— என்.செல்வராஜா, நூலகவியலாளர் —
பொதுவாகவே எமது நூலகங்களில் ஆவணங்களைப்பேணுதலும் பாதுகாத்தலும் மிகவும் சிக்கலானதொருபணியாகும். நூலக நிர்வாகத்தில் இது ஒரு இன்றியமையாத அம்சமாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக இந்த முக்கியமான பணியை மேற்கொள்வதற்கு நூலக நிர்வாகத்தில் நூல் பாதுகாப்பு பற்றிய ஆழ்ந்த அறிவோ அனுபவமோ அற்ற சிற்றூழியர்களே நியமிக்கப்படுகிறார்கள். இக்கட்டுரையானது, நூலகங்களில் ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியானது நூலகப் பராமரிப்பில் முக்கியமானதொன்று என்ற கருத்தை வலியுறுத்தும்நோக்கில் இரு பாகங்களில் எழுதப்பட்டுள்ளது.
தற்கால நூலகங்களில் ஆவணங்கள் பல்வேறு வடிவங்களில் பேணப்படுகின்றன. நூலுருவிலான சாதனங்களான நூல்கள், பருவ இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள், துண்டுப் பிரசுரங்கள், சிறு நூல்கள், அறிக்கைகள் என்பனவும் நூலுருவிலில்லாத சாதனங்களான ஓலைச்சுவடிகள், நுண்படச்சுருள்கள், இசைத்தட்டுக்கள், மின்காந்த நாடாக்கள், கட்புலசெவிப்புல சாதனங்கள், தளபாடங்கள், உபகரணங்கள்என்பனவும் அடங்கும். நூலகத்தில் நூல்களையும் ஆவணங்களையும் மாத்திரமன்றி அங்கு பயன்படுத்தப்படுகின்ற சகல உபகரணங்களையும் தளபாடங்களையும் பற்றிய பின்புல அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்குரிய பராமரிப்பு முறைகளைக் கைக்கொண்டு அவை பேணப்பட வேண்டும். நூலகங்களின் சொத்துக்களை காப்புறுதி செய்திருப்பின்கூட, அவை முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால், தேவைப்படும் தருணங்களில் அவற்றுக்கான முழுமையான காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள இயலாதுபோகவும் கூடும். மேலைத்தேயங்களில் நூலக பராமரிப்பினை துறைசார் அறிவுடைய நிறுவனங்கள் ‘கொன்ட்ராக்ட்’ என்னும் ஒப்பந்த முறையில் பொறுப்பேற்றுத் திறம்பட நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கையில் அத்தகைய சிறப்பு நிறுவனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
நூலக ஆவணங்களைப் பாதுகாத்தல் என்பது அவற்றின் தேவை இருக்கும் வரை, மூலவடிவில் அவற்றைப் பாதுகாக்க முயற்சித்தலாகும். ஆவணங்களைப் பேணுதல் என்பது அவை எதிர்நோக்கும் பாதிப்புகளிலிருந்து தடுப்பது அல்லது அத்தகைய பாதிப்பு நேராமல் காப்பாற்றுவதாகும். ஒரு ஆவணத்தைப் பாதுகாக்க அதனை முறையாகப் பேணவேண்டும். தெளிவான கொள்கைகள், செயற்பாடுகள் மூலம் நூலக மற்றும் சுவடிக் காப்பக ஆவணங்களைப் பாதிப்புகளிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் காப்பாற்றுவது ‘பேணுதல்’ எனப்படும். நூலக ஆவணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பௌதிக, இரசாயன செய்முறைகள் இங்கு கையாளப்படுகின்றன. பேணுதலுக்கான படிமுறைகள், நூல்கள் சேமித்து வைக்கப்படும் சூழலை தேவைக்கேற்ப மாற்றியமைப்பதுடன், அவற்றை அழிவுகளிலிருந்துபாதுகாப்பதற்கான நிச்சயமான பாதுகாப்பு முறைகளையும் வழங்குகின்றன.
