உக்ரைன் நிர்வாணம்..! பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்..! (காலக்கண்ணாடி – 78) 

உக்ரைன் நிர்வாணம்..! பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்..! (காலக்கண்ணாடி – 78) 

உக்ரைன் நிர்வாணம்…..! 

பாஞ்சாலி துகிலுரியப்படுகிறாள்……! 

பள்ளிகொள்கிறார் கிருஷ்ணபரமாத்மா …..!! 

      — அழகு குணசீலன் — 

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் மூன்றாவது உலகப்போரில் போய்முடியும் என்று மேற்குலக ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்த பிரச்சார  “ஊடகயுக்தி” பிசுபிசுத்துப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் இவ்விவகாரத்தில் நேர்மையாக தலையிட்டு ஆரம்பத்திலேயே சமாதான முயற்சிகளை செய்வதற்கு பதிலாக யுத்தத்தின் நடுவில் சமாதானம் செய்ய முண்டியடிக்கின்றனர்.   

“மூன்றாம் உலகப்போர்” என்ற வார்த்தையாடல் மக்களை அச்சம் கொள்ளச்செய்யவும், தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், மக்களை தம்பக்கம் இழுக்கவும் மேற்கு செய்த விளம்பரம். மூன்றாம் உலகப்போர் என்றவர்களே தற்போது தாங்கள் தலையிட்டால் மூன்றாம் உலகப்போர் ஆகிவிடும் என்று சறுக்குகிறார்கள். சமரசம் செய்ய வரிசையில் வருகிறார்கள். 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தையும், அதற்கு காரணமாக பின்னணியில் இருந்து ஏவிவிட்டவர்களின் போக்கையும் அவதானிக்கும் போது பாரதப்போரில் பாஞ்சாலி துகிலுரியப்பட்ட காட்சிதான் காலக்கண்ணாடியில் விழும் விம்பமாக உள்ளது. அங்கு கண்ணன் வந்தான் காப்பாற்றினான். இங்கு காப்பாற்ற கண்ணன் வரவில்லை. பைடனின் வண்ணம் பூசப்பட்ட அறிக்கைகளே வந்து கொண்டிருக்கின்றன. 

உக்ரைனை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடவுவைத்து ரஷ்யாவோடு நடாத்துகின்ற இந்த  “அரசியல் சூதாட்டத்தில்” உக்ரைன் பாஞ்சாலியாக துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறது – அத்துமீறிய அழிவுகளை அனுபவித்து நிற்கிறது. அடவுவைத்த பாண்டவரான ஐரோப்பாவும், கிருஷ்ணர் என்ற காப்பர் அமெரிக்காவும் உக்ரைனை காப்பாற்ற முடியாது கைகாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் கண்முன்னே துரியோதனன் துகிலுரிந்து கொண்டிருக்கிறான்.   ஆக, இது ஒரு நவீன பாரதப்போரை நினைவூட்டுகிறது. 

உக்ரைன் என்ற பாஞ்சாலியை ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோவிலும் மனதளவில் “கட்டிக்கொண்ட” மேற்குலகம் அடவு வைத்து நடாத்தும் ஆட்டம் இது. சட்டப்படியான பதிவுத்திருமணம் இன்னும் நடைபெறவில்லை. இதனால் பாஞ்சாலியை காப்பாற்ற முடியாமலும், துச்சாதனனைத் தடுத்து நிறுத்த முடியாமலும், அனுதாபங்களையும், ஆறுதல்களையும் கூறிக்கொண்டும் மேலும் ஆத்திரமூட்டும் வகையில் ஆயுதங்களையும் விநியோகித்துக்கொண்டும் இருக்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவை, அவரின்  “நோட்டோ ஆயுதத்தை” எதிர்பார்த்து ஏமாந்து போன   ஷெலான்ஸ்கி தனது அபயக்குரல் மேற்கை – கிருஷ்ணரை எட்டாத நிலையில் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளார். 

யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை …! 

