மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?

மட்டு புலம்பெயர்ந்தோரின் உதவியிலான கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் தேசிய மட்டத்தில் பேசப்படுமா?


மட்டக்களப்பின் பெயர் சொல்ல பல அற்புதங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆனால், இன்று அவற்றுடன் இன்னுமொரு விடயமும் அங்கு பலரின் கவனத்தை கவர ஆரம்பித்துள்ளது. 

கிட்டத்தட்ட மட்டக்களப்பு இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷமாக உருவாகிவரும் அதுதான் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் உருவாகிவரும் புற்தரை கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.  

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் முன்னர் தொடர்புபட்டிருந்து பின்னர் புலம் பெயர்ந்து வாழும் அதன் பல அங்கத்தவர்களின் முழு நிதியின் மூலம் கிழக்கிலங்கையிலேயே முதல் தடவையாக கடின பந்து கிரிக்கெட் விளையாட்டிற்கான புற்தரை மைதானமாக அது கிட்டத்தட்ட பூர்த்தியடைந்துள்ளது. 

 இம்மைதானத்தை மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் தற்போது மேற்பார்வை செய்து கட்டி முடித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக புலம்பெயர்ந்து வாழ்வோரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சான்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இடமில்லை.

இற்றைக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டம் தான் இது. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  சத்துருக்கொண்டான் கிராமத்தில் அமையப் பெற்றுள்ள இம் மைதானத்திற்கு முகத்துவார வெளிச்சவீட்டற்கு ஊடாக சவுக்கடி வீதியில் செல்ல வேண்டும். இவ்வீதியின் வலது பக்கம் அடர்த்தியான சவுக்கு மரங்களும் அழகிய கடற்கரையும் கண்களுக்கு தெரிய, இடது பக்கமாக நெடுதூரம் சவுக்கு மரங்களும், நாவமரங்களும், ஈச்சமரங்களும் நிறைந்து காணப்பட்ட ஒரு பெரிய நிலப்பரப்பு இருக்கின்றது. இம்மரங்கள் சூழ்ந்த இடத்தில் 10 ஏக்கர் காணியை புற்தரையிலான கிரிக்கெட் அமைப்பதற்காக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு 2017ம் ஆண்டு அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த P.S.M.சாள்ஸ் அம்மணி அவர்களால் வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்கின்ற தூர நோக்கு சிந்தனையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் செயற்படத் தொடங்கி முதல் கட்டமாக ஒரு புற்தரை மைதானத்தை அமைக்க ஓரு இடத்தினை கோரிய போது பல இடங்கள் தெரிவுக்கு வந்த பின்னர் இறுதியாகக் கிடைத்தது தான் இந்த சத்துருக் கொண்டான் கிராமத்தின் காணியாகும்.  இதனை உடனடியாக செயற்படுத்தும் வண்ணம் 2017.06.26 அன்று அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த P.S.M.சாள்ஸ் அம்மணி அவர்களால் அடிக்கல் நடப்பட்டு உடனடியாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது இலங்கையின் முதல் டெஸ்ட் அணித் தலைவரான பந்துல வர்ணபுர அவர்களும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் உப்புல் சந்தன அவர்களும் இணைந்து செயற்படத் தொடங்கினர்.  2018.02.26 அன்று சமய அனுஸ்டானங்களுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தை கொண்டு நடாத்துவதற்காக இலங்கை டெஸ்ட் அணியின் முதல் தலைவர் பந்துல வர்ணபுர அவர்களை கோட்டைமுனை விளையாட்டு கிராமம் திட்ட இணைப்பாளராக இணைத்து செயற்படத் தொடங்கியது.

