இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்!


பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. 

ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது.  

இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்த மைய நீரோட்ட அமைப்புக்களின் சிந்தனைப் போக்குக்கு மாற்றாக கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனையுடன் இயங்குபவர்களின் வட்டங்களை பௌஸர் போன்ற சிலர்தான் கொஞ்சம் கலகலப்பாக வைத்திருக்கின்றனர். 

பௌஸர் மஃறூப்

அதற்காக பௌஸர் எடுக்கும் முயற்சிகள் மிகச் சிரத்தையானவை. 

உண்மையில் மாற்றுச் சிந்தனையில் இயங்கும் பலர், அவர்களின் வாழ்க்கையில் பட்ட அடிகள் காரணமாக சோர்ந்துபோய் காணப்படுகின்றனர், அல்லது வயது போய் ஓய்வு நிலைக்கு வந்துள்ளனர். (அதற்காக நான் மைய நீரோட்டத்தில் செயற்படும் அமைப்புக்கள் எல்லாம் மிகவும் மும்முரமாக இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன, ஆக்கபூர்வமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று சொல்வதாக நீங்கள் கருதினால், அதற்கு நான் பொறுப்பல்ல.) அதுவும் கொரொனா தொற்றுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசம். 

கடந்த காலங்களில் இந்த கலகலப்புக்கும், சுவாரசியங்களுக்கும் பௌஸர் பல விடயங்களை செய்து வந்திருக்கிறார். தான் முரண்படும் விடயங்கள் குறித்து அலசக்கூட அவர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார். அவற்றுக்கு சோர்ந்துபோன மாற்றுச் சிந்தனையாளர் பெருமக்களை அழைக்க பெரும் சிரத்தையும் எடுத்துக்கொள்வார். தனித்தனியாக அழைப்பார்.  

இத்தகைய கூட்டங்களில் நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் கௌரவிப்புக்கள், இலக்கியச் சந்திப்புகள், அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள், இன இணக்கத்துக்கான கலந்துரையாடல்கள் என பலதும் பத்துமாக பௌஸரின் ஏற்பாடுகள் இருக்கும். ஆனால், நானும் கடந்த சுமார் 5 வருடங்கள் ஊருக்குப் போனது மற்றும் கொரொனா போன்றவற்றால் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ளவில்லை. பௌஸரும் இந்தக் கூட்டங்களை இணையத்துக்கு மாற்றிவிட்டார். ஆனால், இணையத்தில் அவரால் செய்ய முடியாமல் போன ஒன்றுதான், இந்தத் தமிழ் புத்தகக் கண்காட்சி. அதனை அருமையாக நடத்தியிருக்கிறார், இங்கு லண்டன் மனோர் பார்க்கில் உள்ள ‘கேரளா இல்லத்தில்’ இந்த நிகழ்வு இனிதே நடந்தது. 

தான் செய்த காரியத்தை, அதன் முழுப்பலன் உரியவர்களுக்குக் கிடைக்க என்ன செய்ய தன்னால் முடியுமோ, அத்தனையையும் செய்திருக்கிறார். 

தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்துபோன காலமாக பொதுவில் பார்க்கப்படும் இந்த நாட்களில், சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவை தமிழ் வாசகர்களுக்கு கொஞ்சம் உற்சாகம் தருபவை. அதனைப் பின்பற்றி இலங்கையிலும் சில புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதுண்டு. அவை ஆரோக்கியமான விடயங்கள். ஆனால், அப்படியான ஒன்றை லண்டன் போன்ற புலம்பெயர் மண்ணில் நடத்துவதில் பல சிக்கல்கள், சிரமங்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்சினை இப்படியானவற்றுக்கு ஆட்களை வரச்செய்வது. எத்தனை அழைப்பு விடுத்தாலும் “கேளா மடந்தைகள்” போல (நான் உட்பட) இருப்பது புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கான ஒரு குணாதிசயம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நிலைமை அப்படித்தான் என்பதை பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அதனை தவிர்க்க பௌஸர் செய்யும் முயற்சிகள் ஆக்கபூர்வமானவை. 

ஓரிரு நண்பர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, அவர்களையும் தன்னோடு சேர்த்து வருத்தி தனது முயற்சிகளை செய்வது வெளிப்படையாகவே தெரியும். 