யுத்தம் எங்கு இடம்பெற்றாலும் இருதரப்பினரதும் முதற்பணி உண்மைத் தகவல்களை மறைப்பதாகவே இருக்கும். ஊடகங்கள் நடுநிலைக்கப்பால் தாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு ஒரு பக்கச் சார்பான செய்திகளையே வெளியிடுகின்றன. இதற்கு உக்ரைன் யுத்தமும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே திட்டமிட்டு மக்களிடம் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியிருந்த மேற்குலக அரசுகள் அந்தப்பணியை ஊடகங்கள் ஊடாகத் தொடர்கின்றன.  

ரஷ்யத்தரப்பால் மேற்கொள்ளப்படும் ஊடக ஜனநாயக மறுப்புக்கள் மட்டும் பூதக்கண்ணாடி போட்டுக் காட்டப்படுவதுடன், மேற்குலகின் பொருளாதாதாரத்தடை, ஆயுதவழங்கல், உக்ரைனில் பின்னால் இருந்து யுத்தத்தை நடாத்தும் சக்திகள், நேட்டோ இராணுவத் திட்டமிடல்கள் எல்லாம் பேசப்படாது மனித உரிமைகள், மனிதாபிமானத் தேவைகள், அகதிகள் வெளியேற்றம் போன்றவை பற்றியே ஊடகங்கள் பேசுகின்றன. அதற்காக இவை பேசாப் பொருளாக இருக்கவேண்டும் என்பதல்ல. மாறாக ஒரு பாதி மட்டுமல்ல மறுபாதியும் பேசப்படவேண்டும். 

ஆண்களில் குறிப்பிட்ட ஒரு வயதுப் பிரிவினர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு உக்ரைன் தடைவிதித்துள்ளது. இதனால் இவர்களில் ஒரு பகுதியினராவது கட்டாயமாக யுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர். மறுபக்கத்தில் இன்னொரு பகுதியினர் சுயவிருப்பில் தற்காப்பு யுத்தத்தில் இணைந்து செயற்படுகிறார்கள்.  

உக்ரைன் ஆயுத விற்பனை நிலையமொன்றில் பொதுமக்கள் முண்டியடித்து தன்னியக்க இயந்திரத் துப்பாக்கிகளை சுயவிருப்பில், சுய செலவில் கொள்வனவு செய்வதாக காட்டப்பட்டது. இது எந்தளவுக்கு உண்மையானது. சாதாரண ஒரு உக்ரைன் பிரஷையால் விலை கொடுத்து தன்னியக்க இயந்திரத் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்ய முடியுமா? 

உண்மை அதுவல்ல. மேற்குலகம் வழங்கிய ஆயுதங்கள் ஒரு இடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்பதே உண்மையாகும். ஒருவகையில் மேற்குலகு பல்வேறு சந்தர்ப்பங்களில் மற்றைய நாடுகளையும், அமைப்புக்களையும் கண்டித்த கட்டாய ஆட்சேர்ப்பு, மக்களை கேடயமாகப் பயன்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து இவை எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல. பெண்களும், பிள்ளைகளும் யுத்தத்தில் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். எப்போதும் யுத்தம் என்றால் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான். 

 ஐ.நா.வில் இந்தியா வாக்களிப்பில் நடுநிலை வகித்தது. அந்தச் சூழலில் உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் புகலிடம் தேடி புகையிரத நிலையங்களில் நிலக்கீழ் அறைகளில் ஒதுங்கியபோது உக்ரைன் மக்களால் அவர்கள் விரட்டப்பட்டனர். இது விடயமாகவும் மாணவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் பேசவேண்டி இருந்தது. இது பற்றி மேற்குலக ஊடகங்கள் மொளனம் சாதித்தன. 

யுத்தத்தில் இருதரப்பிலும் இராணுவத்திற்கும், இராணுவத் தளபாடங்களுக்கும் இழப்பு ஏற்படும் ஆனால் மேற்கு ஊடகங்கள் மிக மிக அதிகமாக ரஷ்யாவுக்கான இழப்புக்களையே பட்டியல் இட்டன. இந்த பல வாரங்களாகத் தொடரும் யுத்தத்தில் உக்ரைன் அரசால் வெளியிடப்பட்ட இழப்புக்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன. இதன் அர்த்தம் ரஷ்யா அல்லது உக்ரைன் தமது இழப்புக்களை தணிக்கை செய்தே எப்போதும் வெளியிட்டு வருகின்றன. 

