— சபீனா சோமசுந்தரம் —
‘மனே தண்ணி வச்சிரிக்கியா..‘ என்ற குரலைக் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான் செந்தூரன்.
பின்னால் ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றிருந்தார், அவனது முகத்தை கேள்வியாய் பார்த்தபடி. சூரியன் உச்சியை தொட்டிருந்தது. நெற்றியிலிருந்து கன்னம் வழியாக கழுத்தில் வழிந்தோடும் வியர்வையை சேலைத்தலைப்பால் துடைத்தபடி நின்றிருந்தார்.
‘ஆ.. ஓம் அன்ரி இந்தாங்க..‘ என்று சொல்லி கையில் இருந்த தண்ணீர் போத்தலை அவரிடம் கொடுத்தான் செந்தூரன்.
அவனிடமிருந்து தண்ணீர் போத்தலை வாங்கிய அந்த வயதான பெண்மணி, போத்தலை அவசர அவசரமாக திறந்து அன்னார்ந்து மடமடவென்று தண்ணீரை வாயில் ஊற்றினார். அது வேக வேகமாக தொண்டைக் குழியில் இறங்கியது.
ஒரே மூச்சில் போத்தலின் அரைவாசி வரை இருந்த தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு, ஒரு பெருமூச்சை விட்டவர் தண்ணீர் போத்தலை பார்க்க அது காலியாக இருந்தது.
ஒரு குற்ற உணர்ச்சியோடு செந்தூரனின் முகத்தை பார்த்து ‘ஐயோ எல்லாத்தையும் குடிச்சிட்டனே..‘ என்றார் அப்பெண்.
‘பரவால்ல அன்ரி.. எனக்கு தேவையில்ல.. ‘ என்று சொல்லி அவர் நீட்டிய போத்தலை வாங்கிக் கொண்டு அந்த பெண்மணிக்கு பின்னால் எட்டிப் பார்த்தான் செந்தூரன்.
வரிசை ஒரு கிலோ மீற்றர் அளவிற்கு நீண்டு இருந்தது. முகத்தை சுழித்துக்கொண்டு திரும்பி தனக்கு முன்னால் எட்டிப் பார்த்தான். தனக்கு முன்னால் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று எண்ணினான் சுமார் இருபது இருபந்தைந்து பேர் வரையில் நின்றார்கள்.
காலையில் ஐந்து மணி இருக்கும் அவன் இந்த பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு வந்தபோது. அவன் வரும் போது ஏற்கனவே நாற்பது பேர் வரையில் வரிசையில் நின்றிருந்தார்கள். நேற்று இரவு மனைவி சொன்னது ஞாபகம் வந்தது அவனுக்கு.
‘நாளைக்கி மூண்டு மணிக்கெல்லாம் எழும்பி போய்டுங்க.. லேட்டானா பிறகு கஸ்டம்.. நாளைக்கி எப்பிடியும் மண்ணெண்ணை வாங்கியே ஆகணும்..
இப்பவே சொல்லிட்டன்.. மறுகா அது இதுன்னு காரணம் சொல்லிட்டு இருந்திங்களோ.. வீட்டுல அடுப்பும் எரியாது விளக்கும் எரியாது…
நாசமா போன நாட்டுல கேஸ் இல்ல.. கரண்டும் இல்ல.. மண்ணெண்ணையும் இல்லாட்டி என்ன தான் செய்யிற..‘ என்று திட்டிக் கொண்டு மண்ணெண்ணை வாங்குவது பற்றி தனது கணவனுக்கு ஞாபகப்படுத்தியிருந்தாள் செந்தூரனின் மனைவி.
‘சரி நாளைக்கி ஒப்பிஸ்க்கு லீவு போட்டு என்டாலும் போய் லைன்ல நிண்டு மண்ணெண்ணை வாங்கிட்டு வந்திடுறன்.. சரியா..‘ என்று சொல்லிவிட்டு, படுத்து தூங்கியவன் மறுநாள் காலை எழும்போது நேரம் அதிகாலை நான்கரை ஆகிவிட்டிருந்தது.