ஒவ்வொரு வகை ஆவணங்களும் வெவ்வேறு வகையான காரணிகளினால் பாதிப்புக்குள்ளாகின்றன. நூலகங்களில், இந்த ஆவணங்களை நீண்டகாலம் பேணிப் பாது காத்து வைப்பதற்கு விசேட அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. நூலகங்களில், நூல்களைத் தாக்கி அழிக்கும் நூல் விரோதிகளை நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவையாவன:
1. சூழற் காரணிகள்
2. பௌதிக, இரசாயனக் காரணிகள்
3. உயிரியல் காரணிகள்
4. பிற காரணிகள்
மேற்குறிப்பிட்ட காரணிகள் தனியாகவோ அல்லது இரண்டு அல்லது மூன்று காரணிகள் இணைந்தோ நூலக ஆவணங்களைத் தாக்கி அழிக்கின்றன.
நூலகம் அமைந்துள்ள சூழல், மற்றும் அங்கு நிலவும்காலநிலை என்பன நூற்சேர்க்கையில் பாரியதாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மட்டக்களப்பைப் பொறுத்த வரையில், சூறாவளியால் 1978இலும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பினால் 1987இலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நூலக வரலாறு எமக்குண்டு. கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட நகரச் சூழலில் அமைந்துள்ள நூலகங்கள் மாசுக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஒரு பொருளின் மேற்பரப்பில் மெல்லிய படையாகக் காணப்படும் தூசுக்கள், அழுக்குகள் என்பன உயர் ஈரலிப்புத் தன்மையைப் பேணுவதன் மூலம் பூஞ்சணங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. ஈரலிப்புத் தன்மை உள்ளபோது, உப்புத் துகள்கள் இரசாயனத் தாக்கங்களுக்கு உட்பட்டு நூலக ஆவணங்களின் அழிவைத் துரிதப்படுத்துகின்றன. மட்டக்களப்பு புதிய பொது நூலகம் மட்டக்களப்பு நகரினுள்ளே அமைந்து இருக்கின்றதனால் தூசுக்கள், அழுக்குகள் என்பனவற்றிலிருந்து பாதுகாக்கப்படவேண்டிய தேவை ஓரளவு உள்ளது எனலாம். ஆயினும் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தைச் சுற்றிலும் விசாலமான சுற்றாடலில், பாதுகாப்பானதும் நன்கு திட்டமிடப்பட்டதுமான நில அமைப்பை, திட்டமிட்ட மர நடுகைகளின் மூலம் அழகியல் அம்சங்களையும் உள்ளீர்த்து, இரம்மியமானதும் இயற்கை ஒளி, மாசற்ற வளிச் சுற்றோட்டம் என்பவற்றையும் பெறக்கூடிய வகையில் கவனத்துக்கெடுத்து வடிவமைத்துக்கொள்ள எமக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது.
வளியானது, அதிகம் ஈரலிப்பாகவோ அல்லது அதிகம்வறட்சியானதாகவோ இருப்பின், நூல்களைப் பாதிக்கும். வறட்சியான சூழலிற் பேணப்படும் நூல்களின் தாள்கள் விரைவில் உடைந்து தூளாகி விடும். எரிபொருட்களின் பாவனை அதிகளவில் இருப்பதால், நகர்ப்புறங்களிலும் கைத்தொழில் பகுதிகளிலும் வளியானது அதிகளவு தீங்கு விளைவிக்கும் வாயுக்களினால் நிரம்பிக் காணப்படுகின்றது. இவற்றுள், நூலக ஆவணங்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துபவை கந்தகவீரொட்சைட்டு என்பதாகும். கடதாசி மற்றும் துணியினால் செய்யப்பட்ட நூல்களை இது அதிகம் பாதிக்கிறது. இவ்வாயு நூலின் தாள்களுக்குள் ஊடுருவி அங்குள்ள அழுக்குகளுடன்தாக்கமடைந்து சல்பூரிக்கமிலத்தை உருவாக்குகிறது. இதனால், நூலின் தாள்கள் நிறம்மாறி, உடையும் தன்மை அடைகின்றன. இந்நிலைமையை தற்போதைய மட்டக்களப்பு பொது நூலகத்தின் மேல்மாடியில் உள்ளநூல்களிலும், மரத் தளபாடங்களின் வளைவுகளிலும் நாம் தெளிவாக அவதானிக்கலாம்.
