— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை எதிர்த்து – நிராகரித்து அண்மையில் (26.01.2022 –30.01.2022) வடமாகாணத்தில் வாகனப் பவனியும் பேரணியும் நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேரணியின் நிறைவில் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி அமைவதற்கு இலங்கை மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று அறிவிப்புச்செய்கிறார்.
சமகாலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவது குறித்துக் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியைச் சந்தித்து முறையிடுகின்றார்.
அதேவேளை இந்திய மீனவர்களின் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறுவதை எதிர்த்து வடபகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சாணக்கியனும் கலந்து கொள்கின்றனர்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்செய்யக் கோரியும் பதின்மூன்றுக்கும்அப்பால் சென்று வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’க்குத் தலையீடு செய்யும்படியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதமும் 18.01.2022 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களுக்கும் இலங்கை வடபகுதி மீனவர்களுக்குமிடையேயுள்ள பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்பதில் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இப்பிரச்சனையை இருநாட்டு அரசாங்கங்களும் நல்லெண்ண அடிப்படையிலும் – புரிந்துணர்வு அடிப்படையிலும் – இராஜதந்திர வழிமுறைகளினூடாக மேற்கொள்ளப்படும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளாலும் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதொன்றாகும். அதனை விடுத்து இந்திய மீனவர்களைப் பகிரங்கமாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாலும் ஐநா அலுவலகத்தில் முறைப்பாடு செய்வதாலும் இந்திய அரசாங்கத்தை ‘எரிச்சல்’ ஊட்டிக்கொண்டு இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியத் தலையீட்டை நாடுவது ஒன்றுக்கொன்று முரண்பாடான செயற்பாடுகளாகும். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோரின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இவர்களுக்கென்ன ‘தலை கழன்று விட்டதா?’ என எண்ணத் தோன்றுகிறது.
இவர்களுக்குப் பிரச்சனைக்குத் தீர்வு தேடுவதை விட எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தமது கட்சிகளுக்கு வாக்குச் சேகரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியிலே மலினமான விளம்பரம் தேடுவதுதான் மிக முக்கியமாக உள்ளது.
வடபகுதி மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க – இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல் தீர்வில் இந்தியாவின் இராஜதந்திரத் தலையீட்டை வென்றெடுப்பதை விட வடபகுதி மீனவ சமுதாயத்தின் வாக்குகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) அதிகம் பெற்றுக்கொள்வதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) அதிகம் பெற்றுக் கொள்வதா? என்ற தேர்தல் அதிகாரப் போட்டியில்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுமந்திரனும் சாணக்கியனும் ஈடுபட்டிருக்கிறார்களேயொழிய வடபகுதி மீனவர்களின் நலன்களோ, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களின் நலன்களோ இவர்களுடைய செயற்பாட்டில் உள்ளூர இல்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மேலும், இவர்களது இவ்வாறான செயற்பாடுகளில் மறைமுகமான இன்னொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுமுண்டு. அது என்னவெனில் மீன்பிடித் துறை அமைச்சராக இவர்களின் அரசியல் எதிரியாகக் கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா விளங்குவதால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினையை வைத்து டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.
மொத்தத்தில் இவர்கள் எல்லோருமே தமிழ்த் தேசியப் போர்வையில் பதவி நாற்காலிகளைப் (பாராளுமன்றக் கதிரைகளை) பற்றிப் பிடிப்பதற்கான ‘கட்சி அரசியல்’தான் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இப் ‘பதவிப் பச்சோந்தி’களைச் சரியாக அடையாளம் காணவேண்டும்.
(தமிழ்த் தேசியக் கட்சிகள்) ‘குட்டக்குட்ட (தமிழ் மக்கள்) குனிகிற, (தமிழ் மக்கள்) குனியக் குனிய (தமிழ் தேசியக் கட்சிகள்) குட்டுகின்ற’ மடத்தனமான அரசியலைக் கைவிட்டுத் தெளிவான சிந்தனைகளோடும் -நடைமுறைச் சாத்தியமான திட்டங்களோடும் -அணுகுமுறைகளோடும் இலங்கைத் தமிழர்கள் தலைநிமிர வேண்டும். இந்தமாற்றம் ஒன்றின் மூலமேதமிழ்த்தேசியம் எதிர்காலத்தில் சரியான தடத்தில் பயணிக்கும்.