சிங்கள சமூகம் மட்டுமல்ல தமிழ் பேசும் சக சமூகங்களும் மலையகத் தமிழர்களைப் புரிந்து கொள்ளவில்லை.

சிங்கள சமூகம் மட்டுமல்ல தமிழ் பேசும் சக சமூகங்களும் மலையகத் தமிழர்களைப் புரிந்து கொள்ளவில்லை.


(“மிக உள்ளக விசாரணை” என்ற நூலை முன்வைத்து மல்லியப்புசந்தி திலகர் முன்வைத்த கருத்துக்கள்.) 

(எழுத்தாளர் சயந்தன் தொகுத்து ஜெகன் கணேசன் சிங்களத்தில் மொழிபெயர்த்த ‘அதிஷய அப்யந்தர பரீக்‌ஷனய’ (மிக உள்ளக விசாரணை) எனும் நூலின் வெளியீடு மருதானை சி. எஸ். ஆர் மண்டபத்தில் 25/2/2022 இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அந்த நூல் குறித்து சிங்கள மொழியில் திலகர் வழங்கிய விமர்சன உரையின் தமிழாக்கம்) 

 சக சமூகங்களைப் புரிந்து கொள்வது என்பது எப்போதுமே இலங்கையில் சவாலான ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. இந்த நூலில் எட்டு தமிழ்ச் சிறு கதைகள் தமிழில் இருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. மொழிபெயர்ப்பாளர் ஜெகன் கணேசன் தனது முன்னுரையிலே இவ்வாறு எழுதுகிறார்:
 “இந்த தமிழன்களுக்கு நல்ல பாடம் ஒன்று படிப்பிக்க வேண்டும் என சிங்களத்தில் பலர் கூறுவதை நான் என் காதால் கேட்டு இருக்கிறேன்”. இன்று எனது கேள்வி இந்த நூல் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல  தமிழ் பேசும் சக சமூகங்களுக்கும் ஒரு பாடத்தைக் கற்பிக்குமா? என்பதுதான். ஏனெனில் இந்த நூலில் வரும் எட்டு எழுத்தாளர்களுடன் “குக்கூ” பாடல் புகழ் அறிவு, நான், ஜெகன் கணேசன் என மேலதிக மூன்று தமிழ் எழுத்தாளர்களும் இந்த நூல் வெளியீட்டுடன் தொடர்புபடுகிறோம். நாங்கள் மூவரும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள். ஆனால், கதைகள் எட்டும் வடக்கு – கிழக்கு தமிழ் எழுத்தாளர்களுடையது. ஒரு மலையகத் தமிழ்ச் சிறுகதையைக் கூடவா “இன முரண்பாடு” களையும் கதையாக தொகுப்பாளர்களால் தெரிவு செய்ய முடியாது போனது?. இதன்மூலம் விளங்கிக் கொள்ள வேண்டியது, சிங்கள சமூகம் மட்டுமல்ல, தமிழ் பேசும் சக சமூகங்களுமே மலையகத் தமிழர்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதேயாகும்.
 இலங்கையில் தமிழர் பிரச்சினை என்றால் அது வடக்கு – கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தான் சுட்டி நிற்கிறது. வடக்கு – கிழக்குத் தமிழ் தரப்பும் அவ்வாறே காட்டுகிறது. சிங்களத் தரப்பும் அவ்வாறே புரிந்து கொண்டுள்ளது. இப்போது 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்துவிடுவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்கிறார்கள். அப்படியானால் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? 

 13 வது திருத்தமும் வடகிழக்கு இணைப்பும் வேண்டுமானால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தீர்வாகலாம், ஆனால் அது ஒட்டுமொத்தமாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாகாது என்பதை வடகிழக்கு தமிழர் சமூகமும் சிங்கள சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். 

 இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்றதும் 1987 இல் செய்யப்பட்ட ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தத்தை முன்வைத்துப் பேசுபவர்கள். 1954ல்  நேரு – கொத்தலாவல, 1964 இல் சிறிமா – சாஸ்த்திரி, 1974 இல் சிறிமா – இந்திரா ஒப்பந்தங்களை இலகுவாக மறந்து விடுகிறார்கள்.  

அவையும் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள்தான். அந்த ஒப்பந்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை பற்றி எத்தனை சிங்கள மக்கள் அறிவார்கள்? அல்லது பேசுகிறார்கள். அல்லது 13தான் தீர்வு என பேசும் வட – கிழக்குத் தமிழர் தரப்பு இப்போதைய மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளைச் சரியாக புரிந்து கொள்கிறார்களா? 

 இந்த நூலை மொழிபெயர்த்து இருக்கும் ஜெகன் கணேசனின் பின்னணி குறித்து எத்தனைப் பேர் அறிவார்கள்? அவரது அம்மா அசோக முத்திரை லட்சினையுடனான இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருந்தவர், இராமானுஜம் கப்பல் நிறுத்தப்பட்டதால் இலங்கையில் நாடற்றவராக வாழ நேர்ந்தவர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? 2003 க்குப் பின்னரே அவருக்கு இலங்கைப் பிரஜா உரிமை கிடைக்கிறது. அதுவும் பெயரளவில். அன்று அந்த அம்மா நாடு கடத்தப்பட்டு இருந்தால் இன்று இலங்கையில் தமிழ் சிறுகதைகளை சிங்களத்துக்கு மொழிபெயர்த்துத்தர ஜெகன் கணேசன் என்பவர் இலங்கையில் இல்லை. 

