உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2 

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? -2 

 — ஜஸ்ரின் — 

“வாழ் நாள்” ரஷ்ய ஜனாதிபதி? 

விளாடிமிர் புட்டின் – ரஷ்ய சமஷ்டியின் தலைமையில் 22 ஆண்டுகளாக இருக்கும் ஒரு தலைவர் – இந்த 22 ஆண்டுகளில், 18 ஆண்டுகள் ஜனாதிபதியாகவும், (அப்போதைய தேர்தல் விதிகள் அனுமதிக்காமையால்) 4 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்திருக்கிறார். தனது ஒவ்வொரு ஜனாதிபதி காலப் பதவிப் பகுதியிலும், சிறுகச்சிறுக புட்டினும் அவரது ரஷ்ய ஒருமைப்பாட்டுக் கட்சியும் மேற்கொண்ட யாப்புத் திருத்தங்களால் விளாடிமிர் புட்டின் 2036 வரை பதவியில் நீடிக்கும் சாத்தியம் இருக்கிறது. மிகப் பிரபலமான மாற்றமாக, 2020இல் புட்டின் இன்னும் இரு தடவைகள் ஜனாதிபதியாகப் போடியிட அனுமதிக்கும் யாப்பு மாற்றங்கள் வெற்றி பெற்றதால் இந்த நிலை. புட்டின் போட்டியிடுவார் என்று சொல்லாமல், புட்டின்தான் ஜனாதிபதியாவார் என்று சொல்லக் கூடிய அளவுக்கு ரஷ்ய தேர்தல் விதிகளும் நன்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.  

உதாரணமாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதானால் ஏராளமான விதிமுறைகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை. இந்த விதிகளை யாராவது அரசியல் முன் முயற்சியோடு பூர்த்திசெய்து வேட்பாளராக நிற்க முயன்றால், ரஷ்யாவின் இரகசிய பாதுகாப்புப் பிரிவு சகல வழிகளிலும் தடுக்க முயற்சிக்கும்- இவ்வாறுதான் உலக செஸ்கிராண்ட் மாஸ்ரான கெறிகாஸ்பரோவ் 2008 இல் தேர்தல் விதிகளில் முதல் விதியைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார்.    

சோவியத் ஒன்றியம் மறைந்தபோது, புட்டின் ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பியில் ஒரு கேணலாக இருந்திருக்கிறார் -ஆயிரக் கணக்கான கேணல்களில் ஒருவர். பின்னர் சத்தமின்றிச் சிலகாலம் கே.ஜி.பியை விட்டு விலகி, செயின்ற் பீற்றர்ஸ்பர்க் (முன்னாள் லெனின் கிராட் அல்லது ஸ்ராலின் கிராட்) நகரின் துணை மேயராக இருந்திருக்கிறார். இக்காலப்பகுதியில் ஒரு சட்டத் துறைப் பட்டப் படிப்பும் முடித்திருக்கிறார். 1999 இல் ரஷ்ய நாட்டின் அதிபராக இருந்த போறிஸ் யெல்ற்சின் அன்றாடப் பணிகளையே செய்ய இயலாத வகையில் உடல் பலவீனம் கொண்டபோது, பதில் ஜனாதிபதியாக புட்டின் உயர்த்தப்படுகிறார். பின்னர், 2000 இல் இருந்து புட்டின்தான் ரஷ்ய சமஷ்டியின் அரசு என்ற நிலை.  