ரஷ்யாவில் அரச எதிர்ப்பு அல்லது யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள்வரை  தண்டனை ரஷ்ய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருபகுதி மக்கள் வட ஐரோப்பா நோக்கி வெளியேறிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இவற்றில் உண்மையில்லாமல் இல்லை. அதே நேரம் மேற்கு ஊடகங்கள் இவற்றை மிகைப்படுத்தி செய்தியிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. பல் வேறு சமூக ஊடகங்களுக்கும் ரஷ்யா தடைவிதித்து கருத்து/ ஊடகசுதந்திரத்தை கொன்றிருக்கிறது. இது நாம் எல்லோரும் அறிந்த “ரஷ்யப்பாணி”. 

இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம் முக்கியமானது. ஒன்று மேற்குலகின் முதலாளித்துவ நலன் பேணும் கட்டற்ற கடிவாளமற்ற ஜனநாயகம். மற்றையது சோஷலிசம் சார்ந்த வரையறுக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட கடிவாளம் போடப்பட்ட ஜனநாயகம். இந்த அடிப்படை வேறுபாட்டை கவனத்தில் எடுக்காது இந்த யுத்தத்தில் முதலாளித்துவ ஊடக அணுகுமுறையே பிரச்சாரப் படுத்தப்படுகிறது. 

ரஷ்யாவினதும், மேற்கு ஐரோப்பாவினதும் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டது. இந்த அடிப்படை வேறுபாட்டை முதலாளித்துவ, ஜனநாயக, கட்டற்ற பொருளாதாரக் கட்டமைப்புடன் ஒப்பிடமுடியாது என்ற உண்மையை ஊடகங்கள் பேசுவதாக இல்லை. ரஷ்யா, அமெரிக்க அல்ல. அதுபோல் அமெரிக்காவும் ரஷ்யா அல்ல. இரண்டும் ஒன்று என்றால், ஒரேயணி, ஒரே கொள்கை என்றால் ஏன் இந்த யுத்தம். 

உக்ரைன் செய்திகளை தொடர்ந்து அவதானிப்பவர்களுக்கு தெரிந்த விடயம் ஒன்று. செய்தியாளர்கள் உக்ரைன் படையினருடன் இருந்தே களச்செய்திகளை வெளியிடுகின்றனர். ரஷ்யாவைப் பொறுத்தமட்டில் இந்த வாய்ப்பு இல்லை. சில ஊடகவியலாளர்கள் ரஷ்ய இராணுவத்தினால் கொல்லப்பட்ட செய்திகளும் வெளிவந்துள்ளன. இவர்கள் எதிர்தரப்பு இராணுவத்துடன் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதேவேளை எந்தத் தரப்பில் இருந்தாலும் இவர்களின் கொலைகளை நியாயப்படுத்த முடியாது. 

 ஊடகங்கள் ஷெலன்ஸ்கியை வெற்றியாளராகவும், புட்டினை தோல்வியாளராகவுமே சித்தரிக்கின்றன. நடுநிலையான செய்திகள் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்கள் மட்டுமே ஆகக் குறைந்தது தகவல்களை பக்கச்சார்பற்ற தரப்பால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று செய்தியின் இறுதியில் கூறுகின்றன. இதுவே ஒட்டு மொத்த செய்திகளின் நிலையாகும். 

“அபு அலி” என்று நாமம் சூட்டி புட்டினை அன்பாக அழைக்கிறது 

 அரபுலகம். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஷெலன்ஸ்ஷிக்கு இருக்கும் அரச, மக்கள் ஆதரவு அரபு தேசங்களில் புட்டினுக்கு இருக்கிறது. 

லெபனான், ஈராக், சிரியா, லிபியா, ஈரான், எகிப்து, பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகளில் புட்டின் மேற்குலகிற்கு மாறாகப் பார்க்கப்படுகிறார். 