வளியிலுள்ள நீராவியின் அளவைப் பொறுத்து, அதன் ஈரலிப்புத்தன்மை வேறுபடும். ஈரலிப்புத் தன்மை அதிகரிக்கும்போது இரும்புத் தளபாடங்கள் துருப்பிடிக்கும். ஈரலிப்புத் தன்மை பூஞ்சணங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றது. இவற்றைவிட, நூல்கள் நேரடியாக நீரில் நனைந்தால் அவற்றின் தாள்கள் ஒன்றுடனொன்று ஒட்டிக் கொள்கின்றன. இதன் விளைவாக பூஞ்சணங்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன், தோல், கடதாசி போன்றவற்றாலான நூல்களும் நலிவடைகின்றன. மட்டக்களப்பு வாவியை அண்டிய சூழலில் நூலகக் கட்டிடமும் அமைந்துள்ளதால் ஈரலிப்புப் பதனால் ஏற்படும் பாதிப்புக்களையிட்டு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.
சூரிய ஒளியானது கதவு, யன்னல்களினூடாகவும், செயற்கை ஒளிவீசும் சாதனங்களின் மூலமும் நூலகத்தினுள்ளேபுகுகின்றது. நூலக ஆவணங்களிலுள்ள சேதனப் பதார்த்தங்கள் ஒளியின் தாக்கத்திற்குள்ளாவதால், நூல்களின் தாள்கள் நிறம்மாறி, உடையும் தன்மையை அடைகின்றன. பொதுவாக நூலகங்களுக்குள் கடுமையான ஒளி விரும்பத்தக்கதன்று.
உயர் வெப்பநிலையில், நூலக ஆவணங்கள் விரைவில் சீர்கெடுகின்றன. அடிக்கடி நிகழ்கின்ற வெப்பநிலைமாற்றங்கள், நூலக ஆவணங்களில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், நூல்களில் காணப்படுகின்ற வெவ்வேறு பதார்த்தங்கள் வெவ்வேறு அளவுகளில் வெப்பத்தை உறிஞ்சி வெவ்வேறு அளவுகளில் விரிவடைகின்றன. வெப்பத்தின் விளைவால், நூலகஆவணங்களில் வறட்சித்தன்மை, உடையும் தன்மை, உருவமாற்றம் என்பன நிகழ்கின்றன. தற்போதைய மட்டக்களப்பு பொது நூலகத்தின் மேல்மாடியில் உள்ளபிரதான தெருப் பக்க ஜன்னலை அண்டி வைக்கப்பட்டுள்ளஅல்மாரிகளில் உள்ள ஆங்கில நூல்களிற் சில நேராக நிறுத்தி வைக்கமுடியாத அளவு முறுகி, வளைந்திருந்தமையையும், சூரிய ஒளி கண்ணாடி ஜன்னல்களினூடாக நீண்டகாலமாக பாய்ச்சப்பட்டு வந்தமையால் அலுமாரிக் கதவுகளையே அது பாதித்திருந்ததை நேரில் (2018இல்) விஜயம் செய்திருந்தபோது அவதானித்து அன்றைய நூலகரிடம் அது பற்றி விளக்கியுமிருந்தேன்.
நூலக ஆவணங்களை சேதப்படுத்தும் காரணிகளுள்உயிரியல் காரணிகள் மிகவும் முக்கியமானவையாகும். இவற்றை நுண்ணுயிரியல் காரணிகள், பெரும் உயிரியல் காரணிகள், மனிதர்கள் என மூன்று உப பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. நுண்ணுயிரியல் காரணிகள்
நுண்ணுயிர்க் காரணிகளாக பூஞ்சணம், பக்ரீரியா என்பவற்றைக் குறிப்பிடலாம். பூஞ்சணம் உயிருள்ள தாவரகாவிகளாகும். இவை மிகவும் சிறியனவாக இருப்பதால், சாதாரண மனிதக் கண்களுக்கு தென்படுவதில்லை. இவை சேதனப் பதார்த்தங்களில் அதிக எண்ணிக்கையில்வாழ்கின்றன. இவற்றின் வளர்ச்சியை வெப்பநிலை, ஈரலிப்புத்தன்மை, இருள், போசணை என்பன ஊக்குவிக்கின்றன. நூல்களில் இவை வெண்ணிறப்படையாக படர்ந்து காணப்படுவதுடன், இவற்றின் கழிவுகள் நீக்குவதற்கு கடினமானவையாகவும் உள்ளன. சிற்றுண்டி வகைகளை நூலகத்தில் உண்டவாறு நூல்களின் பக்கங்களைப் புரட்டுவதால் உணவுத் துகள்கள், எண்ணெய் வகைகள் பக்கங்களில் படிந்த விடுகின்றன. இதனால் தான், குடிபானங்கள், சிற்றுண்டிகள் (சிப்ஸ்) போன்றவற்றை வாசகர்கள் நூலகத்தினுள் எடுத்துச்செல்வதை இரும்புக்கரம் கொண்டுதடுத்தாக வேண்டியுள்ளது. இது நூலக ஊழியர்களுக்கும் பொருந்தும்.