புட்டினின் மனநிலை என்ன

இந்த 22 ஆண்டு காலப்பகுதியில் புட்டின் கவலையுடன் அடிக்கடி நினைவு கூரும் ஒரு விடயம்: சோவியத் ஒன்றியத்தின் மறைவும், அதன் பின்னான மாற்றங்களும். புட்டினின் சோகம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனெனில், சோவியத் ஒன்றியத்தில் வாழ்க்கைத்தர ரீதியில் நல்ல நிலையில் இருந்தோர் பாதுகாப்புப் படைகளில், உளவு அமைப்புகளில் இருந்தோரும், கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவிகளில் இருந்தோரும் மட்டும்தான். அந்தக் கட்டமைப்பு 1991இல் உடைந்தபோது புட்டின் போன்ற பதவிகளில் இருந்தோர்தான் அதிகம் வாழ்க்கைத் தரச்சரிவை எதிர் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும் பதவிகளில் இருந்தோர், இலகுவாக புதிய அரசில் அரசியல் தலைவர்களாக மாறிக்கொண்டனர் (இவர்களுள் சிலர் இன்னும் முன்னாள் சோவியத் குடியரசுகளை ஆள்கின்றனர் -பெலாறஸ் ஜனாதிபதி லுகஷெங்கோ ஒரு உதாரணம்). மறைந்துபோன சோவியத் நாட்களை மீளக்கொண்டுவரும் புட்டினின் முயற்சி பல வழிகளில் வெளிப்படுகிறது: ரஷ்யாவில் இன்று சுதந்திரமான அரசு சாரா ஊடகங்கள் மிக அரிது, புட்டினின் மனித உரிமை மீறல்களை எதிர்த்த பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மிகுதிப் பேர் சிறைகளில் அல்லது கல்லறைகளில் அடக்கப்பட்டிருக்கின்றனர். ஏறத்தாழ அரைவாசி ரஷ்யக் குடிமக்களுக்கே இந்த மனித உரிமை மீறல்கள் தெரியாதபடி ஊடகங்கள் அடக்கப்பட்டிருக்கின்றன.  

எனவே, இதெல்லாம் ஸ்ராலின் பாணி சோவியத்தை மீள உருவாக்கும் ஒரு போக்கு என்பதில் சந்தேகமில்லை.ஆனால், ஸ்ராலின் காலத்தில் இருந்திருக்காத இன்னொரு விடயமான சமூகப் பழமைவாதமும் (social conservatism) புட்டின் வாதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஸ்ராலின் காலகொடுங்கோல் ஆட்சியோடு, ஜார் மன்னர்கள் காலத்தில் இருந்த பழமை வாதக் கிறிஸ்தவ நம்பிக்கைகள் பாற்பட்ட பாலியல் சுதந்திர எதிர்ப்பு, பெண்ணடிமை ஆதரவு என்பனவும் புட்டின் ரஷ்யாவில் சட்ட ரீதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.   

ரஷ்யாவின் உள்விவகாரமான இவையெல்லாம் பற்றி உலகம் அக்கறை கொள்ளவேண்டுமா?ஆம், கவலை கொள்ளவேண்டும் என்று சுட்டும் நிலைதான் 2008, 2014, 2022 களில் ரஷ்யாவின் முன்னாள் குடியரசுகள் மீதான ஆக்கிரமிப்புக்களால் ஏற்பட்டிருக்கிறது. ஒரு அணுவாயுத வல்லரசு, உலக ரீதியில் ஒரு பாதுகாப்புப் பிரச்சினையேற்பட்டால் தலைமை தாங்க வேண்டிய ஐநா பாதுகாப்புச் சபையின் ஒரு நிரந்தர உறுப்பு நாட்டின் தலைவர் பற்றி உலகம் கவலை கொள்ளத்தான் வேண்டும். அணுவாயுத பலமற்ற உக்ரைனை தாக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, அணுவாயுதப் படைகளை ஒரு உசார் நிலையில் வைத்திருக்க புட்டின் ஆணை பிறப்பித்த நேரத்தில், புட்டினைப் பற்றி உலகம் கவலை கொள்ளவேண்டிய தேவை தெளிவாகிவிட்டதென நினைக்கிறேன். இந்த வேளையில், புட்டினையும் அவரைச் சுற்றியிருப்போரையும் இயக்கும் கொள்கை என்னவென்று பார்ப்பது பொருத்தமானது.  

அலெக்சாண்டர் டுகின் 

தற்போதைய ரஷ்யாவை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்தில் வலது சாரிகள் இருக்கிறார்கள். “சோவியத் நாடு” சஞ்சிகையைத் தவறாமல் படித்து, பின்னர் சோவியத் ஒன்றிய மறைவில் புட்டின் போல சோகம் கொண்ட இடதுசாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், தற்போதைய ரஷ்யாவின் கொள்கை முதலாளித்துவமோ, பாசிசமோ, சமத்துவமோ அல்ல. இவையெல்லாம் கடந்து “நிலைத்திருத்தல்” என்பதே ரஷ்யாவின் கொள்கை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

