— தொகுப்பு: வி. சிவலிங்கம் —
இலங்கையில் பல நெருக்கடிகள் நாட்டைப் பாதித்து வருகின்றன. ஒரு புறத்தில் கொரொனா நோயின் தாக்கங்களால் அவதியுறும் மக்கள், மறுபுறத்தில் அரசியல் நெருக்கடிகளாலும் பாதிப்படைந்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்த நிலையில் மக்கள் அரச கொடுப்பனவுகளை அதிகளவில் நம்பும் நிலை காணப்படுகிறது. இதனால் அரசியல் வாதிகள் தமது அதிகார இருப்பை மேலும் இறுக்கும் வகையில் நாட்டின் அரசியல் யாப்பில் ஏற்படுத்தும் மாற்றங்களின் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல முயற்சிக்கின்றனர்.
ஓர் அரச பரம்பரையின் தொடர்ச்சியான அதிகாரத்தைப் பேணுவதற்கான மாற்றங்களாகவே இவை தென்படுகின்றன. தற்போது நீதிமன்றத்தில் விவாதங்களுக்குள் தள்ளப்பட்டுள்ள 20வது திருத்தம், ‘நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை’ அதிகளவில் மீறுவதாக அரசியல் அமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறான ஓர் அபிப்பிராயத்தைக் கூறும், இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சின் செயலாளரும், அரசியலமைப்பு அறிஞருமான டாக்டர். நிஹால் ஜெயவிக்ரம அவர்கள் வெளியிட்ட கட்டுரையின் உள்ளடக்கத்தினை உள்ளடக்கிய விபரங்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
13ஐயும் பாதிக்கும் 20 :
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தம் அரசியலமைப்பு சபையை ஒழிப்பதற்கான முயற்சி என அழைக்கப்பட்ட போதிலும் இம் முயற்சி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவென இணைக்கப்பட்டஇ 13வது திருத்தத்தையும் பாதிப்பதாக நிஹால் ஜெயவிக்ரம கூறுகிறார். விபரங்களைக் கீழே பார்க்கலாம்…
தற்போது நடைமுறையிள்ள 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டாவது குடியரசு யாப்பு யாரால் வரையப்பட்டது? என்பதற்கான உத்தியோகபூர்வ சாட்சியங்கள் இதுவரை இல்லை. இருப்பினும் அப்போதைய பாராளுமன்றம் என்பது தேசிய அரசுப் பேரவையாக மாற்றம் பெற்று, அப்பேரவையால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவின் அறிக்கையில் இவ்வாறே விபரங்கள் உள்ளன. 1978ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தேசிய அரசுப் பேரவையில் அப் புதிய யாப்பின் மூல வரைபு சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், அரசியல் யாப்பு வரலாற்றிலேயே முதற் தடவையாக அதில் தெரிவிக்கப்பட்ட 12 பிரமாணங்கள் மாற்றப்படவேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், மக்களிடம் பெற்ற ஒப்புதல் வாக்கின் அடிப்படையிலும் திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமென மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பெயர் :
இவ்வாறு மாற்றமுடியாதவாறு காணப்படும் 12 பிரமாணங்களில் முதலாவது இலங்கைத் தீவின் பெயரை ‘இலங்கைக் குடியரசு’ என்பதிலிருந்து ‘ இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என மாற்றியதாகும். இம் மாற்றம் என்பது வட கொரிய தலைவர் ‘கிம் இல் சுங்’ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி அவர் தனது நாட்டை ஜனநாயக மக்கள் குடியரசு என மறுபெயரிட்டது போலவே இலங்கையின் பெயரும் மாற்றப்பட்டது.
அரசியல் யாப்பின் 3வது பிரமாணத்தின் பிரகாரம் இலங்கைக் குடியரசின் இறையாண்மை என்பது மக்களிடமே உள்ளது. அது மக்களிடமிருந்து பிரிக்க முடியாதது. இறையாண்மை என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், வாக்களிக்கும் உரிமை என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
இப் பிரமாணத்திற்கு முரணான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாற்றப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் வாக்களிப்பும் இருந்தால் மட்டுமே சட்டமாக மாற முடியும்.
அரசியல் யாப்பின் 4வது பிரமாணம் ஏற்கனவே குறிப்பிட்ட 12 பிரமாணங்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை. இருப்பினும் இந்த 4வது பிரமாணம் என்பது இறைமை அதிகாரத்தை எவ்வாறு பிரயோகித்தல்? மற்றும் அதனை அனுபவித்தல் தொடர்பான விபரங்களைத் தருகிறது.