பற்றீரியா கடதாசியிலுள்ள செலுலோசு பதார்த்தங்களைத் தாக்குகின்றன. அதிகம் புழக்கத்திலுள்ள நூலகங்களைப் பொறுத்தவரையில் இவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்களவு காணப்படுவதில்லை. அன்றாடம் நூல்களைத் தட்டித்துப்பரவாக்கும் நூலகங்களில் இதன் பாதிப்பைக் காணமுடியாது.
2. பெரும் உயிரியல் காரணிகள்
நூலகங்களில் நூல்களை நேரடியாகத் தாக்கும் காரணிகளாக பூச்சிகளும் புழுக்களும் விளங்குகின்றன. குறிப்பாக உஷ்ண வலயப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நூலகங்களின் நூற்சேர்க்கையைத்தாக்கும் உயிரினங்கள் இவை. நூல்களினது அட்டைகளையும் உறைகளையும் தாள்களையும் துளைத்துத் தின்று அவற்றில் துவாரங்களை ஏற்படுத்துவதுடன், அவை விட்டுச் செல்லும் எச்சங்கள்நூல்களின் மீது அடையாளங்களையும் துர்நாற்றத்தையும் உண்டாக்குகின்றன.
கறையான்கள் வெள்ளெறும்பெனவும் சில ஊர்களில்அழைக்கப்படுகின்றன.
ஆவணங்களின் விரோதிகளில் இவை மிகவும் ஆபத்தானவையாகும். இவற்றினை அகற்றுவது மிகவும் கடினமானதாகும். விரைந்த இனப்பெருக்கப் பண்பைக்கொண்ட இவை ஒரே நாளில், 30,000 முட்டைகளைப் பொரிக்கக்கூடிய வல்லமையுடையவை. இவற்றின் உணவு மரத்தூள், நூல்கள், தடித்த படங்கள், அட்டைப் பெட்டிகள் ஆகியனவாகும். இவை நூலகத்தில் நுழைந்தால் பாரிய நட்டத்தை நூற்சேர்க்கைக்கு ஏற்படுத்தும். இவை அநேகமாக இறாக்கைகள், அலுமாரிகளின் முதுகுப்புறத்தினூடாகவே தமது ஆக்கிரமிப்பைத் தொடங்கிக்காலப்போக்கில் தாம் பாதுகாப்பாக வாழ்வதற்கென நீண்ட புற்றுக்களை ஏற்படுத்தி விடுகின்றன. நூல்கள் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டிருக்கும் இறாக்கைகள் மரத்தினால் செய்யப்பட்டிருப்பின், அவ்வப்போது அவற்றின் அடிப்பகுதியினைத் துப்பரவு செய்யாது விட்டால், அந்த இடத்தில் நிலத்தில் வெடிப்பு இருக்குமாயின் கறையான் இலகுவில் தோன்றக் கூடும். கறையான் நூல்களையும் இறாக்கைகளையும் அரித்துப் பெரும் சேதத்தினை விளைவிக்கின்றது. நூல்களைத் தூசி தட்டியும் இறாக்கைகளின் கீழ் துப்பரவாகக் கூட்டியும் வைத்திருப்பதோடு வெடிப்புகள் காணப்பட்டால், டீ.ரீ.ரீ(DDT), மலத்தியோன் போன்ற பௌடர்களைக் கரைத்துபூசி விடுவதன் மூலமும் கறையான் தோன்றாமல் தடுக்கலாம். இது பற்றி அடுத்த பகுதியில் விரிவாகப்பார்ப்போம்.