அருமையான பல புத்தகங்களை, பல வகையான புத்தகங்களை, பல எழுத்தாளர்களின் தமிழ்ப் புத்தகங்களை அங்கு பார்த்தேன். இருக்கக்கூடிய சிறிய இடத்துக்குள் அவற்றை தானே எங்கும் ஓடி, ஓடி பௌஸர் அடுக்கி வைப்பதைப் பார்த்ததால் எனக்கும் கொஞ்சம் குற்ற உணர்வு வந்தது. நானும் இரண்டு புத்தகத்தை அடுக்கி வைத்தேன். 

இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து புத்தகங்களை லண்டன் கொணர்ந்து, விற்று பௌஸர் காசு பார்த்து வருகிறார் என்று யாரும் சொல்ல முயற்சித்தால், அது பெரும் புனைகதை. அப்படி ஒரு கதையை யாரும் எழுதினால், அதனையும் பௌஸர் அங்கு பார்வைக்கு, விற்பனைக்கு வைப்பார்.  

அடுத்தது, இது வெறும் புத்தகக்கண்காட்சி மாத்திரமல்ல. தமிழ்ப் புத்தகத்தைக் காதலிக்கச் செய்ய, அதனை நோக்கி ஆட்களை கவர, எழுத்தாளரை ஊக்குவிக்க என்னவெல்லாம் செய்யலாமோ, அத்தனையையும் சேர்த்துத்தான் இந்தக் கண்காட்சி. புத்தகக் காட்சிப்படுத்தல் மாத்திரமல்லாமல், எழுத்தாளர் விமர்சனம், கவிதை விமர்சனம், காலமாகிப்போன எழுத்தாளர்களை நினைவு கூரல் இப்படியாக பல நிகழ்வுகளும் அந்தச் சிறிய இடத்துக்குள் நடந்து முடிந்தன. அங்கு வரும் ஆட்கள் போதாது என்றோ அல்லது கொரொனா காரணங்களுக்காகவோ, அனைத்து நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி/ஒளி பரப்புச் செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், கமெரா முதல் அனைத்தையும் இயக்கி, ஒழுங்கு செய்வதும் அவர்தான்.  

“புத்தகக் கண்காட்சி என்பது வெறும் ஒரு நிகழ்வல்ல! அது பெரும் பண்பாட்டினதும் அறிவினதும் சேகரங்களை கொண்டு வந்து சேர்ப்பதும் மற்றவர்களுக்கு கையளிப்பதுமான அரசியல் கலை, இலக்கிய சமூக அறிவு நிகழ்வாகும்!”– இது பௌஸர் தனது நடவடிக்கைகள் மூலம் சொல்ல முயற்சிப்பது. அந்தக் கொள்கைக்கு எந்தவிதமான சமரசமும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். வாழ்த்துகள் தலை! 

நான் திருப்பவும் சொல்கிறேன், பௌஸரை அரசியல் ரீதியாக நம்புங்கள் என்று சொல்ல இதனை நான் எழுதவில்லை. ஆனால், அவர் முயற்சிகளை வெறுமனே கடந்து செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன். அத்தோடு. கிழக்கைச் சேர்ந்தவன் என்ற வகையில் (பிரதேசவாதம்?) ஒரு அம்பாறையானின் இந்த முயற்சியையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 

நானும் ஒரு தவறு விட்டுவிட்டேன். கண்காட்சிக்கு முன்னதாக இதனை நான் எழுதியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இன்னும் நான்கு பேராவது கண்காட்சிக்கு மேலதிகமாக வந்திருப்பார்கள். வராதவர்கள் பௌஸரின் முகநூலில் அங்கு நடந்தவற்றின் பதிவுகளை பார்க்க முடியும். புத்தகங்கள் வாங்கும் நோக்கம் இருந்தால், அவரை 00447817262980 (வட்ஸ்ஸப்பும் உண்டு) இல் தொடர்புகொள்ளலாம். திட்டவும் முடியும். 

குறிப்பு: ஒரு குறையும் உண்டு. வழமையாக கூட்டங்களில் வைக்கும் வடை, தேநீர் வைக்கப்படவில்லை. இலவசமாக இல்லாவிட்டாலும், காசுக்காவது வைச்சிருக்கலாம். 2 மணிநேரம் கார் ஓட்டி வந்துபோகும் போது, பசி வந்திட்டுது. 

— அன்புடன் சீவகன் —