நம்பவைத்து காலப்போக்கில் ஏமாற்றி விடுகின்ற அரசியல் உலகில் நிறையவே இடம்பெற்றிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

13 வது திருத்தம் இதற்கு இந்த நம்பர் கிடைத்தது நம்மவர் தலைவிதி. 

மேற்குலகில் அது துரதிஷ்ட இலக்கம். இதனால்தான் விமான இருக்கைகளில் இது அகற்றப்பட்டுள்ளதாம். மேற்கில் இது கறுப்புப் பூனை. கவனம்! நான் இங்கு குறிப்பிடுவது இந்திய அதிஉயர் கமாண்டோ கறுப்புப்பூனை அணி அல்ல. அதுவும் வெள்ளிக்கிழமையும் 13ம்திகதியும் ஒன்றாக வந்தால் போச்சு. டபிள் கறுப்புப் பூனை குறுக்கே வந்த  மாதிரி. 

என்ன? இவன் முன்னுக்குப் பின் முரணாக எழுதிகிறான், மூடநம்பிக்கைகாரன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 

எல்லாம் கடந்த காலங்களில் பெற்ற கசப்பான அனுபவங்கள் தான். 

நம்பிக்கையை இழக்க ஒரு காரணம் தேவை அல்லவா? அதனால் 13 உம் கறுப்புப் பூனையும் கிடைத்தன. இவற்றின் தலையில் போட்டுவிட்டு தப்பிக் கொள்வது இலகு.  

ஆம்! எவ்வளவு சாதகமாக மனதை நம்பிக்கையாய்த் தேற்றிக் கொண்டாலும், அவநம்பிக்கையும் முற்றாக அகலமாட்டேன் என்று அழுங்குப்பிடியாய் நிற்கிறதே.  

இந்தியா மீண்டும் வருமா ?   

இருபது பதின்மூன்றைத்தின்னுமா? 

தின்றபின் போடும் குட்டிதான் தீர்வாகுமா? 

பதில் இல்லாத கேள்விளின் தொடர்கதை இது.