கரப்பான் பூச்சிகள் அனேகமாக புத்தக மட்டைகளுக்கே அதிக சேதங்களை ஏற்படுத்துகின்றன. நூல்களைக் கட்டுவதற்கு பாவிக்கப்படும் பசைகள், பிசின்கள், துணிகள், மட்டைகள், கடதாசிகள் ஆகியன இவற்றின் விருப்ப உணவாக இருப்பதால், இவை அனேகமாக நூல்களின் முதுகுப் புறமாக நுழைந்து உள்ளிருந்து வாழ்கின்றன. இவை விட்டுச்செல்லும் எச்சங்கள் துர்நாற்றம் கொண்டவை. நூல்களில் நிறமாற்றங்களையும் அவை ஏற்படுத்துகின்றன. பகல் வேளைகளில் இவைசுவர்களிலுள்ள துவாரங்களிலும் வெடிப்புக்களிலும் மறைந்திருந்து இரவு வேளைகளிலேயே நூல்களைத்தாக்குகின்றன.
இராமபாணம் மிக நீண்ட உருவமுடையவை. அனேகமாக இரவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குளிர்மையான, ஈரலிப்புத் தன்மையுள்ள சீதோஷ்ண நிலைகளை விரும்புவதால் கட்டிடங்களின் அடித்தளங்களிலேயேஇவை காணப்படுகின்றன. இவை புத்தகங்களின் பிசின், காகிதம், வர்ணங்கள், உயர்ந்த ரகச் சித்திரக் காகிதங்கள் முதலியவற்றைச் சுவைத்து உண்ணும் தன்மையுடையன. இருண்ட பிரதேசங்களான கடதாசிப் பெட்டிகள், இறாக்கைகளின் மூலைகள் ஆகிய இடங்களில் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இவை புத்தகத்தை ஊடறுத்து பிசினிருக்கும் இடத்தை நாடிச்செல்வதால்நூல்கள் பெரிதும் பாதிப்படைகின்றன.
நூல்களைத் தாக்கும் காரணிகளில் மிகவும் ஆபத்தானவை புத்தகப் புழுக்களாகும். சிறிய செந்நிற வண்டுகள் நூலகத்தினுள் திறந்திருக்கும் யன்னல், கதவுகளினூடாக உட்சென்று, நூல்களின் பக்கங்களிடையே முட்டையிட்டு, கண்ணுக்குத் தெரியாத விதத்தில் பெருகிவிடுகின்றன. இவை ஆரம்ப குடம்பி நிலையில் இருக்கும்போதுதான் கூடுதலான அழிவுகள் ஏற்படுகின்றன. நூல்களைத் துளைத்து, துவாரங்களை ஏற்படுத்துவதனால் அவற்றை முற்றாகப் பயனிழக்கச் செய்கின்றன.
எலி, அணில், முயல் மற்றும் பல கொறித்துத் தின்னும்பிராணிகள் கடதாசி, துணி, தோலினாலான ஆவணங்களைக் கொறித்து சேதப்படுத்துவதுடன், புத்தகம் கட்டுவதற்கு பாவிக்கப்படும் பசை, பிசின் போன்றவற்றையும் உண்ணுகின்றன. பூச்சிகளையும், நோய்களையும் பரப்பும் காவிகளாகவும் இவை செயற்படுகின்றன. குளிர்மைக்காக, நூலகக் கட்டிடங்களை அண்மித்ததாக பெரு மரங்களை வளர்த்துவிடுவதால், நூலகக் கட்டிடங்களில் இருண்ட பழைய தளபாடங்களை ஒதுக்கிவைக்கும் அறைகளை சோம்பேறித்தனமாக உருவாக்கித் தருவதால், கட்டிடங்களை அண்டியதாக பற்றைகளை வளரவிடுவதால் அதில் வசதியாக வாழ்விடங்களை இப்பிராணிகள் அமைத்துக் கொள்கின்றன.
இலங்கையில் நூலகமொன்றின் நூல் தட்டிலேயே எலிவளை காணப்படும் படத்தைக் கீழே காண்க.
3. மனிதர்கள்
மனிதர்களை நூலக ஆவணங்களின் எதிரிகள் என்றுகுறிப்பிட்டால் ஆச்சரியமாக இருக்கும். மேலுள்ள படம்அவர்களின் சோம்பேறித்தனத்தாலும் அக்கறையின்மையாலும் நூலகத் தட்டுகளிலேயே எலிகள் வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளும் நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனது கருத்திற்கு ஆதாரமான இப்புகைப்படம் என்னால் இலங்கையின் வடபுலத்திலுள்ள ஒரு நூலகத்தில் 2018இல் எடுக்கப்பட்டது. மேலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் திட்டமிட்டு விலைமதிப்பற்ற நூல்களுக்கு செய்யும் ஊறுகளை எவராலும் மன்னிக்க முடியாதவை. அவற்றில் சில கீழே:
1. நூலகங்களிலிருந்து சட்டத்திற்கு புறம்பான முறையில் நூல்களை அகற்றுதல்
அல்லது திருடுதல்.