புட்டின் போலவே, சோவியத் ஒன்றிய மறைவினால் பாதிக்கப்பட்ட அலெசாண்டர் டுகின் என்ற தத்துவவியலாளர் எழுதிய ஒரு நூல் “The Fourth Political Theory”. உலகின் எல்லா அரசியல் கொள்கைகளையும் அலசும் டுகின், பிரேரிக்கும் ஒரு தத்துவம்: இருத்தலுக்காகக் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்பதாகும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், நிலைத்திருப்பதுதான் இலக்கு, இதற்காக எதையும் செய்யலாம் -ஒழுக்கக் கோவை, நன்மை-தீமை, உலகச் சட்டங்கள், இவை எல்லாம் பின் தள்ளப் பட்டு, “இருத்தல் (existence)” மட்டும் இலக்காகவர வேண்டும் என்பதாகும். ஆச்சரியமில்லா வகையில், அலெக்சாண்டர் டுகின் புட்டினின் நெருங்கிய ஆலோசனையாளர். இவர்களின் ஆட்சியில் இருக்கும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருக்க ஐரோப்பிய தாராளவாத முறைமைகளுக்குப் பழக்கப்பட்ட முன்னைய சோவியத் குடியரசுகள் விரும்பி முன்வராமை ஆச்சரியமல்ல. எனவே, அவர்கள் நேட்டோவை நோக்கியும், மேற்கு நோக்கியும் சார்பு கொள்ள முயல்வதில் ஆச்சரியங்கள் இல்லை.  எனவே, மேலே குறிப்பிட்ட நச்சு வட்டத்தின் ஒரு பகுதியாக புட்டினும், அவரைச் சுற்றுயிருப்போரும் இருக்கின்றனர்.  

“ரஷ்ய” இனக்குழு: ரஷ்யாவின் துருப்புச் சீட்டு    

 பல்வேறு இனக்குழுக்களையும் கம்யூனிசக் கொடியின் கீழ் குடியரசுகளாக வாழவைத்த தேசம் சோவியத் ஒன்றியம். இருந்தாலும் ரஷ்ய இனக் குழு, பெரும் நிலப்பரப்பையும், மத்தியில் பாரிய பங்கையும் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியம் பல தனிநாடுகளாக உடைந்த பின்னர், அந்த நாடுகள் ஒவ்வொன்றினுள்ளும் ரஷ்யர்கள் சிறுபான்மையாக மாறிவிட்டார்கள். இன்று புட்டின் ஆட்சியில் இருக்கும் ரஷ்ய சமஷ்டியில் மட்டும் 80% ஆகரஷ்யர்கள் இருக்கிறார்கள். உக்ரைன், எஸ்தோனியா, ஆர்மேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளில் 25% இலும் குறைந்த ரஷ்யர்கள், ஜோர்ஜியா, மொல்டோவா ஆகிய நாடுகளில் 25% இலும் அதிகமானோர் ரஷ்யர்கள்.  

இந்த ரஷ்யர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளின் விவகாரங்களில் தலையிட மொஸ்கோவின் துருப்புச் சீட்டாக “சிறுபான்மை” ரஷ்யர்களின் நலன் இருக்கிறது. இந்த ரஷ்ய சிறுபான்மையினரின் நலனை மொஸ்கோ பார்க்கும் விதமும் அவர்கள் வசிக்கும் நாடுகளைப் பொறுத்து மாறுபடுகிறது. உதாரணமாக, உக்ரைனைவிட அதிக வீதமான ரஷ்ய சிறுபான்மையினரைக் கொண்ட லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளின் விவகாரங்களில் தீவிரமாக மொஸ்கோ தலையிடுவதில்லை – காரணம் இந்த நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துவிட்டன.ஆனால், உக்ரைன், ஜோர்ஜியா போன்ற தனக்கு முக்கியமான கேந்திர நிலைகளில் (கருங்கடலின், செவஸ்தபொல் நீர்மூழ்கித்தளம் ரஷ்யாவுக்கு முக்கியமானது) இருக்கும் நாடுகளில்  தலையிட ரஷ்யாவுக்கு இந்த நாடுகளில் வாழும் ரஷ்ய சிறுபான்மையினர் ஒரு சாட்டாக எப்போதும் இருப்பர் என்பது திண்ணம். 

(முற்றும்.) 

 1. The Associated Press. “Russia’s Kasparov  Won’t Run for President.” 2007.https://www.nbcnews.com/id/wbna22229010.