அவசர அவசரமாக எழுந்து முகத்தைக் கழுவி, உடையை மாற்றி மண்ணெண்ணை கானை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அப்போது அவனது மனைவி அவசரமாக ஓடி வந்து ஒரு தண்ணீர் போத்தலை அவள் கையில் திணித்தாள்.
‘வெயிலுக்க நிண்டு மயங்கி ஏதும் விழுந்திடாதீங்க.. தண்ணி போத்தல எடுத்திட்டு போங்க..‘ என்று அவள் சொல்லவும்
‘நானாவது மயங்கி விழுறதாவது.. நான் ஒரு மார்கெட்டிங் என்ஸகெட்டிவ்.. நான் பாக்காத வெயிலா.. சரி சரி நீ ஆசைப்படுற.. கொண்டா தண்ணிப் போத்தலை..‘ என்று சொல்லி தண்ணீர் போத்தலை வாங்கிக் கொண்டு பைக்கில் முறுக்கி பறந்தான் செந்தூரன்.
செந்தூரன் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக பணிபுரிகிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். மனைவி கிருசாந்தி தையல் வேலை செய்பவள். அந்த பகுதியில் தையலுக்கு பெயர் போனவள். எப்போதும் அவளுக்கு தையல் ஓடர் வந்து கொண்டே இருக்கும். அதனால் செந்தூரனும் அவளது வீட்டு வேலைகளில் பங்கு போட்டுக் கொள்வதுண்டு.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு மின்தடை போன்ற பிரச்சினைகள ஏற்பட்ட பிறகு அவர்களும் கேஸ் அடுப்பிலிருந்து மண்ணெண்ணை அடுப்பிற்கு மாறி விட்டிருந்தனர். மின்சாரம் இல்லா வேளைகளில் விளக்கு பற்ற வைக்கவும் மண்ணெண்ணைதானே தேவை.
ஒரு வாரமான மண்ணெண்ணை வாங்க முயற்சித்தும் கிடைக்கவில்லை. எப்படியாவது இன்று வாங்கியே ஆக வேண்டும் என்ற முயற்சியில், தான் அதிகாலையிலேயே எழுந்து மண்ணெண்ணை வாங்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிளம்பினான்.
அங்கு அவன் வந்து சேரும் போது ஏற்கனவே பெரிய வரிசை ஒன்று காத்திருந்தது. ‘சரி இண்டைக்கு லீவுசு போட்டாலும் சரி.. மண்ணெண்ணையை வாங்கி கொண்டு தான் போகனும்..‘ என்ற முடிவோடு வரிசையில் போய் நின்றான்.
சிலர் கேனை வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தார்கள். வயதான சிலர் தரையில் காலை நீட்டி உட்கார்ந்து தங்கள் சொந்த கதைகள் குடும்ப கதைகள் சோகக் கதைகள் என பலவற்றை பேசிக் கொண்டிருந்தனர்.
ஏழு மணிக்கு பிறகு தான் மண்ணெண்ணை விநியோகிக்க தொடங்கினார்கள். வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது. நேரமும் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. சூரியன் உச்சத்தில் நின்று வெப்பத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்தான்.
‘வீடு எங்க மனே..‘ என்று மீண்டும் அவன் சிந்தனையை கலைத்தது பின்னால் நின்றிருந்த அந்த பெண்ணின் குரல்.
‘என்… என்ன… அன்ரி.. என்ன கேட்டீங்க..‘ என்றான் செந்தூரன்.
‘வீடு எங்கன்னு கேட்டன்..‘ என்றார் அவர்.
‘இங்க தான் ஊறணி.. சின்ன ஊறணி..‘ என்று விட்டு கூடவே ‘நீங்க.. எங்க..‘ என்று கேட்டான் அவன்.
‘நான் இருதயபுரம்…‘ என்று சொல்லிவிட்டு ‘என்ன கஸ்டமடா மனே.. இந்த நாட்டில இருக்கிறது.. இப்புடி போனா நிலமை எங்க போய் முடியும்.? வயசான காலத்தில வீட்டுல நிம்மதியா இருந்து சாப்பிட வழி இல்ல..‘ என்று சொல்லி அலுத்துக் கொண்டாள் அப்பெண்மணி
‘ஓம் அன்ரி.. என்ன தான் செய்ய.. இங்க பாருங்க இண்டைக்கு வேலையும் இல்ல.. லீவு சொல்லிட்டு இங்க நிக்கன்..‘ என்றான் பதிலுக்கு அவன்.