லெபனான் தலைநகர் பெய்ருட், ஈராக் தலைநகர் பாக்தாத் போன்றவை புட்டினின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் செல்கின்றனர். இவற்றை எல்லாம் மேற்குலக ஊடகங்கள் வசதிகருதி இருட்டடிப்புச் செய்கின்றன. இது மேற்குலகம் பேசும் ஊடகதர்மம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்புகிறது. 

புட்டின் கதாநாயகனாக இங்கு சித்தரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மேற்குலகிற்கு சவால் விடும் ஒரு அரசியல் தலைமை, அரபுலகின் பக்கம் ரஷ்ய வெளிநாட்டுக் கொள்கையை திருப்பி உள்ளவர். அமெரிக்கா அழித்தது எங்கள் தலைமைத்துவங்களை மட்டும் அல்ல எங்களுக்கே உரித்தான “இஸ்லாமிய – அரபு” ஜனநாயகத்தையும்தான், அது மேற்குலக ஜனநாயகத்தில் இருந்து மாறுபட்டது என்று அவர்கள் கருதுகின்றனர். 

அரபுலகத்தின் இந்த அரசியல் நிலைப்பாடு சரியா? பிழையா? என்பது விவாதத்திற்குரியதுதான். ஆனால் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில், லிபியாவில், ஆப்கானிஸ்தானில் செய்ததை விடவும் ரஷ்யா புதிதாக எதையும் உக்ரைனில் செய்துவிடவில்லை என்று எழுப்பும் கேள்விக்கு மேற்கின் பதில் என்ன? இப்படி ஒரு மாற்றுக்கருத்து மேற்குலக நிலைப்பாடுகளுக்கு முரணாக உள்ளது என்பதையே மேற்குலக ஊடகங்கள் பேசத்தயாராக இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. மேற்குலம் உலகப்பந்தில் ஒருபாதியை வெளிச்சம் போட்டும் மறு பாதியை இருட்டாகவும் காட்டும் இரட்டை நிலைப்பாடு ஏற்புடையதல்ல. 

ஆயுதமற்ற இராஜதந்திரம், இசைக்கருவியற்ற சங்கீதம் ….! 

சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்று வரும்போது இருதரப்பு சமநிலை முக்கியம் பெறுகிறது. அதுவும் சண்டை தொடர்கின்ற சூழலில் இது ஆயுத சம பலத்தை பெரிதும் நாடுவதாக அமைகிறது. உக்ரைன் யுத்தத்திலும் இதையே நாம் அவதானிக்க முடிகிறது. ரஷ்யாவின் ஆயுதபலத்தையும், இராணுவத்தின் செயற்திறனையும் மிகையாக மதிப்பிட்ட அமெரிக்காவும், ஐரோப்பாவும் பெருமளவான ஆயுத, மறைமுக ஆள்பல ஆலோசனைகளை வழங்கி உக்ரைனின் பலத்தை உயர்த்த ஆரம்பத்தில் இருந்தே முயற்சிசெய்கின்றன. இந்த நிலையானது போரை பலவாரங்களாக நீடிப்பதுடன் அதிகளவான இழப்புக்களையும் ஏற்படுத்துவதாக உள்ளது.  

ஆயுத இராஜதந்திரத்தின் ஊடாக ரஷ்யாவை நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு நெருக்குவது மேற்கின் தந்திரோபாயம். மாறாக ரஷ்யாவோ எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி தொடர்ச்சியாக தாக்குதல்களை நடாத்தி, நகரங்களை தரைமட்டமாக்குகிறது, மக்களை அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேற அழுத்தம் கொடுத்து, எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் அதனூடாக உக்ரைன் ஆட்சியாளர்களை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது ரஷ்யா. இதன்மூலம் உக்ரைனின் பலவீனமான நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய ஒரு யுத்தம் நிறுத்தம் ஊடாக தனது கோரிக்கைகளை அடையமுடியும் என்று நம்புகின்றது. ஆக, இருதரப்புக்கும் உள்ள ஆயுத, ஆள்பலமே யுத்தம் தொடர்வதற்கு காரணம். ஒரு பக்கம் சரிவு ஏற்படும்போது மட்டுமே பேச்சுவார்த்தை  ஒரு இணக்கத்தை அடையமுடியும். 

உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி இது உக்ரைனுக்கான யுத்தம் அல்ல ஐரோப்பாவுக்கான, அமெரிக்காவுக்கான யுத்தம் என்று அமெரிக்க காங்கிரஸில் இணையவழியூடாகப்பேசி இருக்கிறார். இதன் மூலம் உக்ரைனின் தோல்வி என்பது உங்களின் தோல்வி என்று அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார். அது மட்டுமல்ல ஜோ பைடனை நீங்கள் அமெரிக்கத் தலைவர் மட்டுமல்ல இந்த உலகின் தலைவர் என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். அமெரிக்கா ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி எறிகிறது. இது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போர் அல்ல. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமான போர் என்பதை நிரூபிக்க வேறு எந்தக் காரணங்களும் தேவையில்லை. அதை உக்ரைனே சொல்லுகிறது. 

ரஷ்யப்படைகள் மெதுவாக முன்னேறுவதை அவர்களின் பலவீனமாகப் பார்க்கிறது அமெரிக்கா. ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில் அதற்குப் பதிலளித்துள்ளார் புட்டின். “கண்ணாடிக்கு முன் நின்று இதைச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார் அவர். இதன் அர்த்தம் வியட்னாம், ஆப்கானிஸ்தான் மற்றும் நாடுகளில் அமெரிக்கா அடைந்த தோல்வியை திரும்பிப்பாருங்கள் என்பதாகும்.  

நோர்வே எல்லையில் நேட்டோ படைகளின் பயிற்சி என்ற போர்வைக்குள் இராணுவ பயிற்சிகள், சி.ஐ.ஏ., நேட்டோ புலனாய்வு அதிகாரிகளின் ஆலோசனைகள் மட்டுமன்றி கட்டளைத் தலைமையகமும் உக்ரைனுக்காக இயங்குவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவும் மத்திய கிழக்கில் இருந்து தன்னார்வ துருப்புக்கள் 16 000 பேரை களத்தில் இறக்கி இருப்பதாக கூறப்படுகிறது. பைடனும் தாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார். அதுதான் நோர்வே எல்லையில் நடைபெறும் ஒத்திகைப் பயிற்சி. 

ஆயுத சமநிலையைப் பேணிக்கொண்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இஸ்ரேல், துருக்கி, ஜேர்மனி, பிரானஸ் தலைவர்கள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டு, ரஷ்யாயாவை குற்றக்கூண்டில் நிறுத்திக்கொண்டு ஜேர்மனியும், பிரான்ஸ்ஸும் எப்படி சாமாதானப்படுத்தமுடியும்? இஷ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை மட்டுமன்றி, தனது யூத இனத்தவரான ஷெலான்ஸ்ஷிக்காகவும் சமாதானம் செய்ய முன்வந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தேசிய, பூகோள இராணுவ அரசியல் நலன்களையும், பொருளாதார நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த விடயத்தில் இறங்கியுள்ளனர். 

துருக்கிய தலைவரும் சமாதானத்தூதராக களமிறங்கியுள்ளார். இத்தனைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விரும்பப்படாத ஒருவராக ஒதுக்கப்பட்டு இருந்தவர் அவர். ஆனால் நேட்டோ கூட்டாளி என்பதனால் அவரின் பங்களிப்பை இன்றைய சூழலில் தட்டிக்களிக்க முடியாமல் உள்ளது ஐரோப்பா. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறது துருக்கி. இதுவரை விண்ணப்பம் கூட ஐரோப்பிய ஒன்றிய கோப்புக்களின் அடியில்தான் கிடக்கிறது.  

துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு என்றும் அதை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பது ஐரோப்பிய மேதகு விழுமியங்களுக்கு இழுக்கானது என்று ஒரு பகுதியினரும், மனித உரிமைமீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள் அங்கு இடம்பெறுவதாக இன்னொரு பகுதியினரும், துருக்கியைச் சேர்த்தால் புலம்பெயர்ந்த குர்திஸ்தான் மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது போகும் என அரசியல் கட்சிகளும் நினைக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் உக்ரைன் -ரஷ்ய சமாதான முயற்ச்சி துரும்பை கையில் எடுப்பதுதான் துருக்கியதலைவரின் திட்டம். 