அரசிலமைப்பின் 30வது பிரமாணம் அரசாங்கத்தின் அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் அனுபவித்தல் தொடர்பான விபரங்களைத் தருகிறது.
‘ஜனாதிபதி’ அல்லது ‘குடியரசுத் தலைவர்’ என்ற தலைப்புகளுக்கான விளக்கங்கள் 1946ம் ஆண்டின் மற்றும் 1972ம் ஆண்டின் காலங்களில் நடைமுறையிலிருந்த யாப்பிலிருந்தே பெறப்பட்டுள்ளன. அவ் அதிகாரங்களைப் பிரயோகிக்கவும், செயற்படுத்தும் வேளைகளிலும் (பிரதமரை நியமித்தல் தவிர்ந்த) ஜனாதிபதி என்பவர் பிரதமரினதும், அரசியல் அமைப்பு சபையினதும் ஆலோசனைகளைப் பெறுதல் அவசியமாகும். எனவே ஜனாதிபதி என்பவர் ஒவ்வொரு வகையிலும் அதாவது அரசியல் யாப்பின் தலைவர் என்ற அடிப்படையிலும், அதேவேளை பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அனுபவிக்கும் ஒருவர் பிரதமர் என்பதாலும், அவர் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் தலைவர் என்ற வகையிலும், அவரது பதவி உயர்தன்மை வாய்ந்தது. எனவே பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றுவதாயின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலமே அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். அத்துடன் அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவதா? இல்லையா? என்பதை அமைச்சரவை கூட்டாக முடிவு செய்து பாராளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு காணப்படும் அதிகாரங்களை 20வது திருத்தம் முற்றாக மாற்ற உதவுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிரதமருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்குக் கையளிக்க இத்திருத்தம் உதவுகிறது. அத்துடன் அமைச்சரவையையும், பிரதமரையும் நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. இம் முயற்சி என்பது அரசியல் யாப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள ‘மாற்ற முடியாதவை’ என யாப்பின் 3வது பிரமாணத்தில் கூறப்படுவதை இவை மீறுவதாகவே உள்ளன.
மக்களின் நீதி அதிகாரம் :
அரசியல் யாப்பு ‘நீதி அதிகாரங்களை’ நீதித்துறையிடம் பிரத்தியேகமாக வழங்கியுள்ளது. ஆனால் 20வது திருத்தம் என்பது நாட்டிலுள்ள இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகளை மட்டுமல்ல, ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமுள்ள நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு வழங்க முயற்சிக்கிறது.
தற்போதைய நிலையில் இவ்வாறான அதிகாரங்களை அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் மட்டுமே ஜனாதிபதி நிறைவேற்ற முடியும். 20 வது திருத்தத்தின் பிரகாரம் அவதானிக்கையில் நிறைவேற்றுப் பிரிவின் முழுமையான அதிகாரங்களையும், பாராளுமன்ற சட்டவாக்க நிகழ்ச்சி நிரலைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களையும் அதேவேளை நீதித்துறையின் போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரமுள்ள ஒருவரே நிறைவேற்ற மற்றும் சட்டவாக்கப் பிரிவுகள் அரசியலமைப்பிற்கு அமைவாக செயற்படுகின்றனவா? என்பதைத் தீர்மானிப்பவராகவும் அவரே உள்ளார். அதாவது திருடனே பொலீசாகவும், நீதிபதியாகவும் செயற்படுவதற்கு ஒப்பானதாக உள்ளது. இவற்றை ஆழமாகப் பார்க்கையில் அரசியல் யாப்பின் பிரமாணம் 4 இல் குறிப்பிட்டவாறு மக்களிடமே நீதிச்சேவை அதிகாரமுள்ளது என்பதை இவை மீறுவதாகவே உள்ளன.
மக்களின் நீதி அதிகாரத்தில் தமக்கான நீதியைப் பெறுவதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது. அரசியல் யாப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மசோதாவின் ஏதாவது ஒரு விதிமுறை ‘அரசியல் அமைப்பிற்கு’ விரோதமாக உள்ளதா? என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றம் செல்வதற்கான உரிமை பிரஜைகளுக்கு உண்டு. இவ் உரிமை மூலம் அதிகார மீறலைத் தடுப்பதற்கான உரிமை பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய 20வது திருத்தம் அவ்வாறான பிரஜைகளுக்கான உரிமையினை ‘ தேசிய நலனில் அவசியமானது’ என அமைச்சரவை தீர்மானிக்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அம் மசோதாவைச் சமர்ப்பிக்காமலேயே ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திற்கு ‘சிறப்பு தீர்மானம்’ என்ற அடிப்படையில் சமர்ப்பித்துத் தீர்ப்பினைப் பெறமுடியும். உயர் நீதிமன்றத்தின் அத் தீர்ப்பு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பப்படும். அதன் பின்னர் பாராளுமன்ற விவாதம் இல்லாமலேயே அதன் பெரும்பான்மையைப் பயன்படுத்திச் சட்டமாக்க முடியும்.