‘வீட்டுல வேற யாரையும் அனுப்பிட்டு நீ வேலைக்கி போயிருக்கலாமே..‘ என்று கேட்டாள் அப்பெண்.
‘அப்பிடி யாரும் இல்லையே.. அன்ரி.. அதோட வயசானவங்கள வெயில்ல அனுப்ப ஏலா தானே..‘ என்று விட்டு ‘உங்க வீட்டுல யாரும் இல்லையா.. வயசான காலத்தில நீங்க ஏன் இந்த வெயில்ல வந்து நிக்கீங்க..‘ என்று கேட்டான் செந்தூரன்
‘யாரும் இல்லையே.. மகனும் பேரனும்தான்.. மகன்ட மனிசி ஒரு அக்ஸிடன்ட்ல தவறிட்டாள்.. அவன் ஒரு நாளைக்கி வேலைக்கி போகாட்டிலும் கஸ்டம் மனே.. அதான் நான் வந்து நிக்கன்..‘ என்றாள் அப்பெண்மணி கவலை தோய்ந்த குரலில்.
‘ம்ம்ம்… கஸ்டம் தான் என்ன அன்ரி..‘ என்று சொல்லி அப்பெண்ணுடைய கவலையை பங்குபோட்டுக் கொண்டான் செந்தூரன்.
வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. செந்தூரன் மீண்டும் முன்னால் எட்டிப் பார்த்தான் இன்னும் ஒரு ஏழேட்டுப் பேர் நிற்கிறார்கள் முன்னால். ஏதோ தோன்றியவனாய் பின்னால் திரும்பி அப்பெண்ணிடம்
‘அன்ரி உங்கட பேரப்பொடியனுக்கு ஒரு இன்சூரன்ட்ஸ் எடுங்களன்.. அம்மாவும் இல்லாத பொடியன்.. பிற்காலத்தில யூஸ் ஆகும் அவனுக்கு…‘ என்று கேட்டான். அதில் நிற்கிற நேரத்தை ஏன் வீணடிப்பான் வந்த வேலையோட சொந்த வேலையையும் பாக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
அவன் அப்படிக் கேட்கவும் அப்பெண்மணி யோசித்தாள். உடனே செந்தூரன் காப்புறுதி பெறுவது அதிலுள்ள நன்மை பற்றியெல்லாம் பெரிய விளக்கம் ஒன்றை கொடுத்தான். மூச்சை பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான்.
‘இந்த அன்ரி சரி என்டு சொல்லிட்டா இந்த மாச டார்கெட்டுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கும்..‘ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க
‘சரி மனே.. நீ வீட்ட வா.. மகன்ட கேக்கிறன்..‘ என்றாள் அப்பெண்.
‘ஆஹா.. கெட்டிக்காரன்டா நீ… செந்தூரா…‘ என்று மனதிற்குள் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு அப்பெண்ணிடம் அவரது விலாசம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை வாங்கிக் கொண்டான்.
‘வாற ஞாயிற்றுக்கிழமை அப்படி வாறன் அன்ரி…‘ என்று சொல்லிக் கொண்டு முன்னால் நகர்ந்தான். அவனுடைய கேனில் மண்ணெண்ணை நிரப்பப்பட்டது.
அவனுக்கு பின்னால் மண்ணெண்ணையை நிரப்பிக் கொண்டு வந்த அப்பெண்மணியிடம் ‘எதில போறீங்க அன்ரி..‘ என்று அவன் கேட்க
‘ஆட்டோக்கு கோல் பண்ணியிருக்கன்.. இப்ப வந்திடுவான் பொடியன்..‘ என்றாள் அப்பெண்.
‘சரி அன்ரி.. நான் முந்துறன்… கவனமா வீட்ட போங்க..‘ என்றுவிட்டு கிளம்பினான் செந்தூரன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை செந்தூரன் காப்புறுதி சம்மந்தமான ஆவணங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அன்று அந்த பெண் கொடுத்த கைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினான். யாரும் அழைப்பை எடுக்கவில்லை.