இன்னொருபக்கத்தில் போலந்து, செக்குடியரசு, சொலவேனிய பிரதமர்கள் ஷெலான்ஸ்ஷியை சந்திக்க உக்ரைன் தலைநகர் கீவ் சென்றிருக்கிறார்கள். ரஷ்யப் படைகள் கீவ் நகரை நெருங்கும் இந்த வாரங்களில் இது சாத்தியமா?என்ற கேள்வி மட்டுமல்ல உண்மையில் ஷெலன்ஸ்கி உக்ரைனில் கீவ் இல்தான் இருக்கிறாரா அல்லது நேட்டோ படைகளின் பாதுகாப்பில் எல்லையொன்றில் இருக்கிறாரா? என்ற சந்தேகத்தையும் இது எழுப்பாமல் இல்லை. 

சமாதானப் பேச்சுக்ளுடனான யுத்த நிறுத்தம் ஒன்று சாத்தியமே. 

அதை இருதரப்பில் எத்தரப்பு முதலில் பலவீனமடைகிறது என்பதே தீர்மானிக்கும். ரஷ்யாவின் படையெடுப்பு தோல்வியில் முடிந்தால் மேற்கின் ஆதரவுடன் உக்ரைன் ரஷ்ய நிபந்தனைகளை ஏற்காது செயற்படவே அதிகம் வாய்ப்புண்டு. மேற்கின் ஆதரவுக்கு மத்தியிலும் கீவ் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்தால் ஷெலன்ஸ்கி மேற்கில் இருந்து செயற்படலாம். ரஷ்யா தனது இலக்கை பாரியவிலை கொடுத்து அடைந்ததாக இருக்கும்.   

சமகால மிகப்பிந்திய பேச்சுக்களில் உக்ரைன் நேட்டோவில் சேராது இருக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் இணையும் இணங்கி இருப்பதாக தெரியவருகிறது. சுவீடன், ஒஸ்த்திரியா போன்று நேட்டோ இராணுவக்கூட்டில் இணையாது நடுநிலையாக இருக்க இணங்கியுள்ளது. ஆனால் ஆயுதபலத்தை அதிகரிக்க மாட்டேன் என்ற உத்தரவாதத்தையும் உக்ரைனிடம் கேட்கிறது. 

உக்ரைனோ ரஷ்யப்படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் , 

உக்ரைனின் சுயாதிக்கம், இறைமை எதிர்காலத்தில் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் கோருகிறது. அத்துடன் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்டுள்ள மூன்று சுயாட்சிக் பிரதேசங்களிலும் எதிர்காலமும் பேசுபொருளாக உள்ளது . இணக்கம் ஒன்று ஏற்பட்டால் தற்காலிகமாகவேனும் ஒரு அமைதியை எதிர்பார்க்க முடியும். 

இல்லையேல் உக்ரைன் ரஷ்யக் கட்டுப்பாட்டில் வந்தாலும் ,உக்ரைனில் அமைதி என்பது வெறும் வார்த்தையளவில்தான். உக்ரைன் இராணுவம் விடுதலை இராணுவமாக கெரில்லா தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவுக்கு தலையிடியை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மூன்று சுயாட்சிப் பிரதேசங்களை மட்டுமன்றி கீவ் இலும் ரஷ்யாவின் பொம்மை ஆட்சி தொடரும். ஆக, ஷெலன்ஸ்ஷிக்கு முன்னரான உக்ரைன்தான் ஷெலன்ஸ்ஷிக்குப் பின்னரான உக்ரைனும். 

இதற்கு இருதரப்புக்கும் ஒரு யுத்தம் தேவையா……? 

பிட்டுக்கு மண் சுமந்த கதை: அடி சிவனுக்கல்ல, மக்களுக்கு..! 