நாட்டின் பிரஜை ஒருவருக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மசோதா குறித்த நீதியைப் பெறுவதற்கான உரிமை இங்கு 20வது திருத்தத்தின் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரஜைகளின் இவ்வுரிமை மறுக்கப்படுவது அரசியலமைப்பின் 3வது பிரமாணத்தை மீறுவதாகும்.
மக்களின் அடிப்படை உரிமைகள் :
நாட்டின் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் 3வது பிரமாணத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை அரசியலமைப்பின் அத்தியாயம் 3இல் விளக்கப்பட்டுள்ளன.
யாப்பிலுள்ள 126வது பிரமாணம் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்படுவதற்கான தருணங்களை விரிவாக வரையறுக்கிறது. அதேவேளை அதன் 35வது பிரிவில் ஜனாதிபதி அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மாற்று முடிவுகளை உத்தியோகபூர்வ அடிப்படையில் மேற்கொள்ளும் விதிமுறைகளையும் வழங்கியுள்ளது. ஆனால் தற்போதைய 20 வது திருத்தம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு 35வது பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ செயல்களுக்கு ஓர் தீர்வை எட்டுவதற்கான அடிப்படை உரிமையை ரத்து செய்ய முயற்சிக்கிறது. அதன் பிரகாரம் அவதானிக்கையில் இவை தெளிவாகவே அரசியல் யாப்பின் 3வது பிரமாணத்தை மீறுவதாகவே உள்ளது.
மக்களின் வாக்குரிமை :
மக்களின் வாக்குரிமை என்பது அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரையின் அடிப்படையில், ஜனாதிபதி ஓர் சுயாதீன தேர்தல் ஆணையத்தை நிறுவி, அரசியலமைப்பு சபையின் சிபார்சுகளின் அடிப்படையில் அதற்கான அங்கத்தவர்களை ஜனாதிபதி நியமிப்பார். ஆனால் தற்போதைய 20வது திருத்தம் ஜனாதிபதியே தேர்தல் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்களை நியமிக்கவும், நீக்குவதற்குமான அதிகாரம் பெறுகிறார். இதன் மூலம் தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அதன் சுயாதீனம் சமரசம் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடும் அரசியல் யாப்பின் 3வது பிரமாணம் வழங்கும் பாதுகாக்கப்பட்ட மக்களின் இறையாண்மையை மீறுவதாக அமைகிறது.
முப்படைகளின் தளபதி :
இங்கு படைகளின் முதன்மைத் தளபதி என ஜனாதிபதி அழைக்கப்படுவதன் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் காணப்படுகிறது. 1946 இல் செயற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பில் மகாராணியே நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர், ஆயுதப்படைகளின் பிரதான தளபதி என அவரின் அதிகாரங்களைக் கூறி அவரின் அதிகாரங்களை மகாராணியின் சார்பில் ஆளுனர்கள் பிரதமரின் ஆலோசனையுடன் பிரயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு யாப்பில் மகாராணிக்குப் பதிலாக நாட்டின் அரசுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியே அரசுத் தலைவர், நிறைவேற்றுத்துறைத் தலைவர் அத்துடன் முப்படைகளின் தளபதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான அலங்கரிக்கும் வார்த்தைகள் புதிய அதிகாரங்கள் எதனையும் எடுத்து வரவில்லை. தளபதி என்பவர் சீருடை தரித்த அதிகாரி அல்ல.
பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில் முப்படைகள் யாவும் நாட்டின் குடிமகனின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசுத் தலைவரே முப்படைகளின் தளபதியுமாவார் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியே போரையும், சமாதானத்தையும் பிரகடனப்படுத்துகிறார் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டே அவர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு பொது பாதுகாப்பு கட்டளையைப் பிறப்பித்து, அவசரகால நிலையை அறிவிப்பது ஜனாதிபதியாகும். இவ்வாறான அதிகாரங்கள் அரசுத் தலைவருக்கே தவிர பாதுகாப்பு அமைச்சருக்கு அல்ல.
மாகாண சபைகள் :
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தத்தின் மூலம் அரசியல் யாப்பு சபையை ஒழிக்கப்போவதாக அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறாக அச்சபையை நீக்க முயற்சிக்கும்போது அவை மாகாண சபைகளைக் கையாளும் அரசியல் அமைப்பின் இதர பிரிவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை.