இம் மைதானத்தை பொறுத்தவரை ஆடுகளத்தில் இருந்து எல்லை கோட்டிற்கான தூரம் 80 மீட்டர் அளவுகளில் அமைக்கப்பட்ட ஒரு பெரிய மைதானம் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம். இவ்வாறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயற்கை அனர்த்தமாக வெள்ளப்பொருக்கு ஏற்பட்டு பணிகள் முதல் தடவையாக தடைப்பட்டன.
வெள்ளப்பெருக்கு வடிந்த பின்பு நிலத்தடி நீர் இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன 99 நிலத்தடி நீர் குழாய்கள் (Water sprinkler system) பொருத்தப்பட்டது. இலங்கையிலேயே அதிகளவு நிலத்தடி நீர் குழாய்கள் இணைக்கப்பட்ட ஒரே மைதானமாக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானம் காணப்படுகின்றது.
  

இம்மைதானத்தின் சிறப்பம்சங்களாக கிழக்கின் முதல் கடின பந்து புற்தரை மைதானம் என்பதோடு, 30 விளையாட்டு வீரர்கள் இம் மைதானத்தில் தங்கிச் செல்வதற்கான சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானம். பார்வையாளர் அரங்கு இருக்கைகளுடன் மிக அழகாக காணப்படும் ஒரு மைதானம். இம்மைதானத்தின் உயிர் நாடியான ஐந்து புற்தரையிலான ஆடுகளங்கள் மிகவும் நேர்த்தியாக காணப்படும் ஒரு மைதானம். மிகப்பெரிய ஆறு வலைப்பயிற்சி மையங்கள் (Side Wickets) காணப்படுகின்றன. தற்போதைய காலத்தின் அதி நவீன இலத்திரனியல் புள்ளிக்கணிப்பு பலகைளை கொண்ட ஒரு மைதானம். மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பார்வைத்திரை (Sight Screens) கறுப்பு, வெள்ளை நிறங்களில் அமைக்கப்பட்டு நகரக் கூடியதாக காணப்படும் ஒரு மைதானம். குறிப்பாக புற்களை பராமரிக்கும் இயந்திரங்கள் இம்மைதானத்திற்கென்றே கொள்வனவு செய்யப்பட்டு, அவை பாதுகாப்பதற்கான அறையும் காணப்படும் ஒரு மைதானம். ஒட்டு மொத்தத்தில் வட கிழக்கில் கூட இப்படியோரு மைதானம் அமையப்பெறவில்லை என்பதில் மட்டக்களப்ப மாவட்டம் பெருமையுடன் வரும் காலத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ளும் அம்சங்கள் இங்கு நிறையவே உண்டு.

இது ஒரு மிகச்சிறந்த மைதானமாக இலங்கையில் எதிர்காலத்தில் திகழும் என்பதில் எந்த வித ஐயப்பாடுகளும் இல்லை. இம்மைதானம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதால் இங்கு வாழும் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கக் கூடிய சந்தர்பங்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் தற்போது கூட இங்கு பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது முக்கிய விடயமாகும். அத்துடன் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் இங்கு வருகை தரும் பட்டசத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் இக்கிராமத்தில் அதிகரிக்கப்படும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. மற்றும் இவ்விடத்தை சூழவுள்ள இடங்களில் புதிய புதிய வியாபார நிலையங்கள் உருவாகக்கூடிய சந்தர்பங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகின்றன.  

மிக முக்கியமாக மட்டக்களப்பின் சுற்றுலா மையங்களின் ஒன்றாக திகழும் பாசிக்குடாவில் இருந்து சவுக்கடி வீதியூடாக பயணித்தால் மிக இலகுவாக இம்மைதானத்தை வந்தடையலாம் எனவே இதுவே ஒரு வளர்ச்சியாக காணப்படும் என்பதிலும் ஐயமில்லை. இம்மைதானப் பணிகள்  2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல இன்னல்களின் மத்தியில் இன்று ஒரு நிறைவான மைதானமாக தற்போது முடிவுறுத்தப்பட்டு, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் தேசிய மட்ட கனவை நனவாக்கும் ஒரு மைதானமாகவும் திகழவுள்ளது. எமது நோக்கமும் சிந்தனையும் மட்டக்களப்பில் இருந்து பல வீரர்கள் தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பது தான். அதை இம்மைதானம் பூர்த்தி செய்வதை நாமும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றோம்.