 குக்கூ… குக்கூ … பாடலை எழுதிப் பாடிய அறிவு எனும் பாடகரும் கவிஞரும் கூட இப்படி கட்டாயத்தின் பேரில் நாடு கடத்தப்பட்ட மலையகத் தாயின் மகன்தான். அவரது இந்த பின்னணியைப் பற்றி நான் தமிழில் எழுதிய முகநூல் குறிப்பு மறுநாள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு முகநூலில் உலாவந்தது. அதனை மொழிபெயர்த்தவர் ஜெகன் கணேசன் என்று தெரிந்தது. அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டி எனது முகநூலில் சிங்களத்திலும் பகிர்ந்த போது எழுத்தாளர் சயந்தன் என்னைத் தொடர்பு கொண்டு, ஜகன் கணேசனை அறிமுகப்படுத்தச் சொன்னார்; செய்தேன். அதன் நீட்சியே, எட்டு தமிழ்ச் சிறுகதைகளை சயந்தன் தொகுத்து ஜெகன் கணேசன் மொழிபெயர்த்து வெளிவரும் ‘அதிஷய அப்யந்தர பரீக்‌ஷனய’ (மிக உள்ளக விசாரணை) எனும் நூலாகிறது.  

 இன நல்லுறவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், குக்கூ புகழ் அறிவு, மொழிபெயர்த்த ஜெகன் கணேசன், அவரை அறிமுகம் செய்த நான் என மூவருமே மலையகத் தமிழர்களாக இருக்க, இந்த நூலில் வடக்குக் கிழக்கு தமிழர்களதும் முஸ்லிம்களினதும் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளதே தவிர ஒரு மலையகச் சிறுகதை கூட சேர்க்கப்படவில்லை. புலம் பெயர்ந்த வரலாற்றைக் கொண்ட எழுத்தாளர் கதைகளை தொகுக்கும் அதேநேரம் நாடு கடத்தப்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை இலகுவாக மறந்து விடுகிறோம். 

இலங்கையில் மலையகத் தமிழ் இலக்கியம் முக்கிய ஒரு பகுதியாக உள்ளது. பதுளையில் இருந்து தெளிவத்தை ஜோசப், கொட்டகலையில் இருந்து மு. சிவலிங்கம் என தேசிய மட்டத்தில் ‘சாகித்ய ரத்ன’ விருது பெற்ற எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்களது கதைகளில் கூடவா “இன முரண்பாடு” களையும் கதைகள் இல்லை? இதன்மூலம் விளங்கிக் கொள்ள வேண்டியது சிங்கள சமூகம் மட்டுமல்ல, தமிழ் பேசும் சக சமூகங்களுமே மலையகத் தமிழர்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதேயாகும். 

 இலங்கைப் பாராளுமன்றித்தில் 2019 ஆண்டு சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எழுமாறாக தெரிவுசெய்தபோது அனுரகுமார திசாநாயக்க முதலாம் இடம்பெற்றார் என தெரிந்து கொண்ட சிங்கள சமூகம் இரண்டாம் இடம் திலகராஜா என்பதை அறியுமா? பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்திருக்க வேண்டிய நான் மலையக சமூகத்தை அரசியல் ரீதியாக முன்னெடுக்க தீர்மானித்து பாராளுமன்றம் வரை சென்று பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு தேட முயன்றாலும் அதனை மறுதலிக்கின்ற இலங்கை அரச நடைமுறைகளை எத்தனைப் பேர் தட்டிக் கேட்க முன்வருகிறார்கள்?   

 பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நுவரெலியாவுக்கும் காலி மாவட்டத்துக்கும் ஒரே வர்த்தமானி பிரகடனம் வந்த நிலையில் காலிக்கு முழுமையாகவும் நுவரெலியாவுக்கு பாரபட்சமாக உப செயலகமாகவும் வழங்கும் உரிமை மறுப்பை எப்படி சிங்கள – தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் புரிந்து கொள்கின்றன. 

 அது மலையகத் தமிழரின் பிரச்சினை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் எனும் மன நிலை இந்த நாட்டின் சகல இன மக்களிடத்திலும் பரவலாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.  

மலையகத் தமிழர்களின் பேசப்படாத பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவையும் தமிழர் பிரச்சினையே. வடகிழக்குத் தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல. இந்த நூலிலே ‘மலைகள் இடம்பெயர்ந்து செல்வது இல்லை’ என தமிழ்நதி எழுதிய கதை ஒன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலைகள் இடம்பெயர்ந்து செல்வது இல்லை. ஆனால், அதற்கு கீழே பல குமுறல்கள் உள்ளன சொல்வதற்கு. எனவேதான் எனது கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு தலைப்பிட்டேன் “மலைகளைப் பேசவிடுங்கள்” என. மலைகள் இடம்பெயரவில்லை. ஆனால், “மலைகளைப் பேசவடுங்கள்” என்பதே விடுக்கப்படக் கூடிய வேண்டுகோள் ஆகும்.