ரஷ்யாவை – புட்டினை பணியவைக்க பொருளாதாரத்தடை விதித்து அமெரிக்காவும், ஐரோப்பாவும் உலகமக்களை பழிவாங்கி இருக்கின்றன. அதே நேரம் அவர்களின் கரங்களை அவர்களே கடித்த கதையாகவும் இது உள்ளது. இத்தடைகளால் புட்டின் & கோ, மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? ரஷ்ய மக்களில் ஒரு பகுதியினர் இந்த யுத்தத்தை விரும்பவில்லை. அவர்களையும் கூட இந்த மேற்குலக பொருளாதாரத்தடையானது புட்டினின் பக்கம் தள்ளி அவரை நியாயப்படுத்தவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்ய, உக்ரைன் தானிய இறக்குமதியில் பெரும்பாலான வட ஆபிரிக்க நாடுகளும், மத்திய தரைக்கடல் நாடுகளும் தங்கியுள்ளன. ஆசிய, வட ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் பலவும் இந்த இரு நாடுகளினதும் உல்லாசப்பிரயாணிகளில் அதிகம் தங்கியுள்ளன. எரிவாவில் முழு ஐரோப்பாவும் தங்கியுள்ளது. யுத்தம் சூழல் மசகு எண்ணெய் விலையை உயர்த்தி உள்ளது. ரஷ்யா, உக்ரைன் என்ற நாடுகள் உலகப்படத்தில் எங்கு இருக்கின்றன என்று கூடத்தெரியாத வறிய மக்கள் வல்லரசுகளின் ஆதிக்கம் போட்டிக்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது. 

கொரனா பொருளாதார மந்தத்தில் இருந்து வறிய நாடுகள் எதுவுமே இன்னும் விடுபடாத நிலையில், இந்த யுத்தம் அந்த நாடுகளை மீளமுடியாத வகையில் மீண்டும் பாதாளத்தில் தள்ளியுள்ளது. வறிய நாடுகளின் மக்களுக்கு அன்றாட உணவுக்கு வழியில்லை, வருமானம் இல்லை, எண்ணெய் விலை உள்ளிட்ட அனைத்து விலைகளும் அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் மாற்று சக்தி  – புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி வழிமுறைகள் பற்றி ஆராய்கின்றன. வரண்ட ஆபிரிக்க கண்டத்தின் கோதுமைக்கான மாற்று உணவை அந்த மக்களுக்கு வழங்குவது யார்? இந்த யுத்தத்திற்கு காரணமானவர்கள் அதைச் செய்வார்களா? 

நிதி நிறுவனங்களையும் முடக்கி, மூலப்பொருள் ஏற்றுமதி, இறக்குமதிகளையும் முடக்கி வறிய நாடுகளின் உற்பத்தித்துறையை சீரழித்து, வாழ்வாதாரத்தை சிதைத்து நிற்கிறது இந்த “கௌரவப்” போர். 

ஆயத்துலா கொமேனி, சதாம்ஹுக்ஷன், கடாபி, அசாத் என்ற வரிசையில் புட்டினையும் பழிவாங்கப்போய், பொருளாதாரக் தடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி இறுதியில் பழிவாங்கப்பட்டது ஆட்சியாளர்கள் அல்ல மக்களே.  

பிட்டுக்கு மண்சுமந்த சிவன் வாங்கிய அடி அவனைத்தவிர அனைவருக்கும் பட்டதுபோல், புட்டினுக்கு அடிக்கச் புறப்பட்டு  உலக மக்களுக்கு அடித்திருக்கிறார் மன்னர் ஜோ பைடன். 

மார்ச் இருபத்தி நான்காம் நாள் ஐரோப்பிய ஒன்றிய தலைநகர் புருஷல்ஸில் “நேட்டோ” ஆயுதத்துடன் எழுந்தருளுகிறார் கிருஷ்ண பரமாத்மா .  

அப்போதாவது பாஞ்சாலி காப்பாற்றப்படுவாளா..? 

துச்சாதனன் படைகள் தொலைதூரத்தில் இல்லை…! 

கீவ் நகருக்கான ஆயுள் எண்ணப்படுகிறது…..!! 

அதுவரை அவள் வாழ்ந்தாகவேண்டும்….!!! 

வாழும்வரை போராடவேண்டும்….!!!!