தற்போதைய 20வது திருத்த மசோதாவின் 41வது பிரிவு அரசியலமைப்பின் 154R பிரமாணத்தையும் அதில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அத்தியாயத்தினையும் பாதிக்கிறது. இத்திருத்தத்தில் அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரையைப் பெறாமலேயே நிதி ஆணைக்குழுவிற்கான மூன்று உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய அரசியல் யாப்பின் 154G பிரமாணத்திலுள்ள இன்னொரு அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது.
அரசியலமைப்பிலுள்ள 154G பிரமாணத்தை மாற்றுவதானால் அவ்வாறான மசோதா அரச வர்த்தமானியில் அறிவிப்பு வெளியிட்ட பின்னரும், பாராளுமன்ற கட்டளைப் பத்திரத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னரும், ஒவ்வொரு மாகாண சபையினதும் அபிப்பிராயங்கள் பெறப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பு சபையைக் கலைப்பதாயின் அது 13வது திருத்தத்தையும் பாதிக்கும் என்பது புலனாகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல மாகாண சபையின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தற்போது வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவை கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை என்பதால் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் தேர்தல் ஆணைக்குழு மேல் சில கடமைகளை விதித்திருக்கிறது. அதாவது மாகாண சபைகள் கலைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே அச் சபைகளுக்கான தேர்தலை நடத்தும் நோக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது அதன் கடமையாகும். ஆனால் அவ்விதி இதுவரை செயற்படுத்தப்படவில்லை.
20வது திருத்தம் பாராளுமன்ற கட்டளைப் பத்திரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்படி அவதானிப்பின் இச் செயற்பாடு அரசியல் அமைப்பின் 154G பிரிவினை மீறுவதாகவே உள்ளது.
இங்கு எமது அவதானிப்பிற்குரியது எதுவெனில் இவ் அரசியல் அமைப்பின் 154G இன் பிரகாரம் ஒவ்வொரு மாகாண சபையினதும் ஒப்புதல் அவசியமானது. ஒரு மாகாண சபை மட்டுமே தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது என்ற நிலை காணப்பட்டாலும் மசோதாவைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.
உதாரணமாக 2012இல் அரசாங்கம் ‘தெவிநெகும’ என்ற பெயரில் மசோதா ஒன்றினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அம் முயற்சியைத் தடுத்ததோடு மாகாண சபைகள் சகலவற்றினதும் ஒப்புதல் அவசியம் எனத் தீர்ப்பளித்தது.
தற்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில் 20வது திருத்தத்தினைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா? அவ்வாறான முயற்சி என்பது அரசியலமைப்பின் 3வது பிரமாணத்தில் பாதுகாக்கப்பட்ட மக்களின் இறையாண்மையின் ஓர் அங்கமான உரிமையையும் அது மீறுகிறது.
சிக்கல் நிறைந்த பிரச்சனை :
அரசாங்கம் இச் சிக்கலான பிரச்சனையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டுமாயின் 20வது திருத்த மசோதாவினைப் பாராளுமன்ற கட்டளைப் பத்திரத்திலிருந்து திரும்பப் பெறுதல் தேவையாகிறது. அத்துடன் அத்திருத்தத்தில் காணப்படும் 41வது பிரிவை நீக்குதல் தேவையாகிறது. அதன் பின்னர் திருத்திய புதிய மசோதாவை மீண்டும் கட்டளைப் பத்திரத்தில் புதிதாக வைப்பது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இவை இச்சிக்கல்களை முழுமையாக நீக்க உதவாது.
ஏனெனில் அரசியல் யாப்பின் 154R பிரிவு அதே வடிவத்தில் உள்ளவரை அரசியல் அமைப்பு சபையையும் இவர்களால் நீக்க முடியாது. ஏனெனில் அரசியலமைப்பு சபையின் ஆலோசனையின் அடிப்படையில்தான் நிதி ஆணைக்குழுவிற்கு நியமனங்களை மேற்கொள்ளலாம். ஆனால் 20வது திருத்தத்தின் மூலம் அச்சபையை நீக்க அரசு முயற்சிக்கிறது. இவை மிகவும் சிக்கலை ஏற்படுத்தும்.
வாசகர்களே! நாட்டின் அரசியற் போக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய திருப்புமுனையில் எமது மக்கள் வைக்கப்படுள்ளார்கள். ஆனால் எமது அரசியல்வாதிகள் இவ் ஆபத்துகளைப் பற்றிய எவ்வித அக்கறையும் அற்று வெறும் வரட்டுத் தேசியவாத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே ஆழமான விவாதங்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பது ஊடகங்களின் தார்மீக கடமையாகும்.