2. நூலக பாவனையாளர்கள் நூலகங்களிலிருந்து புத்தகங்களை இரவல் பெறும்போது தம்மைப் பற்றியதவறான தகவல்களைக் கொடுத்தல். அதனால் நூலகர்களால் இரவல் வழங்கப்பட்ட நூல்களின் செல்வழியைக் கண்டறிய முடியாது போதல்.
3. நூலக பாவனையாளர்கள், தமது அடையாள அட்டைகளை தவறான முறையில் பயன்படுத்துதல்.
4. தமக்குத் தேவையான விடயங்களை நூல்களிலிருந்து வெட்டிக் கிழித்தெடுத்துச் செல்லல், படங்களை நூல்களிலிருந்து நீக்குதல் அல்லது புத்தகங்களில் கிறுக்கி பயனிழக்கச் செய்தல்.
5. சுயநல நோக்கில் நூல்களில் தமக்குத் தேவையானவசனங்களின் கீழ் அடிக்கோடிடுதல், குறிப்பெழுதுதல்.
4. பிற காரணிகள்
இயற்கையான அல்லது மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளினாலும் நூலக ஆவணங்கள் அழிவடைகின்றன. உதாரணமாக நெருப்பு, வெள்ளப்பெருக்கு, பூகம்பம், பெருமழை, புயல், உறைபனி போன்றவற்றினால் ஏற்படும் அழிவுகளைக் குறிப்பிடலாம்.
கிழக்கு மாகாண சூறாவளி 23 நவம்பர் 1978 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய சூறாவளி ஆகும். இச் சூறாவளியினால், கிட்டத்தட்ட 1000 பேர் இறந்து, ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியாக சேதமாக்கப்பட்டு, 240 பாடசாலைகள் சேதமாகின. மட்டக்களப்பின் ஐந்தில் ஒரு மீன் பிடிப்படகுகள் அழிக்கப்பட்டு, 11இல் 9 நெல் சேமிப்பு களஞ்சியங்கள் அழிக்கப்பட்டு, மட்டக்களப்பில் 90 வீதமாக தென்னைப் பயிர்ச்செய்கை (28,000 ஏக்கர்) அழிக்கப்பட்டு சேதத்திற்குள்ளாகின. இத்தகைய மோசமான வானிலைக் காரணிகளாலும் மட்டக்களப்பு பொது நூலகம் உள்ளிட்ட பல நூலகங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
எழுதுவதற்கும் நூலை அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படும் சில மை வகைகள் பெரஸ் சல்பேற்று (Ferrous subhate) எனும் இரசாயனப் பதார்த்தத்தைக்கொண்டுள்ளது. மையிலுள்ள பெரஸ் சல்பேற்றின் அளவைப் பொறுத்து, அவை நூல்களின் தாள்களுக்குஏற்படுத்தும் பாதிப்பும் வேறுபடும்.
புத்தகங்களைக் கட்டுவதற்குப் பயன்படும் இப்பொருட்கள், பூச்சிகள், புழுக்கள், பூஞ்சணம் போன்றவற்றை அதிகம் கவருகின்றன. இதனால், நூல்களின் அழிவிற்கு துணைபுரிகின்றன. பசைகள், அரிசி மா அல்லது கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பிசின்கள் விலங்குகளிலிருந்து உருவாகிறது.
நூலக ஆவணங்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி விரிவாக அடுத்த தொடரில் பார்ப்போம். இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளில் சில கட்டிட நிர்மாணத்துக்கு முன்னரே கவனத்துக்கெடுக்கப்பட வேண்டியவை. அவற்றை இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவதால், மட்டக்களப்பு பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகளின் போதே எதிர்காலத்தில் புதிய நூலகக் கட்டடத்தின் ஆவணங்களையும் தளபாடங்களையும் பாதுகாக்கும் அரிய வாய்ப்பை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோம்.
(தொடரும்)