ஆனால் அவர் குறிப்பிட்ட வீட்டு விலாசத்தை ஞாபகப்படுத்தி ஒரு வழியாக வீட்டை கண்டு பிடித்து நெருங்கினான். அந்த வீட்டை நெருங்கியவனுக்கு ஐயோ என்றிருந்தது. வீட்டிற்கு முன்னால் கண்ணீர் அஞ்சல் பனர் கட்டப்பட்டிருந்தது.
வீட்டின் கேட்டை திறந்து கொண்டு போனான் செந்தூரன். வீட்டினுள்ளே பேச்சக்குரல் கேட்டது. கிட்டத்தட்ட அவனது வயதை ஒத்த வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உள்ளிருந்து வெளியே வந்தான்.
‘நீங்க..‘ என்று கேள்வியாய் செந்தூரனை நோக்கினான்.
‘வசந்தா அன்ரி…‘ என்று சொல்லி வார்த்தைகளை இழுத்தான் செந்தூரன்.
‘ஓம்.. என்ர அம்மா தான்.. ஆனா அவ இப்ப உயிரோட இல்லையே.. வாசல்ல பாத்திருப்பீங்களே…’ என்றான் அவன் கவலையோடு
‘ஆஹ்…. அது.. பாத்தன்… என்ன நடந்த.. மூணு நாளைக்கு முன்னால அவய கண்டு கதைச்சனே..‘ என்று செந்தூரன் கேட்க
‘எல்லாம் விதி தான்.. நான் அப்பவே சொன்னன்.. நான் வாங்கி வாறன் நீங்க வீட்ட இருங்க என்டு.. சொல்லு கேக்காம மண்ணெண்ணை வாங்கவென்டு போய் மணித்தியால கணக்கா உச்சி வெயில்ல நின்டிருக்காவு..
ஆட்டோவில வரேக்க மயங்கிட்டா.. ஆட்டோக்கார பொடியன் ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்கான அப்பிடியே.. ஆனா பிரியோசனம் இல்ல.. மயங்கினவ எழும்பவே இல்ல…‘ என்று சொல்லி அழுதான் அந்த மகன்.
அவன் அழுவதை பார்க்க செந்தூரனுக்கு என்னவோ போல் இருந்தது. எத்தனை வயதானாலும் பிள்ளை பெற்று தந்தை ஆன பின்னும் தாய்க்கு அவன் பிள்ளை தானே. தாயின் இழப்பால் உடைந்து போயிருக்கும் அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது செந்தூரனுக்கு.
உள்ளேயிருந்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓடி வந்து ‘அப்பா.. மாமி உங்கள கூப்பிடுறாவு..’ என்றான்
செந்தூரனுக்கு அந்த சிறுவனை பார்க்க கவலையாக இருந்தது. இந்த பேரனிற்காகத்தானே தான் வாழ்வதாக அன்று அந்த பெண்மணி சொன்னாள்.
அங்கு நிற்க அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது திரும்பி நடந்தான் ஒன்றும் சொல்லாமல்.
‘என்ன பொஸ்.. அம்மாட்ட ஏதும் முக்கியமான வேலையா வந்தீங்களா..‘ என்ற குரலுக்கு திரும்பி நின்று,
‘இல்ல.. இல்ல.. இந்த பக்கம் வந்தன்.. அவைட ஞாபகம் வந்தது.. அதான் பாத்திட்டு போக எண்டு வந்தன்..‘ என்று சொல்லி, ஒரு விரக்தி புன்னகையை சிந்திவிட்டு நடந்தான்.
வீட்டு வளவிற்கு வெளியே இருந்த கண்ணீர் அஞ்சலி பனரில் அழகாய் சிரித்துக்கொண்டு இருந்தாள் அந்த வயதான பெண்மணி.
ஒரு நொடி நின்று அந்த படத்தை கைகூப்பி வணங்கிவிட்டு பைக்கில் ஏறி முறுக்கினான் செந்தூரன். அவன் மனம் ஏதோ ஒரு கடும் பாரத்தை சுமந்து கொண்டு சென்றது.